Powered By Blogger

Monday, 22 August 2011

செண்பகவன சீமை!!




இயற்கை எழில் கொஞ்சும்
இமயத்தின் சிறுவடிவாய்!!
இலக்கிய மேடையிலே 
இன்மொழியாய் நயமோடு
இயம்புவதோர் குற்றாலம்!!

திருநெல்லைச் சீமையிலே
முப்புறமும் சிகரமாய்
திரிகூட மலையினின்று
குதூகலமாய் பிறந்ததே
திருநகரக் குற்றாலம்!!




அகலவாய் திறந்து
அகண்டு கைபரப்பி
ஆர்ப்பரித்து ஆடுவதே
தேவகூட புரமெனும்
தென்காசிக் குற்றாலம்!!

சிறகடிக்கும் சிற்றாறு
மகுடமாய் மணிமுத்தாறு
பசபசக்கும் பச்சையாறு
தவழ்ந்தோடும் தாமிரபரணியென
ஈன்றெடுத்த குற்றாலம்!!




தென்மேற்கு பருவமெனில்
தேனுண்ட வண்டாக
திவ்யமாய் சிறகடித்து
துள்ளிப் பாய்ந்துவரும்
தென்றல் தவழ் குற்றாலம்!!

கு எனில் பிறவிப்பிணியாம்
தாலம் எனில் தீர்ப்பதுவாம்
பிறவிப்பிணி தீர்க்கும்
புண்ணியவாம் குற்றாலமென
தீந்தமிழ் சொன்னதுவே!!




ஓடுகின்ற பாதையிலே
ஓயவேதும் இல்லாமல்
ஒன்பது பிரிவுகளாய்
ஓசைமிகு அருவிகளாய்
ஒலியெழுப்பி பாய்வதுவே!!




பேரருவி என்றாலே
பெரியவிழி வியப்பாகும்
பொங்குமாங் கடலினின்று
பாலென பொங்கியங்கே
பரந்து விரிவதுவே!!






தெவிட்டாத தேனிறைக்கும்
தேன்கூடு புடைசூழ
மலையிடைப் பிறக்கும்
மாபெரும் அருவியாம்
தேனருவி என்பதுவே!!

அகலத்தில் சிறியதுவாய்
ஆழத்தில் பெரியதுவாய்!
அடைக்கலம் ஏகிவரும்
அருவி நீர் அகமேற்றி 
சிதறாத சிற்றாறு!!




பூநாசித் துவாரத்துள்
செண்பக மரங்களினின்று
செவ்விய மணமேற்றும்
செழித்த சூழலிலே
பொழியும் அருவியாம்
செண்பகா அருவியே!!




ஐந்தாக பிரிந்தோடும்
அழகான ஐந்தருவி!
புலியினம் நீரருந்தும்
புகலிடமாய் புலியருவி!
சுரக்கும் பாலெனவே
பாய்ந்தோடும் பாலருவி!!




மூலிகை முத்துக்களை
முதுகினில் சுமந்திங்கே
முன்னூறு காததூரம்
மூச்சுவாங்க ஓடிவந்து
மூப்பிற்கு திரைபோடும்
ஞானபுரிக் குற்றாலம்!!

ஆண்டில் முத்திங்கள்
அழகாக விழுகிறதே!
அகன்றோடும் இந்நீரோ!
ஆரவாரம் சிறிதின்றி
ஆழியில் கலக்கிறதே!
விழுநீரை வீணாக்கா
வீதிதோறும் வந்திடவே
விடையொன்று காண்பீரோ?!!

அன்பன்
மகேந்திரன் 

47 comments:

சக்தி கல்வி மையம் said...

ஆண்டில் முத்திங்கள்
அழகாக விழுகிறதே!
அகன்றோடும் இந்நீரோ!
ஆரவாரம் சிறிதின்றி
ஆழியில் கலக்கிறதே!//
அருமையான வரிகள்கலக்கல் கவிதை..
பாராட்டுகள்..

முனைவர் இரா.குணசீலன் said...

கு எனில் பிறவிப்பிணியாம்
தாலம் எனில் தீர்ப்பதுவாம்
பிறவிப்பிணி தீர்க்கும்
புண்ணியவாம் குற்றாலமென
தீந்தமிழ் சொன்னதுவே!!


அப்படியா!!!!!!!

முனைவர் இரா.குணசீலன் said...

குற்றாலச் சாரல் எழுத்துக்களில் நிறைந்திருக்கிறது..

படங்களும் கவிதையும் அதன் பொருளும் அருமை நண்பரே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் எனக்கு குற்றாலத்தில் நனையும் வாய்ப்புகள் கிடைக்க வில்லை..

தற்ப்போது அது கிடைத்த உணர்வு...

Unknown said...

// இயற்கை எழில் கொஞ்சும்
இமயத்தின் சிறுவடிவாய்!!
இலக்கிய மேடையிலே
இன்மொழியாய் நயமோடு
இயம்புவதோர் குற்றாலம்//

கற்றார்க்கு தமிழ் போல
கவிதைதரும் நயம் போல
குற்றால‍ அருவி யிலே
குளிப்பார்க்கு மிக ஏல
வற்றாத நனி இன்பம்
வழங்கிவரும் நல் அன்ப
பெற்றோமே பெரும் உவகை
பெற்றீரே தனிப் பெருமை!

படங்களும் கவிதையும்
அருமை!
புலவர் சா இராமாநுசம்

Chitra said...

மண்வாசனையுடன் எழுதப்பட்ட அழகான கவிதைங்க. ரசித்து வாசித்தேன்.

very nice pic. too.

கோகுல் said...

குற்றால சாரலிலே குளித்தது போலிருக்குது!
tm 3

கடம்பவன குயில் said...

ரொம்ப நாடகளுக்குப்பின் கணிணியின் முன் உட்கார்ந்தால் உங்கள் குற்றால சாரல் வாழ்த்தி வரவேற்கிறதே. சீசனை ஞாபகப்படுத்திட்டீங்க. போகணும்போல இருக்கே.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
படத்தொகுப்புகளும் அருமை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

தேவகூட புரமெனும்
தென்காசிக் குற்றாலம்!!

பொங்கி வந்த கவிதைக்கு
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

குணசேகரன்... said...

இது என்ன கவிதையா? இல்லை பாடலா? எப்படி பார்த்தாலும் நன்றாக உள்ளது. சந்தம் அருமை.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்

தங்களின் அழகான முதல் கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

முனைவரே,
எங்கோ படித்த செய்தியைத்தான்
இங்கு குறிப்பிட்டிருந்தேன். சரியாக இருக்குமென்று
நினைக்கிறேன். தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
ஒருமுறை குற்றாலம் சென்றுவாருங்கள்.
அதன் அழகில் மனம் லயிப்பீர்கள்.
தங்களின் மேலான கருத்துக்கு
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

புலவர் ஐயா

தங்களின் வாழ்த்துக்கவிதைக்கும்
இனிய கருத்துரைக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சித்ரா
தங்களின் மேலான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
ஒருமுறை போய் குற்றாலத்தில் குளித்துவிட்டு வரலாமே,
தங்களின் ஓட்டளிப்புக்கும் இனிய கருத்துரைக்கும்
மிக்க நன்றி நண்பரே.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கடம்பவனக் குயில்
தங்களை நீண்ட நாட்கள் கழித்து காண்பதில்
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

Anonymous said...

படங்களும் கவிதையும் அருமை மகேந்திரன்...

குற்றாலச் சாரல்...ஹ்ம்ம்...அடுத்து எப்பவோ...

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசீலன்
மனதின் நீரோட்டத்தில் விளைந்த இந்த வித்தை
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

சாகம்பரி said...

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடும் கொஞ்சும் குற்றாலம் சிறப்பு.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
வாருங்கள் நண்பரே குற்றாலம் போய்வரலாம்.
அங்கு குளிக்கும் சுகமே தனி தான்.....
தங்களின் அன்பு கருத்துக்கு
மிக்க நன்றி

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி.
நான் இங்கு சொல்ல மறந்ததை
அழகாக விளக்கி சொன்னீர்கள்.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

ஆகுலன் said...

படங்களில் பார்த்திருக்கிறேன்
கவிதை என்னும் அருமையாக சொல்கிறது......

M.R said...

தமிழ் மணம் ஒன்பது ,குற்றாலக் கவிதை அருவியாய் மனதில் .பகிர்வுக்கு நன்றி.

vetha (kovaikkavi) said...

''....ஆரவாரம் சிறிதின்றி
ஆழியில் கலக்கிறதே!
விழுநீரை வீணாக்கா
வீதிதோறும் வந்திடவே
விடையொன்று காண்பீரோ?!!...''
சகோதரா! மிக மிகச் சிறப்பான கவிதை . சொல்லவே வார்த்தை இல்லை. திறமை மேலும் வளர்க! வாழ்க!
வலையின் வருகைக்கும் வரிகளுக்கும் மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

http:/www.kovaikkavi.wordpress.com

அம்பாளடியாள் said...

எத்தனை அருவிகள்!.....அத்தனை அருவிகளையும்
நெஞ்சில் நிறுத்திவைக்கும் அழகிய கவிதை வரிகள்
அருமை அருமை அருமை புலவரே .வாழ்த்துக்கள் .
ஓட்டுப் போட்டாச்சு ....

மாய உலகம் said...

குளிச்சா குத்தாலம் ...

மாய உலகம் said...

thamil manam 10

மாய உலகம் said...

குற்றாலம் பற்றி குளு குளு கவிதை... கலக்கல் நண்பா

நிரூபன் said...

தமிழகத்தின் இயற்கை அழகினை நாமும் ரசிக்க வேண்டும் எனும் எண்ணத்தினை உங்கள் கவிதை தருகிறது.

நிரூபன் said...

குற்றால அருவி பற்றிய குளு குளு கவிதை படங்களோடு பரவசமாய் வந்திருக்கிறது.

kupps said...

தங்கள் கவிதை நயமும் கருத்தும் மிகவும் இனிமை.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஆகுலன்
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ரமேஷ்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் வாழ்த்துக்கும் ஓட்டளிப்புக்கும்
இனிய கருத்துரைக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மாய உலகம் ராஜேஷ்
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோ நிரூபன்
தங்களின் மேன்மையான
கருத்துக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வருக நண்பர் குப்புசாமி
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துரைக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

தினேஷ்குமார் said...

இயற்கை அன்னையின் காட்சியோட தங்கள் கவி வரிகளை படிக்க மிக ஆனந்தமாக உள்ளது நண்பரே....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தினேஷ்குமார்
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்துக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்.

மாய உலகம் said...

தங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பரே

கூடல் பாலா said...

நலமா அண்ணா ...கூடங்குளம் அணு உலையை தமிழகத்தை விட்டு அகற்றும் போராட்டங்களில் பிசியாக இருந்ததால் நீண்ட நாட்கள் வர முடியவில்லை ....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல் பாலா
உங்களை நீண்ட நாட்கள் காணாது மனதுக்கு உறுத்தலாகவே இருந்தது.
நீங்கள் சொன்ன நல்ல விஷயம் கேட்டு மனம் சாந்தியடைகிறது.
வளர்க தங்கள் போராட்டம்
வெற்றி பெறட்டும்.
வாழ்க நின் மனம்.

Post a Comment