கடந்த ஓராண்டு காலமாக இணையப்பக்கம் வருவதற்கு காலம் ஒத்துழைக்காததால் பதிவுகள் இடவில்லை என்றாலும். என்னையும் என் எழுத்துக்களையும் அங்கீகரித்து கிடைத்த பரிசு. அதுவும் இன்றைய வலைப்பதிவர்களில் நவீன ஒளவையாக நான் போற்றும் சீர்மிகு எழுத்தாளர் திருமதி.வேதா இலங்காதிலகம் அம்மா அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதினை பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மனம் குதூகலிக்கிறது.
எனது பிறந்த தினமாம் புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாளில் இந்த விருதினை பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தீந்தமிழ் சொற்களால்
பூந்தளிர் கவிபடைக்கும்
செந்தமிழ் நாயகியே! - உம்
மாந்தளிர் கரங்களால்
ஈந்த இப்பெரும் விருது
சேர்ந்தது என் நெஞ்சினிலே!!
மதிப்பிற்குரிய வேதாம்மா என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகளுடன் பெற்றுக்கொள்கிறேன் விருதினை மட்டற்ற மகிழ்ச்சியோடு.
1) விருதினை என்னுடன் பகிர்ந்த வலைப்பதிவரின் தளமுகவரி...
சிலபத்து அடிகளில்
சிறுகாவியம் படைத்திடும்
சீர்மிகு எழுத்தாளர்
சிறப்பான கவியாளர்!!
ஒன்றே முக்கால் அடியால்
ஓங்கி ஒலித்திட்டார் வள்ளுவர் அன்றே!
ஒன்றிரண்டு கூட்டி
ஓவியம் படைத்திட்டார் வேதாம்மா இன்றே!!
கவின்மிகு சொற்களால் காவியம் படைக்கும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் வலைத்தளத்தை இங்கே காணுங்கள்.
2) என்னைப் பற்றி ...
நான்மாடக் கூடலே
நான் பிறந்த ஊராம்!
நாட்கள் கரைசேர்த்ததோ
திருமந்திர நகராம்!
பணியின் நிமித்தமாய்
அமீரகம் நுழைந்து
அங்குமிங்கும் பறந்தோடும்
விக்கிரமாதித்தன் நானே!
தாய் தந்த மொழியினுக்கு
அணில் போல தொண்டாற்றிட
விரல்வழி ஊறும் எழுத்துக்களை
தூரிகையில் சமைக்கிறேன்!
நாட்டுப்புறக் கலைகளை
நயமாய்ச் சொல்லிடவே
நாள்தோறும் எத்தனிக்கிறேன்
காலம் கைகூடட்டும்!!
3) எனக்குக் கிடைத்த விருதினை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கும் பதிவர்கள்....
என்னைத் தொடரும் அனைத்து பதிவர்களுடனும், இனி தொடரவிருக்கும் புதிய பதிவர்களுடனும் இந்த விருதினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..
இன்னொருபுறம் என் பிறந்தநாள் பரிசாக தனி பதிவே இயற்றி இருக்கிறார் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரர் தனிமரம் நேசன் அவர்கள். உங்களின் அன்பிற்கு என்றென்றும் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரரே. பதிவினை இங்கே காணுங்கள்.
அன்பன்
மகேந்திரன்