Powered By Blogger

Sunday 5 June 2011

எட்டுச்சோ தெரியலியே???!!!


மடிக்கொசுவம் தழையவிட்டு
மயில்போல நடைபோட்டு
வரப்புமேல போற புள்ள!

பொழுது விடிஞ்சிருச்சி
கீழ்வானம் செவந்துருச்சி
மழைக்காத்து அடிச்சிருச்சி  - என்
நுனிக்காது குளுந்திருச்சி
நேத்து நடந்ததெல்லாம்
இன்னைக்கு கனவாச்சு!!??
----------------------------------------------------
-------------------------------------------------

மல்லுவேட்டி வரிஞ்சுகட்டி
மதயானை நடைபோட்டு
எனக்காக பொறந்த மச்சான்!!

மழைச்சாரல் பொழியுதைய்யா
மனசெல்லாம் மகிழுதைய்யா
உழைப்புதானே நமக்கெல்லாம்
உருப்படியாகும் - மச்சான்
நேத்து நாம போட்டவிதை
இன்னைக்கு பயிராகும்
கனவெல்லாம் நனவாகும்
காலம் கனியுது!
-----------------------------------------------------
-------------------------------------------------------

வளையோசை சலசலக்க
கொலுசுசத்தம் கலகலக்க
போறவளே செல்லத்தங்கம்!!

விதைபோட்டு முடிச்சாச்சி
வெள்ளாம எதிர்பார்த்து 
விளங்காத கேள்வியெல்லாம்
எம்மனசில் தோணுதடி!?
வெள்ளாம வெழஞ்சி வர
எல்லாமும் கிடைக்கணுமே
எந்தசாமி துணையிருக்கும்
எம்பாடு நிறைவேற!!???
-------------------------------------------------
--------------------------------------------------

வெண்பஞ்சு மேகம்போல
தும்பைப்பூ மனசுக்காரா!!
துவண்டு போயி நிக்காத
துணையாக நானிருக்கேன்!!

கரிசக்காட்டு பூமியில
தூவானம் போட்டுருச்சி
மும்மாரி மழைபெய்யும்
கலங்காதே - கருத்தமச்சான்!!
எஞ்சாமி குலசாமி
எங்கவூரு கருப்பசாமி
வெள்ளாம காத்திடுவார்
வெசனப்பட வேனாமைய்யா!!
---------------------------------------------------------------
----------------------------------------------------------------


கருத்தெல்லாம் நிறைஞ்சவளே
மனசுக்குள்ள மறைஞ்சவளே
மஞ்சளிலே குளிச்சவளே
மரிக்கொழுந்து வாசக்காரி!!!

வானம் இங்கே பொய்த்தாலும்
வற்றாத கிணறிருக்கு!!
பம்ப்புசெட்டு போட்டுவுட்டேன்
படக்குன்னு நின்னுபோச்சு!!
மின்சாரம் படுத்தும்பாடு
தெரியாதோ உனக்கு - பூமயிலே!
உனக்கு தெரியாதோ??!!
நாளிலொரு பாதிநாளு - தெலா
இறைச்சு பாயச்சுபுட்டேன்!!
எத்தனை நாள் எனக்கிந்த
பாடுன்னு புரியலியே!!???
நான் புலம்பிய நேரமெல்லாம்
கொஞ்சமில்ல நஞ்சமில்ல
சர்க்காரு சாமிக்கு - என் புலப்பம்
எட்டுச்சோ தெரியலியே???!!!
--------------------------------------------------------------
-----------------------------------------------------------------

அரளிப்பூவு கண்ணழகா
அத்தைபெத்த ஆணழகா!!
அங்கமாக நானிருக்கேன்
அழகான அன்புமச்சான்!!

நீ சொன்ன சொல்லெல்லாம்
என்காதில் பாய்ஞ்சிருச்சி
மின்சார வேதனைய
சொல்லி இங்கு மாளவில்லை!!
தொழிற்சாலை பெருகிப்போச்சாம்
உபயோகம் கூடிப்போச்சாம்
உற்பத்தி குறைஞ்சிபோச்சாம்
என்ன சொல்லி என்ன செய்ய - இந்த
அவதார உலகத்துல
அவதானிக்க வேணுமின்னா
மின்சாரத் தேவைஇங்கே
முக்கியமா போனதய்யா!!

சர்க்காரு சாமிகளே
சாதுவான யோகிகளே!
சாத்தியங்கள் உண்டைய்யா
சாதிச்சு காமிங்கப்பா!
சாதிக்க தவறிபுட்டா
சனிப்பெயர்ச்சி உனக்கப்பா!!


அன்பன் 

மகேந்திரன்

14 comments:

கூடல் பாலா said...

ஆஹா !அருமை ....அருமை ...!

கோவை நேரம் said...

அருமை.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல் பாலா அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோவை நேரம் அவர்களே
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

Anonymous said...

///சர்க்காரு சாமிகளே
சாதுவான யோகிகளே!
சாத்தியங்கள் உண்டைய்யா
சாதிச்சு காமிங்கப்பா!
சாதிக்க தவறிபுட்டா
சனிப்பெயர்ச்சி உனக்கப்பா!!/////

கோபம் கொந்தளிக்கும்
கூரான வார்த்தைகள்
அருமை! அருமை!

தமிழ்தேவன்

kunthavai said...

அருமை நண்பரே....இன்றைய நிகழ்வுகளை கோர்த்த விதம் நன்று.
இன்னும் இதை சற்றே விரிவாக்கி ஒரு முழு பாடலாக முயலுங்கள் மகேன்.

அது இன்னும் சிறப்பாக அமையும்.

- அனு.

நடராசன் அபுதாபி said...

நண்பா வயலில் உழுத ஞாபகத்தை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. தற்கால அரசியலை படம் போட்டு கண் முன் நிறுத்தியது மிக அருமை. - நண்பன் நடராசன் அபுதாபி

Sathish Kumar said...

//விதைபோட்டு முடிச்சாச்சி
வெள்ளாம எதிர்பார்த்து
விளங்காத கேள்வியெல்லாம்
எம்மனசில் தோணுதடி!?
வெள்ளாம வெழஞ்சி வர
எல்லாமும் கிடைக்கணுமே
எந்தசாமி துணையிருக்கும்
எம்பாடு நிறைவேற!!???//

நம் விவசாயிகளின் ஏக்கமும், துயரமும் என்று தீருமோ...? கிராமிய வாசம்...! வாழ்த்துக்கள் மகேந்திரன்...!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தமிழ்தேவன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு,
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
இந்த படைப்பைக்கொடுக்கும் போது புதிய ஆட்சியை மனதில்
கொண்டு எழுதவேண்டும் என்றே நினைத்தேன்.
தற்சமயம் ஆள்பவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று
சில காலம் பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த படைப்பைக்கொடுக்கும் போது
நிச்சயம் இன்னும் விரிவாக கொடுக்க
முயற்ச்சிக்கிறேன்.
அன்பன்
மகேந்திரன்

மகேந்திரன் said...

நண்பா நான் வயலுக்கு சென்று உழுததில்லை
எனினும் உழுவதை பார்த்திருக்கிறேன். தெலா ஏற்றம்
இறைக்கும் போது, ஒரு இறைப்பை பார்ப்பதற்கே அப்பப்பா
போது என்றாகிவிடும், அதைச் செய்பவர்கள் என்ன பாடு படுவார்கள் என்று
எண்ணிப்பார்த்த காலம் அது.
இன்றும் இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த பின்னும்
நம் விவசாயிகள் அதே துயரத்தை
அனுபவிக்க வேண்டுமா?
ஆள்பவர்களுக்கு எட்டட்டும்
விவசாயி வாழட்டும்!!
அன்பு நண்பன் நடராசனுக்கு நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சதிஷ்குமார் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
விவசாயிகளின் ஏக்கமும் துயரமும்
விரைவில் தீரவேண்டும்.
நமக்கு சோறுபோடும் கடவுளர்கள்
நிம்மதியாக வாழவேண்டும்.
புதிய அரசு உழவர்களை மனதில் வைத்து
அவர்களுக்கு நன்மைகள் பல செய்யவேண்டும்

அன்பன்
மகேந்திரன்

akilan said...

அழகான கிராமிய வலம் வந்த திருப்தி
நன்றி

மகேந்திரன் said...

அன்புநண்பர் அகிலன்
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment