Powered By Blogger

Thursday 23 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-6)






ன்புநிறை தோழமைகளே,

னமே ஒரு மந்திரச்சாவி என்பார்கள். அப்படி நம் எண்ணங்களை

திறக்க உதவும் அந்த மந்திரச்சாவியை மிகவும் பத்திரமாக வைக்க
மனதை சிறுசிறு விளையாட்டுக்களும் வேறு பல சிந்தையூறும்
சிந்தனைகளும் உருவாக்கி அதனை பாதுகாத்திடல் வேண்டும்.
அதற்காக இங்கே ஒரு சொல்விளையாட்டு.  விளையாட்டை
சொல் வடிவில் கொடுக்கும் முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை 
விளையாட்டு. நான் நினைத்த ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய
ஒரு விடுகதைக் கவிதை இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........
 

 


ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் கோர்த்து வைத்த
விலைமதிப்பற்ற சொல்லிது!!
 
ந்தெழுத்தும்
தனித்து நின்றால்
தகதகவென மின்னும்
பொன்னின் பொருள் கொள்ளும்!!
 
முதலெழுத்து திரிந்து
'அ' என மாறி
ஏனைய நான்குடன்
இணைந்து நின்றால்
இருபொருள் தரும்!
ஒன்றோ
வேல்விழிகளுக்கு இடும்
கண்ணிடு மையை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
மேற்குத்திசை யானையின்
பெயரினை
விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
'ச'கர 'அ'கரமாய் மாறியும்!
நான்காம் எழுத்து திரிந்து
'ல'கர 'அ'கரமாய் மாறியும்
ஐந்தெழுத்தாய் நின்றால்
நிலைத்தன்மை இல்லாத
குழம்பிய மனநிலையை
உணர்த்தி நிற்கும்!!
 
 
முதலெழுத்து திரிந்து
'த' கர 'அ' கரமாய் மாறி
இரண்டு மூன்று மற்றும்
கடைஎழுத்துடன்
கூடி நான்கெழுத்து சொல்லாய்
நிற்குமேயானால்
அடைக்கலம் நீயென
புகழிடம் தேடி வரும்!!
 
முதலெழுத்து மட்டும்
தனித்து நின்றால்
அழகு மிகுந்த
சோலை எனவும்
பொருள் தரும்!!
 
னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்

Saturday 18 February 2012

பருவநிலைகள் ஏழு!!!


கன்ற புவியின்
அங்குலம் தோறும்
அவதானிக்கும் மனிதர்களின்!
அடையாளச் சின்னமாய்
அகத்தினை தருவிக்கும்
அழகான மொழியழகே!!!
 
ழலையின் மொழிமுதல்
மங்காத ஒளிவிளக்காய்
மாதாவின் இதழினின்று!
மரிக்கொழுந்து வாசமாய்
மனதினை ஆட்கொண்ட
மதுரத் தமிழழகே!!


கட்டு மொழி பேசாது
பண்பாடு இதுவென
பக்குவ மொழியாலே!
பச்சிளம் பருவத்திலே 
பதியம் போட்டுவைத்த 
பார்போற்றும் தமிழழகே!! 
 
காண்மின்! காண்மின்! என
கலிங்கத்துப் பரணியை
களிப்போடு எனக்குரைத்து!
கலியுலக வேந்தன் நீயென
கவிமகுடம் சூட்டிய
கற்கண்டுத் தமிழழகே!!
 
டைதிறந்த வெள்ளம்போல்
மாமணியே உன்னுள்ளே  
மடங்காய் பெருகிநிற்கும்
மந்தகாச பொருளுணர்வை
மௌனித்து காண்கையிலே
மதகுடைத்த நீரானேன்!!


பெரும்பறை முழக்கி
பெட்டகச் சொற்களால்
பெண்ணின் பருவங்கள் ஏழென!
பெருமையோடு நீ கூறுகையில்
பெண்ணிற்கு மட்டுமா பருவங்கள்? - நீ
பெற்ற ஆணிற்கு இல்லையா - என
பொறையொடு  வினா தொடுத்தேன்!!
 
ருவில் உதித்தவனே - என்
உருவைச் சுமந்தவனே
பொறுமையை சிரம்கொள்!
பருவங்கள்  உனக்குமுண்டு
செருக்கை ஒழித்துவிட்டு
பொருண்மையை விளம்புகிறேன்
அருகிருந்து கேட்டிடுவாய்!!


கைதவழ் பருவந்தொட்டு
ஏழாண்டு தொடும் வரை!
மனம் மயக்கும் மழலை
பருவமதை அழகாய்
பாலன் என விளம்பிடுக!!


செய்யும் செயலுக்கும்
பார்க்கும் பொருளுக்கும்
விளக்கம் கேட்க துடிக்கும்
ஏழாண்டு முதல் பத்தாண்டு வரை
பொருள் தேடும் பருவத்தை
மீளி என சொல்லிடுக!!


நான் என்ன குழந்தையா?
எனக்கேன் இந்த விளக்கமென
அறியாததை அறிந்தது போல்
புறத்தில் அகம்காட்ட மறுக்கும்  
பத்து முதல் பதினான்கு வரை
விகற்ப உணர்வுகள்
மேலோங்கிய பருவத்தை
மறவோன் என இயம்பிடுக!!


ரும்பு மீசை முளைக்க
அலைபாயும் உள்ளமதை
அள்ளித்தெளித்த நட்சத்திரங்களாய்
அங்குமிங்கும் பரவவிடும்
பதினான்கு முதல் பதினாறு வரை
பரியேறி பார்வலம் வந்திடும்
பாங்கான பருவத்தை
திறலோன் என சொல்லிடுக!!


ணின் பருவங்களில்
ஆபத்து நிறைந்த
ஆட்கொல்லிப் பருவமிது!
பதினாறு என்பதில்
பகட்டுத் தோற்றம்
புனையச் சொல்லும்!
பதினாறின் சாகசங்களை
சான்றுகள் இல்லாது
சவமாய் ஆக்கிவிட்டு
சரித்திரம் ஏற வைக்கும்
சாரல்மழைப் பருவமிதை
காளை என பகன்றிடுக!!


யிற்றின் பகுதியில்
ஆறு மடிப்புக்காய்
எத்தனிக்கும் முயற்சி முதல்
வாழ்வின் பொருளுணர்வுகளை
உணரத் துடித்து
பணமும் குணமும்
ஒருசேர வேண்டுமென
முடிவுக்காய் வந்துவிடும்
மூப்பின் ஆரம்பம் முப்பது வரை
விடலை என விளம்பிடுக!!


ந்ததிகளின் வாழ்வொன்றே
சாத்திரம் எனக்கொண்டு
பாத்திரம் நிரப்புவதே
தலையாய கடமையாய்
வாழ்வின் நீரோட்டப் பாதையில்
பயணத்தை ஆரம்பிக்கும்
முப்பதிற்குப் பின்வரும்  
மூப்பிற்காம் ஆரம்ப நிலையை
முதுமகன் என உரைத்திடுக!!


தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday 17 February 2012

நானும் எனது சொந்த ஊரும்!! (தொடர்பதிவு)


லையுலகின்  வீசுதென்றலாய் கவிதைகளில் தென்றலின்
இன்பத்தை சுவைக்க வைக்கும் என் அன்புத் தங்கை சசிகலா
அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கினங்க இந்தப் பதிவு.. 

சொந்த ஊர் என்று சொல்லும்போதே கொஞ்சம் புன்னகையும்
இதழோரம் கலந்துவிடுவது இயல்பான செயல். நம்ம பிறந்த
ஊரைப்பற்றி சொல்லணும் என்றால் சொல்லிக்கிட்டே இருக்கலாம்..
 
ர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும்.
வாங்க.. வாங்க.. உட்கார்ந்து பேசுவோம் எங்க ஊரு பெருமை பற்றி.
 
தென் தமிழகத்தின் வரலாற்றில் நிலைபெற்ற சின்னமாய் விளங்கும்
தூத்துக்குடி என் ஊர். இதற்கான பல பெயர்க்காரணம் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று அன்றோர் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு தூதுவர்களாய்
வருபவர்கள் தங்கி இருந்து செல்லுமிடமாய் இருந்ததால்.... தூதுக்குடி என்றும்
பின்னர் அது திரிந்து தூத்துக்குடி ஆனதென்றும் கூறுவார்...
 
தூத்துக்குடி நகர் ஒரு வளர்ந்த கிராமம் போல.. நகரின் மையப்பகுதியில் இருந்து
பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு அப்புறம் மேற்கு நோக்கி சென்றாலோ அல்லது
தெற்கு நோக்கி சென்றாலோ பசுமையாய் இருக்கும்.
 
 
 
நாட்டின் பெரும்பாலானோர் உணவில் பயன்படுத்தும் உப்பில் ஒரு கல் உப்பாவது
எங்க ஊரு உப்பாக இருக்கும். பரந்த பாரத நாட்டின் உப்பு உற்பத்தியில்
இரண்டாம் இடம் வகிக்கிறது எங்க ஊர். அது தவிர பல முக்கியமான
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 
ங்க ஊர் கடலோரம் அமைந்த தான்தோன்றி பனிமய மாதா திருக்கோவில்
மிகவும் புகழ் வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5 ம் நாள் இங்கே
கோலாகலத் திருவிழா நடக்கும்.
 
எங்க ஊர் பேச்சு வழக்கை இங்கே கொஞ்சம்
சொல்ல முயற்சிக்கிறேன்...
 
ம்லே ஏகாம்பரம்
இங்கிட்டு எங்க வந்தே?
அண்ணாச்சி
நல்லா இருக்கீகளா?
நான் சும்மா அப்படியே
ஊர சுத்தி பாத்திட்டு
எல்லாரும் நல்லா இருக்கீகளா னு
பாத்துட்டு அப்படியே
அங்கிட்டு கூடி
திருச்செந்தூரு போகலாம் னு வந்தேன்..
 
ஏலேய்
நல்லா ஏசிப்புடுவேன் பாத்துக்கோ
இந்தாள இங்க வர வந்துபுட்டு
வீட்டுக்கு வராம போனீன்னா
அப்பறம் நல்லா இருக்காது
சொல்லிபுட்டேன்...
 
இப்படி ஏழு ஸ்வரங்களுடன் எட்டாவது ஸ்வரமாய் எங்க ஊரு தமிழை
சேர்க்கலாம்..அவ்வளவு எழில்மிகு சிறப்பு.
=========================================================================
 
இந்தப் பதிவை தொடர்வதற்காக நான் அழைக்கும் என் சொந்தங்கள்..
 
திவுலகில் என் தோள்குலுக்கி உறவுமுறையோடு அருமையாய் பழகும்
அருமை காட்டான்  மாமா... இவரின் எழுத்து நடைக்காகவே இவர் பதிவுகளை
பார்க்க விரும்புகிறேன்.
 
டிக்க ஆரம்பிக்கையில் கமல மொட்டுக்களாய் துவங்கும் இவரின் பதிவுகள்
படித்து முடிக்கையில் மலர்ந்து செந்தாமரையை மனம் வீசும் எழுத்துக்குச்
சொந்தக்காரர் அன்பு சகோதரி கீதமஞ்சரி.
 
கோவை மாநகரின் இதமான ஈரக்காற்று போல இவர் பதிவுகளிலும்
இதமும் பதமும் இனிமையுற நூற்றுக்கொடுக்கும்
கோவையின் கொன்றைவேந்தன் என் அருமை நண்பர் ரமேஷ் வெங்கடபதி
 
மிழின் சுவையை தான் எழுதிய பக்தி பாமாலைகளால் என் மனதை கொள்ளை கொண்டு மனதில் நீங்கா இடம் பிடித்த ஐயா தமிழ்விரும்பி ஆலாசியம் அவர்கள்.
 
 
அன்பன்
மகேந்திரன்

Sunday 12 February 2012

களிப்பான கழியாட்டம்!!!







போதக முகத்தோனே
பேரன்னை புதல்வோனே!
ஏரம்ப நாயகனே
கோட்டுமலை பெரியோனே!
கோலாட்டம் ஆடவந்தேன்
களம் வந்து காத்திடய்யா!!
 
ந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
 
 
லேலோ ஆட்டமாடி
ஏலேலந்தம் பாடிவந்தேன்!
எழிலான  ஏழுதேசம் 
இறங்கி நானும் ஓடிவந்தேன்!!
 
ருமனை அங்காளம்மா
அழகாக பெத்தபுள்ள!
கடம்பங் குச்செடுத்து 
கழியாட்டம் ஆடவந்தேன்!!
 
 
கைக்கொரு கழிகொண்டு
எதிராக சோடிபோட்டு!
நாட்டாரு கலையிதையே
நயமாக ஆடவந்தேன்!!
 
காணிக்காரன் என்றுசொல்லும்
ஆதியினம் நானப்பா!
மூட்டுக்காணி தலைமையிலே
மந்தையிலே ஆடவந்தேன்!!
 
 
சீதவெற்றம் குச்செடுத்து
சிங்கார உடையுடனே!
மைலாடி மைனர் நான்
மையலாக ஆடவந்தேன்!!
 
கொரண்டிக் கழிகொண்டு
தட்டித்தட்டி ஆடயிலே!
கருப்பன் சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
 
 
மாடனுக்கும் இசக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!!
 
ழிலைக் கிழங்கை நல்லா
பக்குவமா கிளர்ந்தெடுத்து!
பாபநாசம் உச்சியிலே
பாங்காக வாசம் செய்தோம்!!
 
தாழக்குடி ஆசானவர்
தலையேத்தி தந்தபாடம்!
கணுக்கால் சதிராட
அடவுகட்டி ஆடிவந்தேன்!!
 
 
டும்பின் தோலெடுத்து
உலர்ந்து போனபின்னே!
சுட்டெடுத்த மண்பானை
வாயில்தான் கட்டிவச்சோம்!!
 
ட்டிவச்ச பானையத
உடுக்கக்கட்டை என்போம்!
அதில் வந்த இசையோடு
அழகாக ஆடிவந்தோம்!!
 
ருகையில் கழிஎடுத்து
மறுகையில் துணிய கட்டி!
வட்டமிட்டு ஆடிவந்த
ஒத்தைக்கழி கோலாட்டம்!!
 
 
கைக்கொரு கழிஎடுத்து
முன்நெற்றி மண்பார்க்க! 
வளைஞ்சு ஆடிவந்த
இரட்டக்கழி கோலாட்டம்!!
 
த்தரம் ஒன்னு செஞ்சு
பலவண்ண துணிகள் கட்டி!
வலக்கையில் கழிஎடுத்து
இடக்கையில் துணி பிடித்தோம்!
 
 
ட்டமாக கூடிநின்னு
வந்த இசைக்கேற்ப!
கோலாட்டம் அடிக்கையிலே
துணிகளில் பின்னல் விழும்!!
 
டிவந்த திசைக்கிப்போ
எதிராக அடுத்தகுழு!
நேரெதிரா ஆடயிலே
விழுந்த பின்னல் அவிழ்ந்துவிடும்!!
 
ழகான இந்த ஆட்டம்
கவர்ந்திழுக்கும் ஆட்டமய்யா!
இதற்கான பெயரதுவே
பின்னல் கோலாட்டம் என்பார்!! 
 

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!
 
காலுக்கும் கைகளுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!
 
 
சின்னமக்கா பொன்னுமக்கா
சிங்கார கண்ணுமக்கா!
சீரான இக்கலைய
சீரழிக்க வேணாமய்யா!!
 
தோளிலே கைபோட்டு
தோழனென இல்லேனாலும்!
கூனிப்போன எங்களைத்தான்
கோமாளி ஆக்காதய்யா!!
 
ங்குதற்கு காரவீடு
தகுதியா இல்லேனாலும்!
தரணியில் இப்போதும் - நாங்க
தரம் தாழ்ந்து போகலய்யா!!
 
 
குறிப்பு:
 
கடந்த மாதம் 22  ம் நாள் விஜய் தொலைக்காட்சியில் "நீயா-நானா" வில் "தமிழர்களின் பாரம்பரியம்"
பற்றிய விவாதம் அழகாக நடந்தேறியது. பாரம்பரியம் என்பது அவசியமில்லாதது என்று பேசிய நபர்களை
பார்த்தால் பொதுவாக இளைய தலைமுறையினர் என்றே சொல்லலாம்.
"தமிழர்களின் கலைகள்" பற்றிய பேச்சு எழுகையில் நம் பாரம்பரியக் கலைகளை தெரிந்துகொள்ளக் கூட
அவர்கள் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அதே சமயம் வடநாட்டு மற்றும் மேல்நாட்டு கலைகளுக்கு அவர்கள் தரும் ஆதரவுக்கு மனம் வேதனை அடைந்தது.
 
அதையும் தாண்டி அந்த நிகழ்ச்சியின் நடத்துனர் "திரு.கோபிநாத்" அவர்கள் கலைகளின் தன்மையையும்
அதை ஏன் நீங்கள் வெறுக்கிறீர்கள், நம் கலைகளை அருவெருப்பாய் பார்க்கும் நீங்கள் ஏன்  மற்ற நாட்டு கலைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள்?? என்று மாறி மாறி கேள்விக்கணைகளை தொடுத்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு வந்தார்.
இந்தப் பதிவின் மூலமாக "திரு. கோபிநாத் " அவர்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Monday 6 February 2012

புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை!! (தொடர்பதிவு)






புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு

எழுத அழைத்த என் மரியாதைக்குரிய சகோதரர் ரெவெரி அவர்களுக்கு நன்றிகள். 
 
இதோ அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி....
 
வ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் தீர்மானங்கள் பல எடுப்பதும், ஆண்டு முடிவில் தீர்மானங்கள் நிலுவையில் இருப்பதும் மாற்ற முடியாத ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.இருப்பினும்எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
 
 
ழங்கப்படா தீர்ப்புகளாய் 
ஆயிரம் ஆயிரம் வாதங்கள் 
நிலுவையில் நிற்கையிலே 
இன்னும் சில வாதங்கள் 
பிரதி வாதங்களை எதிர்நோக்கி 
இவ்வாண்டு முழுவதும்!!
 
ருசக்கர வாகனத்தை
இயைபாய்த் தேடும் என் மனம்
இன்றேனும் நடக்கலாமே - என
இடிக்கும் தினமும்!
இந்த விடுமுறை நாட்களில்
இதை நான் செய்விக்க
இனிதே ஓர் தீர்மானம்!!
 
ருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!
 
நாளும் பொழுதுகளும் 
நயமாய் செல்கையிலே 
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!
 
தீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்
என்றாலும் முடிந்தவரை முயற்சிக்க எண்ணுகிறேன்.
ஆயத்தமாகும் தீர்மானங்கள் எல்லாம் பல கதைகள் சொல்லும்
இவ்வாண்டின் முடிவில்.
 
த்தீர்மானங்களை தொடர நான் அழைக்கும் தோழமைகள் .....
(தயவு செய்து தொந்தரவு செய்கிறேன் என நினைக்கவேண்டாம்)
 
 
அருமைச் சகோதரி ஸ்ரவாணி
 
அருமைச் சகோதரி சந்திரகெளரி
 
அருமை நண்பர் கணேஷ்
 
 
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

Sunday 5 February 2012

மனமகிழ் தருணம்!!







றைக்க இறைக்க
நீரூறும் கேணி - போல
நினைத்த கருக்களை எல்லாம்
எழுத்தாக வடிக்க
பதிவுலகம் கிட்டிடவே - நான்
என்ன தவம் செயதேனம்மா!!
 
ழுத்துக்களை வடித்த பின்
மனதில் உள்வாங்கி
உன்னெழுத்து பிடித்ததென
நயமாய் கருத்திடவே
நல்லுள்ள நட்புகள் கிடைத்திடவே
என்ன தவம் செயதேனம்மா!!
 
நீயும் ஒரு பதிவனென
அங்கீகாரம் கொடுத்திடவே
பல்விருது கொடுத்திங்கே
எனை மகிழச் செய்வித்த
என்னுயிர்த் தோழமைகளுக்கு
நட்புள்ளத்தை வாஞ்சையோடு
தாரை வார்க்கிறேன்!!
 
 
 
 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த  
தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

'லீப்ச்டர்" விருதினை அன்போடு எனக்களித்த எனதருமை நண்பர்
மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருதை பெற்றதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்குஅளவே இல்லை...
 



========================================================================
இதோ என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை
அளிக்கவேண்டும் என்பது தார்மீகம். அதை இங்கே நிறைவேற்றுகிறேன்..
 
பதிவுலகில் எனக்கு கிடைத்த சகோதரர். ரெவெரி சமூக கருத்துக்களை நாசூக்காகஎழுதுவதில் வல்லவர். கூடங்குளம் போராட்டம் பற்றிய நேரடிப் பதிவினைஇப்போது எழுதி வருகிறார்...
 
 
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொடரை எழுதி என் நெஞ்சினில்
அருமைத் தம்பியாய் குடியேறியவர் துஷ்யந்தன். வர்ணனைகளை வார்த்தைகளில்மென்மையாய் உரைக்க வல்லவர்.
 
 
பல்சுவைப் பதிவுகளின் மன்னன். எங்கள் குமரி நாட்டு வேந்தன். என் மனதிற்கினியநண்பர் நாஞ்சில் மனோ. மனதினில் ஆயிரம் ஆயிரம் கவலைகள் இருந்திடினும் இவர்பதிவுகளை படித்தால் மனம் இறகு போல இலகுவாகிவிடும்.
 
 
தமிழ் கொஞ்சும் வார்த்தைகளால் கவி வடிப்பதில் வல்லவர். கருக்களை சுமந்து நிற்கும்கருப்பை என்றே சொல்லலாம்  என் மரியாதைக்குரிய நண்பர் ரமணி அவர்களை.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் இவர் உரைக்கும் ஒவ்வொரு பதிவும் ஆயிரம் ஆயிரம் பொற்களஞ்சியங்களுக்கு சமம்.
 
வலையுலகில் சங்கத் தமிழை தாலாட்டாய் சிறு பிஞ்சு நெஞ்சங்களும் மனதிற்குள்பதிவேற்கும் விதமாய் அருமையாய் தமிழ்த் தொண்டாற்றிவரும் என் வணக்குதலுக்குரிய நண்பர் முனைவர் இரா.குணசீலன். பல்வேறு கோணங்களில் இவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு நான் அடிமை. 

 
இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப, அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினைஇன்புற வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday 3 February 2012

மூடுபனித் திரை!!!


னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் 
ஏன்? என்று புரியவில்லை!
பின்னந்தலையை தட்டி 
ஆயிரம் முறை கேட்டிடினும் 
பதில் ஒன்றும் கிடைக்கவில்லை!!
 
விழிகளின் முன்னே 
படலம் இட்டது போல 
பக்குவப்படா ஓருணர்வு!
திரைவிலக்கிப் பார்த்தேன் 
முற்றிலும் மூடுபனித் தோற்றம்!!
 

திகாலை விழித்தலுக்கும்
அந்திநேர அடங்களுக்குமிடையில்
அவதியாய் தோன்றிய
அரூப காட்சியெல்லாம்
அடைக்கலம் போனதெங்கே?!!
 
றம் செய விரும்பு - என  
ஆறுமுறை படித்தும்
புரியாது விழித்த
என்மகனைக் கண்டு!
இதுகூட புரியவில்லையா? - என
விழிசுருக்கி கேட்டதெல்லாம்
வழிமறைந்து போனதேனோ?!!
 

ருந்த பாலைச் சூடாக்கி
தேநீர்க் கலவையாய்
முகத்தில் மலர்ச்சியோடு
என் மனைவி கொடுக்கையில்!
சர்க்கரை குறைவென
சற்று தள்ளி வைத்ததெல்லாம்
திரைமறைவில் ஒளிந்ததேனோ?!!
 
ருசக்கர வாகனத்தில் 
அலுவலகம் செல்கையிலே!
விதிதவறி செல்வோரை 
வஞ்சித்து சென்ற நான்!
சாலையோரம் அடிபட்டுக் கிடந்த 
சகமனித உருவமொன்றை 
வேடிக்கை பார்த்து சென்றதேனோ?!! 
 

யண வீதியின் பாதையோரத்தில்
கந்தல் ஆடையோடு
இரவல் என வந்தோரை
இகழ்ச்சியாய் பார்த்துவிட்டு!
எத்தனையோ வழியிருக்க
இது என்ன பிழைப்பென்று 
ஏளனம் செய்ததேனோ?!!
 
ம்பவங்கள் நிழலாய்
விக்கித்து நின்றாலும்!
சாட்சிகள் ஏதுமின்றி
சடுதியில் வந்ததுபோல்  
சவக்கிடங்கில் புதையுண்டதேன்?!!
 

ந்திரம் ஏதுமில்லை
மாயமும் ஏதுமில்லை!
தானென்ற அகந்தையின்
சாயம்போன பண்புகளே
சாட்சிகள் என அறிவுற்றேன்!!
 
மாயப் பண்புகளாய்
முகம் மறைத்து நின்ற
மூடுபனித் திரையை!
இனிமேல் தோன்றாது  
விலக்கிட விழைந்தேன்!!
 

ரக்க குணங்களை
அடியோடு தவிர்த்து!
முடி ஏற்க வைக்கும்  
மனித மாண்புகளை
அறிந்திட விழைந்தேன்!!
 
றுமையில் உழன்றாலும்
செழுமையாய் உள்ளத்தை!
எளிமையாய் வைத்தாள
மேருமலை ஏவவைக்கும்
பொறுமையைக் கண்டறிந்தேன்!!
 

கொஞ்சமும் பணிவின்றி
நெஞ்சுநிமிர்த்தி பேசாது!
அவைமுன் அடக்கத்தால்
விதானம் ஏறவைக்கும்
நிதானத்தைக் கண்டறிந்தேன்!!
 
றுக்கான சொற்களால்
சுருக்கென்று பேசாது!
மயிலிறகு வார்த்தைகளால்
நயமாக பேசிடவே
அன்பினை இனம்கண்டேன்!!
 

னிதங்களின் நேயமெல்லாம்
பண்புகளின் சாயலில்தான்!
மூடுபனியால் திரையிட்டு
முகம்மறைத்து வைத்ததெல்லாம்
தூர்வாரா துர்பண்புகளே!!
 
தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்  
முழுநிலவு ஆகிவந்தேன்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Wednesday 1 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-5)


ன்புநிறை தோழமைகளே,

வாழ்வில் ஓடும் நிமிடங்களுக்கு பின்னர் நாமும் ஓடி ஓடி
களைத்து திரும்புகையில் ஏதோ ஒரு இளைப்பாறல்
தேவைப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படி ஒன்று தான் 
விளையாட்டு. அந்த விளையாட்டை சொல் வடிவில் கொடுக்கும்
முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை விளையாட்டு. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........



ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் புதைத்து வைத்த
செழுமையான சொல்லிது!!
 
ந்தும் தனித்து நின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ 
உணர்ச்சிகளின் ஒன்றன் 
பெயரை உரைத்து நிற்கும்!!
மற்றொன்றோ 
குற்றமென கண்டவுடன் 
நீதிகோரி 
சாடி நிற்கும்!!
 
முதலெழுத்து மட்டும் 
தனித்து நின்றால்!!
அரண்மனையின்
வெளிப்புறச் சுவரின்
பெயரை கம்பீரமாய்
உரைத்து நிற்கும்!!


மூன்றாம் எழுத்து திரிந்து
"ந" கர "அ" கரமாய்
மாறி நின்று
கடை இரண்டு எழுத்துடன்
கூடி மூன்றெழுத்தாய் நின்றால் 
சிறப்பான திறமை நான் - என 
தம்பட்டம் அடிக்கும்!!  
 
முதலெழுத்து திரிந்து 
"ப" கர  "அ" கரமாய்
மாறி நின்றால்
சத்தியம் தவறினும்
இதைத் தவறாதே - என
பழமொழி விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
"வ" கர "ஆ" காரமாய்
மாறி நின்றால்
என்னிலிருந்து
இசை மழை கொட்டும் - என
இயம்பி நிற்கும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்