எங்கிருந்து வந்தாய்
ஏகலைவன் எய்த கணையாய்!
எட்டுத்திக்கும் வியாபித்தாய்
எரிகனலாய் என்னுள்ளே!!
சிறுகற்களின் உராய்வினில்
சிரித்து வெளிவந்த
சிறுகாந்தத் துகளோ - நீ
சிந்தையிலே உறைந்திட்டாய்!!
உருண்டுவரும் ஆதவனின்
உட்கரு நீயன்றோ!
உட்புறம் நீயிருந்தால்
உள்ளமது கருகாதோ?!!
சூட்சுமச் சிறுகுஞ்சாய்
சூது புரிந்தனையோ?
சூழ்ந்த உன் ஆக்கிரமிப்பால்
சூட்டிகை எய்தினேனே!!
அஞ்சினேன் அஞ்சினேன்
அந்திமப் பொழுதென்று!
அங்ஙனம் இல்லையென்று -எனை
ஆலிங்கனம் செய்வித்தாய்!!
நேற்றுப் பெய்த மழைதனில்
நீற்றுப் போகவிருந்தேன்!
நொந்துபோன என் மனதை
நொடிப்பொழுதில் ஊக்குவித்தாய்!!
அப்படியே இருந்துவிடு
அணைந்துவிடாதே சட்டென்று!
அங்கமெல்லாம் உனைப்பரப்பி
அடைகாத்துக் கொள்கிறேன்!!
கனதூரம் என் பயணம்
கடந்து போகும் வழிதனிலே
கடும்போர் வந்திடினும்
கவிழாய் செம்பிழம்பே!!!
அன்பன்
மகேந்திரன்