Powered By Blogger

Tuesday, 12 July 2011

கலைகள் காக்க வேணுமைய்யா!!


தந்தனத்தோம் பாடிக்கிட்டு
தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு
வில்லெடுத்து வந்தேனைய்யா
நாட்டுப்புறப் பாட்டுபாட!!

என்குலத்த காப்பவனே
ஆனைமுகம் கொண்டவனே
இட்டுகட்டி பாட்டுபாட
இசையாக வாருமைய்யா!!

எங்ககுடி மூத்தகுடி
ஏகலைவன் வாழ்ந்தகுடி!
பண்போடு கலைவளர்த்த
பார்போற்றும் தமிழ்க்குடி!!

எத்தனையோ நாடுகண்டேன்
வில்லடிச்சி பாடிவந்தேன் 
எங்ககுடி  கலையைப்போல்
வேறெங்கும் இல்லையப்பா!!

ஆயி அப்பன் காலத்தில
எங்க கலை எல்லாமே
கலசமா இருந்ததைய்யா!
ஆண்டவனா ஆயி அப்பன்
சொல்லித்தந்த கலையெல்லாம்
அள்ளித்தந்த செல்வமைய்யா!!

நாகரீகம் வளர்ந்தாலும்
நாணலிங்கு மூங்கிளல்ல
பெத்ததாயி எப்போதும்
அத்தையாக ஆவதில்ல!!
மெத்தப் படிச்சாலும் - கலைய
கொஞ்சம் தெரிஞ்சிக்கோப்பா
கலாச்சாரம் என்பதெல்லாம்
கலையால வளருதப்பா!!

நாடெங்கும் போயிவந்தோம்
கலையெல்லாம் பரப்பிவந்தோம்
தந்த தகவல் அத்தனையும்
தந்திரமா சொல்லிவந்தோம்!

ஏற்றத்தில ஏறிநிற்கும்
எங்ககுடி இளைய மக்கா
நம்மகுடிக் கலைகளெல்லாம்
என்னதுன்னு தெரிஞ்சிக்கோப்பா!!
வெள்ளையுட போட்டுக்கிட்டு
காலில் சலங்கை கட்டிக்கிட்டு
கைக்குட்ட கச்சதுணி 
விரல்நுனியில் கட்டிக்கிட்டு
கிராமத்து கோவிலெல்லாம்
பாட்டுபாடி ஆடுவோமே
அதுதாய்யா ஒயிலாட்டம்!!
மஞ்சளிலே குளிச்சிபுட்டு
மடிப்புசேல கட்டிக்கிட்டு
கையிலிரு கோலெடுத்து
தட்டித்தட்டி ஆடிவரும்
எங்குலத்து பெண்களெல்லாம்!
சமுதாய கதைபேசி
சுத்திசுத்தி ஆடுவரே
அதுதாய்யா கோலாட்டம்!!


பொம்மைகளை வைச்சிகிட்டு 
நூலினாலே ஆட்டிகிட்டு
செய்திசொல்லி வந்தனரே
எம்குலத்து மக்களெல்லாம்!
தகவல்களை பரிமாற்ற
அன்றிருந்த கலைதானே
பேறுபெற்ற பொம்மலாட்டம்!
கண்ணெட்டும் தூரம்  வரை
இன்றதனை காணவில்லை
எங்கேதான் போனதுவோ
இன்றிருக்கும் சந்ததிக்கோ
பொம்மலாட்டம் தெரியலியே!!கும்பத்த நடுவில் வைச்சி
மலராலே அலங்கரிச்சி
பொன்கரகம் பூங்கரகம்
பூத்துவந்த தேன்கரகம்!
கரகத்த தலையில் வைச்சி
மகமாயி முன்னால
அவபுகழ பாடிக்கிட்டு
ஆணும் பெண்ணும் ஆடுவரே
அதுதாய்யா கரகாட்டம்!!


இருட்டினிலே வளர்ந்ததைய்யா
ஒய்யார முளைப்பாரி!
தலைப்பாகை சுத்திகிட்டு
முளைப்பாரி தூக்கிகிட்டு
ஊரைச் சுத்திவந்ததுமே
முளைப்பாரி நடுவிருக்க
சுமந்து வந்த பெண்களெல்லாம்
கூடிநின்று கைகொட்டி
ஒயிலாக ஆடுவரே
அதுதாய்யா கும்மியாட்டம்!!


ஐந்தடி கம்பெடுத்து
ஆசான வேண்டிகிட்டு
அழகாக அளவெடுத்து
சிறுவட்டம் போட்டுகொண்டு
கையிலே சிலம்பிருக்க
விரலாலே வித்தைகாட்டி!
காத்து கூட நுழையாம
சுத்தி சுத்தி ஆடுவரே
அதுதாய்யா சிலம்பாட்டம்!!

எத்தனையோ ஆட்டங்கள்
எடுப்பாக இருந்ததைய்யா!
காலம்மாறி போகையில
காணாம போச்சுதய்யா!!

பண்பாடு பேசிவரும்
கலாச்சாரம் காத்துவரும்
கலைகள் கூட இங்கே
கண்ணாமூச்சி காட்டுதைய்யா!
காசுபணம் சேர்த்திடலாம்
காரவீடு கட்டிடலாம்
காலம்போற போக்கினிலே
கலைகள் மட்டும் வாழலேன்னா
நமக்கு அடையாளம் இல்லையப்பா!!
நம்மக்குடிக் கலைகளெல்லாம் 
நலிஞ்சு போயி கிடக்குதையா 
கலைஞர்கள் வயிறெல்லாம் 
காஞ்சிபோயி கிடக்குதைய்யா!
கண்ணான கலாச்சாரம்
போற்றிட நீ வேணுமின்னா
கலைகள் காக்க வேணுமைய்யா!!

அன்பன்
மகேந்திரன் 

23 comments:

vidivelli said...

நாகரீகம் வளர்ந்தாலும்
நாணலிங்கு மூங்கிளல்ல
பெத்ததாயி எப்போதும்
அத்தையாக ஆவதில்ல!!
மெத்தப் படிச்சாலும் - கலைய
கொஞ்சம் தெரிஞ்சிக்கோப்பா
கலாச்சாரம் என்பதெல்லாம்
கலையால வளருதப்பா!!


எத்தனையோ ஆட்டங்கள்
எடுப்பாக இருந்ததைய்யா!
காலம்மாறி போகையில
காணாம போச்சுதய்யா!!

ஆகா அத்தனையும் அழகான கவிதை..
எமது பண்பாடு அழிந்து போகிறது...
அற்புதமான கதை...
கவிப்புயலே வாழ்க உங்கள் கவித்துவம்...

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி

தங்களின் அழகான கருத்துக்கு
மிக்க நன்றி.
உங்களின் வாழ்த்தொலியில்
என் கவி பலம் பெற இறைவனை
வேண்டுகிறேன்.

குணசேகரன்... said...

நவீன யுகத்தில் நாம் இழந்த விசயத்தில் இதுவும் ஒன்று.. தபால் கார்டைப் போல

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்

சரியா சொன்னீங்க

தங்களின் கருத்துக்கு
மிக்க நன்றி.

Anonymous said...

கிராமிய மனம் கமழ்கிறது
நம் கலாச்சாரம் பண்பாடுகளின்
முழுமுதல் வெளிப்பாடே கலைகள்
எனக்கூறி
அது அழிந்து போகாமல்
காத்திட வேண்டும் எனவும்
வியாபித்திருக்கும்
உங்களின்
நாட்டுப்புறப் பாடல் இனிமை

தென்னரசு

Anonymous said...

நல்ல படைப்பு... தொடர்ந்து கலக்குங்கள்...
மகேந்திரன்...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

உண்மைதான் நண்பரே,

பழமையை போற்ற வேண்டும் என்று
சொன்னால் யார் கேட்கிறார்கள் ?

தங்களது பதிவால் சமுதாயம் ஒரு விழிப்புணர்வு எய்தினால் பெரும் மகிழ்ச்சியே

நன்றி...

http://sivaayasivaa.blogspot.com/

கூடல் பாலா said...

ச்சே ...இத இளையராஜாகிட்ட குடுத்து மியூசிக் போட்டா செம ஹிட்டாகும் ....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பண்டைய கலைகளை அழித்துவிட்டு பண்பாட்டை காத்துவிட முடியாது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதையும்... கருத்தும் அழகு..

kupps said...

அன்பு நண்பர் மகி அவர்களே !
தங்களின் வளர்ந்து வரும் கவிப்புலமை மற்றும் சொல்லாற்றளுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு"கலைகள் காக்க வேணுமைய்யா!!" கவிதை.தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.வாழ்த்துக்கள்.
ந.செ.கு.சாமி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு

நயமான உங்களின் கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
தங்களின் வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்

தங்களின் கருத்தே என் கருத்து
நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்வோம்
என்பதே என் நோக்கம்.
தங்களை போன்றவர்கள் என் அருகில் இருக்கும் வரை
என் பணி தொடர்வேன்.

நன்றி நன்றி

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா

தங்களின் அழகான பதிலுக்கு
எனக்கு விடையுரைக்க வார்த்தை இல்லை.
அந்த அளவுக்கு நான் இன்னும்
வளரவில்லை.
என் மீதான தங்களின் நம்பிக்கைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்

சரியாகச் சொன்னீர்கள்.
பண்டைய கலைகளை அழித்துவிட்டு
அத இடுகாட்டின் மேல் நம் பண்பாட்டை
வளர்ப்பதென்பது இயலாத காரியம்.

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி

தாங்கள் என் மீது கொண்ட நம்பிக்கைக்கு
என் முதல் நன்றி.
மேலும் வாழ்த்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

கடம்பவன குயில் said...

உங்க கவிதையை சந்தத்தோடு பாடிக்கொண்டே வந்ததில் ஒரு கிராமிய திருவிழாவில் கலந்துகொண்ட உணர்வும் மகிழ்ச்சியும் கிட்டியது. மிக்க நன்றி நண்பரே.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கடம்பவனக்குயில்

தங்களின் பொற்பாதம் இங்கு வைத்தமைக்கு
முதற்கண் நன்றி.
உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது
கருத்திற்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் திருவிழாவை காட்சிப்படுத்திய அழகுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி இராஜராஜேஸ்வரி

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

kunthavai said...

ஆகா...அழகான கருத்து கருக்கொண்ட வெகு அழகான கவிதை.

நம் பண்டைய கலைகள் பற்றிய விளக்கத்தோடு....ஒரு குறும்படம் எடுக்கலாம் போல தோழரே !

சீரிய முயற்சி..வாழ்த்துக்கள்.

( ஆனாலும் தோழரே..ஒன்று மட்டும் நல்லா புரியுது..சின்ன வயசில ஒரு திருவிழா கூட விடாம முழிச்சிருந்து பார்த்து இருக்கீங்க...அப்படித்தானே:) )

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு,

உண்மைதான் என் சின்ன வயதில்
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம்
கலைகளை கண்டு ரசித்திருக்கிறேன்.
அது ஒரு தனி அனுபவம் தோழி.

Post a Comment