Powered By Blogger
Showing posts with label கிராமியக்கவி. Show all posts
Showing posts with label கிராமியக்கவி. Show all posts

Thursday, 27 October 2011

வில்லிசை வித்தையிலே!!




வெள்ளிக்கொம்பு நாயகனே

துள்ளியிங்கே வாருமய்யா!
தெள்ளுதமிழ் வார்த்தைகளை
அள்ளிவந்து தாருமய்யா!!

கந்தனுக்கு மூத்தவனை
சிந்தனையிலே தான் நிறுத்தி
தந்தனத்தோம் என்றுசொல்லி
வில்லெடுத்து பாடவந்தேன்!!



முன்னவரின் வாழ்க்கையிலே
சொல்லிச்சென்ற சேதியெல்லாம்
சின்னவன் நான் உங்கள்முன்னே
வில்லெடுத்து பாடவந்தேன்!!

மார்போடு ஒட்டியங்கே
போரிலே விளையாண்ட
பாருக்கு கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!
பனைமரக் கம்பெடுத்து 
கணையொன்னு  வடிவமைத்து 
புனைந்த ஏழடி நீளமது 
வில்கதிர் என்பதய்யா!!

வண்ணத்துணிகள் கட்டி
வெண்கலமணிகள் பூட்டி  
இணைத்து இசையமைக்க
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்கதிர் இணைத்திடவே
தோலால் நாணேற்றி
பல்சுவைக் கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!

மண்ணால் செய்வித்த
குடமேனும் கடமதையே
கதிரோடு சேர்த்துபூட்டி
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்லிணைத்த நாண்மீது
தட்டித்தட்டி இசையெழுப்ப
வெண்கலப் பரல்களிட்டு 
வீசுகோல் கொண்டுவந்தேன்!!

கன்றின் தோல்கொண்டு
பனங்கிழங்கு நார்சுற்றி
சிறப்பாக பாட்டிசைக்க
சித்துடுக்கை செய்துவந்தேன்!!
வாழைநார் வாங்கிவந்து 
வைக்கோலை சேர்த்துக்கட்டி 
குடம்வைத்து தானடிக்க 
பத்தியொன்னு கொண்டுவந்தேன்!!

பன்னிசை உருவேற்றி 
பாங்காக வில்லிசைக்க 
புவியில் சிறுவன் நான்
அண்ணாவி ஆகிவந்தேன்!!
ஐந்துபேர் சேர்ந்திங்கே
ராசமேளம் தானிசைத்து
வில்லிசை சிறந்திடவே  
ஐங்கரனை நினைத்தோமே!!

சிரசின் மேலோங்கி
கரங்கள் குவித்திங்கே
வந்தனம் செய்தோமே
காப்பிசை பாடிவந்தே!!
கருவிலே உருவாகி
தெருவிலே அலைந்தவனை
தருவித்து கையாண்ட
குருவிசை பாடிவந்தேன்!!

அலங்கார மேடையிலே
சான்றோர்கள் சபைமுன்னே
சந்தங்கள் பலபாடி
சரித்திரங்கள் கூறிவந்தோம்!!
ஆள்வோர்கள் அவைமுன்னே
ஆண்டவனை வேண்டியிங்கே
விவசாயி வேதனையை
வில்லெடுத்து பாடவந்தேன்!!


ஆழஆழ மண்ணுழுது - ஆமா மண்ணுழுது
விதைய நல்லா பரப்பி வந்தோம்!
நாத்தாக வளர்ந்த பின்னே - ஆமா பின்னே 
அதையெடுத்து பாவிவந்தோம்!!
ஆழஆழ கேணியிலே - ஆமா கேணியிலே 
கமலையிட்டு இறைத்துவந்தோம் 
பரந்திருந்த பாத்தியெல்லாம் - ஆமா பாத்தியெல்லாம் 
சீராக ஊற்றிவந்தோம்!!


பயிருக்கு இடையிலதான் - ஆமா இடையிலதான் 
களையெல்லாம் பறித்துவந்தோம்! 
பயிரெல்லாம் வளரையிலே - ஆமா வளரையிலே
பிள்ளைபோல காத்துவந்தோம்!!
ஆண்டுக்கொரு ரெண்டுபோகம் - ஆமா ரெண்டுபோகம்
அழகாக எடுத்துவந்தோம்!
விளைந்தபயிர் விற்கையிலே - ஆமா விற்கையிலே
குறைந்தவிலை போச்சுதய்யா!!


கண்ணுபோல காத்துவந்த - ஆமா காத்துவந்த
மணிபோன்ற நெல்களெல்லாம்
அடிமாட்டு விலைபோக - ஆமா விலைபோக
கண்ணீரை வார்த்துவந்தோம்!!
பத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்
நான்விற்ற நெல்களெல்லாம்
மூன்றாக விலையாகி - ஆமா விலையாகி
சந்தையிலே வாங்கிவந்தோம்!!


சேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா
சாதமிங்கே உனக்கேதய்யா!
குருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை
உருக்குழைய செய்யாதய்யா!!
நானுமிங்கே மனிதனய்யா - ஆமா மனிதனய்யா
உன்னைப்போல வாழவேனும்!
நாஞ்செய்த வேலைக்கெல்லாம் - ஆமா வேலைக்கெல்லாம்
கூலிவந்தா போதுமய்யா!!


ஆண்டுவரும் பெரியோரே - ஆமா பெரியோரே
காதில்வாங்கி போட்டுக்குங்க!

உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!


நல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க 
நாடுயர செய்திடுங்க!
நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா 
விவசாயி வாழவேனும் 
ஆமா 
வாழவேனும்!!!!



அன்பன் 
மகேந்திரன் 

Friday, 21 October 2011

நூலிழை கைகொண்டு!!


தத்தோம் தத்தோம்
தரிகிட தத்தோம் தத்தோம்!
வந்தோம் வந்தோம்
சேதி சொல்லவந்தோம்!!
அந்திசாயும் நேரமய்யா
முந்திவந்து பாருங்கய்யா!
சந்தியிலே வந்துநின்னு
பந்திவிரிச்சு போட்டோமய்யா!!

அம்பலத்து பெரியோரே
வம்பளக்கும் சிறுவர்களே
எம்குலத்து மாந்தர்களே
நம்பிவந்து பாருங்கய்யா!!


கொத்துகொத்தா பாவைகள
சித்திரமா ஆட்டியிங்கே
சத்தாக கதைசொல்லி
கூத்துகாட்ட வந்திருக்கோம்!!

 

சுதிப்பெட்டி கொண்டுவந்தோம்
மதிமயக்கும் இசைகொடுக்க
முகவீணை தாங்கிவந்தோம்
சகலோரை மயக்கிடவே!!

தந்தன தாளம்போட்டு
சிந்தையை மயக்கவே 
பாந்தமாய் மிருதங்கம்
மந்தைக்கு கொண்டுவந்தோம்!!


மரத்தால் செய்துவந்த
மொரத்த பொம்மைகளை
சிரத்தில் ஏற்றிவைத்த
பருத்த செய்திசொல்ல
கரத்தால் ஆட்டிவந்தோம்!
கழித்த துணிகொண்டு  
செழித்த உடலமைத்து
பழித்தோம் தீமைகளை
நூலிழை கைகொண்டு!!


தோல்பாவை கையெடுத்து
தொலைநோக்கு கண்ணோடு
தொய்ந்துபோன நற்குணத்தை 
தோய்த்து எடுத்திடவே 
மாய்ந்து ஆட்டிவந்தோம்!!
தஞ்சை வளநாட்டு
சஞ்சாரக் கூத்தர் நாமோ
கொஞ்சம் சேதிசொல்ல
நெஞ்சில் உரத்தோடு
தஞ்சமென நாடிவந்தோம்!!


எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி
எடுப்பான நாடகத்தின்
துடுப்பான நடிப்பெல்லாம்
மடிப்பு கலையாம
கொடுத்ததெல்லாம் நாம்தானே!!

அகவல் ஏதுமின்றி
சகலரை சேர்ந்திடவே
தகவல் தொடர்புக்கென்றே
முகவரி கொடுத்திங்கே
ஆகமம் செய்ததெல்லாம்
மகத்தான பாவைக்கூத்தே!!


குமரியில் ஆரம்பித்து
இமயம் வரையிலும்
கோமள பாவைவைத்து
கூத்துகட்டி திரும்புகையில்
போகையிலே வித்திட்ட
செம்மாங்கன்று இப்போ
வளர்ந்து கனி கொடுத்ததய்யா!!

பன்னூறு ஆண்டுகள்
முன்னே பிறந்ததுவே
சொன்ன சேதியெல்லாம்
மேன்மறை போலிங்கே 
மண்போற்றி நின்றதய்யா!!


கடகடன்னு ஒடுங்காலம் 
மடமடன்னு போச்சுதய்யா!
படபடன்னு இருந்துவந்த
குடுகுடு பாவைக்கூத்து
சடசடன்னு அழிஞ்சுதய்யா!!
பல ஆண்டு கழித்தபின்னே
பாவைகள கையெடுத்தேன்!
பட்டினியா கிடந்துதானே
தலைநகரம் போகப்போறேன்!!


பல ஊர அழிச்சிடும் 
பிற்காலம் ஒழிச்சிடும் 
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே
பொம்மலாட்டம் செய்யப்போறேன்!!
அன்பன்
மகேந்திரன்