வியப்பாக இருக்கிறது
விரிந்திருக்கும் இவ்வுலகில்
நானும் ஒரு பாகமென!!
விழிவிரியப் பார்க்கிறேன்
வழித் தடங்களின்
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
அரைஞான் கயிற்விட்டு
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!
கல்லெடுத்து அடித்த அடியில்
தலையில் குருதிவர
வலக்கையால் பொத்திக்கொண்டு
அழுதுசென்ற முனீஸ்வரன்!
அடுத்த மணித்துளியில்
தந்தையுடன் சேர்ந்துவர
மனம் பதைத்துப் போகையில்!!
மருத்துவச் செலவு பார்த்து
என்னய்யா இது!
சிறுபிள்ளைகள் சண்டையில்
நமக்கென்ன வேலையிங்கே! எனச் சொல்லி
உருட்டிய கண்களால்
மிரட்டிச் சென்ற தந்தையை!!
உடன்படித்தோரின் தந்தையர் பலர்
அலுவலகம் சென்று வருகையில்!! என்னவரோ
அதிகாலை கிளம்பிச்சென்று
நாளெல்லாம் மிதிவண்டி அழுத்தி
அலுப்பு மட்டுமே மிஞ்சி
எனக்கான பண்டத்துடன் திரும்புகையில்!!
படபடக்கும் பட்டாசுக்காய்
பகல்முழுதும் காத்திருந்து - நான்
சோர்ந்துபோய் உறங்கிவிட!
தூக்கத்தில் எனை எழுப்பி
முன்தின இரவுப் பொழுதில்
தோளில் எனைச் சுமந்துகொண்டு
பைநிறைய வாங்கிவந்த தீபாவளி!!
கைவண்டி நிரப்பியிருந்த
நெல்மணி மூட்டையெல்லாம்
இறக்கியங்கே வைத்துவிட்டு
அன்றைய தின கூலிக்காய்
எண் கால் இரண்டு - நா முக்கா மூணு என
அறியாத வாய்ப்பாட்டை
இயல்பாய் சொன்ன போதினிலே!!
ஆசிரியர் எனையழைத்து
அப்பாவைக் கூட்டிவா என்றதும்
பதைத்துப் போன நானோ!
கூட்டி வந்த பின்னே - என்னய்யா
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!
வயதுவந்த பிள்ளைஎனினும்
வாஞ்சையோடு மார்பில் கிடத்தி
ஆத்தா என் தாயி
ஆங்கார மாரியம்மா எனத் தொடங்கி
வாய்ப்பாட்டு பாடி எனை
வளர்ந்து வா என் மகனே
வாசல்நின்று காத்திருக்கேன் என
தாலாட்டுப் பாடிய தருணத்தில்!!
அப்பா என்றொரு வார்த்தையில் தா ன்
எத்தனை மந்திரங்கள்
சொல்லிக்கொண்டே இருக்கலாம்
சொல்லத்தான் சொற்களில்லை!!
உன் விரல்பிடித்து இன்னும்
ஊர்வலம் வந்திட ஆசைதான் நெஞ்சு க்குள்
என்ன நான் செய்திடுவேன்
காலம் எனும் மாயன் உனை
கடத்திக் கொண்டு விட்டானே!!
இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
அப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!
அன்பன்
மகேந்திரன்