பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள்
திரும்ப வராதா என்ற ஏக்கம் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொள்கிறது.
அகம் மகிழ்கிறேன்.
அரைக்கால் சட்டையில் இருபுறமும் கயிறுவைத்து முதன்முதலில்
பள்ளிக்கு போன நாளை எண்ணும்போதே மனதுக்குள் சந்தோசமும்
நகைப்பும் சேர்ந்தே வருகிறது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி எல்லாம் அப்போது இருந்ததா என்றே தெரியவில்லை
நேரடியா முதலாம் வகுப்பு தான். பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு
கூட்டிச் சென்றார்கள்.
"பையனைப் பார்த்தால் ரொம்ப சின்னவனா இருக்கான். அதனால அடுத்த
வருடம் சேர்த்துக்கொள்ளலாம்" என்று தலைமை ஆசிரியர் சொல்ல
" சார் படிச்சிருவேன்.. பாருங்க எனக்கு கையால காதைத் தொட முடியும்" என்று
வலது கையை உச்சந்தலை வழியாக இடது காதை தொட குனிந்து நெளிந்து
எத்தனித்தேன்.அதைப்பார்த்ததும் தலைமை ஆசிரியர் சிரித்துக் கொண்டே " சரி சரி சேர்த்துக்கொள்கிறேன் நல்லாப் படிக்கணும்" என்று சொன்னவாறு என் பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார்.
உயிரெழுத்தை என்
உயிருக்குள் நுழைத்து
மெய்யெழுத்தை என்
மெய்க்குள் திணித்து
உயிரும் உடலுமாய்
ஆரம்பித்த ஒன்றாம் வகுப்பு........
எண்ணும் எழுத்தும்
இரு கண்ணென அறிந்து
இயைபோடு படிக்கையில்
அருகிலிருந்த பெண்ணொருத்தி
என்னைவிட நன்றாய்ப் படிக்க
மனதிற்குள் போட்டியும்
பொறாமையும் வளர்த்த
இரண்டாம் வகுப்பு.......
புதிதாய் வந்த திரைப்படங்களின்
குணாதிசயங்களின் பெயர்களை
எங்களுக்கு சூட்டிக்கொண்டு
நட்பும் பகையுமாய்
மதியஉணவில் மக்காச்
சோளச் சோறு தின்று
மப்புடன் படித்துவந்த
மூன்றாம் வகுப்பு............
நரம்பியல் பாதிப்பால்
வலிப்பு வந்து துன்புற
என் உயிரை அன்றும்
இரண்டாம் முறை மீட்டெடுத்த
என் தாய்தந்தையர் ஒருபுறம்
அதன் பின் பெற்றபிள்ளை போல
அன்பாக பாவித்த
தனலட்சுமி ஆசிரியை மறுபுறமென
நன்றாய் கழிந்த
நான்காம் வகுப்பு........................
தலைமை ஆசிரியரே
வகுப்பு ஆசிரியராய் வர
முதல் முறையாய்
கூரைவேய்ந்த பள்ளியறை விடுத்து
ஓடுவேய்ந்த பள்ளியறையினுள்
சற்று பயத்துடன் நுழைந்து
நடுநிலைப் பள்ளிக்கு
செல்வதற்கான நடுக்கத்தை
சற்றே குறைத்து வைத்த
ஐந்தாம் வகுப்பு...........................
சில நல்ல பழக்கங்களையும்
சில தீய பழக்கங்களையும்
சரிவிகிதத்தில் கலந்து
வாழ்விற்கான முதல் தெளிவை
அமுதாய் ஊட்டிய
ஆறாம் வகுப்பு...............................
முதன் முதலாய்
வரலாற்றுப் பாடத்தை
நடத்தும் ஆசிரியர் - அதை
நடித்தே காண்பித்து
மூளைக்குள் இன்றும்
அந்தக் காட்சிகளை
அசைபோட வைத்த
ஏழாம் வகுப்பு...............................
ஆங்கிலத்தின் பெயரைக் கேட்டாலே
அவயம் நடுங்கியதை
சற்றே தனித்து
ஆங்கிலமும் நம் வசப்படுமென
அழகாய் எடுத்துரைத்த
ஆசிரியரை எனக்களித்த
எட்டாம் வகுப்பு....................................
( எட்டாம் வகுப்பில் என் ஆசிரியர் ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் பற்றி சொல்கையில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் " The sentence never end with BECAUSE BECAUSE BECAUSE is a conjunction" இன்றும் மனதில் நிழலாடுகிறது )
அறிவியலின் ஆளுமைக்கு
அருஞ்சொற்பொருள் கொடுப்பதெல்லாம்
கணிதம் எனும் புனிதமே - என
கணிதத்தை எனக்கு
கனிவாய் கற்பித்த
ஒன்பதாம் வகுப்பு............................
பொத்தாம் பொதுவாய்
படித்து வந்தவனை
பின்னந்தலையில் தட்டி
இவ்வகுப்பே உன்
வாழ்வின் ஆதாரமென
சிரசில் உறைக்கவைத்து
இன்றும் நான் மதிக்கும்
ஆசிரியர்களை என் வாழ்வில்
அறிமுகப் படுத்திய
பத்தாம் வகுப்பு...........................................
அரும்பு மீசை வளர
இனம்புரியா ஆசைகள் வளர
திரிகோணமிதியை சற்றே
கலவரத்துடன் என்னை
கவனிக்க வைத்த
பதினோராம் வகுப்பு......................
இரசாயனமே உனக்கு வாழ்வு
இன்றே கற்றுக்கொள் என
கற்பித்துக் கொடுத்திட
இறுக்கமுகத்துடன் இருந்தாலும்
இளகிய மனம் கொண்ட
ஆசிரியரை எனக்கு அளித்து
இரசாயனத்தை எனக்கு
இன்னிசை கீதமாய்
உரைத்திட்ட
பன்னிரெண்டாம் வகுப்பு........................
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டது.
இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுத நான் அழைக்கும் பதிவர்கள்.....