Saturday, 5 November 2011

புரிந்திட விழைகிறேன்!!


வாழவந்த வாழ்க்கையது
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையிட்ட இடைவெளியோ?! 
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
இருக்கும் இடைவெளியில்
வாழ்வைப் புரிந்து
வாழும் நாட்கள் எத்தனை?!
புதிராய் அமைந்துவிட்ட
புதின வாழ்க்கையை
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 

 


சட்டென்று கடந்துவிட
அத்தனை எளிமையானதா?!
கட்டிப்போட்டு வைத்துவிடும்
கொடுமை வாய்ந்ததா?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
இடைப்பட்ட காலத்தில்தான் 
எத்தனைப் பருவங்கள்!!
தவழ ஆரம்பித்து 
துவண்டு போகும்வரை 
எத்தனை மாற்றங்கள்!!
புரியாது தவிக்கிறேன் 
புரிந்திட விழைகிறேன்!!
 
 
பருவங்களின் ஊடே 
சொகுசாய் வாழ்ந்திட 
எத்தனிக்கும் உருவங்கள் 
எத்தனை எத்தனை!!
ஏனிந்த போராட்டம்?! 
புரியாது தவிக்கிறேன் 
புரிந்திட விழைகிறேன்!!
 
 
அன்றாட நிலைத்தலுக்கு
திண்டாடும் கோலங்கள் 
எத்தனை எத்தனை!!
ஏனிந்த திண்டாட்டம்?!
கொண்ட வாழ்வு சிறந்திடவா?!
பெற்றபிள்ளை காத்திடவா?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
இடைக்காலம் சிறிதென்றால்!
வாழ்வை வாழ்ந்திடவே
பொழுது போதாதென்றால்!
புலர்ந்திடும் பொழுதினிலே
கண்ணில்படும் குற்றங்கள் ஏன்?!
ஆயிரம் ஆயிரம்
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
குழந்தைத் தொழிலாளர்
பல கண்டேன்!
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
சில கண்டேன்!
மனம் பேதலித்தத!
துளிர்விடும் சிறுபூச்செடியில்
கனல்கங்குகளை வீசியது யார்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
பட்டாம்பூச்சி போல
பாய்ந்து ஓடி
பள்ளிசெல்லும் வயதில்
பாதாளச் சிறையில்
பூட்டியது யார்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
இளம் பிஞ்சு இங்கே
இன்னல் படுவதற்கு
குற்றம் செய்தது யார்?!
இனிய உலகை காணவந்த
இளம்பிஞ்சின் குற்றமா?!
பெற்றவனின் குற்றமா?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
காதலில் விளைவிக்காது
காமத்தில் விளைவித்த
பிஞ்சுகளா இவர்கள்?!
பெற்றெடுத்து பின்னர்
வாழவைக்க இயலாத
புண்ணியவான் ஒருபுறம்!
கசடுகள் குடியேறிய
சமுதாயம் மறுபுறம்!
பிஞ்சுகள் தான் என்ன செய்யும்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
வாழ்க்கை வாழவேதான்
சந்தேகம் இல்லை
வாழ்வின் தொடக்கமாம்
குழந்தைப் பருவம்!
அங்கே சமுதாய கேடுகள் 
நீக்கமற குடியேறினால் 
பாதைகள் மாறி பயணிக்கும்!!
 
 
பாதைகள் மாறிவிட்டால்
உபாதைகளே மிஞ்சும்!
பசுமரத்தில் ஆணியை பாய்ச்சி
புண்ணாக்க வேண்டாம்!
குடுகுடுவென ஓடும்
குற்றமற்ற குழந்தைகளை
தொழிலாளர் ஆக்க வேண்டாம்!!
 
 
அறிவுப் பசியால்
செறிவு ஏறிட
கல்வி கொடுங்கள்!
பிஞ்சு உடலில்
உழைப்பை உறிஞ்சி
வாழ்வின் பொருளுக்கு
மலைப்பை கொடுக்க வேண்டாம்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

80 comments:

suryajeeva said...

இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் பெரும்பாலும் பஞ்சு மிட்டாய் விற்ப்பது குழந்தைகள் தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//
வாழவந்த வாழ்க்கையது
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையிட்ட இடைவெளியோ?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!/

//////////


இந்த புரிதலுக்காகத்தான் நீள்கிறது...
வாழ்க்கை....

இது புரிந்துவிட்டால் வாழ்க்கை இனிக்காது அல்லது கொடுமையானதாக இருக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////////
கட்டிப்போட்டு வைத்துவிடும்
கொடுமை வாய்ந்ததா?!
///////உண்மைதான்...

பந்தம், சொந்தம், நட்பு, உறவு, என்ற அத்தனைக்குள்ளும் நாம் கட்டிப்போட்டு இருக்கிறோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சமூக அவலங்கள் அத்தனையும் கவிதைக்குள் சிக்கியிருக்கிறது...


இதையெல்லாம் புரியாமல் இருப்பதுதான் நல்லது..


வழக்கம் போல கவிதை அருமை மகேந்திரன்...

கோகுல் said...

வணக்கம் நண்பரே!

கல்விப்பசியாற்ற வேண்டிய பிள்ளைகளை வைத்து தங்கள் பசியாற்றும் பெற்றோர்களுக்கும்,

விளையாடி வர வேண்டிய வியர்வையை
அவர்களை உழைக்க வைத்து உறிஞ்சும்
முதலாளிகளுக்கும்

செவிட்டில் அறைந்தார்ப்போன்ற வரிகள்!

படங்கள் பார்க்கும் போதே மனம் பற்றி எரிகிறது!
அவர்களை கொளுத்த நினைக்கிறது!

Sakunthala said...

\\துளிர்விடும் சிறுபூச்செடியில்
கனல்கங்குகளை வீசியது யார்?!//
நிச்சயமாக பெற்றவர்களும் சமுதாயமுமே.
யார் செய்த குற்றமாக இருந்தாலும்
வாடி நிற்பது இப்பிஞ்சுகளே
மனது வலிக்கிறது நிழற்படங்களை காண்கையில்
கருத்தாழமிக்க கவிதை

shanmugavel said...

சமூக நோக்குள்ள அருமையான வரிகள்.மனதைப் பிழிகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சமுதாயச் சிந்தனைகள் நிரம்பிய அழகான அருமையான கவிதை.

பாராட்டுக்கள். vgk

நம்பிக்கைபாண்டியன் said...

புரிந்து ரசிக்கிறேன்
பாராட்ட விழைகிறேன்!

kavithai (kovaikkavi) said...

''...அன்றாட நிலைத்தலுக்கு
திண்டாடும் கோலங்கள்
எத்தனை எத்தனை!!
ஏனிந்த திண்டாட்டம்?!...''
கேடு கெட்ட அரசியல் வாதிகளும், நல்ல திட்டமிடல் அற்ற அரசாட்சியுமே இவைகளிற்குக் காரணம். எல்லாம் சுருட்டி தமது பையில் வைக்க எண்ணினால் இந்த சோகங்களே தொடரும். வாழ்த்துகள் மகேந்திரன் வேதனை மிகு கவிதை.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

காட்டான் said...

வணக்கம் மாப்பிள
குழந்தை தொழிலாலர்களை பற்றி அருமையாக சாடியிருக்கீங்க.. எப்போது முடியும் இந்த கொடுமை..?

Ramani said...

படங்களுடன் பதிவினைப் படிக்கையில்
மனம் கனத்துப் போகிறது
அருமையான படைப்பைத் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 9

வெங்கட் நாகராஜ் said...

மனம் ரணமாகிவிடுகிறது இக்குழந்தைத்தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் நண்பரே....

எத்தனை எத்தனை குழந்தைகள் இப்படி...

நல்லதோர் கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்....

முனைவர்.இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..
தங்கள் வாழ்க்கைத் தேடல் ஆழமானது..

கண்ணிருந்தும் குருடராகிவிட்டோம் நாமென்பதை..

காதிருந்தும் செவிடராகிவிட்டோம்..
நாமென்பதை..

அறிவிருந்தும் மூடராகிவிட்டோம்..
நாம் என்பதை..

நயமாகத் தாங்கள் சாடியவிதம் அருமை..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
ஆமாம் நண்பரே, பஞ்சு மிட்டாயிலிருந்து
கடற்கரையில் சுண்டல் விற்பது வரை
குழந்தை தொழிலாளர்கள் இன்னும்
நிறைந்து இருக்கிறார்கள்..

தங்களின் மேலான கருத்துக்கு
மனம்நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
புரிந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே
என்று கவிஞர் சொன்னதுபோல,
புரிதல் மிக அவசியம்...

சிறுபிராயத்தில் விதிக்கப்படும் விதைதான்
வளர்ந்து வருகையில் வெடித்து நிற்கும்....

தங்களின் அருமையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
ஆம் நண்பரே, சில சமுதாய கசடுகளை
காண்கையில் கொளுத்தி விடலாம் என்றுதான்
தோன்றுகிறது...
முதலில் பெற்றோர்கள் தார்மீகப் பொறுப்பேற்று
தம் குழந்தைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும்...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி சகுந்தலா,

சரியாகச் சொன்னீர்கள், யார் தவறு செய்தாலும்
தவிப்பது இப்பிஞ்சுகள் தான்..
உருவாக்கியவர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் குழந்தைகளை இந்நிலையில் காணாது
இருக்க வேண்டும்...

தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமுவந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஐயா வை.கோபாலகிருஷ்ணன்,
தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தங்களின் பாராட்டு விழைதலுக்கும்
புரிந்திட்ட நிகழ்வுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
ஊழல் பெருத்துப்போன இச்சமுதாயம்
பணத்தை ஒருபுறமாக ஒதுக்கி
மறுபுறம் பள்ளமாக ஆக்கிவிட்டார்கள்,

தங்களின் மேன்மையான கருத்துக்கும்
மனம்நிறைந்த வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
விரைவில் விடிவை எதிர்பார்ப்போம்...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும்
மேன்மையான கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
ஆம் நண்பரே,
மனம் பேதலித்து தான் போகிறது,
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
வாழ்வின் தேடல்கள் நிறைந்து கிடக்கும்
இவ்வுலகில் நல விதைகளை வித்திட
அனைவரும் முனையவேண்டும் ...
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

RAMVI said...

அருமையான கவிதை.

இந்த பிஞ்சு குழந்தைகளைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது.இதற்கெல்லாம் தீர்வு என்ன?

Lakshmi said...

அறிவுப் பசியால்
செறிவு ஏறிட
கல்வி கொடுங்கள்!
பிஞ்சு உடலில்
உழைப்பை உறிஞ்சி
வாழ்வின் பொருளுக்கு
மலைப்பை கொடுக்க வேண்டாம்!!
அழ்கா சொல்லிட்டீங்க

koodal bala said...

குழந்தை தொழிலாளர்களை நினைத்தால் நெஞ்சம் நெருடுகிறது ..

புலவர் சா இராமாநுசம் said...

புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!/

சரியாக சாடினீர்
சமுதாய சீர்கேட்டை
அற‍யாத பருவத்தில்
அல்லாடும் பிஞ்சுகள்
புரியாத மக்களும்
புரிந்திடும் வகையிலே
உரிதான படங்களை
உணர்வுபெற போட்டிரே!

நன்றி! மகி!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

அறிவுப் பசியால்
செறிவு ஏறிட
கல்வி கொடுங்கள்!
பிஞ்சு உடலில்
உழைப்பை உறிஞ்சி
வாழ்வின் பொருளுக்கு
மலைப்பை கொடுக்க வேண்டாம்!!


புரியாது தவிக்கும் தவிப்பை
புரிந்திட மொழிந்த கவிதை!
பாராட்டுக்கள்..

ராஜா MVS said...

சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு என்ற நிலையை முற்றிலுமாக ஒழித்தால் ஒழிய இதுபோன்ற அவலங்களை களைய முடியும்...
தன் குழந்தை நன்றாக படித்து சுகமாக வாழவேண்டும் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பார்கள். ஆனால் என்ன செய்வது வறுமை அவர்களை வாட்டும் போது. தங்கள் மனதை கல்லாக்கிட்டு தான் தன் குழந்தையின் வருமானத்தில் உயிர்வாழ நினைக்கிறார்கள். இதில் தவறு பெற்றோர்கள் மீது அல்ல. இந்த சமுதாயத்தின் மீதுதான்.

ராஜா MVS said...

கவிதை மிக அருமை... படங்களும் தான்...

மனம் கசக்கிவிட்டது.... நண்பா...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
பெற்ற குழந்தைகளை பேணிக்காப்பதும்,
வருங்கால தலைமுறைகள் நாட்டின் தூண்கள்
என சொல்லிக்கொள்ளும் சமுதாயமும்..
தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்...

தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கூடல்பாலா,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறைப் புலவரே,
கவியால் கருத்திட்டு
எம் கவியை பெருமை கொள்ளச் செய்தீர்கள்..
மனம் கனக்கும் கவிதைக்கு
மருந்திட்டாற்போல அழகிய கருத்துரைத்த
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,

தங்களின் வாழ்த்துக்கும்
மேன்மையான கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா.MVS


தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே
எல்லா பெற்றோரையும் நான் கூறவில்லை.
வறுமையின் பிடியில் சிக்கி வேறு வழியின்றி
தொழிலுக்கு அனுப்பும் பெற்றோரும் இருக்கிறார்கள்.
ஆனால் தன் குழந்தை என்ன செய்கிறது என்று தெரியாத
பெற்றோரும் இருக்கிறார்கள்.

சமுதாயம் நிச்சயம் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதில்
எனக்கு முழு உடன்பாடே...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஓ மனதுக்கு வலி தரும் கவிதை....!!!
மிகவும் உருக்கமாக இருக்கிறது...!!!

ஹேமா said...

எத்தனையோ புரிதல்களைப் புரியாமலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.ஒன்றொன்றாக அடுக்கியிருக்கிறீர்கள்.சில புரிதல்கள் புரியவே வேண்டாமென்றும் இருக்கிறது.நல்லதொரு கவிதை !

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

அரசன் said...

மிளிரும் தளிர்களை சிறைப்படுத்தும் அவலம் இயல்பாய் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...
வலிகளை சுவைத்தே வாழப்பழகிய வண்ணத்துப்பூச்சிகளின் நிலையை கூறிய விதம் கண்டு வியந்தேன் ...
புரிதலுக்கான நோக்கத்தை உணர்ந்தேன் .. படைப்புக்கு தலை வணங்குகிறேன்...

Anonymous said...

சட்ட திட்டங்கள் சரியாக இருந்தால் குற்றங்கள் குறையும்.. இது போன்ற சிறுவர்க்ளின் நிலை இப்படி கேள்வி குறியாகிவிடாது... சிறையில் சிறகு முளைக்கட்டும்.. வானம் நாளை அழைக்கட்டும்... ஆசைகள் அவர்கள் மனதிலும் இருக்கும் பாவப்பட்ட ஜீவன்கள்.. இனியாவது அவர்கள் வாழ்வு நல்ல முறையில் அமையட்டும்.. புரியாமல் தவிக்கும் சமூகத்தில் இருக்கிறோம் நண்பரே! என்ன செய்ய மாற்றம் வரும் நம்பிக்கையை தவிர... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Anonymous said...

குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் அவர்களுக்கு நல் கல்வி அமைந்திட அரசு நடவடிக்கையை சரியாக கையாளட்டும்... கவிதையில் ஆதங்கம் அருமை நண்பரே!

M.R said...

இரண்டு நாள் வெளியூர் பயணம் என்பதால் பதிவிற்கு வரமுடியவில்லை

தங்கள் பதிவில் உள்ள சாரம்சம் புரிகிறது நண்பரே

எத்தனை கேள்விபட்டும் , கண்ணில் கண்டும் வேதனைப் பட்டிருக்கிறேன்

அவர்களுக்கு வேறு ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் நண்பரே

சென்னை பித்தன் said...

ஒரு சமூக அவலம் பற்றிய அருமையான கவிதை.

KANA VARO said...

படமும் கவிதையும் நன்றாகவே இருக்கு

Anonymous said...

முதலில் கண்ணில் பட்டு கலங்க வைத்தது படங்கள்...
கவி கலக்குவார் என்று தெரியும்...இப்போது கலங்கவும் வைக்கிறார்...
தொடர்ந்து கலக்குங்கள்...அவ்வப்போது கலங்க வையுங்கள்...
வாழ்த்துக்கள் சகோதரரே....

மனோ சாமிநாதன் said...

//பட்டாம்பூச்சி போல
பாய்ந்து ஓடி
பள்ளிசெல்லும் வயதில்
பாதாளச் சிறையில்
பூட்டியது யார்?!//
அருமையான வரிகள்!

புகைப்படங்கள் அத்தனையும் மனசை கனமாக்குகின்றன!

மகேந்திரன் said...

அன்புநண்பர் அரசன்,
அருமையாய் சொன்னீர்கள்,
வாழ்வின் இன்னல்களை சுவைத்தே வாழப் பழகிய
குழந்தைகள் தன்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்திலிருந்து
எதை எடுத்துக் கொள்ளும்...
என்பதைப் பொறுத்தே அதன் வளர்ச்சியும்....

மேன்மையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
சட்டதிட்டங்கள் முதலில் மாற்றியமைக்கப் படவேண்டும்..
அறுபதாண்டு காலமாய் புதுப்பிக்கப் படாமலிருக்கும்
சட்டங்கள் தூசுதட்டி..
இன்றைய கால சூழலுக்கு ஏற்றார்போல மாற்றியமைத்தாலொழிய
இதுபோன்ற சமுதாய கொடுமைகளை
குறைக்கவே முடியாது...

அருமையான கருத்துரைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்
தங்களின் கருத்துக்காய் என் படைப்புகள் எப்போதும் காத்திருக்கும்,
தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து சென்றாலே நான் பாக்கியமடைவேன்...

அருமையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரோதயன்,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
சில பல சந்தர்ப்பங்களில் அங்கேயும் இங்கேயும்
கண்ணில் தெரிந்த காட்சிகளை கண்டு
மனம் வெதும்பி.. படைத்த பதிவே இது..

என் கவிதை மீதான தங்களின் மேலான நம்பிக்கைக்கும்
இனிய கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
நலமா?

அன்றாடம் அல்லலுறும் மக்கள் நிலை கண்டு திண்டாடும் கவிஞனின் உணர்வுகளையும்,
நாளாந்தம் மாறுபடும் வாழ்க்கைக் கோலத்தின் மாற்றங்களின் மூலம் மௌனித்துப் போன மனித உணர்வுகளையும் கவிதை யதார்த்த பூர்வமாகச் சொல்லி நிற்கிறது.

அன்புடன் மலிக்கா said...

/அறிவுப் பசியால்
செறிவு ஏறிட
கல்வி கொடுங்கள்!
பிஞ்சு உடலில்
உழைப்பை உறிஞ்சி
வாழ்வின் பொருளுக்கு
மலைப்பை கொடுக்க வேண்டாம்!!//

மிக அருமையாக ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது சகோ ஒவ்வொரு வரிகளிலும்..

வேண்டாமிந்த பிஞ்சுகளுக்கு பாரம்
வேதனைகளை விஞ்சு நிற்கிறதே சோகம்..

அம்பலத்தார் said...

உங்கள் எண்ணங்களை
உங்கள் ஆதங்கங்களை
உங்கள் கோபங்களை
புரிந்திட விழைகிறேன்!!

Rathnavel said...

வேதனையான கவிதை.
shared in my face book page.

ஷர்மி said...

மகேந்திரன் அண்ணா, கேமராவுடன் நீங்களே கிளம்பிவிடுவீர்களா அல்லது யாரும் ஆளை வைத்து படம் எடுக்கிறீர்களா? ஒவ்வொரு கவிதைக்கும் நீங்கள் போடும் படங்கள் அருமை. அதிலும் இந்தக் கவிக்கு போட்டிருக்கும் ஒவ்வொரு படமும் மனதை கனக்க வைக்கிறது. ஆழமான அர்த்தங்களுடன் நயமான வார்த்தைகளுடன் கவிதை அருமை.

சிவகுமாரன் said...

\\புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!//

நெஞ்சைத் தொடும் வரிகள்.
எல்லோருக்கும் புரிய வேண்டும்.
அப்போது தான்
விடிவு பிறக்கும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஐயா, வணக்கம்.
தமிழ்மணத்தில் இந்த வாரம் என்னை நட்சத்திரப்பதிவராக ஆக்கியுள்ளனர்.

7.11.2011 முதல் 13.11.2011 வரை தினமும் 4 இடுகைகள் தருகிறேன்.

முதன் இடுகை காலை 11 மணிக்கு
அது மட்டும் புத்தம் புதியதாக இருக்கும்.

பிறகு மதியம் 2 மணி, 4 மணி, மாலை 6 மணி ஆக 3 மீள்பதிவுகளும் வெளியிடுகிறேன்.

தொடர்ந்து எல்லாப்பதிவுகளுக்கும் வந்து ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

gopu1949.blogspot.com

அன்புடன் vgk

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மலிக்கா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷர்மி,
இங்கே பதிவுகளுக்காய் நான் போடும் படங்கள்
இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே,
சில சமயங்களுக்கு படங்களுக்கு கவி அமைந்துவிடும்....

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

மனமார வாழ்த்திய அன்பு நண்பர் ராஜேஷ்,
தங்களுக்கும் இந்த இனிய நாள் எல்லா வளமும்
நிறைந்து செழித்தோங்க வரமருளட்டும்...

அம்பாளடியாள் said...

படங்களும் கவிதையின் கருப்பொருளும் நெஞ்சை நெகிழ வைக்கின்றது .
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ....

kavithai (kovaikkavi) said...

''பருவங்களின் ஊடே
சொகுசாய் வாழ்ந்திட
எத்தனிக்கும் உருவங்கள்
எத்தனை எத்தனை!!
ஏனிந்த போராட்டம்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!...''
வந்தேன் ..பரவாயில்லை ஒரு தடவை கருத்திட்டால் என்னஇஇஇ மிக நல்ல கருத்து சகோதரா. வாழ்த்துகள்.பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

Kanchana Radhakrishnan said...

புகைப்படங்கள் அத்தனையும் அருமை.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,


தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

சம்பத் குமார் said...

//பட்டாம்பூச்சி போல
பாய்ந்து ஓடி
பள்ளிசெல்லும் வயதில்
பாதாளச் சிறையில்
பூட்டியது யார்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!//

வணக்கம் நண்பரே..

தளத்தில் முதல் வருகை..முனைவர் அறிமுகம்..

அருமையாய் வடித்துள்ளீர்கள்.சுவாசித்தவுடன் ஒருகணம் நெஞ்சம் நெகிழ்கிறது..

இன்று முதல் தொடர்கிறேன்

நன்றியுடன்
சம்பத்குமார்

Post a Comment