பருவங்கள் பலகண்டு
சருகுகள் கரம்கொண்டு
உருவமென ஒன்றிலாது
அரூபமாய்த் தவழ்ந்திடும்
துருவக் கருப்பொருளே!!
புவனத்தின் தோற்பரப்பில்
தவம்புரி முனிவன்போல்
காவலின் தோரணையில்
உவப்புடன் தவழ்ந்திடும்
கவசக் கருப்பொருளே!!!
நிலமதுவும் நீரதுவும்
நிலைமாறும் வெப்பத்தால்
நிலையியக்கம் மாறுவதால்
நிர்மலக் கருவடைந்து
நீயும் இங்கே வந்தடைந்தாய்!!
விரிகதிர் ஆதவன்
விழிப்புடன் எழுந்து
உருப்பெறும் திசையாம்
கிழக்கினில் கருப்பெற்றால்
கொண்டல் என பெயர்பெற்றாய்!!
செம்மாந்த செஞ்சுடரோன்
செவ்வனே பணிமுடித்து
செம்புகு திசையதுவாம்
மேற்கினில் விளைந்ததனால்
கச்சான் என பெயர்பெற்றாய்!!
மேற்கினிலே விளைந்தாலும்
வேய்கூரை வெய்யோனின்
வெம்மைமிகு கதிர் சுமந்ததனால் கோடை எனவும் பெயர்பெற்றாய்!!
தேன்மதுரத் தோரணமாம்
வானுயர வளர்ந்தோங்கிய
தெள்ளுதமிழ் பிறப்பிடமாம்
தென்கோடித் திசையதுவாம்
தென்கோடித் திசையதுவாம்
தெற்கினிலே விளைந்ததனால்
சோழகம் என பெயர்பெற்றாய்!!
தேனிசைத் தமிழ்பாடும்
தெற்கினிலே விளைந்தாலும்
அகம் தனை வருடி
சுகம் தனை கொடுப்பதனால்
தென்றல் எனவும் பெயர்பெற்றாய்!!
வானுயர வளர்ந்தோங்கிய
வெள்ளிமலை போல
பனியுருகும் தளமதுவாம்
வடக்கினில் விளைந்ததனால்
வாடை என பெயர்கொண்டாய்!!
நாசியின் வழிச்சென்று
நுரையீரல் வியாபித்து
இதயத்தில் தங்கியபின்
நாசியிலேயே வெளியேறி
என்னுயிர் சுமக்கும் இன்னுயிரே!!
சாதுவாய் உனை நான்
விழியேற்ற பொழுதினிலே
சாது மிரண்டது போல்
வெங்கொடுமை சுழல்காற்றாய்
மாறியது ஏனிங்கு??!!
நிலமிசை தனைவிட்டு
வெப்பக் காற்றாய் மேலெழும்பி
இடிமின்னல் உருவாக்கும்
முகில்தனை விட்டிறங்கும்
குளிர்காற்றுடன் புனைந்ததனால்
விளைந்திட்ட வினைதானோ?!!
இதமான உனது தழுவலில்
இமை அயர்ந்த வேளையில்
உன் இயக்கநிலை மாறுபட்டு
பலம்கொண்ட பாய்புயலாய்
குணம் மாறிப் போகையிலே
குருதி வற்றிப் போனேனே!!
வலுவேறு பலம்கொண்ட
வன்காற்று உனைக்கண்டு
உதித்தது ஓர் எண்ணம்!
மென்காற்றாய் இருந்த உனை
வன்காற்றாய் மாற்றியதெல்லாம்
வேறோர் தூண்டுதலே!!
தவறான தூண்டுதலால்
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!
அன்பன்
மகேந்திரன்
22 comments:
1
உங்கள் பட்டியலில் சில மட்டுமே நான் அறிந்தது...அதிலும் சிலவற்றுக்கே பெயர்க்காரணமும் தெரியும் சகோதரா...
கவி வடித்து பாடம் எடுத்ததற்கு நன்றி...
//தவறான தூண்டுதலால்
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!//
முடித்த விதமும் அழகு சகோதரா...
நிலை மாற மாற குணம்மாறும்
காற்று குறித்த கவிதை அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த ப்திவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
தெரியாத பல பெயர்கள்....
அருமையான கவிதை மூலம் எங்களுக்கும் தெரிவித்த உங்களுக்கு நன்றி.
தொடர்ந்து பல பதிவுகள் எழுத வாழ்த்துகள் மகேந்திரன்.
அழகான வரிகள் சார் ! நன்றி !
காளமேகரின் கவி நயம் தெரிகிறது...
காற்றின் வகைகளை கவியாக்கியுள்ளீர்கள் அருமை....
//புவனத்தின் தோற்பரப்பில்
தவம்புரி முனிவன்போல்
காவலின் தோரணையில்
உவப்புடன் தவழ்ந்திடும்
கவசக் கருப்பொருளே!!!
//
அழகான வார்த்தை பிரயோகம்
பருவங்கள் பல கண்டு அதற்க்கு பெயரும் பல சூடி சொல்லிய விதம் அழகு அண்ணா .
Tha.ma.5
பொதுவாக என்பெற்றோர் இப் பெயர்களை சொல்ல கேட்டுள்ளேன் சொற்ப காலங்களுக்கு முதல் அதன் பிறகு இப்போதுதான் இதனை கேட்கிறேன்...
காரணங்களும் சொல்லப்பட்டிருக்கிறது இதனை ஒரு பெரிய பதிவாக சொல்லாமல் கவியிலேயே சொல்லியிருப்பது உங்கள் சாமர்த்தியம் தான் ...:)
நாசியின் வழிச்சென்று
நுரையீரல் வியாபித்து
இதயத்தில் தங்கியபின்
நாசியிலேயே வெளியேறி
என்னுயிர் சுமக்கும் இன்னுயிரே!!
காற்றுக்கு கவிதை காறறை போலவே கடத்திச்செல்கிறது...நிச்சயம் வருடும் தென்றல்தான் உங்கள் கவிதை அண்ணா.. இதில் கோடையை தவிர மற்ற பெயர்கள் எதுவும் நான் அறிந்திறாதது...பலருக்கும் பலவாறு கவிதைகள் தெரியும் என்பது முற்றிலும் உண்மைதான்
வலுவேறு பலம்கொண்ட
வன்காற்று உனைக்கண்டு
உதித்தது ஓர் எண்ணம்!
மென்காற்றாய் இருந்த உனை
வன்காற்றாய் மாற்றியதெல்லாம்
வேறோர் தூண்டுதலே!!
தவறான தூண்டுதலால்
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!
இவ்விடம் காற்றும் பொருந்திப்போகிறது கட்டிளம் காளையும் பொருந்திப்போய் கூடுதல் அழகாய் தெரிகிறது இந்த அழகிய கவிதை ;) என் அனுமானிப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்...
''...தவறான தூண்டுதலால்
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!''
மிக எளிமையான கவிதை. மிக்க நன்றி. நல்வாழ்த்து. பல சொற்கள் யாழ்ப்பாணத்தில் பாவிப்பவை. (தங்கள் கடந்த கவிதையில் புரியாத சொற்களிற்கு விளக்கம் என் அகராதியில் இல்லை. காரணம் அவை பழைய சங்க காலங்களில் பாவித்த இணைச் சொற்கள். இணைப்பதால் இவைகளிற்கு அர்த்தம் இருக்கவில்லை.)
வேதா. இலங்காதிலகம்.
கொஞ்சம் கற்பனை
(காற்றின் தன்மைகளை சொல்கையில்),கொஞ்சம் அறிந்திராத தகவல்கள் (காற்றின் பல்வேறு பெயர்கள்) கொஞ்சம் அறிவியல்(சூறாவளி உருவாகும் விதம்) மற்றும் கடைசியாக கவிதையின் முடிவில் காற்றையே வைத்து ஒரு வாழ்க்கை தத்துவத்தையும்(வழக்கமான மகேந்திரன் ஸ்டைல்) எளிமையான நடையில் கொடுத்து அசத்தீட்டீங்க போங்க.அருமை.வாழ்த்துக்கள்.
nice sir
அருமை.
வாழ்த்துகள்.
காற்றின் இத்தனை பெயர்களில் ஒரு சிலவே அறிந்தவை. அழகுத் தமிழ்க் கவிதையால் பாங்குற விளக்கியதை ரசித்து அனுபவித்துப் படித்தேன். சூப்பர் மகேன்!
இரண்டு நாட்களாக முயன்று தற்போதுதான் தங்கள் வலை திறந்தது
காற்றின் பல்வேறு நிலைகளை காரணத்தையும் கூறிய கவிதை சிறப்பாக உள்ளது.
புலவர் சா இராமாநுசம்
காற்றின் ஆளுமையை அதன் பரிமாண வளர்ச்சியுடன் சிறப்பான பார்வையுடன் களத்திற் கேற்ற சிறந்த ஆக்கம் பாராட்டுகள்
manam kulira seythathu-
ungal kaatru enum kavithai!
அருமையான ஆக்கம் நண்பரே...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அருமை என்ற வார்த்தை கூட இ◌ப்படைப்பின் முன் கனம் குறைந்து போகிறது....வாழ்துகிறேன் சொந்தமே...தொடர்கிறேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
உங்கள் பதிவின் ரசிகன்
Post a Comment