Powered By Blogger

Saturday 28 May 2011

எல்லா நாளும் புதியதே!!!








வாய்ப்பு வருமென்று
வாய்பிளந்து நிற்க! நீ
ஒநாயல்ல! - கிடைத்த
நூல் முனையில்! - வெற்றிப்
பட்டத்தைப் பறக்கவிடு!

 

நீ செல்லும் பாதையில்
வாய்ப்பு எனும் காகிதத்தில்
முயற்சி எனும் தூரிகையால்
வெற்றி எனும் காவியத்தை
எப்போதும் எழுதிவிடு!

 

நித்தமும் வாய்ப்புகள் - உன்
முற்றத்தில் உண்டு
வாசல் தாண்டும் முன்
வாய்ப்புகளின் வடம்பிடித்து
வெற்றியை நிலைநிறுத்து!

 

பயணம் சில தூரம்தான்
பாதைகள் மட்டும் பல
வாழ்வின் சுழல்கள்
யாவும் பழகிவிடு - அங்கே
நீந்திக் கரையை தொட்டுவிடு!




வாழ்வை வாழப் பிறந்த நீ
யுக்தியுடன் செயல்படு!
தோல்வி எனும்  சேற்றினை
நம்பிக்கை எனும் நீரில் கழுவி
வெற்றி எனும் சுவடு பதித்துவிடு!


இன்று நிகழ்ந்த அஸ்தமனம்
நாளை உனது விடியல்
நாளைய பொழுதில் - உன்
நம்பிக்கை வைத்தால்
எல்லா நாளும் புதியதே!!


அன்பன்

மகேந்திரன்

Thursday 26 May 2011

ஒருகாணி நிலமிருக்கா??!!!









கொம்பு ரெண்ட ஆட்டிகிட்டு
குதுகலமா ரோட்டு மேல
ஒயிலாக ஒடுவியே - மச்சக்காளையே!

ஒண்டிப்போயி ஓரத்தில
ஒருசாணு இடத்துக்குள்ள
குறுகிப்போயி கிடக்குறியே - மயிலக்காளையே!

உருக்காத இரும்புபோல
உத்தரமாம்  உந்தேகம்
உருக்குழஞ்சு போனதேனோ? - மச்சக்காளையே!

பாவிமனசு தவிக்குதப்பா
பழையகஞ்சி சேரலப்பா
பத்திரமா உன்னநானும்
பார்க்கவில்லையோ?!!! - மயிலக்காளையே!!


-----------------------------------------------
------------------------------------------------

உழைப்பென்றால் உன்னைப்பார்த்து
உலகத்துக்கு சொல்லத்தோணும்
உழைப்பாளி வர்க்கமைய்யா - உழவுக்காரனே!

ஏதேதோ எண்ணம் வந்து
எம்மனச ஆட்டிவைக்க
சோறுதண்ணி இறங்கலியே - உழவுக்காரனே!

எங்கப்பா சொன்னகதை
எப்போதோ கேட்ட கதை
என்காதில் ஒலிச்சுதப்பா - உழவுக்காரனே!

காடுகழனி செங்கழனி
கண்ட இடம் பூங்கழனி
பார்த்ததெல்லாம் பச்சையாக
இருந்ததாமப்பா! - அன்று
வேலைபார்க்க பொழுதில்லையாம் - உழவுக்காரனே!

கீழிருந்து மேலும் சரி
இடமிருந்து வலமும் சரி
எந்தத்திசை பார்த்தாலும்
பச்சையில்லையே! இங்கே
பார்க்குமிடம் பவுசான
கட்டிடம்தான்பா!

ஓராயிரம் ஆசையில்ல
எம்மனசுக்குள்ளே இருப்பதெல்லாம்
ஒரேஒரு ஆசைதான்பா - உழவுக்காரனே!

----------------------------------------------
-----------------------------------------------

நீ சொல்ல சொல்ல
உறுத்துதப்பா எம்மனசு!!

பசுமையான இடமெல்லாம்
கட்டிடமாச்சு! -இங்கே
விவசாய நிலமெல்லாம்
விற்பனையாச்சு! ஐயோ!
எம்பொழப்பும் இங்கே
ஒரு வெறுங்கதையாச்சு! - மச்சக்காளையே!



உலகமெல்லாம் மாறிப்போச்சு
மக்கள்தொகை ஏறிப்போச்சு
நடப்பதெல்லாம் நடக்கட்டும் - மச்சக்காளையே!

உன் ஆசை என்ன சொல்லப்பா?!! - மயிலக்காளையே!

----------------------------------------------------
-------------------------------------------------

எனக்கு ஒரு ஆசையப்பா
என்மனசில் இருக்குதப்பா!
என்னுசிரு இருக்கும்போதே - உழவுக்காரனே!
சின்னஞ்சிறு நிலத்தையேனும்
உழுதிட வேணும்!














ஒருகாணி நிலமிருந்தா
எனக்கு மட்டும் சொல்லிவிடு!!!




அன்பன்

மகேந்திரன்

Sunday 22 May 2011

எதுவும் இங்கே சாத்தியமே!!







சிரமங்கள் ஆயிரமேனும்
நிந்தனை மறந்துவிடு!
சிந்தித்திரு எப்போதும்
சிகரங்கள் உனைத் தொடரும்!
சோதனைகளை கண்டு 
சோர்வு ஏன்? - அதை
சோதனைக்கூடமாக்கு
சாதனைகள் உனைத் தொடரும்! 
கொளுத்த மீன் வருமென்று
காத்திருக்க நீ - கொக்கல்ல!
இன்றைய பொழுதை உனதாக்கு
இமயம் கூட உனைத் தொடரும்!
காத்திருந்தவர் எடுத்துச் செல்ல
நீ குளக்கரை  நீரல்ல - கண்ணில்
கபடுகாட்டும் கானல் நீரல்ல  - நீ  
கரை மீறும் கங்கை நீரன்றோ!
கூன்போட்டு வாழாதே - இங்கு
தானாக  எதுவும் நடக்காது!
தரணியில் நீ நிலைக்க - உன்
தகுதியை வளர்த்துக்கொள்!
கனவு மந்தைக்குள் காணாமல்
தொலைந்து போகாதே
நிதானத்தின் வெளிச்சத்தில் - உன்
வெற்றியைத் தேடிக்கொள்!
அலட்சியத்துடன் வாழாதே - உன்
இலட்சியத்தை இலக்காக்கு
செவ்வான வீதியில் - கொய்யாத 
வெற்றிக்கனிகளை பறித்துக்கொள்!
சின்னஞ்சிறிய விதைக்குள்ளேதான்
விருட்சம் ஒளிந்திருக்கும்!
உன்னை நீ அறிந்து கொண்டால்
எதுவும் இங்கே சாத்தியமே!!
அன்பன்
மகேந்திரன்

Saturday 21 May 2011

ஏலேலங்கும்மி ஏலேலோ!







ஏலேலங்கும்மி ஏலேலங்கும்மி
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
தரணியெல்லாம் பொன்விளைய
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
பரணி பாய்ந்து ஓடுதம்மா!
ஏலேலங்கும்மி  ஏலேலோ!

ஆணை அங்கே குளிச்சேரும் 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
அழகான பரணியம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!

நெல்லைச்சீமை புகழ்மணக்க 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
நெளிஞ்சு அங்கே ஓடுதம்மா 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
அழகழகா ராகம் போடும் 
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
கலகலக்கும் பரணியம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
சலசலக்கும் ஓசையிலே
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
சந்தம் போட்டு பாடுதம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
விண்போற்றும் பெருமையுடன்
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
வீரக்கதை பேசுதம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
ஓடிவந்த வேகமெல்லாம்
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
ஒளிஞ்சு எங்கே போனதம்மா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
பொன்னான மண்ணம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
புடம்போட்ட தங்கமம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
நீ இருந்த நிலையென்ன

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
உன்மேனி எல்லாம் குழியம்மா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
எந்த பாவி செஞ்சதுவோ

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
இடர்வந்து சேராதோ
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
கொஞ்சமேனும் யோசிங்கப்பா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
உன் குலம் வாழ வேணுமப்பா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
மங்காத மாணிக்கத்த
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
மண்ணாக எண்ணாதப்பா
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
இப்போதே எடுத்துப்புட்டா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
உனக்கு ஒருதுளி நீரில்லை
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
பொன்னுமக்கா! தங்கமக்கா!
ஏலேலங்கும்மி  ஏலேலோ!
மண்ணெடுக்க வேண்டாமையா

ஏலேலங்கும்மி  ஏலேலோ!
அன்பன்
மகேந்திரன்

Friday 20 May 2011

நாளைய வெற்றி உனக்காக!






பொறுமைத் தவமேற்று  - நண்பா
பொறுமைத் தவமேற்று!
பொன்னான வரங்கள் - இப்புவியில்
புதிதாய் உண்டு உனக்காக!!

உழைப்பில் கோலேச்சு - நண்பா
உழைப்பில் கோலேச்சு!
உன்னதமான ஊதியம் - இப்புவியில்
உறுதியாய் உண்டு உனக்காக!

முயற்சியில் முண்டியிடு - நண்பா
முயற்சியில் முண்டியிடு!
முத்து முத்தாய் - இப்புவியில்
முன்னேற்றம் உண்டு உனக்காக!

விழிகள் திறந்து பார் - நண்பா
விழிகள் திறந்து பார்!
வீசும் காற்று - இப்புவியில்
வீசும் சாமரம் உனக்காக!

போனது போகட்டும் - நண்பா
புத்துயிர் பெற்றுவிடு!
பாதைகள் ஆயிரம் - இப்புவியில்
புதிய பயணம் தொடங்கிவிடு!

தகதகக்கும் தங்கத்தை கூட - நண்பா
தேயத்தறிந்த பின் தான் தரம்பிரிப்பர்!
தயங்காமல் முன்னேறு - இப்புவியில்
தக்க இடம் உனக்குண்டு!

நெஞ்சுக்கு வேதனைதான் - நண்பா
நேற்றைய தோல்விகள்!
நெஞ்சுநிமிர்த்தி போராடு - இப்புவியில்
நாளைய வெற்றி உனக்காக!

இன்றைய பொழுதில்  இருக்கலாம் - நண்பா
மின்னலும் இடிகளும்!
உறுதியுடன் போராடு  - இப்புவியில்
நாளைய மழைத்துளிகள் உனக்காக!

வாழக் கற்றுக்கொள்  - நண்பா
வந்து வென்றவர் ஆயிரம் பேர்
வந்ததுயர் துரத்திவிட்டு - இப்புவியில்
வாழக்கற்றுக்கொள்!

தொடர்ந்து போராடு - நண்பா
தொலைத்துவிடு உன் முயலாமையை!
தொட்டுவிடலாம் - இப்புவியில்
தொடுவானம் கூட
உன் விரலின் நுனியில்!


அன்பன்

மகேந்திரன்

Wednesday 18 May 2011

தாலாட்டு!!!




கண்ணான கண்ணே
கண்டெடுத்த நல்லமுத்தே!
கண்ணிமையாய்  நானிருக்கேன்
கண்ணுறங்கு கண்ணுறங்கு!

செங்கரும்பு தித்திப்பே
செஞ்சாந்து முகத்தழகே!
சீராக நீ தூங்கு
சித்தகத்தி பூச்சரமே!

கொத்துகொத்தா கொல்லையிலே
பூத்திருக்கு பிச்சிப்பூவு
பிச்சிப்பூவு வாசத்தோட
பிஞ்சுமணி கண்ணுறங்கு!

மானாடும் தோப்பிருக்கு
தோப்பிலொரு குயிலிருக்கு
குயில்கூவும் ஓசையில
குன்னிமுத்தே கண்ணுறங்கு!

மாமதுரை மல்லிகப்பூ
மணக்குதையா உன்மேல
மாமாங்கம் ஆடிவிட்டு
மலர்விழியே கண்ணுறங்கு!

பரணி ஆத்துதண்ணி
பாய்ந்து அங்கே ஓடுதைய்யா
பச்சபுள்ள உன்னைக்கண்டா
பாரமெல்லாம் போச்சுதைய்யா!

அவலோடு நெய்சேர்த்து
ஆவாரம் பூவுனக்கு
அள்ளியள்ளி நாந்தாரேன்
அல்லிக்கொடி கண்ணுறங்கு!

யாரடிச்சும் அழுவாதே
தாமரைக் கண்ணழகே
யாரிருக்கா உனையடிக்க
தைரியமா கண்ணுறங்கு!

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
இந்த நேரம் போச்சுதுன்னா
எப்போதும் கிடைக்காதைய்யா!

சமுதாய சந்தையிலே
சதிராட வேண்டுமைய்யா!
கண்ணான  கண்மணியே
இப்போதே தூங்கிக்கைய்யா!

பின்னால வருங்காலம்
விசித்திரமா இருக்குமைய்யா
இந்நேரம் தூங்கிவிட்டு
அந்நேரம் முழிச்சிக்கோய்யா!


அன்பன்

மகேந்திரன்

Monday 16 May 2011

விடையற்ற வினாக்கள்??!!!




மனம் திறக்கிறேன் - உறுத்தலுடன்
என் மனதை ஊனமாக்கும்
விளங்காத வினாக்களை
விளக்கிக்கொள்ள மனம் திறக்கிறேன்!!

ஆயிரம் ஆயிரம் வினாக்கள்
அழகான விடைகள் தேடி
கேணியில் ஊறும் நீராய்
கொட்டிக் கிடக்கிறது!

தினமும்  நாளேடு படிக்கும்போது
தகாத செய்திகளை காண்கையில்
குற்றம் புரியும் இவர்களுக்கு
பகுத்தறியும் தன்மை இல்லையா? - என்று!

தவமிருந்து உயிர்கொடுத்து பெற்றெடுத்து
தரணியில் தன்னிச்சையாய் செயல்படவைத்த - தாயை
முதுமையில் காப்பகம் அனுப்புகையில்
மனசாட்சி மரத்து விட்டதோ?? - என்று!

ஓர் வயிற்றில் உருவான உயிர்கள்
நிலையில்லா  நிலத்திற்காய் நிதர்சனமின்றி
சண்டையிடுகையில் - உன்னதமான
உறவுகளுக்கு உயிர்மை இல்லையா??? - என்று!

ஈட்டியது காணாமல் இன்றைய பொழுதை
கொஞ்சமும் மிச்சமில்லாமல் விரட்டும் உழைப்பாளரை
காண்கையில் - கண்மறைத்து  வித்தைகாட்டும்
கறுப்புப் பணங்களை மீட்ட வழியில்லையா?? - என்று!

ஊனுருக்கி உயிர்கொடுத்து ஓய்வில்லாமால்
உழைத்து சேர்த்த பொருளுக்கு - கட்டிய வரியை
கூச்சமின்றி கூட்டத்தோடு கொள்ளையடிக்கும்
ஊழலுக்கு மரணம் ஏகுமா?? - என்று!

பிறரின் உணர்வுகளை மதியாமல் - அவரின்
தன்னிலை தெரியாமல் சுயநலம் போற்றி
புற்றீசலாய் பெருகியிருக்கும்
கையூட்டிற்கு காலன் இல்லையோ?? - என்று!

இச்சமுதாயம் நமக்காகவா? - இல்லை
நாம் இந்த சமுதாயத்துக்காகவா?

விடையற்ற வினாக்களுக்கு
விடை கிடைப்பதெப்போது???!!!

அன்பன்

மகேந்திரன்

Friday 13 May 2011

ஆலோலம் பாடும் கிளி !!










தன்னானே நானேனன்னே
தன நன்னே நானேனன்னே
தன்னானே நானேனன்னே
தன நன்னே நானேனன்னே!

ஆலோலம் பாடும் கிளி
ஆவாரம் பூச்சூடி
ஆத்தங்கர மரத்தில்தான்
அமர்ந்திருக்கும் சின்னக்கிளி!

பஞ்சவர்ணக் கிளி
பவளமல்லி பூச்சூடி
புன்னைவன தோப்புலதான்
பவுசுகாட்டி நிக்குதடி!

செல்லமொழி பேசும் கிளி
செவ்வரளி பூச்சூடி
செவ்வாழ தோட்டத்துல
செம்மாந்து நிக்குதடி!

கொஞ்சி கொஞ்சி பேசும் கிளி
குண்டுமல்லி பூச்சூடி
கொய்யாத் தோப்புலதான்
குலவையிட்டு பாடுதடி!

கோவைப்பழம் தின்னுபுட்டு
குதுகலமா திரிந்த கிளி
கூண்டுலதான் கிடக்கிறியே
குத்தம் செஞ்சதார் கிளியே!

கூனி குறுகாதே
குத்தம் நீயும் செய்யவில்ல
எந்தாயி மீனாட்சி
காத்திடுவா கலங்காத!

ஏ மக்கா! செல்ல மக்கா!
எங்க ஊரு தங்க மக்கா!
யாரிந்த பாவம்  செஞ்சா
மனம் தெறந்து சொல்லு மக்கா!

பாங்கான பச்ச கிளி
பாவம் என்ன செஞ்சுதைய்யா
பறக்கட்டும் வண்ண கிளி
கூண்டிலிட வேணாய்யா!!


அன்பன்

மகேந்திரன்

Wednesday 11 May 2011

மனம் தான் இல்லை!




என்னுருவம் நான் காண்கையில்
என முகம் கூட மாறுவேடமிட்டு
மறைந்து கொண்டது!

சிந்தனையில் சிக்காத
சின்ன சின்ன காரணங்களை
வலை வீசி தேடுகிறது!

பாங்காக இருக்கும் உடல்நிலையை
பாழ்பட்டு போனதாக
பொய்யுரைக்கச் சொல்கிறது!

பாவம் போல் முகத்தை வைத்தால்
பரிதாபம் வருமென
பாழும் மனது சொல்கிறது!

நேற்றுவரை பார்த்த நாட்காட்டியை
பிழையேதும் இருக்குமென
திரும்பப் பார்க்கச் சொல்கிறது!

போகுமிடத்தில் நல்ல உணவிருந்தும்
வாய்க்கு விளங்கவில்லை என
உண்மை மறைக்கிறது!

தேடித் தேடி நான் சொன்ன
காரணமெல்லாம் ஏனென்று
புரியவில்லை - புதிராயிருக்கிறது!

என நெஞ்சம் பித்தானதா? - இல்லை
பொய்யுரைக்கும் விஷமானதா? - இல்லை
என மனதில் ஏன் இந்த களியாட்டம்?!!

நிதர்சனமாய்  யோசித்தேன்!
நிச்சயமாக சொல்கிறேன்!
வேறொன்றும் இல்லை?!

உன்னை விட்டு தூரம் செல்ல
மனம் தான் இல்லை -  ஆம்
என அன்பைப்  பிரிய
மனம் தான் இல்லை!!!


அன்பன்

மகேந்திரன்

Tuesday 10 May 2011

கூர்முனை ஏந்துவோம்!




கண்கள் குளிர்ந்தது!
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை பட்டு விரித்தது போல்
பகட்டுத் தோட்டங்கள்!

நீர்க்குடங்கள் ஏந்திக்கொண்டு
நெடுதூரம் போன- நம் வீட்டு பெண்கள்
நிம்மதி பெருமூச்சு விட்டனர்
நிர்மலமாய்!

அண்ணாந்து வானத்தை
பார்த்தே தன்
கழுத்தெலும்பு தேய்ந்துபோன
விவசாயிகள்- அகம் மகிழ
கிணற்று நீரை எட்டி இறைக்க!

ஆற்றின் மணல் மட்டுமே
தேங்கி நின்ற காலம் போய்
நீரின் கரைமீறிய
ஆவேசம் கண்டேன்!

மண்ணில் வீழ்ந்து வடிகாலின்றி
கடலில் கலந்த பொன்னான
மழைத்துளிகள் - இன்று
மதகு கட்டி எம் இல்லத்தில் சேகரிப்பாய்!

தொலைநோக்கு பார்வையுடன்
எம்மை ஆள்பவர்கள் - இன்று
நதிநீர் இணைப்பை நன்கு
நிறைவேற்றிருக்கக் கண்டேன்!

.............................................
..................................

விழித்தெழுந்தேன் - நான்
விழுப்புண் பட்டு
கோடி கொட்டினாலும் கிட்டாத
கனவு கண்டிருந்தேன்!!!

கனவு நனவாகுமா? - மேலும்
நீர்நிலைத்தேக்கங்கள் உருவாகுமா?
புவிவெப்பத்தின் பாதிப்பால்
வருங்கால சந்ததிகள் - அருந்த
நீர் இல்லாமல் போய்விடுமோ?

செய்வதென்னவென தெரியவில்லை!!
எம் முப்பாட்டனிலிருந்து கதறி வரும்
இச்செய்தி எம்மை ஆள்பவர்களுக்கு
எட்டவில்லையோ?!!!!

எட்டவேண்டும்! நண்பர்காள்!
எட்டவேண்டும்!!

நம் ஆயுதமாம்
கூர்முனை போன்ற
எழுதுகோல் கொண்டு!
எடுத்துரைப்போம்!
நம் நாட்டை அரசாளுபவர்களின்
செவியேறும் வரை! 


அன்பன்

ப.மகேந்திரன்

Monday 9 May 2011

கருவேலங் காற்று!




கருவேலங் காற்று வந்து
கன்னத்தை வருடுதப்பா!

கத்தாழை வாசத்தை
காதோடு இசைக்குதப்பா!

கம்மாக்கரை மரங்களெல்லாம்
காதில் கதை பேசுதப்பா!

படபடக்கும் பட்டாம்பூச்சி
பவுசு காட்டி சுத்துதப்பா!

வடிவான வரப்பெல்லாம்
வந்து நிற்க சொல்லுதப்பா!

கொய்யாமர தோப்பெல்லாம்
கொஞ்சி கதை பேசுதப்பா!

ஆலமரத்து விழுது கூட
தாலாட்டு பாடுதப்பா!

சுற்றித் தெரியும் இடமெல்லாம்
சூனியமாய் தோணுதப்பா!

கிராமத்து வாழ்க்கையையே
கிறுக்குமனம் நினைக்குதப்பா!



அன்பன்

ப.மகேந்திரன்

Sunday 8 May 2011

தூளியிடு! தோழா!



தூளியிடு! தோழா!
தூளியிடு!
துயிலா துர்குணங்களை!
தூக்கியது போதும்!
துண்டு துண்டாக்கி!
தூளியிடு!


சொன்ன பேச்சு கேட்காமல்!
சோறு மட்டும் தின்றுவிட்டு!
சோளக்கொல்லை- பொம்மையென
சோடித்து உன்னை வைத்த
சோம்பலை நீ - தூளியிடு!


முன்னேற்றத்தை
முண்டியிட்டு தடுத்து
மூலையில் உன்னை
முடக்கிப்போடும் - உன்
முயலாமையை நீ - தூளியிடு!


பொங்கி வரும் வெள்ளமாய்
பொத்தி வச்ச வெல்லமான
பொன்போன்ற வாழ்வை
பொசுக்கிப்போடும் - உன்
பொறாமையை நீ - தூளியிடு!


தங்கத் தோழா! உன்
தடையில்லா ஓட்டத்திற்கு
தடா சட்டம் போட்டு
தவிடுபொடியாக்கும் - உன்
தாழ்வுமனப்பான்மையை நீ- தூளியிடு


திண்ணிய தோள் நிமிர்த்து!
திரவியமாம் உன் அறிவை
திசை எட்டும் பரப்பு!
தளர்ச்சி வேண்டாம் - உன்
தயக்கத்தை நீ - தூளியிடு!


எண்ணிப்பார் தோழா!
ஏராளம் உன்னிடம்
ஏற்றமிகு நண்பனே!
ஏக்கம் கொள்ளாதே!
ஏனைய உன் துர்குணங்களை
இப்போதே நீ - தூளியிடு!


வீறு கொள் சிங்கமே!
வீழ்ந்துவிடாதே - இந்த
வீணாய்ப்போன குணங்களிடம்!
விட்டிப்பிடிக்காதே
விரட்டி விரட்டி ஓடவிடு!


தூக்கத்தில் துவளட்டும் - உன்
துர்குணமெல்லாம்
வீசி வீசி தூளியாட்டு!
விழித்துக்கொள் நண்பா!
அவையெல்லாம்
தூளியிலே தூங்கியபின்!!!


நம்பிக்கை துணை கொள்!
முயற்சியை கைவிடாதே!
முன்னேறிச்செல்!
துர்குணங்கள் வரும்போது
தூளியிட்டு ஆட்டிவிடு!!!!!



அன்பன்

ப.மகேந்திரன்

Saturday 7 May 2011

நிமிடங்கள் தேடி!!



கல்லில் செதுக்கிய  சிற்பங்கள் கோடி - அதை
கவியேற்றத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!

சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி - அதை
சொல்லத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!!

அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி - அதை
அள்ளி  முடிக்கும்  நிமிடங்கள் தேடி!!

அடக்கி வைத்திருக்கும் எண்ணங்கள் கோடி - அதை
அவையேற்றத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!

உள்ள ஊஞ்சலில் ஆடிடும் நினைவுகள் கோடி - அதை
உயிர்ப்பிக்கத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!!

மந்தகாச மணம் பரப்பிடும் மலர்கள்  கோடி - அதில்
மயங்கத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!

புள்ளி போடாக் கோலங்கள் வரைந்தது கோடி - அதை
புரிந்துகொள்ள நினைக்கும் நிமிடங்கள் தேடி!!

தெவிட்டாத இனிய இன்பங்கள்  கோடி - அதை
தேடி அடையும்  நிமிடங்கள் தேடி!!

சுற்றி நிற்கும் சொந்தங்கள் கோடி - அங்கே
சுத்தமான அன்பின் நிமிடங்கள் தேடி!!!

நிகழ்கால ஓட்டத்தின் மணித்துளிகள் கோடி - அதில்
நிம்மதியான எதிர்கால  நிமிடங்கள் தேடி!!



அன்பன்

ப.மகேந்திரன்

Friday 6 May 2011

மௌனித்திருக்கக் கற்றுக்கொண்டேன்!!!






கற்றுக்கொண்டேன் - நான்
எண்ணங்களின் போக்கில் சன்னமாய்
என்  மனம் சென்ற போது
கற்றுக்கொண்டேன் - நான்!

சுற்றுப்புற சூனியத்தில்
என் தன்மையை இழக்கவிருந்த நேரத்தில்
கற்றுக்கொண்டேன் - நான்!

விருப்பமில்லா நிகழ்வுகளை வீறுகொண்டு
வினவி  வீணாய் போனபோது
கற்றுக்கொண்டேன் - நான்!

வார்த்தைகள் வீரியமேரி - அங்கே
வழக்குகள் கலகமாகும் போது
கற்றுக்கொண்டேன் - நான்!

சம்பவங்களை சாதகமாக்கி உறவுகளின்
உன்னத பிணைப்பை உடைப்பவர்களைக் கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!

தம்மை உயர்த்த  பிறரை வீழ்த்தி - அவர்
சமாதியில் கோபுரம் கட்டுபவர்களைக் கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!

முகத்தின் முன் துதி பாடி - பின்னால்
அவதூறு பேசுபவரை கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!

பெண்மையை உயர்த்தி பேசிவிட்டு - பெண்ணை
விளம்பரப் பொருளாக்கியவரை கண்ட போது
கற்றுக்கொண்டேன் - நான்!

வரலாறு படைக்க வந்தவனல்ல நான்
வாழ்க்கையை வாழ வந்தவன்!
சுற்றுப்புற சூனியத்தில் - என்
வாழ்வை தொலைக்க விரும்பவில்லை! - அதனால்
கற்றுக்கொண்டேன் - நான்!

ஆம்! மௌனித்திருக்கக் கற்றுக்கொண்டேன் - நான்
மௌனித்திருக்கக் கற்றுக்கொண்டேன்!!!


அன்பன்

ப.மகேந்திரன்

Wednesday 4 May 2011

துன்பத்தை நேசி!

துன்பத்தை நேசி
நண்பா
துன்பத்தை நேசி!


துவண்டு துயில்வதை விட்டு
தூவான வீதிக்கு
துள்ளி வா வெளியே!
வெள்ளிப்பந்து நிலவு கூட
தேய்ந்துதான் வளரும்!
இருளை நேசித்துப்பார்
வெளிச்சம் உன்னைத் தேடிவரும்!
வெயிலை நேசித்துப்பார்
நிழல் உனக்கு குடையாகும்!
மூச்சுவாங்க மேட்டில் ஏறிப்பார்
இறக்கம் உன்னை இளைப்பாற்றும்!
விழித்தவுடன் தேடாதே
வீழ்ந்து எழுந்தால் தான்
வெற்றி உனக்கு!


இன்பம் வெகுதூரமில்லை
நண்பா
இதோ தொடும் தொலைவில் தான்!!
அதற்கு முன்
துன்பத்தை நேசி
நண்பா
துன்பத்தை நேசி!!


அன்பன்

ப.மகேந்திரன்

Monday 2 May 2011

சிறப்பு!

மலரின் சிறப்பு - மனம் 
மயக்கும் மந்தகாச வாசத்தில்!

காற்றின் சிறப்பு - உவகையூட்டும்  
தென்றல் பருவத்தில்!

கடலின் சிறப்பு - ஆழிப்பேரலையோடு
அளவில்லா ஆழத்தில்!

நிலவின் சிறப்பு - தண்மையான
கதிர் பாய்ச்சும் முழுமையில்!

புவியின் சிறப்பு - ஓய்வறியா
உன்னதமான உழைப்பில்!

நட்பின் சிறப்பு - நன்னெறியோடு
நலமோங்கும்  நம்பிக்கையில்!

பண்பில் சிறப்பு - போற்றுதலின்
பொன்னான பணிவில்!

மனிதனின் சிறப்பு - சுயநலமின்றி
பண்பு சிதையாமல் பகுத்தறிவோடு
பிறரை இகழா - புறம் பேசா
போற்றத்தகுந்த குணத்தில்!


மனிதனாக இருப்போம்!
மனிதத்தின் சிறப்பு காப்போம்!


அன்பன்

ப.மகேந்திரன்