குண்டுமல்லி தோட்டத்திலே
குவிந்திருக்கும் மல்லிகையே - உன்
கூட்டாளி நானிருக்கேன்
குவளைமலரே கண்ணுறங்கு!!
கைகொட்டி சிரித்திருக்கும்
பட்டுமேனி பெட்டகமே
யார் கண்ணும் படுவதற்குள்
காந்தள்மலரே கண்ணுறங்கு!!
ஈசானி மூலையிலே
உலையங்கே கொதிக்குதம்மா
போயி நானும் பார்த்துவரேன்
பூந்தளிரே கண்ணுறங்கு!!
பசும்பால் வாங்கிடவே
பணமிங்கே போதலியே
உலைத்தண்ணி ஊத்திவாறேன்
மாந்தளிரே கண்ணுறங்கு!!
கட்டுமரக் கப்பலோட்டி
கடலுக்கு போன அப்பா
பொழுதடைய வந்திடுவார்
பூச்சரமே கண்ணுறங்கு!!
அயரை மீனும் ஆரமீனும்
அள்ளிக்கொண்டு வருவாரடி
அதுவரைக்கும் பொறுத்திருக்க
ஆரவல்லி கண்ணுறங்கு!!
வாளைமீனும் வழலை மீனும்
வலைபோட்டு பிடித்தமீனும்
வட்டியிலே போட்டுத்தாறேன்
வாடாமலரே கண்ணுறங்கு!!
விடியலிலே போனவரு
பொழுதடைஞ்சி போனபின்னும்
வராதது ஏனடியோ
வண்ணக்கிளியே கண்ணுறங்கு!!
எல்லைதாண்டிப் போனாரோ
ஏதுமங்கே ஆனதுவோ
எம்மனசு தவிக்குதடி
கனிமொழியே கண்ணுறங்கு!!
அகல்விளக்கு ஏற்றிவச்சேன்
ஆளவந்தோன் உயிர்காக்க
அல்லும்பகலும் விழித்திருந்தேன்
அல்லிமலரே கண்ணுறங்கு!!
அண்டைநாட்டு கப்பற்படை
ஆட்டம்தான் போட்டதுவோ
அவியுது மனமெனக்கு
காவியமே கண்ணுறங்கு!!
அந்த உயிர் வந்தால்தான்
நம்ம உயிர் நிலைக்குமிங்கே
அதுவரைக்கும் பொறுத்திருக்க
புதுமலரே கண்ணுறங்கு!!
நித்தம்நித்தம் நெஞ்சுக்குள்ளே
வேதனைய சுமந்திருக்கும்
நம் பிழைப்பு மாறுமோடி
மலர்விழியே கண்ணுறங்கு!!
அன்பன்
மகேந்திரன்