மிடுக்காக மின்னணுவியல்
மிளிர்ந்திருக்கும் போதிலும்!
தொய்வில்லா தொலைத்தொடர்பு
உச்சமிருக்கும் போதிலும்!
கற்காலம் தேடியிங்கே
பின்னோக்கி ஓர் பயணம்!!
பயன்பாடுகள் பெருகுகையில்
உற்பத்தியே! நீ மிகைந்தால்!
நாகரீகப் பாதையில்
நானும் வளர்வேன் என
நாசூக்காய் சொல்லிக்கொண்டு
தட்டுப்பாடும் வளருதிங்கே!!
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசமென!
பழையது கொடுத்து
புதிதாய் பெற்றதென!
வாங்கிவைத்த பொருளெல்லாம்
சிலந்தி வலைகளுக்கு
தாக்கமாய் நின்றதிங்கே!!
காய்ந்த மரம் வெட்டி
விறகுக் குச்சியாக்கி
அடுப்பெரித்து வாழ்ந்தோரை!
காலத்தின் தன்மைக்கு
மாறிட அறிவுறுத்தி
இயற்கைவாயு தந்து எனை
இன்புறச் செய்தது ஓர் காலம்!!
நான்கு தூக்கு விறகுவாங்கி
வெயில்கண்டு உலரவைத்து!
எரிகையில் எரிச்சலூட்டும்
புகைச்சலின் பால்கொண்ட
வெறுப்பின் காரணமாய்!
மலர்ந்த முகத்தோடு
நானும் அதை ஏற்றுக்கொண்டேன்!! மலர்ந்த முகத்தோடு
கவிழ்ந்து போன காலச்சூழலில்
பதிவு செய்திடுகவென
பதிவு செய்திடுகவென
தொலைபேசி விடுத்தாலோ!
இயற்கை வாயு வருவதற்கு
இன்னும் மூன்று மாதமென
புதிய கணக்கு சொல்கையிலே!
சுற்றிவந்தால் வட்டமென
இன்றுதான் புரிகிறது!!சிறுதடியின் முகப்பில்
மல்லுத்துணி கட்டி
சிக்கிமுக்கி கல் தேய்த்து
வந்த நெருப்பினால்
எரிய வைத்தும்!
மின்மினிப் பூச்சிகளை
கண்ணாடிக் குடுவைக்குள்
அடைத்து வைத்தும்
வெளிச்சம் கொண்டு வந்தோம்
அதுவும் ஓர் காலம்!!
சிறிதாக அகல்விளக்கும்
பெரிதாக அரிக்கேனுமென
எரியும் எண்ணெய் கொண்டு
விளக்குத் திரியேற்றி
உரசிப் பற்றவைக்கும்
தீப்பெட்டி துணைகொண்டு
வெளிச்சம் கொண்டு வந்தோம்
பின்னர் ஓர் காலம்!!
அறிவியல் வளர்ந்ததப்பா
விட்டிற் பூச்சியாய்
வீட்டிற்குள் அடங்காது
புறம் வந்து பார்த்திடப்பா! - என
கண்ணுக்கு தெரியாது
கம்பிக்குள் சக்தியை
சந்துக்குள் கொண்டுவந்து
பளபளப்பாய் வெளிச்சம் காட்டி
திகைக்க வைத்ததோர் காலம்!!
அகல் விளக்கை புறம் எறிந்து
மின்சக்தி அகம் கொணர்ந்து
சொகுசான வாழ்க்கைக்கு
அடித்தளம் போட்டுவைத்தேன்!
குலவி நின்று உரல் ஆடுவதை
வாங்கி வைத்து
உரல் நின்று குலவி ஆடியதை
தொலைவில் எறிந்தேன்!!
தடம் புரண்ட காலம்
கதையிங்கே சொல்கிறது!
காணமுடியா மின்சக்தி
கண்மறைந்து போனதாம்!
பெருகிவரும் மக்கட்தொகையால்
உற்பத்தி போதாது
தட்டுப்பாடு வந்ததாம்!!
தொலைவெறிந்த அகல்விளக்கு
இன்றோ! அகத்தில்
மறுபுகுத்தலாய் மாடத்தில்!
கைதேர்ந்த சிற்பிகளோ
அரைக்கும் அம்மிக்கல்லையும்
ஆட்டும் ஆட்டு உரலையும்
நுணுக்கமாய் செதுக்கி
கலைவண்ணம் செய்துவரும்
காலமிது இக்காலம்!!
பாமரப் பருவம்விட்டு
படித்தறிந்த பின்னும்
தட்டுப்பாடு பெருகிடவே!
விஞஞான கால்ம்விட்டு
மெதுவாய் கால்பரப்பி
பின்னோக்கி செல்கிறேன்
கற்காலம் நோக்கி!!
தட்டுப்பாடு இங்கே
தானாக வந்ததோ?
ஆளும் வர்க்கத்தோர்
தனித் திறம் காட்டி
தரம் உயர்த்தத் தவறிவிட்டு
பசப்பு வார்த்தைகள் பேசி
செய்த தவறுகளை
தவளை உருவாக்கி
கிணற்றில் அடைக்கின்றனரே!!
வளர்ச்சிப் பாதையில்
தட்டுப்பாடெனும் அரக்கன்
நுழைந்திட காரணம் யார்??!!
மக்கட் தொகை பெருக்கமோ??
ஆக்க வழிகளில்
அழிவின் சக்தியைக் கொணர
ஆள்வோர் நடத்தும் நாடகமோ??
விழிப்புணர்வு இன்றி
வீணாக பயன்படுத்தி
இன்று விழிபிதுங்கும்
நுகர்வோரின் குற்றமோ??!!
அன்பன்
மகேந்திரன்