இக்கலையில் கதை
மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன்.
பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில
இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து
தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி,
காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று
நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக
தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......
ஆலால தோப்புக்குள்ளே
அமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய
பணிந்துவந்தேன் - ஐயா
உத்தமரே காக்கவேணும்!!
தந்தோம் தந்தோம் தனதன
தந்தோம் தனதோம் !!
கட்டிளம் காளையிவன்
கட்டியங்காரன் எந்தன் பெயர்
பார்போற்றும் கலையிதுவின் - ஆமா
உயிர்நாடி நான் தானய்யா!!
தந்தோம் தந்தோம் தனதன
கண்போன்ற காவியத்தை
கதையாக்கி நடிக்கும்போது
இடையிடையே தொய்கையிலே - நானும்
காண்போரை கவர்ந்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன
தந்தோம் தனதோம் !!
கோடிட்ட இடங்களிலே
கோமகனாய் வாழ்ந்துவந்தேன்
கோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா
கோமாளி என்றனரே !!
தந்தோம் தந்தோம் தனதன
வைக்கோலால் செய்யப்பட்ட
குடைபோல விரிந்திருக்கும்
உடைகளில் நான் வருகையிலே - ஆமா
காண்போரின் நகையொலிக்கும் !!
தந்தோம் தந்தோம் தனதன
தந்தோம் தனதோம் !!
கதையில் வரும் நாயகர்கள்
கதைப்பாட்டு மறக்கையிலே
அதையெடுத்து நான் பாடி - அழகா
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன
தந்தோம் தனதோம் !!
==== தெருக்கூத்து தொடரும்
அன்பன்
மகேந்திரன்