Powered By Blogger
Showing posts with label சேவற்போர். Show all posts
Showing posts with label சேவற்போர். Show all posts

Wednesday, 12 October 2011

தலைநிமிர்ந்து நடைபோடு!!




கொக்கரக்கோ கொக்கரக்கோ 
கொண்டச்சேவல் கொக்கரக்கோ!
கொக்கரக்கோ கொக்கரக்கோ
சேவல்சண்டை கொக்கரக்கோ!!
மல்லியப்பூ சேவல் நான்
மார்நிமித்தி வந்திருக்கேன்!
ஊரிலுள்ள சேவல்களா
சண்டைக்கு ஓடியாங்க!!


பஞ்சவர்ண கிளிபோல 
வண்ணம்பூசி வந்திருக்கேன்!
பாண்டிநாட்டு சேவலெல்லாம்
பாஞ்சியிங்கே ஓடியாங்க!!

காலில் கத்திகட்டி
பம்மாத்து செய்யாம!
வெப்போர் செய்திடவே
வெரசா ஓடியாங்க!!
வெறுங்கால் சேவலின்னு
சுளுவாக நினைக்காத!
விருமாயி வளர்த்த சேவல்  
வீராப்பா வந்துருக்கேன்!!
வேம்பாத்து சேவலய்யா
வெடப்பாக வந்துருக்கேன்!
வேற்றூறு சேவல்களா
வேகமாக ஓடியாங்க!!
நாக்குத்தண்ணி வெளியவர
நாலுநாளு நீந்திவந்தேன்!
நெஞ்சிலே தில்லிருந்தா
நேருக்குநேர் வந்திடுங்க!!
கொளுத்த ஆட்டு ஈரல்
கொத்துகொத்தா சாப்பிட்டு
கொடநாடு வந்துருக்கேன்
போர்க்கொடி ஏந்தியிங்கே!!
பல ஊரு சேவலோட
பத்துதண்ணி பார்த்துபுட்டேன்!
எகத்தாளம் செய்பவனை
எதிர்த்துநிக்க வந்துருக்கேன்!!

வேலைவெட்டி பார்க்காம
வெட்டிப்பேச்சு பார்ப்பவன!
காலிலே வேல் கட்டி
வெளுத்தெடுக்க வந்திருக்கேன்!!


சோத்தமட்டும் தின்னுபுட்டு
சோம்பித் திரிபவன
சோடியொன்னு கூட்டிவந்து
சுளுக்கெடுக்க வந்துருக்கேன்!!

போதைமட்டும் போதுமின்னு
பேத்தலாக பேசிபுட்டு
மிதப்பிலே திரிபவன
பேத்தெடுக்க வந்துருக்கேன்!!


தரணியெல்லாம் தளமிருந்தும்
விளைநிலத்த கூறுபோட்டு
கூவிகூவி விற்பவன
கொத்தியெடுக்க வந்துருக்கேன்!!

தின்னசோறு தினமுமிங்கே
திக்காம தொண்டைக்குள்ளே
திமுதிமுன்னு இறங்குமைய்யா
உழைச்சி நீயும் சாப்பிட்டா!!


என்னைப்போல யாருன்னு 
வீம்பாக பேசாம
வெற்றியின் விளைச்சலுக்கு
வித்தொன்னு போட்டிடு!!

தப்புன்னு தெரியுறத
தள்ளியங்கே வைச்சிபுட்டு
என்னைபோல நீயும்
தலைநிமிர்ந்து நடைபோடு!!



அன்பன்
மகேந்திரன்