Powered By Blogger

Friday, 1 July 2011

நித்திலம் வேண்டினேன்!!




நித்தமும் நிறைமதி
புத்தம்புது ஒளிபாய்ச்ச
சத்தமின்றி வருகையில்
சித்தம் வேண்டினேன்
நித்திலம் வேண்டுமென!!

சிந்தனையில் சிரித்து
சந்தத்தில் சிந்து பாடும்
சுந்தரத் தொன்மையின்
செப்புத் தமிழினால்
நித்திலம் வேண்டுமென!




நஞ்செனும் சொற்களால்
வஞ்சகரின் பேச்சில் 
மஞ்சு முகில் போல் 
நெஞ்சம் கனத்து
தஞ்சம் அடைகையில் 
நித்திலம் வேண்டுமென!!

நெறியுடை வாழ்வில்
குறிப்பறிந்து செயலாற்றி - நெஞ்சை
பறித்துச் செல்லும்
செறிவுநிறை மாந்தருறையுள்
அறிவுநிறை புவனத்தில்
நித்திலம் வேண்டுமென!!

நேர்மைத்திறம்  மாறா
கூர்மை அறிவுடை
தேர்வு நிலைதனில் - பிறர்
பார்வை துச்சமாக்கி
தேர்ச்சி அடைகையில்
நித்திலம் வேண்டுமென!!


அந்தம் நெருக்கையில் 
மந்தப் போக்கினில்
பந்தமென்று இருந்த
சொந்தங்கள் யாவுமே
நிந்தனை செய்கையில் 
நித்திலம் வேண்டுமென!!





சத்தியம் சொல்கிறேன்
நித்திலம் வேண்டினேன்!
முத்ததின் ஒளியுடை
புத்தியின் திண்மையே
நித்திலம் என்பதாம்!!





சான்றோர் சபையினில்
மாண்போர் நடுவில்!
பண்புசார் சொற்களை
அம்புபோல் பாய்த்திடவே
அகிலம் ஆளும் இறைவா - எனை
நித்திலம் ஆக்கிவிடு!!!


அன்பன்
மகேந்திரன்

10 comments:

akilan said...

என்ன சொல்ல
வார்த்தைகள் நர்த்தனமாடி
இருக்கிறது.
நல்ல கவிதை படித்த இன்பம்

அகிலன்

கூடல் பாலா said...

வார்த்தை ஜாலம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கிடைத்து விட்டது நித்திலம் இந்த கவிதையின் முலம்...

அழகிய கவிதை...

அம்பாளடியாள் said...

ஆகா இப்படியும் ஒரு வேண்டுதலா
என்ன ஒரு சந்த எழில் நடை
கவிதையில் வேண்டுதல் கனமானதொன்றாக
இருந்தாலும் நியாயமானதே.உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.அருமையான கவிதை!....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்
தங்களின் வரவுக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்

உங்களின் கருத்து மூலம் எனக்கு
நித்திலம் கிடைத்துவிட்ட சந்தோசம்

தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்

தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

பிரபாஷ்கரன் said...

நல்ல கவிதை நல்ல கருத்து நல்ல வரிகள் வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் பிரபாஷ்கரன்

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

Post a Comment