Powered By Blogger

Monday 15 July 2013

வானரமோ நெஞ்சம்!!







லைபோட்டு தேடினாலும் 
வகையாக சிக்கவில்லை 
வாய் பூட்டு போட்டாலும்
வார்த்தையொன்றும் குறையவில்லை 
வால் சுருட்டி நின்றாலும் 
வான்மீது ஏறி நிற்கும் 
வானரமோ நெஞ்சம்!!


மூச்சிறைக்க ஓடிவந்து 
மலைத்தேன் தேடுகையில் 
மலைச்சரிவில் வளர்ந்திருந்த 
மரப்பொந்து தேனழகில் 
மனம் மயங்கிப் போகச்செய்து 
மதியில் சதியேற்றும் 
மந்திதானோ நெஞ்சம்!!
 

 


ண்ணெதிரே தோன்றியதில் 
களித்து நின்றாலும் 
காததூரம் சிரித்திருக்கும் 
கானல்நீரின் அழகினிலே 
காதல் மலர்ந்திட 
கணத்தில் நிறம் மாறும் 
கடுவன் தானோ நெஞ்சம்!!


குற்றமென தெரிந்தும்
குறைவில்லா நிறைவை 
குவலயத்தில் செய்ததுபோல் 
குதூகலித்து மற்றுமோர் 
குற்றம் இயற்றி - சுற்றத்தினை  
குத்திக் கிழிக்கும் 
குரங்கு தானோ நெஞ்சம்!!
 
 
சிதைந்து மட்கிப்போன 
சிதிலமான நினைவுகளை 
சித்திரமென நனவாக்கி 
சிறகு விரித்து பறக்கும் 
சிந்துமணி நிகழ்விதனை 
சிதைத்து மௌனமாகும் 
சிறுகுணத்தை என் சொல்ல?!!


ச்சிக்கு சென்றபின்னும்
உவகை கொள்ளாது 
உப்பரிகை ஏறியபின்னும் 
உற்றார்க்கு உதவாது - இனியும் 
உயரம் உண்டாவென 
உத்தரம் பிடித்தேறத் துடிக்கும் 
உன்மத்தம் என் சொல்ல?!!!
 
 
ட்டிப் பார்த்தால் 
எண்ணிலா ஆசைகளே 
எத்திசை நோக்கிடினும் 
ஏலக்காய் வாசனையே
ஏங்கிடும் மனமது 
ஏகாந்தம் தேடி 
எத்தனித்து நிற்பது ஏன்?!!

ல்லையென்று சொல்லிடத்தான் 
இதயமது விளம்பினாலும் 
இயல்பான மனமதுவோ
இயைபுடன் போராடியதே!
இலைமறை காயிங்கு 
இன்றில்லை என்றாலும் - என்றேனும் 
இயல்முகம் காட்டிடுமோ?!!
 
 
பொன்னென்று சொன்னவுடன் 
பொலிவோடு மின்னிடுமோ?
பொறித்து வைத்ததெல்லாம்
பொதுமறை ஆகிடுமோ?
போதுமென்ற மனமிருந்தால்
போகுமிடம் சுகமாகுமென
பொதுச்சட்டமும் வேண்டுமோ?!!

 
அன்பன்
மகேந்திரன்