அன்புநிறை தோழமைகளே,
கடந்த ஒரு வார தினங்கள் வலைச்சரத்தில் பணியாற்றி மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்று வசந்தமண்டபம் இன்று வந்து சேர்ந்திருக்கிறேன். வலைச்சரப் பணி நெஞ்சில் இருந்த மன உறுதியை பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.
எழுத்துக்களில் நேர்த்தியையும் பல வலைப்பூக்களை சென்று பார்வையிட்டு தமிழ் இணைய தளங்கள் பற்றிய ஒரு ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் என்னுள் விதைத்துள்ளது.
பலவிதமான எழுத்தாளர்களை சந்தித்து ஒரு புதுமுகமாக புத்துணர்ச்சியுடன் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
எனக்கு முன்னாள் பணியாற்றிய வலைச்சர ஆசிரியர்களுக்கும் என்னை அங்கேயும் தொடர்ந்து வந்து அழகிய கருத்திட்டு ஊக்கப்படுத்தி என் பணிசிறக்க வைத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என்றென்றும் அன்புடன் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
முத்தாய்ப்பாக உன்னால் பணி செய்ய முடியுமென ஆராய்ந்து, இப்பணி செய் என பணிவித்து பதிவுலகில் சின்னஞ்சிறு சிறுவனாம் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் ஐயா சீனா அவர்களை என் உயிருள்ளவரை மறவேன்.
வசந்தம் வந்து தாலாட்டும்
மண்டபம் தருவித்து - ஆங்கே
தென்றல் தரும் சுகத்தினில்
தேனின்பம் பருகி
பொன்னூஞ்சல் ஆடிவந்தேன்!!
மனதினில் ஊறியதை
விரல்வழி வெளியேற்றி - ஆங்கே
எண்ணங்களை உருமாற்றி
எழுத்துக்களாய் உருவேற்றி
ஏகாந்தம் கொண்டிருந்தேன்!!
வலைச்சரம் ஒன்றுண்டு
வந்திங்கே பாரடா!
சிலைபோல நிற்காது
வலையொன்று பின்னிவந்து
வாய்ப்பாட்டு பாடடா!!
தென்மதுரைச் சாரலின்
செந்தமிழ்த் தூதுவராய்!
செம்மைமிகு சீனா
மாண்போடு அழைக்க
பண்போடு ஏற்றேன்!!
முதல்நிலை மாடமாய்
முன்னுரை தான் வழங்கி
இரண்டாம்நிலை மாடமாய்
உறவுகளின் பெருமை சொல்லி
சரமங்கே தொடுத்தேன்!!
மூன்றாம்நிலை மாடமாய்
ஊர்வலம் சுற்றி வந்தேன்!
நான்காம்நிலை மாடமாய்
சமுதாயம் சாடிநின்று
சதிராட்டம் போட்டுவந்தேன்!!
ஐந்தாம்நிலை மாடத்தில்
நகைப்பின் சுவைசொல்லி
ஆறாம்நிலை மாடத்தில்
கதைகள் பல பேசிக்கொண்டு
கதம்பசரம் தொடுத்திருந்தேன்!!
என்னுயிர்த் தமிழின்
வளமையின் பெருமைபேசி
எழுநிலை மாடம்கட்டி
ஏற்றத்துடன் முடித்துவந்தேன்!!
வலைச்சர லோகத்தில்
பதிவர்கள் போற்றிடும்
நான்முகன் போலிருந்தேன்
ஏழு தினங்களாக!
நன்முகனாய் திரும்பிவந்தேன்
நாளும் வசந்தம் தேடி!!
அன்பன்
மகேந்திரன்