Powered By Blogger

Wednesday 31 August 2011

ஏற்பது யாது??!!


வாழ்க்கைத் தேடலில்
செல்கின்ற வழியினில் 
தோல்வியும் வெற்றியும் 
தோளில் மாலையாய்  
மாறிமாறி விழுகையில்
சிந்தையில் ஊறிய
சிறுகேள்விதான் இது?!!

ஏற்பது யாது?
ஏற்பது யாது?
தமிழின் கருவூலத்தில்
ஏற்பதின் பொருள்
என்பது யாது??

மொழியில் சிறந்ததாம்
தங்கத் தமிழை
ஆனை முகனுக்கு
நாற்பொருள் கொடுத்து
தன்னகத்தே ஏற்றிய
ஔவைத் தாயின்
அருள்மொழி கேட்டேன்!

ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது இகழ்ச்சி!!



வாழ்க்கை சுழற்சியில்
ஏழ்மை ஏகினும்
உடைக்கு மாற்றுடை
இல்லாது போகினும்
வயிறு காய்ந்து
வெம்பசி ஏற்றிடினும்
உன்னுயிர் வளர்க்க
பிறரின் முன்
கையேந்தி நிற்காதே!
ஏற்பது தவறு!
ஏற்பது தவறு!!!



கிட்டிய விடையால்
கேள்வியின் சுவடு
நெஞ்சினின்று மறைந்து
வாழ்வின் வில்லினின்று
அடுத்த அம்பை
எதிர்நோக்கி நடக்கையில்
கண்முன்  நடந்த
பெரியவர் சொன்னார்!!

ஏற்பது பழகு
ஏற்பது பழகு!!




சற்றே தலைசுற்றி
குழப்பம் அரங்கேற
நீர்த்துப்போன விடைதனை
மீண்டும் வினவிக்கொள்ள
பெரியவரை நாடினேன்!

ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது இகழ்ச்சி - என
ஒளவையின் அமுதமொழியால்
இன்புற்றிருந்த எனை
குழப்பியது ஏன்???



குழப்பம் வேண்டாம்
குழப்பம் வேண்டாம்!
கூறுவது கேளீரோ?
ஏற்பது இகழ்ச்சி - என
ஒளவை கூற்றை
பழிக்கவில்லை யான்
ஏற்பது பழகு!
என்பதெல்லாம்!!!

மாற்றங்கள் பெருகிவரும்
மாசுபடிந்த இப்புவியில்
துணிந்து நீ செயல்பட
தூரத்து வானத்தை
இருவிரலில் பிடித்திட!
பட்டுத் தெரிந்த
அனுபவப் பெரியோர்
கூறும் அறிவுரை
ஏற்பது பழகு
ஏற்பது பழகு!!

மனமும் தெளிய
குணமும் தெளிய
இருபெரும் பொருளை
எண்ணியெண்ணி வியந்தேன்!!

ஏற்பது இகழ்ச்சி!!
ஏற்பது இகழ்ச்சி!!
ஏற்பது பழகு!!
ஏற்பது பழகு!!

அன்பன்
மகேந்திரன்

Sunday 28 August 2011

முளைப்பாரிக் கும்மி!!






தன்னானே நானேனன்னே
தானேனன்னே  நானேனன்னே
தன்னான தானேனன்னே
தானேனன்னே நானேனன்னே!!

கும்மியடி கும்மியடி
குலம்விளங்க கும்மியடி
சோழ பாண்டி நாடெல்லாம்
செழித்துவர கும்மியடி!!





கும்மியடி கும்மியடி
குலவையிட்டு கும்மியடி
விதைச்ச விதையெல்லாம்
விளைஞ்சிவர கும்மியடி!!

பஞ்சமெல்லாம் தீர்க்கவந்த
பாகீரதன் போல இங்கே
பரணி ஆத்துத்தண்ணி
பாஞ்சுவர கும்மியடி!!




சீரான கலையத்தில
சித்திரச்சம்பா நெல்லெடுத்து
வேண்டியதை கேட்டு இங்கே
பொங்கலிட்டு கும்மியடி!!



மஞ்சள் முகத்தவளாம்
மகமாயி கோவில்முன்னே
மங்கலமா வாழ்ந்திடவே
முளைசுமந்து கும்மியடி!!



எட்டுநாளு முளைவளர்த்து
அடுத்தநாளு எடுத்துவந்து
எட்டாத உயரத்த
எட்டிடவே கும்மியடி!!

குலத்திலே குயவனாரின்
சுள்ளையிலே தான்புகுந்து
கொசப்பாத்திரம் எடுத்துவந்து
குலுங்கியாடி  கும்மியடி!!




பாங்காக வளர்ந்திருக்கும்
பருத்திக்காடு தான்புகுந்து
பருத்திகுச்சி ஓடித்துவந்து
பாட்டுப்பாடி கும்மியடி!!

செங்கல் சூளையிலே
செஞ்சாந்து நிறமடியோ
செங்கல்பொடி வாரிவந்து
செம்மாந்து கும்மியடி!!




ஆட்டுடையான் அகத்தினிலே
ஆவார தொழுதிறந்து
ஆட்டுரமும் எடுத்துவந்து
ஆடிப்பாடி கும்மியடி!!

மாட்டுடையான் அகத்தினிலே
பூவாச தொழுதிறந்து
மாட்டுரமும் எடுத்துவந்து
முளைவளர்க்க கும்மியடி!!

வெள்ளாளர் வளைதிறந்து
வெள்ளைவைக்கோல் வாரிவந்து
விரித்து பரப்பிவைத்து
வட்டமிட்டு கும்மியடி!!




சிறுபயறு பெரும்பயறு
காரா மணிப்பயறு
சிதறாம வாங்கிவந்து
சிரத்தையோட கும்மியடி!!

வாங்கிவந்த பாத்திரத்தில்
பருத்திகுச்சி கீழ்பரப்பி
சம்பாவைக்கோல் மேல்பரப்பி
சாஞ்சியாடி கும்மியடி!!

ஆட்டுரமும் மாட்டுரமும்
அழகான தாளுரமாம்
உரத்தை கீழ்பரத்தி
உற்சாகமா கும்மியடி!!




கடைதிறந்து வாங்கிவந்த
பயறுவித்தை எடுத்துவந்து
உரத்தின் மேல்பரத்தி
விளையவைச்சு கும்மியடி!!

என்னப்பா சூரியனே
எட்டி நீயும் பார்க்காதப்பா
இருட்டில் வளரவைத்து
இசைபாடி கும்மியடி!!

ஒத்தமுளை இரட்டைமுளை
முத்தான மூனாம்முளை
நாத்துமுளை பார்த்து
நயமாக கும்மியடி!!




மஞ்சள்முளை அடுக்குமுளை
ஏழாம் ஏற்றுமுளை
எட்டாம் முளைபார்த்து
ஏகாந்தமா கும்மியடி!!

ஒன்பதாம் நாளடியோ
ஓங்கிவளர்ந்த முளையடியோ!
உந்துன்பம் சொல்லி சொல்லி
ஓங்காரக் கும்மியடி!!

நாளெல்லாம் தான் உழைச்சி
நல்லபடியா நானிருக்கேன்
எனக்கின்னு எதுவுமிங்கே
வேண்டாமின்னு கும்மியடி!!





நல்லமனம் கொண்டோரெல்லாம்
நலமாக வாழவேனும்
நயவஞ்சக பேயெல்லாம்
நசுக்கியாடி கும்மியடி!!

குத்தம் செஞ்சொரேல்லாம்
கூண்டிலேற்ற வேணுமின்னு
குஞ்சார முளைபார்த்து
குனிந்துகுனிந்து கும்மியடி!!

அன்பன்
மகேந்திரன்

Thursday 25 August 2011

தொலைந்துபோன நினைவாச்சோ?!!!


ஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் 
நான் அடிச்ச சிங்க ஆக்கர்!!
சின்னதாக வட்டம்போட்டு
நட்டநடு நடுவில
பம்பரத்த கூட்டிவைச்சி
கூரான பம்பரத்தால்
ஆக்கர் அடிச்ச பின்னால
தெறிச்சி போச்சு பம்பரம்!





தெறிச்சி போன பம்பரத்த
தூரதூக்கி போட்டுட்டு
அழுதுகிட்டு நின்றிருந்த
சங்கரன கூட்டிகிட்டு!
தோள்மேல கைபோட்டு
தொலைதூரம் போனபின்னே
குளத்தாங்கரை பக்கமா
கோலிகுண்டு விளையாண்டோம்!!




சின்னா சின்னா ஓடிவாடா
சிணுங்காம ஆடிவாடா!
ஆறுகாலு அளந்துக்கோ
மூணு குழி பார்த்துக்கோ
முழுசா ரெண்டுகுண்டு
குழிக்குள்ள போடலேன்னா
வெள்ளைக்குண்டு எடுத்துவந்து
கோலிக்குண்ட உடைச்சிடுவேன்!




பம்பரமும் கோலிக்குண்டும்
உடைஞ்சுபோன பின்னால
விளையாட பிடிக்கவில்ல!
கூட்டுக்காரன் சேர்த்துவைச்சு
கூடிநின்னு முடிவுசெஞ்சு
ஓடக்கர பக்கம்போயி
ஓணான் பிடிக்கப்போக
வில்லெடுத்து புறப்பட்டோம்!!




ஓணான பிடிச்சு வந்து
உடைமரத்தில தொங்கவிட்டு
பத்துபேரு கூடிநின்னு!
ஈக்குகுச்சி வில்லெடுத்து
முனையில ஊசிகட்டி
ராமனுக்கு தம்பிபோல
குறிபார்த்து அடிச்சாலும்
பத்துதலை ராவணன் போல
கொலைவெறியில நின்னிருந்தோம்!!




ஓணான் செத்துப்போனபின்னே
ஒஞ்சி போக மனசில்லாம!
தெருவோர குழாயில
வயிறுநிறைய தண்ணிய
மடமடன்னு குடிச்சிபுட்டு!
நாமூனா பனிரெண்டா
மூணு குழுவா பிரிச்சிகிட்டோம்
போருக்கு போவதுபோல்!




ஒருகுழு குனிந்துநிற்க
ஒருகுழு தாண்டிவர
மறுகுழு நாட்டாமையா!
ஆவியம் ஆடிவந்தோம்
ஆவியம் ஆவியம்!
ஆவியம் மணியாவியம்!
ஆவியம் வெள்ளாவியம்னு!
ஒவ்வொரு உயரத்தில
ஒருகுழு நின்னிருக்க
மறுகுழுவா தாண்டிவந்தோம்!

 தாண்டிவந்த ஒருகுழுவில்
ஒருத்தனாவது தப்புசெஞ்சா
குனியச்சொல்லி நிக்கவைச்சி
தாண்டும்போது குனிந்திருந்த
பனிரெண்டு பேரும் சேர்ந்து
கூடிநின்னு குழுவாக
குனிந்தவன் முதுகில
சப்பாத்தி போட்டுவந்தோம்!!




நேரத்த பார்த்தபோது
நெஞ்செல்லாம் அடைச்சிபோச்சு
சூரியன் உச்சைத்தாண்டி
கொள்ளநேரம் ஆகிபோச்சி!
விளையாட்ட மூட்டகட்டி
ஓரமா வைச்சிபுட்டு
ஒன் டூ த்ரீ சொல்லிக்கொண்டு
ஓட்டப் பந்தயமா
வீட்டைநோக்கி சென்றிருந்தோம்!!

------------------------------

--------
---------------------

காலம்போன போக்கில
கால்வலித்து நிற்கையில
கடந்தகால வாழ்க்கையெல்லாம்
கானல்நீரா ஆகிபோச்சி!
சின்னஞ்சிறு வயசினிலே
ஆடிய ஆட்டமெல்லாம்
புகைப்படமா தேங்கிப்போச்சி!

பட்டாம்போச்சி போல
பறந்திருந்த காலமது
கண்ணுக்குள்ள நின்னுபோச்சு!!
இன்னைக்கு தெருவில
நடந்து போகையில!
மட்டைப்பந்து தவிர இங்கே
வேறு விளையாட்டு பார்க்கவில்ல!




சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நான் நினைத்த
குழந்தைகள் கூட்டமிங்கே
தொலைகாட்சி பெட்டிமுன்னே
காலமே கதியாகி
கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!!

நான் ரசித்த விளையாட்டெல்லாம்
தொலைந்துபோன நினைவாச்சோ?!!!

அன்பன்
மகேந்திரன்

Monday 22 August 2011

செண்பகவன சீமை!!




இயற்கை எழில் கொஞ்சும்
இமயத்தின் சிறுவடிவாய்!!
இலக்கிய மேடையிலே 
இன்மொழியாய் நயமோடு
இயம்புவதோர் குற்றாலம்!!

திருநெல்லைச் சீமையிலே
முப்புறமும் சிகரமாய்
திரிகூட மலையினின்று
குதூகலமாய் பிறந்ததே
திருநகரக் குற்றாலம்!!




அகலவாய் திறந்து
அகண்டு கைபரப்பி
ஆர்ப்பரித்து ஆடுவதே
தேவகூட புரமெனும்
தென்காசிக் குற்றாலம்!!

சிறகடிக்கும் சிற்றாறு
மகுடமாய் மணிமுத்தாறு
பசபசக்கும் பச்சையாறு
தவழ்ந்தோடும் தாமிரபரணியென
ஈன்றெடுத்த குற்றாலம்!!




தென்மேற்கு பருவமெனில்
தேனுண்ட வண்டாக
திவ்யமாய் சிறகடித்து
துள்ளிப் பாய்ந்துவரும்
தென்றல் தவழ் குற்றாலம்!!

கு எனில் பிறவிப்பிணியாம்
தாலம் எனில் தீர்ப்பதுவாம்
பிறவிப்பிணி தீர்க்கும்
புண்ணியவாம் குற்றாலமென
தீந்தமிழ் சொன்னதுவே!!




ஓடுகின்ற பாதையிலே
ஓயவேதும் இல்லாமல்
ஒன்பது பிரிவுகளாய்
ஓசைமிகு அருவிகளாய்
ஒலியெழுப்பி பாய்வதுவே!!




பேரருவி என்றாலே
பெரியவிழி வியப்பாகும்
பொங்குமாங் கடலினின்று
பாலென பொங்கியங்கே
பரந்து விரிவதுவே!!






தெவிட்டாத தேனிறைக்கும்
தேன்கூடு புடைசூழ
மலையிடைப் பிறக்கும்
மாபெரும் அருவியாம்
தேனருவி என்பதுவே!!

அகலத்தில் சிறியதுவாய்
ஆழத்தில் பெரியதுவாய்!
அடைக்கலம் ஏகிவரும்
அருவி நீர் அகமேற்றி 
சிதறாத சிற்றாறு!!




பூநாசித் துவாரத்துள்
செண்பக மரங்களினின்று
செவ்விய மணமேற்றும்
செழித்த சூழலிலே
பொழியும் அருவியாம்
செண்பகா அருவியே!!




ஐந்தாக பிரிந்தோடும்
அழகான ஐந்தருவி!
புலியினம் நீரருந்தும்
புகலிடமாய் புலியருவி!
சுரக்கும் பாலெனவே
பாய்ந்தோடும் பாலருவி!!




மூலிகை முத்துக்களை
முதுகினில் சுமந்திங்கே
முன்னூறு காததூரம்
மூச்சுவாங்க ஓடிவந்து
மூப்பிற்கு திரைபோடும்
ஞானபுரிக் குற்றாலம்!!

ஆண்டில் முத்திங்கள்
அழகாக விழுகிறதே!
அகன்றோடும் இந்நீரோ!
ஆரவாரம் சிறிதின்றி
ஆழியில் கலக்கிறதே!
விழுநீரை வீணாக்கா
வீதிதோறும் வந்திடவே
விடையொன்று காண்பீரோ?!!

அன்பன்
மகேந்திரன் 

Friday 19 August 2011

ஆத்திரம் அழித்துவிடு!!




வீறுகொண்டு எழுவாயே
விளைநிலம் உனக்கேது?!
காட்டாறு உனக்கிங்கே
கடிவாளம் போடுவது யார்?!!

காட்டேரி போலிங்கே
கபாலத்தில் ஏறியதேன்?!
சிரமேறி நின்றாயே - நான்
செய்த குற்றமென்ன ?!!




என்னுள்ளே நீ வரவே
என்னகத்தோர் மிரண்டனரே!
வாசல் திறந்ததென்று
வாகாக நுழைந்தாயோ?!!

நீ வந்த போதெல்லாம்
நானாக நானில்லை!
மாபாவி நீ தீண்ட
மாதவம் செய்தேனோ?!!




உரிமையாக வந்தாயே - எனை
உன்னுடைமையென நினைத்தாயோ?!
ஆட்கொள்ள வந்த நீ
அரவமின்றி ஓடிவிடு!!

வசைபாட வந்த நீ
வந்தவழி சென்றுவிடு!
மதியிளகச் செய்த நீ
மாயமாய் மறைந்துவிடு!!






ஆத்திரப் பேயே!
அவனியைக் கடந்துவிடு
அவகாசம் சிறிதின்றி!!

சாத்திரம் பேசி நீ
சாகசம் காட்டாதே!
சட்டென்று ஓடிவிடு!!

சாத்தானின் மறுவுருவே
சன்னமாய் மறைந்துவிடு
சரித்திரப் பக்கங்களில்
சாதனை ஏற்றியபின்
சவமாய் போகும் வரை!!

அன்பன்
மகேந்திரன்

Wednesday 17 August 2011

அழகெனில் யாதென்றால்!!!






திகைக்கச் செய்யும்
வனப்பின் அழகில்
திளைத்து இருக்கையில்
கணைகளாய் வினாக்கள்
விளைந்தன அகத்தில்!!

சூழலின் பிடியில்
சிக்கித் தவிக்கையில்
சிந்தையில் உதித்த
கேள்வியின் சாரமே
அழகெனில் யாது?!!




கேள்வியும் எனதே
பதிலும் எனதுள்ளே
மனதின் மேடையில்
வியாபித்த வினாக்களை
வினவிப் பார்த்தேன்!!

எழிலின் அழகுற
மயிலின் நாட்டிய
அழகை வியக்கையில்
அகவல் குரலோ
உவகை அளிக்காததேன்?!!




சங்கீத சாரமாய்
குயிலினம் கூவிய
குரலில் எனை மறக்கையில்
கரிய நிறமோ
கவனம் சிதைத்ததேன்?!!

திவலையாய் நீர்த்துளிகள்
வானின்று பொழிகையில்
விரிந்த விழிகள் - கரிய
கார்மேகம் காண்கையில்
இமைகள் மூடியதேன்?!!




விளைந்த வினாக்களை
மௌன மொழியால்
மனத்தைக் கேட்கையில்
விடைகள் கிடைத்தது
அழகெனில் யாதென்றால்!!!

அமிழ்தெனும் அழகெலாம்
நிறமெனும் நிர்மலத்தின்
காட்சிப் பொருளல்ல!
செய்யும் செய்கையின்
விளையும் பலனே
அழகின் வடிவாம்!!




ஏ! மனிதா!
ஆங்காரம் கொள்ளாது
அன்பால் இயம்பிப்பார்!
அகிலமும் அழகாகும்!!

உடலுடன் சேர்த்து
அறிவையும் வளர்த்துப்பார்!
ஆற்றல்கள் அழகுபெறும்!!

வந்ததை பேசாது
வாய்மொழி வடிவேற்றி
உண்மையைப் பேசிப்பார்!
சொல்வன்மை அழகுறும்!!




தீஞ்சொற்கள் தவிர்த்து
மரியாதை நிமித்தம்
நன்சொற்கள் இயம்பிப்பார்!
உறவுகள் அழகுபெறும்!!

ஏழ்மை ஏகினும்
ஏய்ச்சிப் பிழைக்காது
உழைத்து உண்டுபார்!
உலகே அழகாகும்!!

அன்பன்
மகேந்திரன் 

Sunday 14 August 2011

பூக்களின் ஒன்பது நிலைகள்!!






'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடியிலோ, கொடியிலோ அல்லது மரத்திலோ எங்கெங்கு பூப்பினும் அதன் பூக்கும் பருவங்கள் ஒவ்வொன்றும் தனி அழகு.

நம் மொழியில் பூக்களை பற்றி பாடாத காவியங்களோ இலக்கியங்களோ இல்லை எனலாம்.





''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
  காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  செறிஎயிற்று அரிவை கூந்தலின்
  நறியவும் உளவோ நீ அறியும் பூவே''.     - குறுந்தொகை

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! தேனுண்ட மயக்கத்தினால் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ  அறிந்த பூக்களில்.'

என்று பெரிய பட்டிமன்றம் நடத்தக்கூடிய அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியது இந்த பூக்கள்.

பூக்கள் உருவாவதற்கு முன்னர் அதற்கு வெவ்வேறு பருவங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட  ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது. இதோ விளக்க முயல்கிறேன்.......




மகரந்த சேர்க்கையிலே
மகிழ்வோடு உதிக்கும் நான்
மதிபோல என் முகத்தை
முகப்பிலே காட்டும் நிலை
மொக்கு எனும் நிலை!!

மொக்கில் தவமிருந்து
இதழ்கள் தருவித்து
இறுக்கமாய் மூட்டுடன்
குவிந்த நிலை
மொட்டு எனும் நிலை!!




மொட்டில் மருவித்து
அகத்தில் இதழ்விரிய 
ஆரம்ப சூழ்நிலையே
அரும்பு எனும் நிலை!!

அரும்பிய நிலைமாறி
விரியும் இதழ்கள்
மேடிட்ட பரப்பாய்
பொங்கி வருதலே
முகிழ் எனும் நிலை!!




முகிழ்ந்து எழுந்து
விரிந்த இதழ்கள்
மணம் பரப்ப
எத்தனிக்கும் நிலையே
மூகை எனும் நிலை!!

மூகையின் வகையாலே
காற்றெனும் ஊடகத்தில்
மலர்ந்து மணம்
கமழும் நிலையே
மலர் எனும் நிலை!!




மலரென பெயர்கொண்டு
சந்தைக்கு வந்தபின்
தானிருக்கும் நிலைகாட்ட
நன்கு மலரும் நிலையே
அலர் எனும் நிலை!!

அலர்ந்து அகன்றபின்
காம்பினின்று கழன்று
வீழும் நிலையே
வீ எனும் நிலை!!





வீ என அலறி
வீழ்ந்து பின்னர்
தன்னிலை துறந்து
வாடி வதங்கிய நிலையே
செம்மல் எனும் நிலை!!







இதுவே மலரின் ஒன்பது நிலைகளாம். மேலும் சிலவற்றின் பருவங்களின் பெயர்களை வருகின்ற பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்.


அன்பன்
மகேந்திரன்