Powered By Blogger
Showing posts with label அணுசக்தி. Show all posts
Showing posts with label அணுசக்தி. Show all posts

Friday, 21 October 2011

நூலிழை கைகொண்டு!!


தத்தோம் தத்தோம்
தரிகிட தத்தோம் தத்தோம்!
வந்தோம் வந்தோம்
சேதி சொல்லவந்தோம்!!
அந்திசாயும் நேரமய்யா
முந்திவந்து பாருங்கய்யா!
சந்தியிலே வந்துநின்னு
பந்திவிரிச்சு போட்டோமய்யா!!

அம்பலத்து பெரியோரே
வம்பளக்கும் சிறுவர்களே
எம்குலத்து மாந்தர்களே
நம்பிவந்து பாருங்கய்யா!!


கொத்துகொத்தா பாவைகள
சித்திரமா ஆட்டியிங்கே
சத்தாக கதைசொல்லி
கூத்துகாட்ட வந்திருக்கோம்!!

 

சுதிப்பெட்டி கொண்டுவந்தோம்
மதிமயக்கும் இசைகொடுக்க
முகவீணை தாங்கிவந்தோம்
சகலோரை மயக்கிடவே!!

தந்தன தாளம்போட்டு
சிந்தையை மயக்கவே 
பாந்தமாய் மிருதங்கம்
மந்தைக்கு கொண்டுவந்தோம்!!


மரத்தால் செய்துவந்த
மொரத்த பொம்மைகளை
சிரத்தில் ஏற்றிவைத்த
பருத்த செய்திசொல்ல
கரத்தால் ஆட்டிவந்தோம்!
கழித்த துணிகொண்டு  
செழித்த உடலமைத்து
பழித்தோம் தீமைகளை
நூலிழை கைகொண்டு!!


தோல்பாவை கையெடுத்து
தொலைநோக்கு கண்ணோடு
தொய்ந்துபோன நற்குணத்தை 
தோய்த்து எடுத்திடவே 
மாய்ந்து ஆட்டிவந்தோம்!!
தஞ்சை வளநாட்டு
சஞ்சாரக் கூத்தர் நாமோ
கொஞ்சம் சேதிசொல்ல
நெஞ்சில் உரத்தோடு
தஞ்சமென நாடிவந்தோம்!!


எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி
எடுப்பான நாடகத்தின்
துடுப்பான நடிப்பெல்லாம்
மடிப்பு கலையாம
கொடுத்ததெல்லாம் நாம்தானே!!

அகவல் ஏதுமின்றி
சகலரை சேர்ந்திடவே
தகவல் தொடர்புக்கென்றே
முகவரி கொடுத்திங்கே
ஆகமம் செய்ததெல்லாம்
மகத்தான பாவைக்கூத்தே!!


குமரியில் ஆரம்பித்து
இமயம் வரையிலும்
கோமள பாவைவைத்து
கூத்துகட்டி திரும்புகையில்
போகையிலே வித்திட்ட
செம்மாங்கன்று இப்போ
வளர்ந்து கனி கொடுத்ததய்யா!!

பன்னூறு ஆண்டுகள்
முன்னே பிறந்ததுவே
சொன்ன சேதியெல்லாம்
மேன்மறை போலிங்கே 
மண்போற்றி நின்றதய்யா!!


கடகடன்னு ஒடுங்காலம் 
மடமடன்னு போச்சுதய்யா!
படபடன்னு இருந்துவந்த
குடுகுடு பாவைக்கூத்து
சடசடன்னு அழிஞ்சுதய்யா!!
பல ஆண்டு கழித்தபின்னே
பாவைகள கையெடுத்தேன்!
பட்டினியா கிடந்துதானே
தலைநகரம் போகப்போறேன்!!


பல ஊர அழிச்சிடும் 
பிற்காலம் ஒழிச்சிடும் 
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே
பொம்மலாட்டம் செய்யப்போறேன்!!
அன்பன்
மகேந்திரன்

Saturday, 17 September 2011

சிவப்புவிளக்கு போடீரோ??






அன்புநிறை பதிவுலக நண்பர்களே,
அணுசக்திக்கு எதிராக நம்மவர்கள் எடுத்திக்கொண்டிருக்கும் முயற்சி விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது.






இன்னும் காதில் விழுந்தாலும் விழாதது போலவே நடித்துக் கொண்டிருக்கின்றனர் நம்மை ஆள்பவர்கள்.
ஏனிந்த பாராமுகம்?
என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள்?
மண்ணில் மனிதர்கள் யாவும் புதையுண்டு போக வழியினை ஏன் தானாக தேடுகிறார்கள்?

இன்று காலை நம் நண்பர் கூடல்பாலாவிடம் தொடர்பு கொண்டேன், பேச்சில் உணர்ச்சி தெரிந்தாலும் இன்னும் எட்டவேண்டியவர்களுக்கு
எட்டவில்லையே என்ற ஆதங்கம் குரலில் தெரிந்தது. எம்மைப் போல் சாதாரண மனிதற்கே இந்த விஷயங்கள் பாதிப்பை விளைவிக்கும் என்ற
எண்ணம் தோன்றுகையில் ஒரு மாநிலத்தையும் ஒரு தேசியத்தையும் ஆள்பவருக்கு தெரியாமல் போய்விடுமா?

ஏன் அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தயங்குகிறீர்கள்? உங்களை எது தடுக்கிறது?
ஆலைக்காக நீங்கள் போட்டு வைத்திருக்கும் பணமா?
நீங்கள் கொண்ட கொள்கையில் சற்றும் இறங்கி வரத்தெரியாத உங்கள் வறட்டு கௌரவமா?

மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆயிரம் ஆயிரம் திட்டங்களும் அதை சரியாகப் போய்ச்சேருகிறதா
என்ற அக்கறையும் எண்கள் மனத்தைக் குளிர்விக்கிறது. ஆயினும் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு
அடியோடு ஆட்டம் காணவைக்கும் இந்த அணுவுலை அமைப்பதில் ஏன் இந்த அக்கறை காட்டுகிறீர்கள்?

பாதுகாப்பு என்பதென்ன
பாழும்கிணற்றில் வீழ்த்திடவா?
பச்சைமர மனம் கொண்டோரெல்லாம்
காய்ந்த மரமாய் ஆனதென்ன?





ஓர் ஆலையைத் தொடங்கும் முன் அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை, புகைபோக்கிகளில் இருந்து
வெளியேறும் வாயுக்கழிவுகளை பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி
சுற்றுப்புற சுகாதார ஆய்வகத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னரே அந்த ஆலையை அனுமதிக்கின்றனர்.
இந்த செய்முறை கூடங்குளத்தில் நடந்ததா?

ON -SITE EMERGENCY PREPAREDNESS PLAN என்று சொல்லக்கூடிய உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு
செய்முறை விளக்கமும் அதற்கான ஒத்திகையும் (DRILL ) நடைபெற்றதா?
OFF -SITE EMERGENCY PREPAREDNESS PLAN என்று சொல்லக்கூடிய சுற்றி வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு
செய்முறை விளக்கமும் அதற்கான ஒத்திகையும் (DRILL ) நடைபெற்றதா?

ஏன் அதை செய்யத் தயங்குகிறீர்கள்?
சுற்றி இருக்கும் மக்கள் கிராமத்தான்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளப்பமா?






பொங்கியெழும் காட்டாறு
செய்யும் செயலறியாது!
சொன்னசொல்லை மந்திரமாய்
சிகைகொண்டு முடிக்கும்!

யாமெல்லாம் ஏடெடுத்து
படித்திருந்த போதிலும்
ஆலைக்கான பாதுகாப்பு
தெரியாமல் விழித்திருந்தோம்?

தூத்துக்குடி மாவட்டம்
ஆலைகளுக்கு பெயரேற்றது!
அங்குள்ள மக்களெல்லாம்
ஆலையின் புகைபோக்கி கண்டாலே
இன்னதுன்னு சொன்னரனரே!

விழிப்புணர்வு தொடர்ந்திடவே
விளைவுகளை அறிந்தோமே!
பின்னாளில் எம்மவர்கள் - படப்போகும்
துன்பமிங்கு வேணாமே
இப்போதே நிறுத்திடுங்க
எம் சந்ததியை காத்திடுங்க!!

அமுதமென்று சொல்லிட்டோம்
அன்னையின் கொங்கைப்பாலை
அதுவே விஷமென
ஆகிடக் கூடாதைய்யா
ஆவன செய்திடுங்க?

கண்ணைமூடி கொண்டதனால்
பூவுலகு இருண்டிடுமா?
கண்திறந்து பாருங்கப்பா
நிதர்சனம் கேளுங்கப்பா!!

பாதையிலே செல்லும்போது
வாகனங்கள் பாதுகாப்பு
மனததனில் செய்வித்தே
சிவப்பு விளக்கு போட்டு
எம்மின் வேகத்தை நிறுத்துபவரே!
ஊரை கூடி உலையில் போடும்
கூடங்குளம் தன்னிற்கு
சிவப்புவிளக்கு போடீரோ??

அன்பன்
மகேந்திரன்

Thursday, 15 September 2011

செவிமடுத்து கேட்டுவிடு!!






கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக அதை கைவிடவேண்டி இடிந்தகரை எனும் ஊரில் இன்று 5-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். நம் நண்பர் பதிவர் கூடல்பாலவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
அவர்களின் கோரிக்கைகள் இந்த அரசின் காதில் ஏற்றவேண்டும்..
கூடிநிற்போம் தோழர்களே....
அணுசக்தியை கூண்டோடு அழிக்கும் வரை..

இங்கே வலைப்பதிவுகளில் நம் நண்பர்கள் பதிந்துவரும் வலைப்பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...

கூடும் குலம் 

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 15,000 பேர் உண்ணாவிரதம்-போராட்டம் தீவிரமடைகிறது

ஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் முன்னேயாவது...

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?




இமயமே செவிமடு!
இன்றோர் இடிந்தகரை
இன்சொல்லால் இதுவரை
இயம்பியும் பார்த்தோமே!
இம்மட்டும் உன்செவியில்
இறங்காமல் போனதுவோ?!!!

தொழில்நுட்பம் என்பதெல்லாம்
தொந்தரவு செய்வதற்கா?
தொழில்நுட்பம் படைத்துவிட்டு
தொள்ளாயிரம் காததூரம்
சுடுகாடு பார்ப்பாயோ?
தொலைநோக்கு பார்வையென்ன
தொய்விழந்து போச்சிதோ??

உலகிலே அதிகமாம்
அணுஉலைகள் ஆயிரமாம்
தொழில்நுட்பம் என்பதைத்தன்
புறவீட்டின் கொல்லையிலே
வைத்திருந்த ஜப்பானே!!
இயற்கையின் சீற்றத்தால்
இன்னவென செய்வதறியா
அணுவுலைகளின் கதிர்வீச்சை
கட்டுக்கடங்கா அதன் வெப்பத்தை
குளிர்வித்துக் கொண்டிருப்பதுவோ
உன் செவியில் ஏறலியோ???

தன்னாட்டு  வல்லறிஞர்
பற்பல வைத்திருந்தும்
பாதுகாப்பின் புலன்மீது
நம்பிக்கை இல்லாது
அணுவுலைகள் மூடிடவே
யத்தனம் செய்ததுவே!
அயல்நாட்டு அறிஞர்களின்
மூளைவைத்து செயலாற்றும்
உன்மூளைக்கது ஏறலியா?
பாதுகாப்பு என்பதென்ன
பக்கம்வந்து பகன்றுவிடு!!

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ
எம்மக்கள் இன்றோடு
ஐந்தாம் நாளாய்
சாகும் வரை உணவறுத்து
போராட்டம் செய்வதது
உன்காதில் ஏறலியோ??

செவிமடு செவிமடு
செவியற்றுப் போனாயோ!!
நம்மினம் அழித்துவிட
வாய்பிளந்து நிற்கும்
அணுவெனும் சாத்தானை
கைகழுவி விட்டுவிடு
செந்தமிழர் வாழ்வுதனில்
செம்மைவந்து சேர்ந்துவிட
செவிமடுத்து கேட்டுவிடு!!


அன்பன்
மகேந்திரன்