Powered By Blogger

Wednesday 28 September 2011

தொங்கு படிகள்!!


உனக்கென்று ஓர்வார்த்தை
உதட்டோரம் ஒளிஞ்சிருக்கு!
ஒப்புக்கு நீ கூறும்
ஓராயிரம் காரணங்கள்!
இமைப்பொழுதில் ஓடிவந்து
இன்னுயிர் காக்காது!!

கரைமீறத் துடிக்கும்
அலையற்ற குளத்தில்
கெண்டை மீனுக்காய்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
வெள்ளைச் சாமியார்
கொக்கை அறிவேன்!!
ஒருகால் உள்ளிருக்க
மறுகால் காற்றில் அலைபாய!
கொக்கை அடுத்த
ஒற்றைக்கால் பிறவியை!
உருவின் மாற்றத்தால்
உன்னில்தான் கண்டேனே!!

பேருந்து வந்ததும்
பேரின்பம் கொண்டாயே!
போகும் இடத்துக்கு
போய்ச்சேரும் எண்ணத்தால்
பேருந்துள் கால்பதித்தாய்
புறப்பட்ட பின்னரே!!
படிக்கட்டு பக்கத்தில்
பாதங்கள் நெருங்கியதும்
பாழும் மனத்தினிலே
பதமற்ற ஆசைகள்
பாய்ந்தோடி வந்தது
படிக்கட்டில் பயணிக்க!!

பேருந்து வசதியில்
இன்றளவும் எண்ணிக்கையில்
தரம்தாழ்ந்த கிராமத்தில்
வழியேதும் இல்லையே
விரைந்தோடி வருவதற்கு
படிக்கட்டுப் பயணமே!!
வரிசையாய் வாகனங்கள்
சாரையாய் ஊர்வதுபோல்!
நகரத்து சாலைகளில்
பலவாக பேருந்து
பாங்காக வந்தாலும் - அங்கும்
படிக்கட்டுப் பயணமே!!

நாகரீகம் கற்கும் முன்
நினைத்ததைத் தின்று!
உடுக்கும் உடையது
இல்லாது போயிடினும்!
உணவின் நிமித்தமாய்
கிளைகளில் தொங்கினாய்!!
பகுத்தறிவில் கோலேச்சு
கோபுரங்கள் மேலேறி
வெற்றிக்கொடி நாட்டினாலும்!
மரத்திற்கு மரம்
தாவித் திரியும் !
குணமிங்கு போகலியே!!

படிக்கும் பருவத்தில்
பவுசு ஏனிங்கே!
சாகசம் காட்டுவதால் - நீ
கதையின் நாயகனோ?
யாரை வசீகரிக்க - இந்த
பகல்வேடம் உனக்கு!!


மதியெங்கே போயிற்று
அடகு வைத்தாயோ!
நிறைந்து போனதென்று
ஒதுக்கி வைத்தாயோ!
சிரத்தினுள் இருப்பதென்ன
சிந்தித்து பார்த்திவிடு!!

உயிரின் விலையதை
உள்ளூன்றி நோக்கிவிடு!
உறுப்புகள் தொலைந்தால்
வெறுப்புகள் தான் மிஞ்சும்!
முழுதாய் இருந்தால்தான்
எளிதாய் கரையேறலாம்!!

கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!


அன்பன்
மகேந்திரன்

Sunday 25 September 2011

மாடவிளக்குகளின் வெளிச்சம்!!

அன்புநிறை தோழமைகளே,

கடந்த ஒரு வார தினங்கள் வலைச்சரத்தில் பணியாற்றி மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்று வசந்தமண்டபம் இன்று வந்து சேர்ந்திருக்கிறேன். வலைச்சரப் பணி நெஞ்சில் இருந்த மன உறுதியை பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.
எழுத்துக்களில் நேர்த்தியையும் பல வலைப்பூக்களை சென்று பார்வையிட்டு தமிழ் இணைய தளங்கள் பற்றிய ஒரு ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் என்னுள் விதைத்துள்ளது.
பலவிதமான எழுத்தாளர்களை சந்தித்து ஒரு புதுமுகமாக புத்துணர்ச்சியுடன் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

எனக்கு முன்னாள் பணியாற்றிய வலைச்சர ஆசிரியர்களுக்கும் என்னை அங்கேயும் தொடர்ந்து வந்து அழகிய கருத்திட்டு ஊக்கப்படுத்தி என் பணிசிறக்க வைத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என்றென்றும் அன்புடன் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

முத்தாய்ப்பாக உன்னால் பணி செய்ய முடியுமென ஆராய்ந்து, இப்பணி செய் என பணிவித்து பதிவுலகில் சின்னஞ்சிறு சிறுவனாம் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் ஐயா சீனா அவர்களை என் உயிருள்ளவரை மறவேன். 
வசந்தம் வந்து தாலாட்டும்
மண்டபம் தருவித்து - ஆங்கே
தென்றல் தரும் சுகத்தினில்
தேனின்பம் பருகி
பொன்னூஞ்சல் ஆடிவந்தேன்!!

மனதினில் ஊறியதை
விரல்வழி வெளியேற்றி - ஆங்கே
எண்ணங்களை உருமாற்றி
எழுத்துக்களாய் உருவேற்றி
ஏகாந்தம் கொண்டிருந்தேன்!!

வலைச்சரம் ஒன்றுண்டு
வந்திங்கே பாரடா!
சிலைபோல நிற்காது
வலையொன்று பின்னிவந்து
வாய்ப்பாட்டு பாடடா!!

தென்மதுரைச் சாரலின்
செந்தமிழ்த் தூதுவராய்!
செம்மைமிகு சீனா
மாண்போடு அழைக்க
பண்போடு ஏற்றேன்!!

முதல்நிலை மாடமாய்
முன்னுரை தான் வழங்கி
இரண்டாம்நிலை மாடமாய்
உறவுகளின் பெருமை சொல்லி
சரமங்கே தொடுத்தேன்!!

மூன்றாம்நிலை மாடமாய்
ஊர்வலம் சுற்றி வந்தேன்!
நான்காம்நிலை மாடமாய்
சமுதாயம் சாடிநின்று
சதிராட்டம் போட்டுவந்தேன்!!

ஐந்தாம்நிலை மாடத்தில்
நகைப்பின் சுவைசொல்லி
ஆறாம்நிலை மாடத்தில்
கதைகள் பல பேசிக்கொண்டு
கதம்பசரம் தொடுத்திருந்தேன்!!

என்னுயிர்த் தமிழின்
வளமையின் பெருமைபேசி
எழுநிலை மாடம்கட்டி
ஏற்றத்துடன் முடித்துவந்தேன்!!

வலைச்சர லோகத்தில்
பதிவர்கள் போற்றிடும்
நான்முகன் போலிருந்தேன்
ஏழு தினங்களாக!
நன்முகனாய் திரும்பிவந்தேன்
நாளும் வசந்தம் தேடி!!அன்பன்
மகேந்திரன்

Sunday 18 September 2011

பூங்கரகம் ஆடிவந்தேன்!!
வணக்கமைய்யா! வணக்கமைய்யா!
வாழ்த்தியோரே வணக்கமைய்யா!
சுனக்கமின்னு எண்ணாதைய்யா!
சுத்தமான வணக்கமைய்யா!
சூதுவாது இல்லாம நாந்தான்
கூறிவந்தேன் வணக்கமைய்யா!!

கூடியிருக்கும் கூட்டமெல்லாம்
குந்தியிருந்து பாருங்கைய்யா!
குலைவையிட்டு பாடிக்கொண்டே
கும்ப ஆட்டம் ஆடிவாறேன்!
கறந்தபால குடிச்சிபுட்டு
கரக ஆட்டம் ஆடிவாறேன்!!


முத்துக்கும்பம் மூலக்கும்பம்
மூத்தோர்கள் தந்த கும்பம்!
மூனுகல்லு எடையிருக்கும்
செவந்திமாலை செப்புகும்பம்!
கும்பத்துக்குள் அரிசிகொட்டி
கரகமாக்கி தலையில் வைச்சேன்!!

தென்னைத்தேங்காய் தேனுத்தேங்காய்
மேலூரு சந்தைத் தேங்காய்!
மூனுகண்ணு முக்கண்ணாரின்
கொண்டைபோல இருக்கும் தேங்காய்!
கும்பம் மேல தேங்கா வைச்சு
சுத்திசுத்தி ஆடிவந்தேன்!!
கொஞ்சும்கிளி பவளக்கிளி
கோவைப்பழம் தின்னும் கிளி!
கொஞ்சிகொஞ்சி பேசும்கிளி
கோமகளின் கையுக்கிளி!
கும்பத்தின் உச்சியில
ஒய்யாரமா அமர்ந்த கிளி!!

மாண்போர்கள் வாழ்ந்திருக்கும்
மாமதுரை ஊர்தனிலே!
நாணிக்கோணி வளர்ந்திருக்கும்
நெட்டியெனும் நாணல்கொண்டு!
கிளிக்கொச்சம் செய்துவந்து
கரகாட்டம் ஆடிவந்தேன்!!
பொன்னான கரகம் கொண்டு
உக்கிரமா ஆடையில!
தகதகக்கும் தங்ககும்பம்
தளர்ந்துவிடக் கூடாதுன்னு!
கொக்குமுடி பொறுக்கிவந்து
வெள்ளைக்குஞ்சம் செஞ்சி வைச்சேன்!!

மணமணக்கும் சந்தனத்தை
உடம்பெல்லாம் பூசிக்கிட்டு!
சலசலக்கும் சலங்கையதை
சோக்காக போட்டுக்கிட்டு!
மூலவன கும்பிட்டுட்டு
முக்கரகம் ஆடிவந்தேன்!!ஒருகையில் வில்லிருக்க
மறுகையில் அம்பிருக்க !
தாம்பூலத் தட்டின்மீது
தாமரைப் பாதம்வைச்சு
தரையில கால்படாம
கரகரன்னு ஆடிவந்தேன்!!

ஆடும் கரகம் எடுத்துகிட்டு
அம்பிகையின் கோவில்வந்து!
ஆங்கார கரகம் கொண்டு
ஆத்தாள வேண்டிகிட்டு!
மடமடன்னு மழைபொழிய
மாங்கரகம் ஆடிவந்தேன்!!

சக்திகரகம் எடுத்துகிட்டு
சமுதாயம் நாடிவந்தேன்!
சந்தையில மலிஞ்சிபோன
கொடுமைகள பார்த்துபுட்டு!
சவுக்கொன்னு எடுத்துகிட்டு
சதிராட்டம் ஆடிவந்தேன்!!

தலையில கரகத்தோட
ஒருகையில் கத்தியேந்தி!
ஆடிவந்த ஆட்டமெல்லாம்
அனலாக இருக்கையில!
கூடிநின்ன கூட்டமெல்லாம்
கும்பிட தோணுச்சைய்யா!!

அந்தக்காலம் ஆடுகையில்
ஆர்வமாக இருந்துச்சய்யா!
மஞ்சத்தண்ணி ஊத்திவந்து
மரியாதை செஞ்சாங்கய்யா!
கரகாட்டம் முடிந்தபின்தான்
உச்சிபூசை நடக்குமய்யா!!
குறையாடை தெரிந்தாலும்
குத்தாடாம் போட்டாலும்!
சுத்திசுத்தி ஆடயில
கெண்டக்காலு தெரிஞ்சாலும்!
அன்றிருந்த மக்க எல்லாம்
கலையத்தான் பார்த்தாங்கய்யா!!

இன்னைக்கு கரகாட்டம்
நாசமத்து போச்சுதய்யா!
நாராச பேச்செல்லாம்
மலிஞ்சிபோயி கிடக்குதய்யா!
கரகாட்டம் என்பதெல்லாம்
ஆபாசமா ஆச்சுதய்யா!!


ஏனப்பா பார்க்குறீங்க?
என்னக்குத்தம் சொல்லாதப்பா!
கலைக்காக நானிங்கே
உயிரைக்கூட தருவேனப்பா!
பசித்துபோன வயிறு இங்கே
பல்லாங்குழி ஆடுதப்பா!!

வாரமொரு ஆட்டம் வந்தா
வக்கனையா வாழ்ந்திடுவோம்!
மாதமொரு ஆட்டம் வந்தா
மாமாங்கம் செஞ்சிடுவோம்!
ஆண்டுக்கொரு ஆட்டம் வந்தா
நானென்ன செயவேனப்பா!!
கலையெல்லாம் மூட்டைகட்டி
பரண்மேல போட்டுவிட்டு!
பூங்கரகம் எடுத்துவந்து
கெரகமின்னு ஆடிவந்தேன்!
காலத்தோடு ஒத்துப்போனேன்
கால்வயிறு சாப்பிடத்தான்!!

நல்லமனசு படைச்சவங்க
நாலுபேரு வரட்டுமய்யா!
கெட்டுப்போன இக்கலைய
நெட்டுநிமிர்த்தி பார்த்தாகன்னா!
கரகாட்டம் என்றுமிங்கே
தரம் குறைஞ்சி போகாதுய்யா!!


அன்பன்
மகேந்திரன் 

Saturday 17 September 2011

சிவப்புவிளக்கு போடீரோ??


அன்புநிறை பதிவுலக நண்பர்களே,
அணுசக்திக்கு எதிராக நம்மவர்கள் எடுத்திக்கொண்டிருக்கும் முயற்சி விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது.


இன்னும் காதில் விழுந்தாலும் விழாதது போலவே நடித்துக் கொண்டிருக்கின்றனர் நம்மை ஆள்பவர்கள்.
ஏனிந்த பாராமுகம்?
என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள்?
மண்ணில் மனிதர்கள் யாவும் புதையுண்டு போக வழியினை ஏன் தானாக தேடுகிறார்கள்?

இன்று காலை நம் நண்பர் கூடல்பாலாவிடம் தொடர்பு கொண்டேன், பேச்சில் உணர்ச்சி தெரிந்தாலும் இன்னும் எட்டவேண்டியவர்களுக்கு
எட்டவில்லையே என்ற ஆதங்கம் குரலில் தெரிந்தது. எம்மைப் போல் சாதாரண மனிதற்கே இந்த விஷயங்கள் பாதிப்பை விளைவிக்கும் என்ற
எண்ணம் தோன்றுகையில் ஒரு மாநிலத்தையும் ஒரு தேசியத்தையும் ஆள்பவருக்கு தெரியாமல் போய்விடுமா?

ஏன் அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தயங்குகிறீர்கள்? உங்களை எது தடுக்கிறது?
ஆலைக்காக நீங்கள் போட்டு வைத்திருக்கும் பணமா?
நீங்கள் கொண்ட கொள்கையில் சற்றும் இறங்கி வரத்தெரியாத உங்கள் வறட்டு கௌரவமா?

மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆயிரம் ஆயிரம் திட்டங்களும் அதை சரியாகப் போய்ச்சேருகிறதா
என்ற அக்கறையும் எண்கள் மனத்தைக் குளிர்விக்கிறது. ஆயினும் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு
அடியோடு ஆட்டம் காணவைக்கும் இந்த அணுவுலை அமைப்பதில் ஏன் இந்த அக்கறை காட்டுகிறீர்கள்?

பாதுகாப்பு என்பதென்ன
பாழும்கிணற்றில் வீழ்த்திடவா?
பச்சைமர மனம் கொண்டோரெல்லாம்
காய்ந்த மரமாய் ஆனதென்ன?

ஓர் ஆலையைத் தொடங்கும் முன் அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை, புகைபோக்கிகளில் இருந்து
வெளியேறும் வாயுக்கழிவுகளை பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி
சுற்றுப்புற சுகாதார ஆய்வகத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னரே அந்த ஆலையை அனுமதிக்கின்றனர்.
இந்த செய்முறை கூடங்குளத்தில் நடந்ததா?

ON -SITE EMERGENCY PREPAREDNESS PLAN என்று சொல்லக்கூடிய உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு
செய்முறை விளக்கமும் அதற்கான ஒத்திகையும் (DRILL ) நடைபெற்றதா?
OFF -SITE EMERGENCY PREPAREDNESS PLAN என்று சொல்லக்கூடிய சுற்றி வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு
செய்முறை விளக்கமும் அதற்கான ஒத்திகையும் (DRILL ) நடைபெற்றதா?

ஏன் அதை செய்யத் தயங்குகிறீர்கள்?
சுற்றி இருக்கும் மக்கள் கிராமத்தான்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளப்பமா?


பொங்கியெழும் காட்டாறு
செய்யும் செயலறியாது!
சொன்னசொல்லை மந்திரமாய்
சிகைகொண்டு முடிக்கும்!

யாமெல்லாம் ஏடெடுத்து
படித்திருந்த போதிலும்
ஆலைக்கான பாதுகாப்பு
தெரியாமல் விழித்திருந்தோம்?

தூத்துக்குடி மாவட்டம்
ஆலைகளுக்கு பெயரேற்றது!
அங்குள்ள மக்களெல்லாம்
ஆலையின் புகைபோக்கி கண்டாலே
இன்னதுன்னு சொன்னரனரே!

விழிப்புணர்வு தொடர்ந்திடவே
விளைவுகளை அறிந்தோமே!
பின்னாளில் எம்மவர்கள் - படப்போகும்
துன்பமிங்கு வேணாமே
இப்போதே நிறுத்திடுங்க
எம் சந்ததியை காத்திடுங்க!!

அமுதமென்று சொல்லிட்டோம்
அன்னையின் கொங்கைப்பாலை
அதுவே விஷமென
ஆகிடக் கூடாதைய்யா
ஆவன செய்திடுங்க?

கண்ணைமூடி கொண்டதனால்
பூவுலகு இருண்டிடுமா?
கண்திறந்து பாருங்கப்பா
நிதர்சனம் கேளுங்கப்பா!!

பாதையிலே செல்லும்போது
வாகனங்கள் பாதுகாப்பு
மனததனில் செய்வித்தே
சிவப்பு விளக்கு போட்டு
எம்மின் வேகத்தை நிறுத்துபவரே!
ஊரை கூடி உலையில் போடும்
கூடங்குளம் தன்னிற்கு
சிவப்புவிளக்கு போடீரோ??

அன்பன்
மகேந்திரன்

Thursday 15 September 2011

செவிமடுத்து கேட்டுவிடு!!


கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக அதை கைவிடவேண்டி இடிந்தகரை எனும் ஊரில் இன்று 5-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். நம் நண்பர் பதிவர் கூடல்பாலவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
அவர்களின் கோரிக்கைகள் இந்த அரசின் காதில் ஏற்றவேண்டும்..
கூடிநிற்போம் தோழர்களே....
அணுசக்தியை கூண்டோடு அழிக்கும் வரை..

இங்கே வலைப்பதிவுகளில் நம் நண்பர்கள் பதிந்துவரும் வலைப்பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...

கூடும் குலம் 

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 15,000 பேர் உண்ணாவிரதம்-போராட்டம் தீவிரமடைகிறது

ஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் முன்னேயாவது...

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?
இமயமே செவிமடு!
இன்றோர் இடிந்தகரை
இன்சொல்லால் இதுவரை
இயம்பியும் பார்த்தோமே!
இம்மட்டும் உன்செவியில்
இறங்காமல் போனதுவோ?!!!

தொழில்நுட்பம் என்பதெல்லாம்
தொந்தரவு செய்வதற்கா?
தொழில்நுட்பம் படைத்துவிட்டு
தொள்ளாயிரம் காததூரம்
சுடுகாடு பார்ப்பாயோ?
தொலைநோக்கு பார்வையென்ன
தொய்விழந்து போச்சிதோ??

உலகிலே அதிகமாம்
அணுஉலைகள் ஆயிரமாம்
தொழில்நுட்பம் என்பதைத்தன்
புறவீட்டின் கொல்லையிலே
வைத்திருந்த ஜப்பானே!!
இயற்கையின் சீற்றத்தால்
இன்னவென செய்வதறியா
அணுவுலைகளின் கதிர்வீச்சை
கட்டுக்கடங்கா அதன் வெப்பத்தை
குளிர்வித்துக் கொண்டிருப்பதுவோ
உன் செவியில் ஏறலியோ???

தன்னாட்டு  வல்லறிஞர்
பற்பல வைத்திருந்தும்
பாதுகாப்பின் புலன்மீது
நம்பிக்கை இல்லாது
அணுவுலைகள் மூடிடவே
யத்தனம் செய்ததுவே!
அயல்நாட்டு அறிஞர்களின்
மூளைவைத்து செயலாற்றும்
உன்மூளைக்கது ஏறலியா?
பாதுகாப்பு என்பதென்ன
பக்கம்வந்து பகன்றுவிடு!!

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ
எம்மக்கள் இன்றோடு
ஐந்தாம் நாளாய்
சாகும் வரை உணவறுத்து
போராட்டம் செய்வதது
உன்காதில் ஏறலியோ??

செவிமடு செவிமடு
செவியற்றுப் போனாயோ!!
நம்மினம் அழித்துவிட
வாய்பிளந்து நிற்கும்
அணுவெனும் சாத்தானை
கைகழுவி விட்டுவிடு
செந்தமிழர் வாழ்வுதனில்
செம்மைவந்து சேர்ந்துவிட
செவிமடுத்து கேட்டுவிடு!!


அன்பன்
மகேந்திரன் 

Tuesday 13 September 2011

'ங' ப்போல் வாழ்ந்திடு!!


தனித்த அடர்காட்டில்
தனித்துயில் கொண்டாலும்!
தரணியின் மையப்புள்ளி
தானிறங்கிப் போனாலும்!
தனியாத் தாகமுள்ள
தனிப்பிறவி என்னுள்!
தப்பாது தாளமிடும்
தமிழின் சுவையே!!

நித்திரை மேவினும்
நீங்கா கனவிலும்!
நிமிடங்கள் தோறும்
நித்தமும் ஆயிரம்!
நிறுத்தம் இல்லாது
நுதலின் வழிநுழை!
நெஞ்சின் மலர்படர்
நேசத் தமிழே!!


அறிவின் பெட்டகம்
ஒளவையின் பாட்டினில்!
ஆத்திச்சூடிக் கருவென
அழகாய் விளைந்த!
அருளுரை கூறும்
பல்சுவைப் பள்ளியில்
ஒருசுவை கொணர்ந்தேன்
பொருள்பட உரைக்க!!

பதப்பொருள் படைப்பில்
மிதப்பினை விடுத்து!
வாழ்வினில் வளமையாய்
ஊழ்வினை அறுத்து!
உறவது போற்றி
திறம்பட வாழ
செவ்விய மொழியாம்
'ங' ப்போல் வளை!!அரும்பெரும் குணங்கள்
அகத்தில் போற்றிடு!
எச்செயல் செய்யினும்
நற்செயல் ஆக்கிடு!
பட்டறை இரும்பாக
'ங' போல் எதிலும்
நயமுடன் வளைந்திடு!
சிந்தையின் செயலில்
சிறந்தவன் ஆக்கிவிடு!!

'ங' எனும் சொல்லின்
அகரமுதல் முடிவு வரை!
ஙி ஙீ ஙு’ ‘ஙூஎனும்
உயிர்மெய்யெழுத்து யாவுமே!
பழக்கம் மறைந்து
புழக்கம் உறைந்ததே!!'ங' எனும் உயிர்மெய்யுடன்
‘ங் எனும் மெய் சேர்ந்தே!
பின்வரும் தன்னின
வழக்கொழி சொற்களை!
வேலியெனக் காப்பதுபோல்!
தனியொரு தோளாய்
உன்னினம் காத்திட
உறுதி ஏற்றிடு!!

வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
ஒரேழுத்து கருவினை
உன்னகத்தில் பதித்திடு!
புவியின் பரப்பினில்
புண்ணியம் பெற்றிட!
செப்பியதை செவிமடு
 'ங' ப்போல் வாழ்ந்திடு!!


அன்பன்
மகேந்திரன்


Sunday 11 September 2011

பக்குவமா புரிஞ்சிகோங்க!!


காலையில் எழுந்ததுமே
கஞ்சித்தண்ணி குடிச்சிபுட்டு
கருவேலங்காட்டு வழி
கருத்தாக பயணம் போனேன்!!

கடம்பவனம் தாண்டி
காலாற நடந்து போயி
மானாமதுரையில
வாங்கிவந்தேன் மல்லியப்பூ!!


புன்னைவனம் தாண்டி
பொத்திபொத்தி பொடிநடையா
பிச்சாவரத்தினிலே
வாங்கிவந்தேன் பிச்சிப்பூ!!

ஒத்தமாட்டு வண்டியில
ஓரமாக சாஞ்சிகிட்டு
ஒத்தகடை சந்தையில
மரிக்கொழுந்து வாங்கிவந்தேன்!!கூட்டுமாட்டு வண்டியில
கூட்டுசேர்ந்து பாடிகிட்டு
கூடலூரு கொல்லையில
சம்பங்கி வாங்கிவந்தேன்!!

வாங்கிவந்த பூவெல்லாம்
வகையுடனே கட்டிவைக்க
வாடிப்பட்டி கோட்டத்தில
வாழைநாரு வாங்கிவந்தேன்!!தலப்பாக்கட்டு போல
மொந்தையான பந்தாக
பூவெல்லாம் கட்டினதும்
பொசுக்குன்னு எந்திரிச்சு
பொழைப்ப பார்க்க
நடை போட்டேன்!!ஒருகூடை தலைவைச்சு
மறுகூடை இடுப்பில் வைச்சு
மடமடன்னு நடைபோட்டேன்
சந்தைக்கு போகையில!!

அரியின்னு சொல்லியங்கே
வாழை இலை விரிச்சிபோட்டு
அச்சுதான்னு சொல்லிபுட்டு
பூவெல்லாம் பரத்திவைச்சேன்!!


சிவனேன்னு பேர்சொல்லி
சும்மா இருக்காம
குரல்வளை வெளியவர
கூவிகூவி வித்துவந்தேன்!!

கூடைநிறஞ்ச பூவெல்லாம்
காலியான பின்னால
கட்டுமூட்டை கட்டிக்கிட்டு
வீட்டைபார்த்து நடந்துவந்தேன்!!வரும்போது இருந்தவழி
வாசமாக இருந்ததப்போ!!
போகையில பார்க்கிறப்போ
போக்கத்து மாறிபோச்சு!!

அதிகாலை நேரத்துல
சுத்தமாக இருந்ததெரு
அந்திசாஞ்சி போனதுமே
சாக்கடையால் நிறைஞ்சிபோச்சி!!வைகையாறும் பார்த்திருக்கேன்
வக்கனையா கேட்டிருக்கேன்!
பரணியாறும் பார்த்திருக்கேன்
பரவசமா குளிச்சிருக்கேன்!!

பன்னிமேயும் மேயும்
பாழான சாக்கடையோ!
பாதை மாறியிங்கே
தெருவுக்கேன் வந்ததப்பா!!பாதாள சாக்கடையோ
தெருவோர வாய்க்காலோ
எதுயிங்கே போட்டாலும்
சாக்கடை தண்ணியெல்லாம்
சாகசம் ஏன் காட்டுதப்பா!!

விற்கும்போது வாசமான
நான்வித்த பூவெல்லாம்
கொண்டையிலே ஏறுமுன்னே
வாசமெல்லாம் மாறிபோச்சு
சாத்தான போலவந்த
சாக்கடையின் புண்ணியத்தால்!!அள்ளிக்கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம்வேண்டாம்
போடுற திட்டமெல்லாம்
செம்மையாக போட்டிடுங்க!!

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!

அன்புடன்
மகேந்திரன்

Friday 9 September 2011

தப்பெடுத்து பாடவந்தேன்!!


ஆடவந்தேன் பாடவந்தேன்
பாட்டுபாடி ஓடிவந்தேன்!
பாட்டிலொரு சேதிசொல்ல
தப்பெடுத்து நாடிவந்தேன்!!

மரக்கட்டை குச்செடுத்து
வட்டமாக தறித்துவந்து!
குத்துப்பாட்டு பாடிடவே
சட்டமொன்னு செஞ்சுவந்தேன்!!


செத்தமாடு தோலெடுத்து
பக்குவமா பதப்படுத்தி
சட்டத்தில இழுத்துமாட்டி
சேதியொன்னு சொல்லவந்தேன்!!

சிம்புகுச்சி மேலிருக்க
அடிக்குச்சி கீழிருக்க!
தாளம்போட்டு ஆடிவந்தேன்
தடம்புரண்ட கதைசொல்ல!!சத்தமாக பாடிடுவேன்
சாமிகளே கேளுங்கய்யா!
சட்டத்தை புறந்தள்ளும்
சாயம்போன ஆசாமியின்
கதைய நானும் சொல்லவந்தேன்
தப்பெடுத்து ஆடிக்கிட்டு!!

நெஞ்சிலொரு கேள்விவந்து
குடஞ்சிகிட்டே இருக்குதைய்யா!
காவல்துறை என்பதென்ன?
பொன்னுமக்கா சொல்லிடுங்க!!பச்சைசட்டை போட்டவரே
மைனர்போல நிற்பவரே!
நான் கேட்ட கேள்வி உங்க
காதிலே விழுந்துசாய்யா!!

கடுங்காவல் சட்டமெல்லாம்
காக்கிசட்டை பாக்கெட்டுல
கவுத்தியிங்கே போட்டுபுட்டு
காரோடும் வீதியில
காசுபுடுங்கி திங்கிராய்யா!!

மணல்லாரி ஒன்னுபோனா
மனசுக்குள்ளே சிரிக்கிராய்யா
மாமூல வாங்கிபுட்டு
மரநிழலில் ஒதுங்குராய்யா!!அடேங்கப்பா கொள்ளையெல்லாம்
அசால்ட்டாக விட்டுபுட்டு!
அரிசிப்பொரி எடுத்தவன
தாவிவந்து பிடிக்கிராய்யா!!

பார்த்து பார்த்து புளிச்சிப் போச்சு
பாவிப்பய செயலையெல்லாம்!
மூணு நாளு முன்னாடி
நடந்த கதை சொல்லிடுறேன்
செல்லமக்கா கேட்டிடுங்க!!

உத்தரம்போல் உள்ளதைய்யா
உத்தரபிரதேச மாநிலமாம்!
உள்ளமெல்லா நடுங்குதைய்யா
சொல்லவந்த சேதிசொல்ல!!இந்தப்பாதை இன்னோருக்கு
போகாதப்பா வாகனத்தில்
என்றுசொல்லி குறிபோட்டு
அலப்பறையா நின்றிருந்தான்
காவலாளி ஒருவனங்கே!!

இந்தசேதி தெரியாத
வெளியூரு பையனவன்
கூடாத பாதையில
போகையில பிடிச்சிபுட்டான்!!வெளியூரு காரனின்னு
வெவரமாக தெரிஞ்சிகிட்டு!
இந்தபாத வந்ததால
மன்னிச்சி விட்டுடுறேன்
ஐம்பது ரூபாய
கொடுத்துபுட்டு போயிவிடுன்னு!!

அந்தப்பையன் கொடுக்கவில்லை
அழுதுகிட்டே நின்றிருந்தான்!
கோபப்பட்ட காவல்காரன்
கோவைப்பழம் போன்றவன
கம்பெடுத்து அடிச்சடிச்சே
கொலைசெஞ்சி போட்டுட்டான்!!


இதென்ன கொடுமையப்பா
சொல்லிடுங்க தங்கமக்கா!
கேட்குறதுக்கு ஆளில்லையா
கோமாளிப் பயலுகள!!

ஐந்தாயிரம் நான் தாரேன்
உன்னுயிர விட்டுபுடு!
அடுத்தவன் உயிரென்ன
அவ்வளவு இளப்பமாய்யா!!காவலுக்கு கெட்டிக்காரன்
கருப்பசாமி போலிங்கே!
ஆயிரம் பேர் இருக்காங்க
நேர்மையான குணத்தோட!!

இதுபோல சின்னசின்ன
சில்லரைப் பயலுகள
சிக்கெடுத்து சீவிடுங்க
மிடுக்கான காவல்துறை
முதுகெலும்பு ஓடிஞ்சிபோயி
சீக்குவந்து சேர்வதற்குள்!!

செய்தி இணைப்பு
http://haryanahighway.blogspot.com/2011/09/up-policeman-kills-man-for-rs-50-bribe.html
http://in.news.yahoo.com/policeman-kills-man-rs-50-054849742.html
http://www.youtube.com/watch?v=UvMKIIWLVnw
http://www.newkerala.com/news/2011/worldnews-61676.html

அன்பன்
மகேந்திரன்

Wednesday 7 September 2011

செதுக்கியது யாரப்பா??!!


என்ன பாவம் செய்தனையோ?
ஏனிந்த கோலம் கொண்டாய்?
எடுத்தியம்ப வார்த்தையில்லை
என்மனது தவிக்குதையா!!

யார் செய்த சூனியமோ ?
யாருமற்ற இடத்தினிலே
உணர்ச்சியில்லா பிண்டமாய்
உறைந்து நீ போனாயே!!

தூற்றியோர் தூற்றலில்
துவண்டு போனாயோ?
வெறும்பேச்சு மூடரினால்
வெதும்பிப் போனாயோ??
உறவெனும் பெயரால்
உதாசீனம் செய்தனரோ?
நட்பின் நாற்றங்காலை
நாசம் செய்தனரோ??

சொர்க்கமென நினைக்கும்
சொத்தின் பெயரால்!
உடன்பிறப்பு யாரேனும்
உனைப்பிழை செய்தனரோ??

பாதாளம் பாய்ந்துவிட்ட
பணம் ஏதும் செய்ததுவோ?
செய்த தொழிலேதும்
சித்திரம் காட்டியதோ??


காலன் வடிவினிலே
கடன் ஏதும் செய்ததுவோ? -சிலர்
தன்னிலை உயர்த்திக்கொள்ள
உனையாரும் தாழ்த்தினரோ??

இயற்கையேதும் செய்ததுவோ
இயம்பிவிடு நண்பனே!
செயற்கையாய் உனையிங்கே
செதுக்கியது யாரப்பா!!

காலமெலாம் உன்னோடு
கலந்திருப்பேன் என்றெல்லாம்
காதல்மொழி பேசியவர்
கைகழுவி விட்டனரோ??பரந்திருந்த நிலமெலாம்
விளைந்திருந்த விளைச்சளது
பாழும் வெள்ளத்தால்
கருவறுத்து போனதுவோ??

மனசு ஆற்றாமையால்
மாறிமாறி கேட்கின்றேன்?
சுயநினைவில் நீயில்லை
யாரை நான் கேட்பது??

ஏற்றமில்லா உன்வாழ்வு
ஏமாற்றம் அளித்ததுவோ?
என்ன நான் செயவேனைய்யா - நீ
ஏர்வாடி ஏகிய பின்!!!

ஏங்காதே என் நண்பா!
ஏற்றம் வந்து சேருமைய்யா!
உன் இடத்தில் உனையன்றி
உட்கார வேண்டியவர்
கோடியிலும் அதிகமைய்யா!

பொறுமைகொள் மித்திரனே
பொற்காலம் உண்டாகும்!!!

அன்பன்
மகேந்திரன்