Powered By Blogger

Saturday, 29 October 2011

களிநகை புரிந்தாயோ??!!கோடி விண்மீன்கள் 
கொட்டிக் கிடக்குது 
குழந்தை உந்தன் 
குவளை சிரிப்பினிலே!!
 
பளிச்சிடும் வைரமது 
ஒளிந்து போனது 
களிப்பான உந்தன்
பளிங்கு சிரிப்பினிலே!!
 
என்ன இங்கு கண்டாய் 
ஏனிந்த சிரிப்புனக்கு?!
வயதில் பெரியோரின்
சிறுமதி கண்டாயோ?!!
 

 


சுத்தம் சுத்தமென
சத்தமாய் சொன்னவரே
அசுத்தம் செய்கையில்  
சந்தநகை ஒலித்தாயோ??!!

வானிலை அறிக்கைபோல
தலைவர்களின் வாக்குறுதிகள்
செயலற்றுப் போகையில்
இளநகை புரிந்தாயோ??!!

நம்மூர் தேக்கங்கள்
நீரற்று வற்றிப் போகையில்
அண்டைமாநிலம் வெள்ளம்கண்டு
அதிர்ந்து சிரித்தாயோ?!!
 


அறம்போற்றி வாழ்ந்திடென 
அறிவுரை சொன்னோரே 
அறநெறி தவறியதால் 
அகநகை செய்தாயோ??!!
 
கண்ணாமூச்சி ஆடுகையில்
மின்சாரம் போனதால்
ஒளியத் தேவையில்லையென
களிநகை புரிந்தாயோ??!!
 
நிறைந்திருந்த விளைநிலம்
கட்டாந்தரை ஆனதால்
விளையாட வசதியென
உவகை கொண்டாயோ??!!
 
 
எதைக்கண்டு நகைத்தாய்
என் சிறுபுத்தியில்  விளங்கவில்லை
தணலாய் தவிக்கிறேன்
உவகையின் உள்ளர்த்தம் புரியாது!!!

எது எப்படியோ போகட்டும்
இச்சிறு வாழ்வில் சிரிப்பு
கிட்டாத பெருவரமே
சிரித்துக்கொள் கண்மணி!!

கடிகார ஓட்டத்தில்
நாட்கள் பறக்கையில்
சிரிப்பை துரத்திப்பிடிக்க
ஓடும் காலம் வரும்!!
 
பதவிக்கும் பணத்துக்கும்
தாளாத மோகத்தோடு
தன்னிலை இழந்திருப்போம்
சிரிப்பை மறந்திருப்போம்!!

மனம்விட்டு சிரித்துவிடு
மகிழ்ச்சியாய் இப்போதே
களிநகை கட்டிவைத்து
வாழ்வின் வங்கியில் சேர்த்துவை
எதிர்கால நினைவுகளுக்காய்!!


அன்பன்
மகேந்திரன்

Thursday, 27 October 2011

வில்லிசை வித்தையிலே!!
வெள்ளிக்கொம்பு நாயகனே

துள்ளியிங்கே வாருமய்யா!
தெள்ளுதமிழ் வார்த்தைகளை
அள்ளிவந்து தாருமய்யா!!

கந்தனுக்கு மூத்தவனை
சிந்தனையிலே தான் நிறுத்தி
தந்தனத்தோம் என்றுசொல்லி
வில்லெடுத்து பாடவந்தேன்!!முன்னவரின் வாழ்க்கையிலே
சொல்லிச்சென்ற சேதியெல்லாம்
சின்னவன் நான் உங்கள்முன்னே
வில்லெடுத்து பாடவந்தேன்!!

மார்போடு ஒட்டியங்கே
போரிலே விளையாண்ட
பாருக்கு கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!
பனைமரக் கம்பெடுத்து 
கணையொன்னு  வடிவமைத்து 
புனைந்த ஏழடி நீளமது 
வில்கதிர் என்பதய்யா!!

வண்ணத்துணிகள் கட்டி
வெண்கலமணிகள் பூட்டி  
இணைத்து இசையமைக்க
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்கதிர் இணைத்திடவே
தோலால் நாணேற்றி
பல்சுவைக் கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!

மண்ணால் செய்வித்த
குடமேனும் கடமதையே
கதிரோடு சேர்த்துபூட்டி
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்லிணைத்த நாண்மீது
தட்டித்தட்டி இசையெழுப்ப
வெண்கலப் பரல்களிட்டு 
வீசுகோல் கொண்டுவந்தேன்!!

கன்றின் தோல்கொண்டு
பனங்கிழங்கு நார்சுற்றி
சிறப்பாக பாட்டிசைக்க
சித்துடுக்கை செய்துவந்தேன்!!
வாழைநார் வாங்கிவந்து 
வைக்கோலை சேர்த்துக்கட்டி 
குடம்வைத்து தானடிக்க 
பத்தியொன்னு கொண்டுவந்தேன்!!

பன்னிசை உருவேற்றி 
பாங்காக வில்லிசைக்க 
புவியில் சிறுவன் நான்
அண்ணாவி ஆகிவந்தேன்!!
ஐந்துபேர் சேர்ந்திங்கே
ராசமேளம் தானிசைத்து
வில்லிசை சிறந்திடவே  
ஐங்கரனை நினைத்தோமே!!

சிரசின் மேலோங்கி
கரங்கள் குவித்திங்கே
வந்தனம் செய்தோமே
காப்பிசை பாடிவந்தே!!
கருவிலே உருவாகி
தெருவிலே அலைந்தவனை
தருவித்து கையாண்ட
குருவிசை பாடிவந்தேன்!!

அலங்கார மேடையிலே
சான்றோர்கள் சபைமுன்னே
சந்தங்கள் பலபாடி
சரித்திரங்கள் கூறிவந்தோம்!!
ஆள்வோர்கள் அவைமுன்னே
ஆண்டவனை வேண்டியிங்கே
விவசாயி வேதனையை
வில்லெடுத்து பாடவந்தேன்!!


ஆழஆழ மண்ணுழுது - ஆமா மண்ணுழுது
விதைய நல்லா பரப்பி வந்தோம்!
நாத்தாக வளர்ந்த பின்னே - ஆமா பின்னே 
அதையெடுத்து பாவிவந்தோம்!!
ஆழஆழ கேணியிலே - ஆமா கேணியிலே 
கமலையிட்டு இறைத்துவந்தோம் 
பரந்திருந்த பாத்தியெல்லாம் - ஆமா பாத்தியெல்லாம் 
சீராக ஊற்றிவந்தோம்!!


பயிருக்கு இடையிலதான் - ஆமா இடையிலதான் 
களையெல்லாம் பறித்துவந்தோம்! 
பயிரெல்லாம் வளரையிலே - ஆமா வளரையிலே
பிள்ளைபோல காத்துவந்தோம்!!
ஆண்டுக்கொரு ரெண்டுபோகம் - ஆமா ரெண்டுபோகம்
அழகாக எடுத்துவந்தோம்!
விளைந்தபயிர் விற்கையிலே - ஆமா விற்கையிலே
குறைந்தவிலை போச்சுதய்யா!!


கண்ணுபோல காத்துவந்த - ஆமா காத்துவந்த
மணிபோன்ற நெல்களெல்லாம்
அடிமாட்டு விலைபோக - ஆமா விலைபோக
கண்ணீரை வார்த்துவந்தோம்!!
பத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்
நான்விற்ற நெல்களெல்லாம்
மூன்றாக விலையாகி - ஆமா விலையாகி
சந்தையிலே வாங்கிவந்தோம்!!


சேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா
சாதமிங்கே உனக்கேதய்யா!
குருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை
உருக்குழைய செய்யாதய்யா!!
நானுமிங்கே மனிதனய்யா - ஆமா மனிதனய்யா
உன்னைப்போல வாழவேனும்!
நாஞ்செய்த வேலைக்கெல்லாம் - ஆமா வேலைக்கெல்லாம்
கூலிவந்தா போதுமய்யா!!


ஆண்டுவரும் பெரியோரே - ஆமா பெரியோரே
காதில்வாங்கி போட்டுக்குங்க!

உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!


நல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க 
நாடுயர செய்திடுங்க!
நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா 
விவசாயி வாழவேனும் 
ஆமா 
வாழவேனும்!!!!அன்பன் 
மகேந்திரன் 

Friday, 21 October 2011

நூலிழை கைகொண்டு!!


தத்தோம் தத்தோம்
தரிகிட தத்தோம் தத்தோம்!
வந்தோம் வந்தோம்
சேதி சொல்லவந்தோம்!!
அந்திசாயும் நேரமய்யா
முந்திவந்து பாருங்கய்யா!
சந்தியிலே வந்துநின்னு
பந்திவிரிச்சு போட்டோமய்யா!!

அம்பலத்து பெரியோரே
வம்பளக்கும் சிறுவர்களே
எம்குலத்து மாந்தர்களே
நம்பிவந்து பாருங்கய்யா!!


கொத்துகொத்தா பாவைகள
சித்திரமா ஆட்டியிங்கே
சத்தாக கதைசொல்லி
கூத்துகாட்ட வந்திருக்கோம்!!

 

சுதிப்பெட்டி கொண்டுவந்தோம்
மதிமயக்கும் இசைகொடுக்க
முகவீணை தாங்கிவந்தோம்
சகலோரை மயக்கிடவே!!

தந்தன தாளம்போட்டு
சிந்தையை மயக்கவே 
பாந்தமாய் மிருதங்கம்
மந்தைக்கு கொண்டுவந்தோம்!!


மரத்தால் செய்துவந்த
மொரத்த பொம்மைகளை
சிரத்தில் ஏற்றிவைத்த
பருத்த செய்திசொல்ல
கரத்தால் ஆட்டிவந்தோம்!
கழித்த துணிகொண்டு  
செழித்த உடலமைத்து
பழித்தோம் தீமைகளை
நூலிழை கைகொண்டு!!


தோல்பாவை கையெடுத்து
தொலைநோக்கு கண்ணோடு
தொய்ந்துபோன நற்குணத்தை 
தோய்த்து எடுத்திடவே 
மாய்ந்து ஆட்டிவந்தோம்!!
தஞ்சை வளநாட்டு
சஞ்சாரக் கூத்தர் நாமோ
கொஞ்சம் சேதிசொல்ல
நெஞ்சில் உரத்தோடு
தஞ்சமென நாடிவந்தோம்!!


எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி
எடுப்பான நாடகத்தின்
துடுப்பான நடிப்பெல்லாம்
மடிப்பு கலையாம
கொடுத்ததெல்லாம் நாம்தானே!!

அகவல் ஏதுமின்றி
சகலரை சேர்ந்திடவே
தகவல் தொடர்புக்கென்றே
முகவரி கொடுத்திங்கே
ஆகமம் செய்ததெல்லாம்
மகத்தான பாவைக்கூத்தே!!


குமரியில் ஆரம்பித்து
இமயம் வரையிலும்
கோமள பாவைவைத்து
கூத்துகட்டி திரும்புகையில்
போகையிலே வித்திட்ட
செம்மாங்கன்று இப்போ
வளர்ந்து கனி கொடுத்ததய்யா!!

பன்னூறு ஆண்டுகள்
முன்னே பிறந்ததுவே
சொன்ன சேதியெல்லாம்
மேன்மறை போலிங்கே 
மண்போற்றி நின்றதய்யா!!


கடகடன்னு ஒடுங்காலம் 
மடமடன்னு போச்சுதய்யா!
படபடன்னு இருந்துவந்த
குடுகுடு பாவைக்கூத்து
சடசடன்னு அழிஞ்சுதய்யா!!
பல ஆண்டு கழித்தபின்னே
பாவைகள கையெடுத்தேன்!
பட்டினியா கிடந்துதானே
தலைநகரம் போகப்போறேன்!!


பல ஊர அழிச்சிடும் 
பிற்காலம் ஒழிச்சிடும் 
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே
பொம்மலாட்டம் செய்யப்போறேன்!!
அன்பன்
மகேந்திரன்

Sunday, 16 October 2011

மழலையின் மருட்கை!!வேய்கூரை அவனியிலே
வெண்பஞ்சு பொதிபோல
வெளிர்நீல விழியோடு
வெண்பூவாய் வந்தாயோ?!!

மொக்கு குவிந்தாற்போல்
முத்ததரம் கொண்டவனே
முத்துப் பல்லக்கில்
முழுமதி காண வந்தாயோ?!!
கலியுலக வாயிலிலே
கற்பூர வில்லையாய்
கனவுகள் பலகொண்டு
கலமேறி வந்தாயோ?!!

மயிற்பீலி சருமத்தால்
மனங்குளிர வைத்தவனே
மகுடம் தரித்திங்கே
மறுமலர்ச்சி செய்வாயோ?!!படைவென்ற மன்னவனே
பரிமீது ஊர்வலமாய்
பலகூற்று வாழ்விற்கோர்
பகுபதம் காண வந்தாயோ?!!

உனையீன்ற தாயவள்
உவகையின் மேலோடி
உயிர்வலி கண்டாளே
உனையீனும் போதினிலே!!
இலக்கியம் இயற்றியதுபோல்
இன்பம் கொண்டாளே
இப்பூவுலகில் உன்குரல்
இன்னிசையாய் மீட்டையிலே!!

மென்புறா இறகைப்போல்
மென்பாதம் தொடும்போது
மோகனம் கேட்டசுவை
மேனியிலே பரவியதே!!
சலசலக்கும் நீரோடையாய்
சந்தமாய் சிரிக்கும் நீ
சலனப் பட்டதுபோல்
சட்டென்று மாறியதேன்?!!

முகவடிவைக் காண்கையிலே
முன்னூறு கதைசொல்லும்
முற்றிலும் மாறிப்போய்
மருட்கை கொண்டதேன்?!!
பளிச்சென பூமுகத்தில் 

பட்டை தீட்டிய - உன்
பாவத்தின் அடையாளம்
பகுத்தறியத் தெரியேனே!!
 
நாவாட்டி பாடுமுன்
நல்லதோர் அன்னையின்
நாவண்மை தாலாட்டை
நீ கண்டு வியந்தாயோ?!!
 

 


பசிகண்டு அழுகையிலே
பாகீரத அருவியாய்
பாய்ந்து பசிதீர்த்த
பாலமுதை வியந்தாயோ?!! 
 
சிரித்து நீ மகிழ
சிங்கார சேட்டையை
சிரம்கொண்டு செய்தந்தை
செயல்கண்டு வியந்தாயோ?!!
 
 
புரியாத மொழியினிலே
புனைவுகள் நிறைத்து
பாட்டி கதை சொல்ல
புதிரென வியந்தாயோ?!!
 
குழப்பமென்ன என்கனியே
குப்பியில் அடங்காத
குவிந்துள்ள வியப்புகள்
கோளமாம் இப்புவியில்  
கோடியில் அடங்காது!! 
 
 
வளர்ந்து வா செல்லக்கிளி
வழிநிறைய வியப்புகள்
வழிந்தோடி வரும்வேளை
வியந்து போராட!!
 
தெளிவுபெறு தென்றலே
தேனென்ற மழலை
தேடினாலும் கிட்டாது!
தேங்கிய வியப்புகளை
தோணியில் ஏற்றிவை
தெளிவிலா மருட்கை
தெள்ளமுதே உனக்கெதற்கு!
 
மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில்  இனி கிட்டாத
மழலையை கொண்டாடு!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Friday, 14 October 2011

அத்தனையும் விற்றுவந்தேன்!!

சும்மாடு கட்டிவந்து
சுகராகம் பாடிநின்றேன்!
சுக்கு மிளகென்ன
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
அண்டிப் பிழைக்கவில்லை
அகங்காரம் பேசவில்லை!
அகிலத்தின் சாலையிலே
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
 
கையும் ஏந்தவில்லை
கையாடல் செய்யவில்லை!
கைக்காசு பார்த்திடத்தான்
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
ஏமாத்த தெரியவில்லை 
எகத்தாளம் பேசவில்லை!
ஏறுவெயில் வேளையிலும் 
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 

 


சூதுவாது தெரியாது
சூத்திரமும் தெரியாது!
சுத்தமான மனத்தோட
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
பனியென்ன மழையென்ன
சூறாவளிக் காற்றென்ன!
சுத்திவந்து அடிச்சாலும்
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
 
அரண்மனை கட்ட அல்ல
மதில்கோட்டை கட்ட அல்ல!
அன்றாட பிழைப்புக்கு
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
தீண்டாமை பேசவில்லை
திருடித் திங்கவில்லை!
தெருவெல்லாம் அலைந்திங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!
 
 
ஊர்ப்பேச்சு பேசவில்லை
ஊதாரியா திரியவில்லை!
ஊரூரா அலைந்திங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!!

அடுத்தவன் சேர்த்ததெல்லாம்
அபகரிக்க வரவில்லை!
அஞ்சுபத்து கிடைக்குமின்னு
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 


வீம்புல நான் திரிஞ்சா
வீடிங்கே தெருவுலதான்!
வேதனைய உள்ளடக்கி
அத்தனையும் விற்றுவந்தேன்!!

ஊழலின்னு சொல்வதெல்லாம்
சத்தியமா தெரியாது!
ஊனுருக தினமுமிங்கே
அத்தனையும் விற்றுவந்தேன்!!
 
 


சாதியெல்லாம் நான் பார்த்தா
சோறு வீட்டில் வேகாது!
மதம்பிடிச்சு நான் அலைஞ்சா
நிதமும் நானும் பட்டினிதான்!!

நாலுபேரு வாங்கினாத்தான்
என்பிழைப்பு நடக்குமிங்கே!
எனக்கிங்கே சாமியெல்லாம்
என்னிடத்தில் வாங்குவோரே!!
 


நாட்டிலே நடப்பதெல்லாம்
எனக்கிங்கே செய்திதானே!
என்மனதில் இருப்பதெல்லாம்
வீட்டை பத்தி நினைப்புத்தானே!!

நான்பாடு பட்டாலும்
என்னோட போகவேணும்!
நான்பெத்த பிள்ளைகளோ
நல்லா படிக்க வேணும்!!
 
 


அணுசக்தி என்றொன்று
காதிலே விழுந்ததே!
அது இன்று வந்தாலே
சந்ததிக்கு கேடென்று!!

படிப்பறிவு எனக்கில்லை
பட்டையம் வாங்கவில்லை!
பட்டதை சொல்லிடுறேன்
பாதகமா எண்ணாதீங்க!!

மக்கள் நலம்காப்பதற்கு
திட்டம் நல்லா போட்டிடுங்க!
சந்ததியா தொலைச்சிபுட்டு
வருங்காலம் ஏதய்யா??!!


அன்பன்
மகேந்திரன் 

Wednesday, 12 October 2011

தலைநிமிர்ந்து நடைபோடு!!
கொக்கரக்கோ கொக்கரக்கோ 
கொண்டச்சேவல் கொக்கரக்கோ!
கொக்கரக்கோ கொக்கரக்கோ
சேவல்சண்டை கொக்கரக்கோ!!
மல்லியப்பூ சேவல் நான்
மார்நிமித்தி வந்திருக்கேன்!
ஊரிலுள்ள சேவல்களா
சண்டைக்கு ஓடியாங்க!!


பஞ்சவர்ண கிளிபோல 
வண்ணம்பூசி வந்திருக்கேன்!
பாண்டிநாட்டு சேவலெல்லாம்
பாஞ்சியிங்கே ஓடியாங்க!!

காலில் கத்திகட்டி
பம்மாத்து செய்யாம!
வெப்போர் செய்திடவே
வெரசா ஓடியாங்க!!
வெறுங்கால் சேவலின்னு
சுளுவாக நினைக்காத!
விருமாயி வளர்த்த சேவல்  
வீராப்பா வந்துருக்கேன்!!
வேம்பாத்து சேவலய்யா
வெடப்பாக வந்துருக்கேன்!
வேற்றூறு சேவல்களா
வேகமாக ஓடியாங்க!!
நாக்குத்தண்ணி வெளியவர
நாலுநாளு நீந்திவந்தேன்!
நெஞ்சிலே தில்லிருந்தா
நேருக்குநேர் வந்திடுங்க!!
கொளுத்த ஆட்டு ஈரல்
கொத்துகொத்தா சாப்பிட்டு
கொடநாடு வந்துருக்கேன்
போர்க்கொடி ஏந்தியிங்கே!!
பல ஊரு சேவலோட
பத்துதண்ணி பார்த்துபுட்டேன்!
எகத்தாளம் செய்பவனை
எதிர்த்துநிக்க வந்துருக்கேன்!!

வேலைவெட்டி பார்க்காம
வெட்டிப்பேச்சு பார்ப்பவன!
காலிலே வேல் கட்டி
வெளுத்தெடுக்க வந்திருக்கேன்!!


சோத்தமட்டும் தின்னுபுட்டு
சோம்பித் திரிபவன
சோடியொன்னு கூட்டிவந்து
சுளுக்கெடுக்க வந்துருக்கேன்!!

போதைமட்டும் போதுமின்னு
பேத்தலாக பேசிபுட்டு
மிதப்பிலே திரிபவன
பேத்தெடுக்க வந்துருக்கேன்!!


தரணியெல்லாம் தளமிருந்தும்
விளைநிலத்த கூறுபோட்டு
கூவிகூவி விற்பவன
கொத்தியெடுக்க வந்துருக்கேன்!!

தின்னசோறு தினமுமிங்கே
திக்காம தொண்டைக்குள்ளே
திமுதிமுன்னு இறங்குமைய்யா
உழைச்சி நீயும் சாப்பிட்டா!!


என்னைப்போல யாருன்னு 
வீம்பாக பேசாம
வெற்றியின் விளைச்சலுக்கு
வித்தொன்னு போட்டிடு!!

தப்புன்னு தெரியுறத
தள்ளியங்கே வைச்சிபுட்டு
என்னைபோல நீயும்
தலைநிமிர்ந்து நடைபோடு!!அன்பன்
மகேந்திரன்