Powered By Blogger

Tuesday 26 April 2011

அன்பு!


கண் இமைக்கும்
      கருவிழிக்கும் போர்!

நானா!......     நீயா!..............
      நீயா!........   நானா!............

நானின்றி நீயில்லை!
      நீயின்றி நானுண்டு!!

காற்றெனும் தூதன் வந்தான்!
      தூசி எனும் துகள் எய்தான்!

கருவிழி விழித்தது!
      செய்வதன்றி தவித்தது!

விரல் சொடுக்கும் நேரத்தில்
      இமை மூடி தடுத்தது!

என் வாழ்வு காத்த இமையே
      நீதான் உயர்ந்தவன்!

நான் வலி கண்டால் விழித்திருப்பாயே
      நீதான் உயர்ந்தவன்!

ஆம்! ......    உண்மைதான்!
      அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்!!                                                                 


அன்பன்

ப.மகேந்திரன்

புதிய பூமி படைத்திடு!



இளைஞனே இன்னபிற
         இன்னல்கள் இருந்தாலும்
இடைவிடா முயற்சியுடன்
        தடையிலா நடைபோடு!

மூங்கில் எனும் முடைக்குள்
        வடிவில்லா காற்று
மூச்சுமுட்ட நுழைந்தாலும்
        முன்னூறு ராகங்களே! முடிவில்!

காலங்காலமாய் கடுந்தவம்
        புரிந்து- கடையுலகம் காணவரும்
கடுகளவு துளி நீர்த்துளிதான்
        சிப்பிக்குள் முத்தாகும்!

சிந்தனையை சீர் செய்!
         சிறுமதி கைவிடு
புதுமையை புகுத்தி
          புதிய பூமி படைத்திடு!                                       

  

அன்பன்  
ப.மகேந்திரன்

பணம்!!



ஜனனம் முதல் மரணம் வரை
         தொடரும் ஜாலம்!

மனிதனை பேயெனச் செய்யும்
         மந்திர மார்க்கம்!

பிரிவின் துயரை துச்சமாக்கும்
         துச்சாதன வம்சம்!

சமநிலைவாதியையும் சந்தர்ப்பவாதியாக்கும்
         சாமர்த்தியசாலி!

உண்டெனில் செழுமை
         இல்லையெனில் வறுமை!

இருப்பவரின் அடிநிற்கும்
         இல்லாதவன் முடிபிடிக்கும்! 

உயிரற்ற பொருள்தான்.....  இதை
         உயிரைகொடுத்து பெறவேண்டும்!

இதனிடம் தோற்றவரும் உண்டு
        தோற்கடித்தவரும் உண்டு!

விட்டால் பறக்கும் காற்றில்!
        திரைகடலோடித்தான் பிடிக்கவேண்டும்!

மனிதன் கையில் வந்தால் வாழ்வின்
        கரைகாணச் சொல்லும்!

அவனே சடலமானால் அங்கு வந்து
        சவடால் பேசும்!

கல்வியையும் தன் வாசம்
        கொண்டுவிட்ட!

காலனே இல்லாத! காலமே இல்லாத!
        பணம்!!     



அன்பன்

   ப.மகேந்திரன்

Monday 18 April 2011

பசி

வந்து இறங்கி இருந்து பார்!
சர்வேசா!
எம்மக்கள் படும் துயரத்தை!
வாழ்பவன் வாழ்கிறான்!
தேய்ப்பவன் தேய்கிறான்!
ஏனிந்த பாகுபாடு
உன் படைப்பில்!
உனக்கும் யாராவது
கையூட்டு கொடுத்தனரா!
எம்மக்களின் பசியை
பந்தையமாக்கும்- இக்கொடியவர்கள்
மாள்வதற்கு வழியில்லையா!
பசியற்று புசிக்கும்
இப்புல்லுருவிகளுக்கு புரியாது
எம்மக்கள் நிலை!
அதற்கு படியளப்பவன் உனக்குமா! புரியாது?
சட்டமொன்று இயற்றச்சொல்!
சாதகமாய் எமக்காக!
சன்ன வேகம் போதும்!
சட்டென்று செய்யச்சொல்!-பசியால்
சாகும் முன் எம்மக்களுக்கு!
சாதம் கிடைக்க செய்யச் சொல் !!


அன்பன்

மகேந்திரன்

பொறுமையே கலசம்!

வீட்டிற்கு முன் வெட்டவெளியில்
பையன் மட்டைப்பந்து
விளையாடிக்கொண்டிருந்தான்!
பந்து பட்டு-சாளரத்தின்
கண்ணாடி உடைந்தது!

பையன் பறந்துவிட்டான்
சென்ற இடம் புலப்படவில்லை!
வீட்டிற்குள் இருந்த மனைவி
பாய்ந்து வந்தாள் வெளியே!

அகப்பட்டது நான்தான்!
காதைப் பொத்திக்கொண்டேன்
ஆத்திரம் மேலோங்க அதை
முழுவதுமாக என்மேல்
பரிமாறிவிட்டு சென்றுவிட்டாள்!

என் கோவத்தை பரிமாற்றம்-செய்ய
அலுவலக உதவியாளர்
வசமாக மாட்டினார்!
ஆசுவாசபடுத்திகொண்டேன்
மாற்றம் செய்து விட்டு!

பின் அவர்! அதற்கு பின்
வேறொருவர் என் காட்டுத்தீ போல
பரவியது- இந்த வார்த்தைகளால்
விளக்க முடியாத கோவம்!

முடிவுதான் ஏது?
முடிவற்று சென்றது!
முக்கால் நொடியில் நடந்த
சாளரக் கண்ணாடி உடைப்பு!
முன்னூறு காததூரம் தாண்டி
கோவமாக நின்றது!

கணக்கிலடங்கா மானிடர்களை
சுமக்கும் இப்புவியின் பொறுமை!
அதன் மேல் அரியாசனம் செய்யும்
நமக்கு ஏன் இல்லை?

மாபெரும் மகத்தான போற்றத்தகுந்த
மாற்றங்களைச் செய்யும் மனிதா!
மன்னிக்கும் மனப்பான்மையை
மனதில் நிறுத்து!

பொங்கிவரும் கோவத்தை
பொறுமை எனும் கரையிட்டு அடக்கு!
பொன்னான இப்பிறப்பிற்கு
பொறுமை தான் கலசம்!!


அன்பன்

மகேந்திரன்

Thursday 14 April 2011

வார்த்தைகள் ஓர் வரம்!




வாய்திறந்து பேச முற்படும்
வார்த்தைகள் ஓர் வரம்!
வஞ்சனை இல்லா சொற்கள்
வாசமலர் கதம்ப சரம்!

ஏற்றமிகு கருத்துகள்
எண்ணங்களின் வண்ணம்!
களங்கமில்லா சொல்வளம்
கற்பனை தீட்டும் ஓவியம்!

கவனமேற்றினால் தரும்
கருத்துக்களின் பிம்பம்!
வஞ்சனை மிகுந்தாலோ
வசியம் செய்யும் மகுடி!

வாகை கொண்டவர்கள்
வாதங்களின் ஒய்யார படகு!
களங்கமுள்ள நெஞ்சங்களின்
கலகப் பெரும்காரணி!

மௌனம் கொள்கையில்
பன்மடங்கு பலம் பெரும்!
துடுக்காய் இருப்பின்
வம்புகளையும் சேர்த்து விடும்!

அளவாய் பகிர்ந்தால்
அன்பு வளர்க்கும்!
மிதமிஞ்சி போனால்
பதமற்று போகும்!

நாம் பேசும் வார்த்தையால்
நன்மொழி வளரட்டும்!
பண்பொழுக்கம் பெருகட்டும்!
வாகையேற்றோர் வாழ்த்தட்டும்!!



அன்பன்

மகேந்திரன்