Powered By Blogger

Monday 18 April 2011

பொறுமையே கலசம்!

வீட்டிற்கு முன் வெட்டவெளியில்
பையன் மட்டைப்பந்து
விளையாடிக்கொண்டிருந்தான்!
பந்து பட்டு-சாளரத்தின்
கண்ணாடி உடைந்தது!

பையன் பறந்துவிட்டான்
சென்ற இடம் புலப்படவில்லை!
வீட்டிற்குள் இருந்த மனைவி
பாய்ந்து வந்தாள் வெளியே!

அகப்பட்டது நான்தான்!
காதைப் பொத்திக்கொண்டேன்
ஆத்திரம் மேலோங்க அதை
முழுவதுமாக என்மேல்
பரிமாறிவிட்டு சென்றுவிட்டாள்!

என் கோவத்தை பரிமாற்றம்-செய்ய
அலுவலக உதவியாளர்
வசமாக மாட்டினார்!
ஆசுவாசபடுத்திகொண்டேன்
மாற்றம் செய்து விட்டு!

பின் அவர்! அதற்கு பின்
வேறொருவர் என் காட்டுத்தீ போல
பரவியது- இந்த வார்த்தைகளால்
விளக்க முடியாத கோவம்!

முடிவுதான் ஏது?
முடிவற்று சென்றது!
முக்கால் நொடியில் நடந்த
சாளரக் கண்ணாடி உடைப்பு!
முன்னூறு காததூரம் தாண்டி
கோவமாக நின்றது!

கணக்கிலடங்கா மானிடர்களை
சுமக்கும் இப்புவியின் பொறுமை!
அதன் மேல் அரியாசனம் செய்யும்
நமக்கு ஏன் இல்லை?

மாபெரும் மகத்தான போற்றத்தகுந்த
மாற்றங்களைச் செய்யும் மனிதா!
மன்னிக்கும் மனப்பான்மையை
மனதில் நிறுத்து!

பொங்கிவரும் கோவத்தை
பொறுமை எனும் கரையிட்டு அடக்கு!
பொன்னான இப்பிறப்பிற்கு
பொறுமை தான் கலசம்!!


அன்பன்

மகேந்திரன்

No comments:

Post a Comment