Powered By Blogger

Saturday, 15 November 2014

கவிழாய் செம்பிழம்பே!!!








ங்கிருந்து வந்தாய் 
ஏகலைவன் எய்த கணையாய்!
எட்டுத்திக்கும் வியாபித்தாய் 
எரிகனலாய் என்னுள்ளே!!


சிறுகற்களின் உராய்வினில் 
சிரித்து வெளிவந்த 
சிறுகாந்தத் துகளோ - நீ 
சிந்தையிலே உறைந்திட்டாய்!!






ருண்டுவரும் ஆதவனின் 
உட்கரு நீயன்றோ!
உட்புறம் நீயிருந்தால் 
உள்ளமது கருகாதோ?!!


சூட்சுமச் சிறுகுஞ்சாய் 
சூது புரிந்தனையோ? 
சூழ்ந்த உன் ஆக்கிரமிப்பால் 
சூட்டிகை எய்தினேனே!!



ஞ்சினேன் அஞ்சினேன் 
அந்திமப் பொழுதென்று!
அங்ஙனம் இல்லையென்று -எனை 
ஆலிங்கனம் செய்வித்தாய்!!


நேற்றுப் பெய்த மழைதனில் 
நீற்றுப் போகவிருந்தேன்!
நொந்துபோன என் மனதை 
நொடிப்பொழுதில் ஊக்குவித்தாய்!!


ப்படியே இருந்துவிடு 
அணைந்துவிடாதே சட்டென்று!
அங்கமெல்லாம் உனைப்பரப்பி 
அடைகாத்துக் கொள்கிறேன்!!


னதூரம் என் பயணம் 
கடந்து போகும் வழிதனிலே 
கடும்போர் வந்திடினும் 
கவிழாய் செம்பிழம்பே!!!



அன்பன் 
மகேந்திரன் 

Wednesday, 24 September 2014

கணையாழிக் கண்ணழகி!!








தேரிக்காட்டுக்குள்ளே 
தேங்கித் தேங்கி நிற்பவளே!
தேனான மொழியழகி - தங்க ரத்தினமே!
தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே!!
தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே!!


ன்னமே நான் உன்ன 
அலுங்காம தாங்குறேன்டி!
ஆனிப்பொன் பேரழகே - தங்க ரத்தினமே!
அசையாம குலுங்குறேன்டி- பொன்னு ரத்தினமே!! 
அசையாம குலுங்குறேன்டி- பொன்னு ரத்தினமே!! 


சிங்காரப் பொன்மயிலே 
சிரிச்சி என்ன கொல்லாதடி!
ஸ்ரீரங்க தேவதையே - தங்க ரத்தினமே!
சில்லாகிப் போனேனடி - பொன்னு ரத்தினமே!!
சில்லாகிப் போனேனடி - பொன்னு ரத்தினமே!!









குடிப் பாம்பாக 
மயங்கி நானும் போனேனடி!
மந்தாரப் பூங்கொடியே - தங்க ரத்தினமே!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!


தாவணிப் பொன்மணியே 
தாவித் தாவி செல்லாதடி!
தாங்குமா என் மனசு - தங்க ரத்தினமே!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!


னுக்குள்ளே கரைஞ்சவளே
உசிருக்குள்ளே நிறைஞ்சவளே!
உம்மனசு என்னுசுரில் - தங்க ரத்தினமே!
உள்ளுக்குள்ளே புழுங்குறேண்டி - பொன்னு ரத்தினமே!!
உள்ளுக்குள்ளே புழுங்குறேண்டி - பொன்னு ரத்தினமே!!
 
 
 
 
மானே மாங்குயிலே 
மலையனூரு பூமயிலே!
மச்சான் மனசுக்குள்ளே - தங்க ரத்தினமே!
மடைவெள்ளம் பாயுதடி - பொன்னு ரத்தினமே!!
மடைவெள்ளம் பாயுதடி - பொன்னு ரத்தினமே!!


டன்குடி கருப்பட்டியே 
உத்து என்ன பார்க்காதடி!
ஊரெல்லாம் பார்க்குறாக - தங்க ரத்தினமே!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!


காலம் நமக்குள்ளே 
காலனாக நின்றாலும்!
கண்ணுக்குள்ளே நீதானடி - தங்க ரத்தினமே!
கணையாழிக் கண்ணழகி - பொன்னு ரத்தினமே!!
கணையாழிக் கண்ணழகி - பொன்னு ரத்தினமே!!




அன்பன் 
மகேந்திரன் 

 



Sunday, 21 September 2014

பிறந்தநாள் பரிசு!!


டந்த ஓராண்டு காலமாக இணையப்பக்கம் வருவதற்கு காலம் ஒத்துழைக்காததால் பதிவுகள் இடவில்லை என்றாலும். என்னையும் என் எழுத்துக்களையும் அங்கீகரித்து கிடைத்த பரிசு. அதுவும் இன்றைய வலைப்பதிவர்களில் நவீன ஒளவையாக நான் போற்றும் சீர்மிகு எழுத்தாளர் திருமதி.வேதா இலங்காதிலகம் அம்மா அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதினை பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மனம் குதூகலிக்கிறது.
எனது பிறந்த தினமாம் புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாளில் இந்த விருதினை பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தீந்தமிழ் சொற்களால் 
      பூந்தளிர் கவிபடைக்கும் 
செந்தமிழ் நாயகியே! - உம் 
      மாந்தளிர் கரங்களால் 
ஈந்த இப்பெரும் விருது 
      சேர்ந்தது என் நெஞ்சினிலே!!

மதிப்பிற்குரிய வேதாம்மா என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகளுடன் பெற்றுக்கொள்கிறேன் விருதினை மட்டற்ற மகிழ்ச்சியோடு.

1) விருதினை என்னுடன் பகிர்ந்த வலைப்பதிவரின் தளமுகவரி...

சிலபத்து அடிகளில் 
        சிறுகாவியம் படைத்திடும் 
சீர்மிகு எழுத்தாளர் 
        சிறப்பான கவியாளர்!!

ன்றே முக்கால் அடியால் 
        ஓங்கி ஒலித்திட்டார் வள்ளுவர் அன்றே!
ஒன்றிரண்டு கூட்டி 
        ஓவியம் படைத்திட்டார் வேதாம்மா இன்றே!!

கவின்மிகு சொற்களால் காவியம் படைக்கும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் வலைத்தளத்தை  இங்கே காணுங்கள்.

2) என்னைப் பற்றி ...

நான்மாடக் கூடலே 
      நான் பிறந்த ஊராம்!
நாட்கள் கரைசேர்த்ததோ 
      திருமந்திர நகராம்!

ணியின் நிமித்தமாய் 
      அமீரகம் நுழைந்து 
அங்குமிங்கும் பறந்தோடும் 
      விக்கிரமாதித்தன் நானே!

தாய் தந்த மொழியினுக்கு 
      அணில் போல தொண்டாற்றிட 
விரல்வழி ஊறும் எழுத்துக்களை 
       தூரிகையில் சமைக்கிறேன்!

நாட்டுப்புறக் கலைகளை 
       நயமாய்ச் சொல்லிடவே 
நாள்தோறும் எத்தனிக்கிறேன் 
       காலம் கைகூடட்டும்!!

3) எனக்குக் கிடைத்த விருதினை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கும் பதிவர்கள்....


என்னைத் தொடரும் அனைத்து பதிவர்களுடனும், இனி தொடரவிருக்கும் புதிய பதிவர்களுடனும் இந்த விருதினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..


இன்னொருபுறம் என் பிறந்தநாள் பரிசாக தனி பதிவே இயற்றி இருக்கிறார் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரர் தனிமரம் நேசன் அவர்கள். உங்களின் அன்பிற்கு என்றென்றும் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரரே. பதிவினை இங்கே காணுங்கள்.


அன்பன் 
மகேந்திரன் 

Tuesday, 16 September 2014

வேய்கூரை தார்மீகம்!!!







கூக்குரல் கேட்டது

கூப்பிடும் தூரத்தில் 
கூர்செவி மடுத்தேன் - ஆங்கே 
கூர்மதி உறைந்தேன்!!


திலியாய் நிற்கும் 
எவனோ ஒருவனின் 
ஏக்கப் பெருமூச்சு - கணையாய் 
எட்டியது செவியில்!!
 
 

 


 
னிந்த சோதனை 
எனக்கு மட்டும் வேதனை 
ஏனையோர் அனைவரும் - எனை 
ஏற்றுப்பார்க்கும் வேளையில்!!


ல்லாய் போனாயோ 
கடவுளும் நீ தானோ 
காற்றுக்கும் கேட்குமே - என் 
கதறலின் செவ்வொலி!!
 
 
 
 
ற்றே நிலை மறந்தேன் 
சாய்ந்து அமர்ந்துவிட்டேன் 
சன்னமான ஒலியதில் - நானோ 
சமைந்து சிலையாய் போனேன்!!


புத்திக்கு விளங்கவில்லை 
புரியாத ஒலிக்கூவல் 
புரிந்திட விழைகையில் - சிறு 
புன்னகை தருவித்தேன்!!
 
 
 
 
சுற்றிவரும் ஆதவனும் 
சுழலுகின்ற பூமியும் 
சூழ்ந்துள்ள காற்றும் - எதுவும் 
சூதுபேதம் பார்ப்பதுண்டோ?!!


னக்கிருக்கும் இந்தநிலை 
உலகில் யாருக்கோ நேற்றைய நிலை 
உன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி 
உதயமாகும் நாளைக்கு யாருக்கோ!!
 
 
 
 
யல்பான வாழ்வதனில் 
இருள்சூழும் வேளைதனில்
இருதலைக்கொள்ளி ஆனோர் சிலர் 
இரும்பிதயம் கொண்டோர் பலர்!!


னக்கென்று வரும்போது 
தார்மீகம் படைத்திடுவார் 
தாளாத துன்பத்திலும் - இயல்பாய் 
தரணியில் வாழ்ந்திடுவார்!!
 
 
 
 
சுண்ணமிட்ட புழுவா நீ 
சுயநிலை ஏன் மறந்தாய்?!
சுன்னநிலை அடைவதற்குள் - அதற்கு 
சூத்திரம் கற்றுக்கொள்!!


வெந்து சாகிறேன் என 
வெறும்பேச்சு தனைவிடுத்து 
வெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான 
வேய்கூரை அமைத்துக்கொள்!! 



அன்பன் 
மகேந்திரன்
 

Monday, 3 February 2014

தன்னிறைவே தகைவாய்!!!








ருயிர் ஒன்றிணைந்து 
ஓருயிர் ஈன்றதம்மா!
கருவினின்று வந்தபின்னே 
சருகாகி உதிரும்வரை 
பொருள் பல விளங்குதம்மா!!

ய்ந்த நிமிடங்களின் 
மாய்ந்த பொழுதுகளில்!
தோய்ந்து உறவாடி
சாய்ந்திட எண்ணுகையில்  
பாய்ந்து ஓடுதம்மா!!






முளைத்து வளர்ந்து
கிளைத்து ஓங்கியபின்!
விளைந்த உணர்வுகளால் 
சளைத்த நெஞ்சமது  
களைத்துப் போனதம்மா!!


கழிகள் பலகடந்து 
நிகழின் நிலைதனில் 
புகழின் உச்சியிலே 
நெகிழ்வாய் இருப்பினும் 
மகிழ்விங்கு இல்லையம்மா!!





ரங்களைத் தருவித்து 
நிரந்தர நிலைதனை 
உரமிட்டு வளர்த்தும்!
சுரமற்று நிற்கும் - நான் 
மரப்பாச்சி பொம்மைதானோ?!!


றைகளாய் நெஞ்சத்துள் 
உறைந்து காய்ந்துபோன 
குறைகளைக் களைந்தும் 
சிறையுண்ட மனம்விடுத்து  
நிறைவு காண்பது எப்போது?!!




ப்போது இயற்றும் 
தப்பாத செயல்களிலா?
முப்பொழுதும் கொண்ட 
ஒப்பில்லா ஒழுக்கத்திலா?
எப்போது உறையும் தன்னிறைவு?!!


தறாது உதிர்க்கும் 
உதறாத சொற்களிலா?
சிதறாது சேர்க்கும் 
இதரபிற பொருட்களிலா?
எதனால் கிட்டும் தன்னிறைவு?!!


ங்கத உறவுகளுடன் 
சங்கமித்து இருக்கையிலா?
பொங்கிய துயரங்களை 
தங்கிடாது அழிக்கையிலா?
எங்கனம் விளையும் தன்னிறைவு?!!


போதுமென்று எண்ணி 
சாதுவாகி அமர்கையிலா?
ஏதுசெய்து கிடைத்தாலும் 
பொதுவினில் வைக்கையிலா?
எதுவீனும் தன்னிறைவு?!!


ண்ணிமைக்கும் பொழுதினிலே 
மண்கூட இடம் மாறும்!
பொன்னான இப்புவியில்  
இன்வாழ்வு நிலைத்திட 
தன்னிறைவே தகைவாய்!!



அன்பன் 
மகேந்திரன் 

Monday, 9 December 2013

தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2





கட்டியங்காரன் அறிமுகம் !!!


க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......





லால தோப்புக்குள்ளே 
அமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய 
பணிந்துவந்தேன் - ஐயா 
உத்தமரே காக்கவேணும்!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


ட்டிளம் காளையிவன் 
கட்டியங்காரன் எந்தன் பெயர்
பார்போற்றும் கலையிதுவின் - ஆமா 
உயிர்நாடி நான் தானய்யா!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




ண்போன்ற காவியத்தை 
கதையாக்கி நடிக்கும்போது    
இடையிடையே தொய்கையிலே - நானும்
காண்போரை கவர்ந்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


கோடிட்ட இடங்களிலே 
கோமகனாய் வாழ்ந்துவந்தேன் 
கோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா 
கோமாளி என்றனரே !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




வைக்கோலால் செய்யப்பட்ட 
குடைபோல விரிந்திருக்கும் 
உடைகளில் நான் வருகையிலே - ஆமா 
காண்போரின் நகையொலிக்கும் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


தையில் வரும் நாயகர்கள் 
கதைப்பாட்டு மறக்கையிலே 
அதையெடுத்து நான் பாடி - அழகா 
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


==== தெருக்கூத்து தொடரும் 







அன்பன் 
மகேந்திரன்

Monday, 4 November 2013

எத்திசை நகர்ந்திடினும்!!!!







வசம் தரித்து 
படைகள் பலகொண்டு 
வெற்றிவாகை சூடிய 
மற்போர் வேந்தனல்ல!
ஆயினும் எனைச்சுற்றி - ஏன் 
சூழ்ந்தது போர்மேகம்?!!



நிகழின் நிகழ்வுகளை 
நெம்புகோல் கொண்டு 
நொடிதோறும் கடத்தும் 
சாமானியன் நான்!
ஆயினும் எனக்குமேல் - ஏன் 
படர்ந்தது சுகபோகம்?!!



குருதியின் நிறம்கண்டால் 
உறுதி நிலைகுலைந்து 
உதிரம் கறுத்துப்போகும் 
வன்மம் மறுப்பவன் நான்!
ஆயினும் எனக்குமுன்  - ஏன் 
விரிந்தது கொலைக்களம்?!!


னக்கான உரிமையும் 
எனக்கான மரியாதையும் 
எதேச்சையாக விரும்பும் 
இயல்பான மனிதன் நான்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
வியந்தது பூகோளம்?!!
கையில் கிடைத்ததை 
முழுதும் பையில் போடாது 
உள்ளம் நிறைந்தோருக்கு 
அணிலாய் உதவி நின்றேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
ஊதாரி என்றதொரு சமூகம்?!!


ரிதான் என்றுகேட்டு 
கைக்கு வந்ததெல்லாம் 
சபைக்குச் செல்லாமல்
குகைக்குள் பூட்டிவைத்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கஞ்சன் என்றதொரு சமூகம்?!!
செவிவழி நுகர்ந்ததை 
அறிவுவழி உணர்ந்திட 
வினாக்களை அம்புகளாய் 
விடாது தொடுத்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கர்வன் என்றதொரு சமூகம்?!!


துவும் சரிதானென 
வாய்மொழிந்த வினாக்களை 
இருதயத்தில் பூட்டிவைத்து 
அப்படியே ஏற்றுக்கொண்டேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
மூடன் என்றதொரு சமூகம்?!!
துதான் நடந்தது
இப்படித்தான் செய்தேன் என
உள்ளதை உள்ளபடி
அப்படியே கூறிவந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பிழைக்கத் தெரியாதவன் என்றனர்?!!

டந்ததை இல்லையெனவும்
நிகழாததை ஆம் எனவும்
கற்பனைகள் பல புகுத்தி
சொற்பகாலம் கழித்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பெரும் பொய்யன் என்றனர்?!!
றிவின் செறிவினை
ஆக்க வழியில் செலுத்திட
சற்றே நிமிர்ந்து
மிடுக்குடன் நடந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்?
அகம்கொண்டோன் என்றனர்?!!

ருக்கும் அறிவினை
இருளில் புதைத்துவைத்து
சற்றே வளைந்து
நெகிழ்வுடன் வாழ்ந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
அடிவருடி என்றனர்?!!
லமோ இடமோ
எப்புறம் திரும்பிடினும்
முன்னே பின்னே
எத்திசை நகர்ந்திடினும்!
எனக்கான அசைவுகளுக்கு - இங்கே
பெயர்கள் பல உண்டு!!


லங்கி நின்றேன்
களப்பெயர்கள் கண்டு
குழம்பி நின்றேன்
குற்றம் செய்தவன் போல்!
எப்படித்தான் இருப்பது - என
இயல்நிலை மறந்துபோனேன்!!


டர்ந்து படர்ந்த ஆலமரம் கூட
விழுதுகள் இருந்தும்
ஆணிவேர் ஒன்றே துணையென
அகன்று நிற்கக் கண்டேன்!
எப்பெயர் கொண்டிடினும்
இயற்பெயர் வழுவாதே - என
உணர்த்துவதாய் தோன்றியது
உவகை கொண்டேன்!!!



அன்பன்
மகேந்திரன் 

Monday, 28 October 2013

தெருக்கூத்து தெம்மாங்கு!!!

ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த 
தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த 
இடம் உண்டு. அப்படி பெருமை வாய்ந்த கலையின் 
முன்னோடியாம்  தெருக்கூத்து கலை பற்றி இங்கே கவிதையாக 
தருவதற்கு முயற்சிக்கிறேன். சேகரித்த செய்திகளை 
நல்வண்ணம் கொடுத்திட எத்தனிக்கிறேன். பிழைகள் ஏதும் 
இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் என்னைத் 
திருத்திக்கொள்கிறேன். அழகான கலை இது சரியான முறையில் 
பிழை இல்லாமல் பின்வரும் சந்ததிகளுக்கு சென்று சேரவேண்டும்.

விளக்கமாக சொல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே 
ஒரே பதிவில் சொன்னால் மிகவும் நீளமாக ஆகிவிடும் என்ற 
காரணத்தால் தொடர் கவிதையாகத் தருகிறேன், அதையும் என் குரலில் 
பாடி ஒலிப்பேழையாக தருகிறேன். 

நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் ... இதோ பாடல்.....




த்தங்கரை மேலிருக்கும் 
அழகுப் பிள்ளையாரே! ஆனை முகத்தோனே 
அரிதாரம் பூசிவந்தேன் 
ஆனை முகத்தோனே!!


ரணியெங்கும் புகழ்கொண்ட 
தங்கத் தமிழ்த்தாயே! எங்க தங்கத் தமிழ்த்தாயே 
முன்னிருந்து காக்கவேணும் 
மூத்தகுடித் தாயே!!


ங்களுக்கு இந்த கலைய 
கத்துதந்த சாமி! ஐயா கத்துதந்த சாமி 
குருபாதம் தொழுகின்றோம் 
ஆசி வேணுமய்யா!!


ன்னனன்னே தானேனன்னே 
தானேனன்னே தானே தன தானேனன்ன நானே 
தன்னான தானேனன்னே  
தானேனன்னே தானே!!


ந்திருக்கும் பெரியோரே 
ஆசி வேணுமய்யா! உங்க ஆசி வேணுமய்யா!
உயிராக சுமக்கும் கலைய 
காக்க வேணுமய்யா!!


முக்கனிபோல் சுவையான 
தெருக்கூத்து கட்ட! அந்த நல்லகூத்து கட்ட!
முத்தமிழை கூட்டிவந்தோம் 
நாடோடி நாங்க!!


தெவிட்டாத தேன்தமிழில் 
பாடிவந்தோமய்யா! அழகா பாடிவந்தோமய்யா!
தெருக்கூத்து எனும் கலைய 
ஆடிவந்தோம் ஐயா!!


நாடகத்தின் முன்னோடி 
எங்க கலை ஐயா! இந்த தங்க கலை ஐயா!
கலையின் வடிவமைப்பை 
சொல்ல வந்தேனய்யா!!


தினாறு கலைஞரோட 
வாத்தியாரும் இருக்கார்! நம்ம வாத்தியாரும் இருக்கார் 
அழகான இந்த குழுவுக்கு 
சமா என்று பேரு!!


பேர்பெற்ற எங்க கலை 
தெருக்கூத்து தானே! இந்த நல்ல கூத்துதானே!
அழகான மறுபெயராம் 
கட்டைக் கூத்து தானே!!


டக்கு தெற்கு என 
வண்ணம் கொண்டோமய்யா! நல்ல வண்ணம் கொண்டோமய்யா!
அண்ணாமலை தீரம்விட்டு 
ஆடி வந்தோமய்யா!!



........ தொடர்ந்து கூத்து கட்டுவோம்......









அன்பன் 
மகேந்திரன்

Monday, 21 October 2013

அமர காவியம்!!!!







காலாற நடந்திருந்தேன் 
கடற்கரைச் சாலையில்
கசகசவென ஒலிக்கீறல்கள் 
காற்றில் மிதந்துவந்தன 
காதுகளை தீட்டிக்கொண்டேன்!!


யிலான பெண்கள் ஒருபுறம் 
ஓய்வூதியம் வாங்குவோர் ஒருபுறம் 
ஓடவேண்டுமே என்று 
ஒப்புக்கு ஓடுவோர் ஒருபுறமென 
ஓடினோர் பலரங்கே!!



டல்பருமன் கனக்க 
உதிரம் கொதித்திருக்க 
ஊசிபோல ஆவோம் என 
உதித்த ஆர்வ மிகுதியால்
உக்கிபோடும் கூட்டமொருபுறம்!!


வாய்விட்டு சிரித்தால் 
வராது நோய்களென 
வராத சிரிப்புகளை 
வலுவாக இழுத்துவைத்து 
வாய்பிளந்து சிரிப்போர் ஒருபுறம்!!
ட்டழகுக் கன்னியரை 
கடைக்கண் பார்வை வீசி 
காணும் விழியாலே 
கவர்ந்திடத் துடிக்கும் 
காளையர்கள் ஒருபுறம்!!


ருக்கும் நேரம் கொஞ்சமென 
இரட்டிப்பு நடைபோட்டும் 
இரண்டு சுற்று முடிக்காத
இளைப்புடன் நடைபோடும்  
இல்லத்தரசிகள் ஒருபுறம்!!
ல்லோரும் அவரவர் பணியை 
ஏற்று பார்க்கையில் 
எங்கிருந்து வந்தது 
ஏகப்பட்ட ஒலிக்கீறல்கள் - என 
எட்டிப் பார்த்தேன்!!


ந்தாலும் போனாலும் 
வாழ்ந்த சுகம் இல்லையென 
வாய்த்த மருமக்கள் குறைபாடும் 
வயதான மனிதர்களின் 
வாஞ்சையான குமுறல்கள்!!
ள்ளி விடுமுறைக்கு 
பத்துநாட்கள் கிடைக்கும் 
பறக்கவேண்டும் அம்மா வீட்டிற்கு - என 
பிறந்தவீட்டு நிழல்தேடும் 
பிரிந்துவந்த மகள்களின் திட்டங்கள்!!


ன்றும் போகவேண்டுமா 
இன்னல்கள் தீர்ந்துவிடாதா 
இஞ்சி தின்ற மேலாளரை 
இன்றும் காணவேண்டுமா - என 
இதம்தேடும் அலுவலர்கள்!!
ன்னதான் சேர்த்தாலும் 
எள்ளளவும்  நிலுவையில்லை 
என்னடா வாழ்க்கையிது 
என்றுயரும் என் நிலைமை - என 
ஏக்கமான சாமானியரின் சலிப்புகள்!!


ன்றையொன்று உரசிக்கொண்டு 
ஓராயிரம் ஒலிக்கீறல் பாய்ந்து 
ஒட்டிக்கொண்ட தருணமதில் 
ஓர் உண்மை விளங்கியது - எனக்குள் 
ஒளிக்கீறல் பாவியது!!
ண்டாண்டு காலங்கள்
அவதியாய் உருண்டாலும்
அரும்பும் பச்சையமாய் 
அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!


அன்பன்
மகேந்திரன் 

Thursday, 17 October 2013

மருளும் மான்விழி!!!







ருண்ட விழிப் பார்வையாலே 
சுருட்டி எனை வைத்தாயே!
பருவமிங்கு மாறினாலும் - உன் 
உருவம் காண மகிழ்ச்சியே!


துள்ளல் நடைபோட்டு 
கொள்ளைகொண்டு போகிறாய்!
அள்ளிக் கொஞ்சிடவே - என் 
உள்ளம் துடிக்கிறதே!!
 
 
வியமாம் உன்னழகுக்கு 
காவியம் பல உண்டு!
மேவிவிட்டாய் நெஞ்சத்துள் - என் 
ஆவியும் உனைத் தேடுதே!!


றிபோல் அருகமர்ந்து 
கூறிவிடு செவிமடுப்பேன்!
பிறிதோர் பெயருண்டா - என 
அறியத் தந்திடுக!!
 
 
பிஞ்சுமொழிச் சொற்களால் 
கொஞ்சிப்பேசும் பாவலனே!
அஞ்சுகத் தமிழாளை - நீவீர் 
கெஞ்சிக் கேட்டிடுக!!


த்தித் தாவிவரும் 
சித்தம் மலரச்செய்யும்!
பித்தன் விரலேகிய - உன்னை 
முத்தமிழ் மான் என்றேன்!!
 
 
ண்மறை இமைசுற்றி 
வெண்ணிறம் பாவிய! 
திண்ணிய கொம்பு கொண்ட - உன்னை 
தண்மையாய் கலை என்றேன்!!
 
 
ளிங்குத் தோல்போர்த்தி 
நளின நடைபோட்டு! எமை 
களிகொள்ளச் செய்த - உன்னை 
தெளிவாய் பிணை என்றேன்!!
 
 
ரும்பழுப்பு நிறம்பூண்டு 
நெருங்கிய மரநிழல் வாழும்!
இரும்புக் கொம்பேற்ற - உன்னை 
விருப்பாய் கடமா என்றேன்!!
 
 
டுக்கான பாறைகளில் 
மிடுக்காக நடைபோட்டு!
துடுக்காக விளையாடும் - உன்னை 
எடுப்பாய் வருடை என்றேன்!!
 
 
வெம்பாலை நிலங்களில்
செம்மாந்த திருகு கொம்பொடு!
தெம்மாங்கு பாடிவரும் - உன்னை 
செம்பாலை இரலி என்றேன்!!
 
 
ழகாய் வெண்ணிறத்தால்
கழனிநிறை நெற்கதிராய்!
குழவியாய் நெஞ்சம்பதிந்த - உன்னை
சோழக உழை என்றேன்!!
 
 
யக்கிடும் ஒயிலால்
தயங்கித் தயங்கியோடும்!
கயல்விழி அழகாமே - உன்னை
நயமுடன் நவ்வி என்றேன்!!
 

 


மாலவன் கையடக்க
இலச்சினை வில்போல!
கோலமிகு விழிகொண்ட - உன்னை
சிலம்பினேன் சாரங்கம் என்றே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்