Powered By Blogger

Thursday, 29 December 2011

எதுவான எதுவது??!!



புவியின் கோணங்கள்
பலவாறு இருந்தாலும்!
பயணிக்கும் வாழ்க்கையின்
பாதையின் தடங்கள்
பழுதின்றி செல்வது
எதுவான எதுவதில்??!!
றவுகளின் சூழலில்
உணர்ச்சிகளின் பிடியில்!
உரசல்கள் தவிர்த்திட்டு
உள்ளதை உள்ளபடி
உசிதமாய் ஆக்குவது
எதுவான எதுவது??!!



சாதகங்கள் ஏதுமில்லா
சம்பவங்கள் நடக்கையில்!
சதுரங்க கட்டத்தில்
சவமாய் நிற்கையிலே!
சமாளிக்க கற்றுவிக்கும்
உணர்வற்ற உணர்வது!!!

புரிதல்கள் மாறுகையில்
புரிசமர் தவிர்த்திட!
புத்தியின் அடிவேரில்
பூஞ்சையாய் பூத்ததோர்
பூடகமாய் உரைத்திட்ட
பொய்யான பொய்யது!!!
டங்காத ஆவலில்
ஆழ்மனது இரகசியத்தை!
அவையோர் முன் மொழிகையில்
அவிழ்த்துவிட்ட மொழிகளெல்லாம்!
அட்சரம்  பிசகாத
உண்மையற்ற உண்மையது!!!
ருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையில் 
வாழ்வுதனில் உண்டாகும் 
சலிப்பான சலிப்பது!!!
பிரிதலின் நிமித்தம் 
பாவையுன் விழிகளில்!
பனிக்கும் நீர்த்துளியை
பார்க்கச் சகிக்காது
பாழும் மனம் பேசிவரும்
சொல்லற்ற சொல்லது!!!
நெஞ்சுக்குள் புதைத்துவைத்த
நஞ்சற்ற நட்பது!
நமத்துப்போன காரணத்தால்
நொடிந்து போகையில்
நாழிகைப் பொழுதுக்காய்
விலகலற்ற விலகலது!!!

ரணத்தின் நாளது
அறிந்திராத போதிலும்!
மரணம் நிச்சயமென
உணர்ந்திருந்த போதிலும்!
ஏற்றுக்கொள்ள இயலாத
மறுப்பற்ற மறுப்பது!!!
பேச்சற்ற பேச்சு!
நடையற்ற நடை!
இனிமையற்ற இனிமை!
கசப்பற்ற கசப்பு!
வெறுப்பற்ற வெறுப்பு!
பொருளற்ற பொருள்!
இத்தனையும் கடந்து
வாழ்வினிக்க முயன்றிடும்
செய்கையின் தூண்டுதல்
எதுவான எதுவதில்??!!
வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!



அன்பன்
மகேந்திரன்

Sunday, 25 December 2011

கண்ணாடிக் கனவுகள்!!!







கித்து நிற்கும் உள்ளத்தில் 
ததும்புது கனவுகள்!
தீர்ப்புநாள் எதிர்கொண்டே  
தீய்ந்துபோன கனவுகள்!!
 
டிகால் வந்திடுமோ 
வற்றித்தான் போய்விடுமோ?!!
வெதும்பிய மனமது
வேற்றுநிலை ஏகிடுமோ?!!
 
மூப்பெய்திப் போனாலும் 
முக்காலில் நடக்காது!
மெத்தப்படித்த பெற்றபிள்ளை 
மென்தோள் பற்றியங்கே!
மார்நிமிர்த்தி நடந்திடவே
மந்தகாச கனவு கண்டேன்!!
 
ழிநெடுக சாலையெல்லாம்
வாளிப்பாய் மின்னிடவே!
வரிசையாய் எறும்புபோல்
வாகனங்கள் சென்றிடவே!
விபத்துக்கள் ஏதுமில்லா 
வண்ணமிகு கனவு கண்டேன்!!
 

 


ட்டியலிட்டுச் சொல்ல
பலசரக்கு இல்லையென!
படர்ந்திருந்த சாதியெல்லாம்
பெண்ணென்றும் ஆணென்றும்
பகுத்து இருந்திடவே!
பேரின்பக் கனவு கண்டேன்!!
 
நெற்கதிர்கள் பெருத்துப்போய்
தன்சுமை தாங்காது!
தலைகுனிந்து நின்றிடவே
விதைத்து வைத்த உழவனவன்
ஊறிவந்த களிப்பதுவால்
தலைநிமிர்ந்து நின்றிட
தேன்கனவு கண்டேனே!!
 
நித்தமொரு சட்டம் 
நிமித்தமொரு விவாதம்!
நெறிபட மக்களவை - என்றும்
நன்முறையில் நடந்திட
நான் கனவு கண்டேனே!!
 
சாயம்போன ஆசைகளை
சாக்காடு போட்டுவிட்டு!
செழுமையாம் வெண்மனதால் 
சாணக்கிய மந்திரிகள் 
சீர்மேவ கனவு கண்டேன்!!
 
 
பிழையென்றால் என்னவென்று 
புரியாத மன்னவர்கள்!
பழுதில்லா தேர்கொண்டு 
பாராண்டு வந்திடவே 
பொற்கனவு கண்டேனே!!
 
மாநிலங்கள் ஒன்றாக
மாண்பாக கூட்டமைத்து!
பெருகிவரும் நதிநீரை
பொதுவென ஆக்கிவைத்து
பாரினிலே சிறந்ததெங்கள்
பாரதம் என்றுரைக்க
பவளக் கனவு கண்டேனே!!
 
ண்டிருந்த கனவெல்லாம்
கண்ணாடிக் குமிழியாய்!
கண்ணெதிரே தவழ்கிறதே
கனவிங்கே மெய்ப்படுமோ?!!
கானல்நீராய் போய்விடுமோ?!!
கண்ணாடிக் குமிழியது
காற்றிழந்து போகாது
காலமெல்லாம் நிலைத்திடுமோ??!!

 
 
அன்பன்
மகேந்திரன் 

Friday, 23 December 2011

பறையடிச்சி பாடிவந்தோம்!!!







ஏலேலந்தம் பாடிவந்தோம் 
எட்டுக் குடியோனே! எட்டுக் குடியோனே!
எங்ககுடி காக்கவேணும் 
எட்டுக் குடியோனே!!
 
பறையடிச்சி பாடிவந்தோம்
பழங்குடியோர் நாங்க! பழங்குடியோர் நாங்க!
பறையாட்டம் கதைசொல்ல
ஓடிவந்தோம் நாங்க!!
 
 
ஆதியிலே வாழ்ந்திருந்த
எங்க குலத்தோரே! எங்க குலத்தோரே!
அழகாக வடிவமைச்ச
கலையிதுதான் ஐயா!!
 
காடுகளில் எங்ககுலம்
வாழ்ந்திருந்த போது! வாழ்ந்திருந்த போது!
தற்காப்புக் கலையாக
வடிவமைத்தோம் ஐயா!!
 
காட்டில் வாழும் கரடி புலி
கருத்த யானையெல்லாம்! கருத்த யானையெல்லாம்!
பறையடி கேட்டுச்சின்னா
பயந்து ஓடுமய்யா!!
 
 
பறையடிச்சி பாடுகையில்
கேட்டுக்குங்க சாமி! கேட்டுக்குங்க சாமி!
உடம்பெல்லாம் சிலுசிலுக்கும்
நரம்பு முறுக்கேறி!!
 
செத்தமாட்டுத் தோலெடுத்து
கட்டிக்காய வைச்சோம்! கட்டிக்காய வைச்சோம்!
காஞ்சபின்னே தோலெடுத்து
தீயில் வாட்டியெடுத்தோம்!!
 
வளையமொன்னு செஞ்சிடவே 
புன்னைமரக் கம்பு! புன்னைமரக் கம்பு!
மலையனூரில் எடுத்துவந்தோம் 
வட்டப்பறை செய்ய!!
 
 
வாட்டிவைச்ச தோலெடுத்து
வார்பிடிச்சு தாங்க! வார்பிடிச்சு தாங்க!
வளையத்தில் கட்டிவைச்சு
வட்டப்பறை செஞ்சோம்!!
 
அப்போது வீட்டிலெல்லாம்
நிகழ்ச்சியின்னு சொன்னா! நிகழ்ச்சியின்னு சொன்னா!
பறைச்சத்தம் கேட்காம
நாங்க பார்த்ததில்ல!!
 
 
திருமணம் திருவிழான்னு
பறையடிச்சி வந்தோம்! பறையடிச்சி வந்தோம்!
திரும்புன திசையெல்லாம்
பறைச்சத்தம் தாங்க!!
 
ஆரிய சமூகமொன்னு
அடியெடுத்து வைக்க! அடியெடுத்து வைக்க!
ஆட்டங்கண்டு போச்சுதய்யா
எங்க பறையாட்டம்!!
 
தமிழ்க்கலையா இருந்துவந்த
தங்க பறையாட்டம்! தங்க பறையாட்டம்!
சாதியாடும் ஆட்டமின்னு
ஒதுக்கி வைச்சாங்கய்யா!!
 
 
வேகமான ஆட்டமய்யா 
எங்க பறையாட்டம்! தங்க பறையாட்டம்!
வீரியத்தை குறைச்சு அங்கே
ஆனது சதிராட்டம்!!
 
இன்னைக்கு தெரிவதெல்லாம்
பரதாட்டம் தாங்க! பரதாட்டம் தாங்க!
பரதத்தின் முன்னோடியாம்
பொன்னு பறையாட்டம்!!
 
 
இப்படி பெருமையான
பறையாட்டம் இப்போ! சதிராட்டம் இப்போ!
சாவுக்கு ஆடிவரும்
சாப்பறையா ஆச்சு!!
 
பறையடி பலவகையா  
பகுத்து வைச்சாங்கய்யா! தொகுத்து வைச்சாங்கய்யா!
இன்னைக்கு இளைஞரெல்லாம் 
மறந்து போனாங்கய்யா!!
 
 
இலக்கணம் இதற்குமுண்டு
இயைபாக தாங்க! இயைபாக தாங்க!
இங்கிருக்கும் இளையமக்கா 
நல்லா கேட்டுக்கோங்க!!
 
குடிச்சிட்டு ஆடமட்டும் 
கலையில்ல ஐயா! நல்ல கலையில்ல ஐயா!
உயிர்போல வளர்த்துவந்த
கலையை மதிங்க ஐயா!!
 
 
பாங்கான பறையாட்டம்
எங்க உயிரய்யா! எங்க உயிரய்யா!
குடிகார ஆட்டமாக
ஆக்காதீங்க சாமி!!
 
தமிழ்வளர்த்த பெருமையெல்லாம்
எங்களுக்கும் உண்டு! எங்களுக்கும் உண்டு!
கண்ணான கலையிதுவ
கசக்கிபிழிய வேணாம்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Wednesday, 21 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-2 )






அன்புநிறை நண்பர்களே,







விடுகதைக்கவிதையில்
இது என் இரண்டாம் முயற்சி
கீழே இருக்கும் விடுகதைக்கவிதையை படித்து
அதற்கான சொல் எதுவென்று சொல்லுங்கள்.

இதன் கருத்துக்களின் பொருட்டு இந்த
சொல் விளையாட்டின் தொடர்ச்சி....

இதோ விடுகதை கவிதை....


ஐந்தெழுத்து மந்திரமாம்
ஊக்கம் தரும் சூத்திரமாம்!

முதல் எழுத்தும் கடை எழுத்தும்
கூடி நின்றால் 
இரு பொருள்படும் 
ஒன்றோ
அகத்தின் மகிழ்வை
முகத்தில் காட்டும்!
மற்றொன்றோ
அணிவதால் மகிழ்வைக்
கூட்டும்!!

முதலெழுத்து திரிந்து
"த"கர "உ"கரமாய்
மாறி நின்றால்
விலங்கினம் ஒன்றின்
பலமான உறுப்பொன்றை
உரைத்து நிற்கும்!!

கடையெழுத்து
தனித்து நின்றால்
மனித உறுப்பில்
ஒன்றை
விளம்பி நிற்கும்!! 

முதல் இரண்டும்
தனித்து நின்றால்
பல்வேறு குணமிருப்பினும்
ஒன்றிணைத்து
ஒற்றுமையை உணர்த்தும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
ஆண் மகனில்
சிறந்தவன் என
சிறப்பாய் சொல்லும்!!




முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
மாதமொன்றின்
இறையவனை
இயம்பி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!

இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்