Powered By Blogger

Thursday 29 December 2011

எதுவான எதுவது??!!புவியின் கோணங்கள்
பலவாறு இருந்தாலும்!
பயணிக்கும் வாழ்க்கையின்
பாதையின் தடங்கள்
பழுதின்றி செல்வது
எதுவான எதுவதில்??!!
றவுகளின் சூழலில்
உணர்ச்சிகளின் பிடியில்!
உரசல்கள் தவிர்த்திட்டு
உள்ளதை உள்ளபடி
உசிதமாய் ஆக்குவது
எதுவான எதுவது??!!சாதகங்கள் ஏதுமில்லா
சம்பவங்கள் நடக்கையில்!
சதுரங்க கட்டத்தில்
சவமாய் நிற்கையிலே!
சமாளிக்க கற்றுவிக்கும்
உணர்வற்ற உணர்வது!!!

புரிதல்கள் மாறுகையில்
புரிசமர் தவிர்த்திட!
புத்தியின் அடிவேரில்
பூஞ்சையாய் பூத்ததோர்
பூடகமாய் உரைத்திட்ட
பொய்யான பொய்யது!!!
டங்காத ஆவலில்
ஆழ்மனது இரகசியத்தை!
அவையோர் முன் மொழிகையில்
அவிழ்த்துவிட்ட மொழிகளெல்லாம்!
அட்சரம்  பிசகாத
உண்மையற்ற உண்மையது!!!
ருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையில் 
வாழ்வுதனில் உண்டாகும் 
சலிப்பான சலிப்பது!!!
பிரிதலின் நிமித்தம் 
பாவையுன் விழிகளில்!
பனிக்கும் நீர்த்துளியை
பார்க்கச் சகிக்காது
பாழும் மனம் பேசிவரும்
சொல்லற்ற சொல்லது!!!
நெஞ்சுக்குள் புதைத்துவைத்த
நஞ்சற்ற நட்பது!
நமத்துப்போன காரணத்தால்
நொடிந்து போகையில்
நாழிகைப் பொழுதுக்காய்
விலகலற்ற விலகலது!!!

ரணத்தின் நாளது
அறிந்திராத போதிலும்!
மரணம் நிச்சயமென
உணர்ந்திருந்த போதிலும்!
ஏற்றுக்கொள்ள இயலாத
மறுப்பற்ற மறுப்பது!!!
பேச்சற்ற பேச்சு!
நடையற்ற நடை!
இனிமையற்ற இனிமை!
கசப்பற்ற கசப்பு!
வெறுப்பற்ற வெறுப்பு!
பொருளற்ற பொருள்!
இத்தனையும் கடந்து
வாழ்வினிக்க முயன்றிடும்
செய்கையின் தூண்டுதல்
எதுவான எதுவதில்??!!
வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!அன்பன்
மகேந்திரன்

Sunday 25 December 2011

கண்ணாடிக் கனவுகள்!!!கித்து நிற்கும் உள்ளத்தில் 
ததும்புது கனவுகள்!
தீர்ப்புநாள் எதிர்கொண்டே  
தீய்ந்துபோன கனவுகள்!!
 
டிகால் வந்திடுமோ 
வற்றித்தான் போய்விடுமோ?!!
வெதும்பிய மனமது
வேற்றுநிலை ஏகிடுமோ?!!
 
மூப்பெய்திப் போனாலும் 
முக்காலில் நடக்காது!
மெத்தப்படித்த பெற்றபிள்ளை 
மென்தோள் பற்றியங்கே!
மார்நிமிர்த்தி நடந்திடவே
மந்தகாச கனவு கண்டேன்!!
 
ழிநெடுக சாலையெல்லாம்
வாளிப்பாய் மின்னிடவே!
வரிசையாய் எறும்புபோல்
வாகனங்கள் சென்றிடவே!
விபத்துக்கள் ஏதுமில்லா 
வண்ணமிகு கனவு கண்டேன்!!
 

 


ட்டியலிட்டுச் சொல்ல
பலசரக்கு இல்லையென!
படர்ந்திருந்த சாதியெல்லாம்
பெண்ணென்றும் ஆணென்றும்
பகுத்து இருந்திடவே!
பேரின்பக் கனவு கண்டேன்!!
 
நெற்கதிர்கள் பெருத்துப்போய்
தன்சுமை தாங்காது!
தலைகுனிந்து நின்றிடவே
விதைத்து வைத்த உழவனவன்
ஊறிவந்த களிப்பதுவால்
தலைநிமிர்ந்து நின்றிட
தேன்கனவு கண்டேனே!!
 
நித்தமொரு சட்டம் 
நிமித்தமொரு விவாதம்!
நெறிபட மக்களவை - என்றும்
நன்முறையில் நடந்திட
நான் கனவு கண்டேனே!!
 
சாயம்போன ஆசைகளை
சாக்காடு போட்டுவிட்டு!
செழுமையாம் வெண்மனதால் 
சாணக்கிய மந்திரிகள் 
சீர்மேவ கனவு கண்டேன்!!
 
 
பிழையென்றால் என்னவென்று 
புரியாத மன்னவர்கள்!
பழுதில்லா தேர்கொண்டு 
பாராண்டு வந்திடவே 
பொற்கனவு கண்டேனே!!
 
மாநிலங்கள் ஒன்றாக
மாண்பாக கூட்டமைத்து!
பெருகிவரும் நதிநீரை
பொதுவென ஆக்கிவைத்து
பாரினிலே சிறந்ததெங்கள்
பாரதம் என்றுரைக்க
பவளக் கனவு கண்டேனே!!
 
ண்டிருந்த கனவெல்லாம்
கண்ணாடிக் குமிழியாய்!
கண்ணெதிரே தவழ்கிறதே
கனவிங்கே மெய்ப்படுமோ?!!
கானல்நீராய் போய்விடுமோ?!!
கண்ணாடிக் குமிழியது
காற்றிழந்து போகாது
காலமெல்லாம் நிலைத்திடுமோ??!!

 
 
அன்பன்
மகேந்திரன் 

Friday 23 December 2011

பறையடிச்சி பாடிவந்தோம்!!!ஏலேலந்தம் பாடிவந்தோம் 
எட்டுக் குடியோனே! எட்டுக் குடியோனே!
எங்ககுடி காக்கவேணும் 
எட்டுக் குடியோனே!!
 
பறையடிச்சி பாடிவந்தோம்
பழங்குடியோர் நாங்க! பழங்குடியோர் நாங்க!
பறையாட்டம் கதைசொல்ல
ஓடிவந்தோம் நாங்க!!
 
 
ஆதியிலே வாழ்ந்திருந்த
எங்க குலத்தோரே! எங்க குலத்தோரே!
அழகாக வடிவமைச்ச
கலையிதுதான் ஐயா!!
 
காடுகளில் எங்ககுலம்
வாழ்ந்திருந்த போது! வாழ்ந்திருந்த போது!
தற்காப்புக் கலையாக
வடிவமைத்தோம் ஐயா!!
 
காட்டில் வாழும் கரடி புலி
கருத்த யானையெல்லாம்! கருத்த யானையெல்லாம்!
பறையடி கேட்டுச்சின்னா
பயந்து ஓடுமய்யா!!
 
 
பறையடிச்சி பாடுகையில்
கேட்டுக்குங்க சாமி! கேட்டுக்குங்க சாமி!
உடம்பெல்லாம் சிலுசிலுக்கும்
நரம்பு முறுக்கேறி!!
 
செத்தமாட்டுத் தோலெடுத்து
கட்டிக்காய வைச்சோம்! கட்டிக்காய வைச்சோம்!
காஞ்சபின்னே தோலெடுத்து
தீயில் வாட்டியெடுத்தோம்!!
 
வளையமொன்னு செஞ்சிடவே 
புன்னைமரக் கம்பு! புன்னைமரக் கம்பு!
மலையனூரில் எடுத்துவந்தோம் 
வட்டப்பறை செய்ய!!
 
 
வாட்டிவைச்ச தோலெடுத்து
வார்பிடிச்சு தாங்க! வார்பிடிச்சு தாங்க!
வளையத்தில் கட்டிவைச்சு
வட்டப்பறை செஞ்சோம்!!
 
அப்போது வீட்டிலெல்லாம்
நிகழ்ச்சியின்னு சொன்னா! நிகழ்ச்சியின்னு சொன்னா!
பறைச்சத்தம் கேட்காம
நாங்க பார்த்ததில்ல!!
 
 
திருமணம் திருவிழான்னு
பறையடிச்சி வந்தோம்! பறையடிச்சி வந்தோம்!
திரும்புன திசையெல்லாம்
பறைச்சத்தம் தாங்க!!
 
ஆரிய சமூகமொன்னு
அடியெடுத்து வைக்க! அடியெடுத்து வைக்க!
ஆட்டங்கண்டு போச்சுதய்யா
எங்க பறையாட்டம்!!
 
தமிழ்க்கலையா இருந்துவந்த
தங்க பறையாட்டம்! தங்க பறையாட்டம்!
சாதியாடும் ஆட்டமின்னு
ஒதுக்கி வைச்சாங்கய்யா!!
 
 
வேகமான ஆட்டமய்யா 
எங்க பறையாட்டம்! தங்க பறையாட்டம்!
வீரியத்தை குறைச்சு அங்கே
ஆனது சதிராட்டம்!!
 
இன்னைக்கு தெரிவதெல்லாம்
பரதாட்டம் தாங்க! பரதாட்டம் தாங்க!
பரதத்தின் முன்னோடியாம்
பொன்னு பறையாட்டம்!!
 
 
இப்படி பெருமையான
பறையாட்டம் இப்போ! சதிராட்டம் இப்போ!
சாவுக்கு ஆடிவரும்
சாப்பறையா ஆச்சு!!
 
பறையடி பலவகையா  
பகுத்து வைச்சாங்கய்யா! தொகுத்து வைச்சாங்கய்யா!
இன்னைக்கு இளைஞரெல்லாம் 
மறந்து போனாங்கய்யா!!
 
 
இலக்கணம் இதற்குமுண்டு
இயைபாக தாங்க! இயைபாக தாங்க!
இங்கிருக்கும் இளையமக்கா 
நல்லா கேட்டுக்கோங்க!!
 
குடிச்சிட்டு ஆடமட்டும் 
கலையில்ல ஐயா! நல்ல கலையில்ல ஐயா!
உயிர்போல வளர்த்துவந்த
கலையை மதிங்க ஐயா!!
 
 
பாங்கான பறையாட்டம்
எங்க உயிரய்யா! எங்க உயிரய்யா!
குடிகார ஆட்டமாக
ஆக்காதீங்க சாமி!!
 
தமிழ்வளர்த்த பெருமையெல்லாம்
எங்களுக்கும் உண்டு! எங்களுக்கும் உண்டு!
கண்ணான கலையிதுவ
கசக்கிபிழிய வேணாம்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Wednesday 21 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-2 )


அன்புநிறை நண்பர்களே,விடுகதைக்கவிதையில்
இது என் இரண்டாம் முயற்சி
கீழே இருக்கும் விடுகதைக்கவிதையை படித்து
அதற்கான சொல் எதுவென்று சொல்லுங்கள்.

இதன் கருத்துக்களின் பொருட்டு இந்த
சொல் விளையாட்டின் தொடர்ச்சி....

இதோ விடுகதை கவிதை....


ஐந்தெழுத்து மந்திரமாம்
ஊக்கம் தரும் சூத்திரமாம்!

முதல் எழுத்தும் கடை எழுத்தும்
கூடி நின்றால் 
இரு பொருள்படும் 
ஒன்றோ
அகத்தின் மகிழ்வை
முகத்தில் காட்டும்!
மற்றொன்றோ
அணிவதால் மகிழ்வைக்
கூட்டும்!!

முதலெழுத்து திரிந்து
"த"கர "உ"கரமாய்
மாறி நின்றால்
விலங்கினம் ஒன்றின்
பலமான உறுப்பொன்றை
உரைத்து நிற்கும்!!

கடையெழுத்து
தனித்து நின்றால்
மனித உறுப்பில்
ஒன்றை
விளம்பி நிற்கும்!! 

முதல் இரண்டும்
தனித்து நின்றால்
பல்வேறு குணமிருப்பினும்
ஒன்றிணைத்து
ஒற்றுமையை உணர்த்தும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
ஆண் மகனில்
சிறந்தவன் என
சிறப்பாய் சொல்லும்!!
முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
மாதமொன்றின்
இறையவனை
இயம்பி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!

இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்

Monday 19 December 2011

தகனம் செய்வித்த மாண்புகள்!!

 
மணிமகுடம் தரித்து
செங்கோல் கைகொண்ட
மன்னராட்சி கவிழ்ந்ததுவே!
எமக்கென எம்மை
அரசாள நீவேண்டுமென
குடிமக்கள் தருவித்த
மக்களாட்சி மலர்ந்ததுவே!!
 
எம்குலத் தலைவனென
ஏழை பங்காளனென  
ஏற்றமிகு பண்புகளை
ஏகமாய் கொண்டவரை
எம்மவனே! ஏந்தலே!
எமை ஆளவா மன்னவனே என  
ஏற்றிவைத்து பார்த்திருந்தோம்!!
 
 
குறைகளை கூறிடவோர்
கொற்றவன் கிடைத்தானென!
கடவுளைப் போல் வந்தவனை 
கண்ணாடிக் கோட்டையில் 
கோமகனாய் அமர்த்திவிட்டு!
கிட்டியது சுதந்திரமென 
கொட்டி முழங்கினோம்!!
 
 
மாண்புகளை தன்னுள்ளே 
மாபெரும் சூத்திரமாய்!
மூட்டி வைத்தாண்டார் 
முன்னொரு காலத்தில்!
மிகையாய் சொல்லவில்லை 
மெத்தப் படிக்காது போனாலும்
மேன்மையாய் அரசாண்டார்!!
 
 
தலைமுறை தாகங்கள்
தவித்து நிற்கையிலே!
சிதறுண்டு போனது
கண்ணாடிக் கோட்டையது!
மாண்புகள் தொலைத்திருந்த
மனித பிண்டங்களோ   
மக்களாட்சி போர்வையிலே!!
 
 
சேறுண்ட கொள்கைகளை
சீரிய நோக்கமென
சூளுரைத்துச் சொன்னாயே!
சாதீய போதனையை
சாகசமாய் உரைத்தாயே!
சமத்துவம் என்பதெல்லாம்
சாக்காடு போனதுவோ?!!
 
சொல்வன்மை மாறிப்போய்
வன்சொல்லாய் ஆனதுவே!
நேர்மையின் தரமெல்லாம்
கூறுபோட்டு விற்றுவிட்டு!
சுயத்துடன் உறவாடி  
சுயமரியாதை என்பதனை   
இடுகாட்டில் புதைத்தாயே!!
 
 
மக்களவை போவதெல்லாம் 
முக்காடுபோட்டு தூங்கிடவா?!
கடமை உணர்வெல்லாம் 
கட்டவிழ்த்து போட்டுவிட்டு!
பணப்பேராசை பிடித்து
உல்லாச வாழ்வுதனில் 
தலைமூழ்கிப் போனாயே!!
 
தொலைநோக்கு பார்வையதை 
தொலைதூக்கி போட்டுவிட்டாய்!
நேற்றென்ன உரைத்தோமென
இன்றுனக்கு நினைவில்லை!
உன்னிலை நீ அறியாதபோது
கர்வத்துடன் கூட்டுவைத்து
ஆணவம் பேசுவது ஏன்?!! 

தன்னிறை வாழ்விதனை  
தரணியில் மனிதனாய்!
தகுதியாய் வாழ்ந்து 
தளர்ந்து போனபின்னே!   
துவண்ட உடலதை
தகனம் செய்யலாம்!!
தன்னுயிர் இருக்கையிலே
மாண்புகளைச் செய்யலாமா??!!
 
 
மாண்புமிகு எனச்சொல்லி 
மார்தட்டிக் கொள்வோரே!
மானுடம் போற்றும்
மணியான மாண்புகளை
மயானத் தகனம் செய்தபின்!
மண்ணுலகில் உமக்கிங்கே
வாழ்ந்திட இடமேது?!
மாண்புகள் இன்னதென்று 
மனப்பாடம் செய்துகொள்வீர்!
மனதில் நிலைநிறுத்தி
மனிதனாக வாழ்ந்திடுவீர்!!! 
 
  
 
 
அன்பன் 
மகேந்திரன்
 
 

Saturday 17 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே??!!!
தனிமை ஒரு தவம் போன்றது. உணர்வுகள் போராட்டம் நடத்தும் வாழ்வில்
தனிமை தனக்கிட்ட பணியை செவ்வனே செய்கிறது. இருக்கின்ற மனநிலையைப்
பொறுத்து தனிமை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் சிலசமயம் குரூரமாகவும்
பல சமயங்களில் சீர்மிகு சிந்தனையாகவும். இப்படி நான் விடப்பட்ட ஒரு தனிமை
வேளையில் என் மனதுக்குள் உதித்த எண்ணம் தான் இது.

நம் தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சம் இல்லை. அதில் ஒரு சொல்லை எடுத்து
ஒரு விடுகதை போட்டால் என்ன என்ற எண்ணம் தான் அது..

முயற்சிக்கிறேன்....

இதோ பாடல் வடிவில் ஒரு விடுகதை. முடிவில் இங்கு விடுகதைக்காக எடுக்கப்பட்ட
சொல்லை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

ஐந்தெழுத்தை அழகாய் 
தன்னுள் பதித்த 
கைதவழ் பொருளின் 
அழகிய சொல்லே!!

முதலெழுத்தின்
"ஆ"காரம் "அ"கரமாக
மாறிநின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ ஆவணமாய்
சட்டம் பேசும்!
மற்றொன்றோ
தட்டி எழுப்பி  
விழித்துக்கொள்ளச் செய்யும்!! 

முதலெழுத்து திரிந்து
"ச"கர "ஊ"காரமாய் 
மாறிநின்றால் 
நான் இல்லையேல் 
கணிதமில்லை என 
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து 
"ச"கர "ஆ"காரமாய் 
மாறிநின்றால் 
சகல் கலைகளும்  
என் கட்டுக்குள் தானென 
ஆணவம் பேசும்!!

முதலெழுத்து திரிந்து
"ம"கர "இ"கரமாயும்
கடையெழுத்து திரிந்து 
"ன"கரமாயும் மாறி
அதே ஐந்தெழுத்தாய்
உருமாறி நின்றால்
நம்பிக்கைக்கு உரியவராயும்
உற்ற நேரத்தில்
தோள் கொடுப்பவராயும்  
மிளிர்ந்து நிற்கும்!!
முதலும் கடையிரண்டும்
கூடிநின்றால் 
தாளாத அதிகப்படியான
பொருள் அளவை
முன்மொழிந்து நிற்கும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
விதைப்பதற்காய்
உழவன் அமைத்த
வடிவை அழகாக
சொல்லி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
இன்று மாலை வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்


Wednesday 14 December 2011

பஞ்சாயத்து பேசி வாய்யா!!!


பொன்னாங்கண்ணி தோட்டத்திலே
களையெடுக்கும் சின்னபுள்ளே
சிணுங்காம பக்கம்வாடி 
சின்னமச்சான் காத்திருக்கேன்!!
 
சின்னமனூர் சந்தையிலே
சுங்குடிச்சீலை  வாங்கிவந்தேன்!
தங்க மணிச்சிலையே
தாவியிங்கே ஓடிவாடி!! 

ஆண்டிப்பட்டி அழகு அத்தை 
பெத்தெடுத்த கருத்த மச்சான்!
தூண்டிபோட்டு நீ இழுக்க 
திருக்க மீனா நானுமிங்கே!!
 
சின்னமனூர் போயிவந்து
சிங்கப்பூரு போனதுபோல்!
சிலுத்துகிட்டு நிக்குறியே 
சீமான்பெத்த செல்லமச்சான்!! 


குச்சனூரு குமரிப்புள்ளே
களையெடுக்கும் நேரத்திலே!
கும்பக்கரை தண்ணிபோல
குளிர்ச்சியாக பாடிடடி!!
 
அள்ளி பூமுடிச்சி
அலுங்காம பக்கம்வாடி!
ஆசையெல்லாம் மனசுக்குள்ளே
அவிச்ச நெல்லா கிடக்குதடி!!
 
 
வாடிப்பட்டி மேளம்போல
தாளம்போட்டு பேசும் மச்சான்! 
வௌவ்வாலு  நிற்பதைப்போல்  
தலைகீழா நிற்குறியே!!
 
வேலை தலைக்குமேல
வெடவெடன்னு கிடக்குதய்யா!
கீரை கொஞ்சம் பறிச்சுத்தாரேன்
கூளையனூர் போய்வாங்க!!
 
 
சுருளித் தண்ணிபோல  
சுள்ளுன்னு பேசுறியே!
கொஞ்சி பேசினாலோ
குறைஞ்சாடி போயிடுவ!!
 
கௌமாரி குடியிருக்கும்
வீரபாண்டி போயிடுவோம்!
கூரைச்சீலை வாங்கியாறேன்
குடித்தனந்தான் தொடங்கிடுவோம்!!
 
 
உத்தம பாளையத்து
உடுக்குபோல சலம்புறியே!
அப்பனாத்தா பார்த்தாகன்னா
எவ்வுசிரே போயிடுமே!!
 
கோக்குமாக்கு செய்யாதய்யா 
கோலிக்குண்டு கண்ணுமச்சான்!
உனக்கின்னு பொறந்தவ நான் 
உன்னைவிட்டு எங்க போவேன்!!
 
 
எகத்தாளம் பேசாதடி
எனக்கின்னு பொறந்தவளே!
அயித்தையும் மாமனும் ஏன் 
கட்டிவைக்க மாட்டாகளா!! 
 
கொட்டக்குடிச் சந்தையில
தாலியொன்னு வாங்கியாறேன்!
தளம்விட்டு எறங்கிவாடி  
தம்பதியா வாழ்ந்திடுவோம்!!
 
 
அல்லிராணி நானுமில்ல
அகங்காரம் பேசவில்லை!
ஊரிருக்கும் நிலையிலே நீ
புத்திகெட்டு பேசாதய்யா!!
 
முல்லை பெரியாறு 
கொல்லையிலே ஓடினாத்தான்!
நமக்கெல்லாம் கஞ்சியின்னு 
தெரியாதா தங்கமச்சான்!!
 
ஊரே கொதிக்குதய்யா 
எல்லையிலே நிக்குதய்யா!
மதிகெட்டு நீயிங்கே 
சுதிபோட்டு பேசுறியே!!
 
தேனி பெரியகுளம் 
போடிப்பட்டி சரகமெல்லாம்!
அந்தத் தண்ணி நம்பித்தானே 
இந்தவுசிர் வைச்சிருக்கோம்!!
 
அண்டை நாட்டுக்காரன் 
அகம்பாவம் பேசுராய்யா!!
பாய்ஞ்சி ஓடிப்போயி 
பஞ்சாயத்து பேசி வாய்யா!!
 
 
தேக்கம்பட்டி தேனுன்னு
தோதாக நினைச்சிருந்தேன்!
ஊக்கமாக பேசிபுட்ட 
உடனே நான் கிளம்புறேண்டி!!
 
பக்கத்து நாட்டுக்காரன்
போட்டுவைச்ச புகார்மனுவ!
உச்சநீதி மன்றமது 
தள்ளிவைச்சி போட்டாகளாம்!!  
 
ஊரெல்லாம் தண்ணிக்காக
கூடிநிக்கும் வேளையிலே!
சுயநலமா இருந்த என்னை 
புத்திசொல்லி மாத்திபுட்ட!!
 
தரணி போற்றிவந்த 
தமிழ்நாட்டு நிலமையிங்கே!
தண்ணிக்காக காலமெல்லாம் 
தவிச்சிகிட்டே கிடக்குதடி!!
 
ஊரோட கூடப்போறேன் 
ஊர்வலமா போகப்போறேன்!
ஒத்துமையா சேர்ந்துநின்னு
ஓங்கிக்குரல் ஒலிக்கப்போறேன்!!
 
இன்னைக்கு நடக்கப்போகும் 
பஞ்சாயத்துக்கு அப்புறமா!
இனிமேல் ஒருபொழுது 
வந்திடாம காத்திடணும்!!
 
 
தேசிங்கு ராசாபோல்
வீரநடை போட்டிடய்யா!
தேசமின்னா ஒன்னுன்னு
உரக்க நீயும் பேசிவாய்யா!!  
 
எம்மனசு நிறைஞ்சுதய்யா 
இட்டுகட்டி பாடுதய்யா!
உனக்காக காத்திருப்பேன்
போய்வாய்யா ஆசைமச்சான்!! 
 
 
 
அன்பன் 
மகேந்திரன்    


பின்குறிப்பு:
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக கேரள எல்லையில் இன்னும் பதட்டம் ஓய்ந்தபாடில்லை. உச்சநீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்திருந்தாலும். இன்னும் 
மத்திய அரசு வாய்திறந்து பேசவில்லை. மத்திய அரசிற்கு இதை உணர்த்தும் வகையில் அன்பு நண்பர் சசிக்குமார் அவர்கள் கையெழுத்து கேட்கிறார். நாம் அங்கே சென்று ஆதரவை தெரிவிப்போம். நமது நண்பர்களுக்கும் சொல்வோம். ஓங்கிக் குரல் எழுப்புவோம்.
 
நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் தனது பதிவில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டின் வரலாற்றை தனது பதிவில் வெளியிட்டிருக்கிறார். சென்று பார்ப்போம் நண்பர்களே.
 

Monday 12 December 2011

முகமேற்கும் முத்திரைகள்!!!துயில் களைந்து
விழித்தெழுந்து - பின்னே
இன்றைய பொழுது
சாய்ந்து விடுவதற்குள் - நாம்
முகமேற்கும் முத்திரைகள்  
கணக்கினில் அடங்கிடுமா?!!
 
தினசரிப் பக்கங்களை
தேநீருடன் புரட்டுகையில்!
முகம் சுழிக்கச் செய்யும்
சாலை விபத்துக்களை 
கண்கொண்டு காண்கையில் 
மனம்பதைக்கா நாளுண்டா?!!
 
 
 
வைகறை விழித்து
பணிதனை துவக்க
எவ்வுந்தில் சென்றாலும்
செறிவுக்கு நடுவே - தினமும்
மணிக்கட்டை உயர்த்தி
கடிகாரம் பார்க்காத நாளுண்டா?!!
 
காரணங்கள் ஏதுமின்றி
சாமர வீசிகளின்!
புறங்கூற்று பொழிதலினால்
நெல் சுமக்கும் கதிரைப்போல்
மேலிடத்து ஆசாமி முன்
தலைகுனியா பொழுதுண்டா?!!
 
 
பண்டகப் பொருள் வாங்க
சந்தைக்குச் சென்றாலோ!
நேற்றிருந்த விலை
இன்று காணவில்லை
நாளுக்கொரு விலையேற்றம்
நெஞ்சைப் பிசையா தினமுண்டா?!!
 
ஆட்சிக்கு வருவதற்காய் 
அலங்காரப் பொய்யுரைத்து!
ஆட்சிக்கு வந்த பின்னே 
காட்சிகளை மாற்றிப்போடும்
சித்திரக் குள்ளர்களை 
நித்தமும் காண்கையிலே!!
 
 
பகுத்துண்டு வாழென
பண்பேற்றோர் உரைத்ததெல்லாம்!
காற்றோடு பறக்கவிட்டு 
அண்டை வீட்டோன்
தொண்டைக்குழி நனைப்பதற்கு 
தண்ணீர் தரமறுத்து 
பிடிவாதம் செய்கையிலே!!
 
கடுத்த சினமேறி
எடுத்த எடுப்பிற்கெல்லாம்
அடுத்தது தெரியாது
வளைக்கரப் பெண்டீரை 
மானபங்கம் செய்வோரை
மாநிலத்தில் காண்கையிலே!!
 
 

பாடப் புத்தகத்தை 
மனப்பாடம் செய்வித்து 
படித்தறிந்த நாமே!
அணுசக்தி ஆபத்தென்று 
அலறித் துடிக்கையில்! 
அதனால் ஒன்றுமில்லையென 
அறிவேற்றோர் உரைக்கையிலே!!
 
 
அடுத்தவன் கைப்பணம் 
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே 
அடிமனது தத்தளிக்கும்!
வரிப்பணத்தை லாவகமாய்
பங்குபோட்டு ஏப்பமிட்டவனோ
ஒன்றுமே அறியாதவன் போல் 
ஊர்வலம் செல்கையிலே!!
 
 


கருத்தரிக்கும் பெண்ணின்
கர்ப்பப் பையை
அறுத்து எறிவது போல்!
விளைந்து வரும் விளைநிலத்தை
கூட்டாக கூறுபோட்டு
மனை நிலமாய்
விற்பவரை காண்கையிலே!!
 
துலாக்கோல் கொண்டு
சம்பவ சாரங்களை!
தரமற்றது என்றுரைக்கும்
சாத்திரம் அறிந்தோரை
சமூக துரோகியென
கூசாமல் கூற்றுவித்து
ஒதுக்கி வைப்பதை
காணொளியாய்  பார்க்கையிலே!!
 
 
தாள முடியவில்லை - மனம்
தாங்க முடியவில்லை!
முப்பாட்டன் விட்டுச்சென்ற
அரிவாள் எடுத்திடவே
கைகள் துடிக்கிறது!
அசகாய சூரரென - மனதில்
அச்சு ஏற்றிக் கொண்டு
துர்செயல்கள் செய்வோரை
துண்டு போட்டிடவே!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 

Friday 9 December 2011

கருத்தினில் மீள்வித்தேன்!!ஆயகலைகள் அறுபத்தி நான்கென்றார் 
தோய்ந்து ஞானம் பெற்றோர்!
அறுபத்தி நான்கையும் வகைப்படுத்தென்றால்
குறுகித் தலை குனிகிறேன்!!
 
உயிர்ப்புள்ள உணர்வுகளால் நாளும் 
உந்தப்படும் உயிரி நானோ!
செய்வினைகளின் தாக்கத்தால் தினமும்
செயலற்றுப்போய் நிற்கிறேன்!!
 

 


பல்வகைச் சூழல்களில் உழன்று
பக்குவப்படா உள்ளத்தால்!
பருவங்களின் கைப்பாவையாய்
உருமாறி இயைபிழந்து போனேன்!! 
 
ஆரணங்குகளின் ஆடற்கலையும் 
இனிக்கும் இசைக்கலையும்!
தொலைந்துபோன நாடகக்கலையும்
நினைவில் தருவிக்கிறேன்!!
 
 
தலைகாத்த தர்ம சாத்திரமும்
சிதிலமான நீதி சாத்திரமும்!
வியக்கவைத்த சிற்ப சாத்திரமும் 
கருத்தினில் மீள்வித்தேன்!!
 
காலம் இயற்றிய கலைகள் 
கணக்கில் அடங்கிடுமா?!! 
வரையறை வகுத்துச் சொல்ல
வகுப்பறை ஏதும் உண்டா?!!
 
 
தொன்மைகள் மறைந்து போய்
புதுமைகள் புகுந்திடுகையில்!
மாற்றங்கள் கொண்டு சேர்க்கும்
மாறுதல்கள் எத்தனை எத்தனை!!
 
காலங்கள் மாறிப் போனாலும்
சுவடுகள் சிதைந்து போனாலும்!
அழுகிப் போகாத கலைகள்
அவனியில் உலவுகின்றனவே!!
 
 
ஆயிரம் ஆயிரம் உண்டெனினும்
ஆதிதொட்டு வளர்ந்து வரும்!
பொற்கிழியாம் பேச்சுக்கலையை
விழிவிரிய வியந்து நின்றேன்!!
 
மொழியின் வரிவடிவத்தை 
புழங்கும் ஒலி வடிவாய்!
தரம் மாறிப் போனாலும் 
சிரம் கொண்டு காப்பதெல்லாம் 
உன்னத பேச்சுக் கலையே!!
 
 
இலக்கணத்தின் வரையறைக்குள் 
கட்டுப்படா புரவி தான்! 
கடிவாளம் இட்டு விட்டால்
பிடிவாதம் கைவிட்டு
வடிவான மொழி பேசும்!!
 
இவன்தான் அவன் என
வாய்மொழியின் தரம் கொண்டு!
சுட்டிக் காட்டி விடும்  
கெட்டிக்கார பேச்சுக்கலை!!
 
 
குலக்குடியின் பெருமையும் 
கொண்ட பண்பின் நிலையையும்!
சொல்கின்ற வார்த்தையது
தெள்ளென புலனாக்கும்!!
 
அழகு செரிந்திருக்கலாம்
வனப்பு மிகுந்திருக்கலாம்!
கல்லுக்கும் இணையாகோம் 
சொல்வன்மை இல்லையெனில்!!
 
 
நற்சொல்லைப் பகர்ந்திருந்தால் 
உற்சவம் தினம் காண்பாய்!
நீ வாய்மொழியும் வார்த்தைக்காய்  
புகழேணி ஏறிடுவாய்!!
 
மடிந்து மண்ணுள்ளே
தகனம் ஆகும் வரை!
உனக்கென உன்னோடு
உயிரோடு உறவாடும்
சொல்வன்மை போற்றிவிடு!
கலைகளிலே சிறந்ததாம்  
பேச்சுக்கலை வளர்த்திடு!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்