பிறப்பின் நாழிகைக்கும்
இறப்பின் மணித்துளிக்கும்
இடைவெளி சிறிதே
மரணத் தருவாயில்
மனம் மல்காது
முந்தைய பொழுதுகளை
உந்து கோலாக்கி
உய்வின் வழிதேடு!!
கையிலே கிடைத்துவிட்டால்
சதிராட்டம் போடாது
வறுமை உனைத்தொடுமுன்
செல்வோம் எனும் செல்வத்தை
சேமிக்கப் பழகிகொள்
இன்றோடு தொலையாதே
நாளை என்றொரு நாளிருக்கு!!
தன்னை அறிந்துகொள்
தன்னிலை அறிந்துகொள்
உன்னைவிட சிறந்தோர்
பலருண்டு புரிந்துகொள்
உன்னை உணர்த்தி
தனித்தன்மை காட்டிவிட
தற்பெருமை அழித்துவிடு!!
உயிரின் செல்களில்
வேதியியல் கூறுகளாய்
ஒழுக்கத்தை விதைத்துவிடு!
வைரத்தின் மாற்றுருவாம்
வைராக்கியம் வளர்த்துவிடு! - உன்
தகுதியை தகர்த்தெறியும்
தாழ்வெண்ணம் தவிர்த்துவிடு!!
முன்னிலை உள்ளவரின்
பின்புலம் அறிந்துகொள்
தானென்று எண்ணாதே
தன்னடக்க நிழல் நாடு!
துடுக்கை அழித்து
வாழ்க்கைப் படகின்
துடுப்பைத் தேடு!!
அன்பின் வலிமையுடன்
பண்பின் துணைகொள்!
ஏற்றமது ஏறுகையில்
குற்றம் புரியாது
பணிவைப் பற்றிக்கொள்!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதுரியம் கற்றுக்கொள்!!
நிறம்மாறி உருமாறி
தன்னிலை தடம்மாறி
கூதிர்காலம் முன்னே
நிலத்தை முத்தமிடும்
இலைகளின் பருவத்தில்!
இலையுதிர் காலமென்றும்
நிலைக்கும் நிரந்தரமல்ல!!
மொட்டவிழ்ந்து விரிந்து
மகரந்த மகசூலை
மடைமீறும் நதியாய்
வனமெங்கும் தூவச்செய்து
கனி குவியச் செய்யும்
வசந்த காலமிங்கே -இதோ
நிமிடங்களின் இணைப்பில்!!
அன்பன்
மகேந்திரன்