Powered By Blogger

Monday 4 November 2013

எத்திசை நகர்ந்திடினும்!!!!







வசம் தரித்து 
படைகள் பலகொண்டு 
வெற்றிவாகை சூடிய 
மற்போர் வேந்தனல்ல!
ஆயினும் எனைச்சுற்றி - ஏன் 
சூழ்ந்தது போர்மேகம்?!!



நிகழின் நிகழ்வுகளை 
நெம்புகோல் கொண்டு 
நொடிதோறும் கடத்தும் 
சாமானியன் நான்!
ஆயினும் எனக்குமேல் - ஏன் 
படர்ந்தது சுகபோகம்?!!



குருதியின் நிறம்கண்டால் 
உறுதி நிலைகுலைந்து 
உதிரம் கறுத்துப்போகும் 
வன்மம் மறுப்பவன் நான்!
ஆயினும் எனக்குமுன்  - ஏன் 
விரிந்தது கொலைக்களம்?!!


னக்கான உரிமையும் 
எனக்கான மரியாதையும் 
எதேச்சையாக விரும்பும் 
இயல்பான மனிதன் நான்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
வியந்தது பூகோளம்?!!
கையில் கிடைத்ததை 
முழுதும் பையில் போடாது 
உள்ளம் நிறைந்தோருக்கு 
அணிலாய் உதவி நின்றேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
ஊதாரி என்றதொரு சமூகம்?!!


ரிதான் என்றுகேட்டு 
கைக்கு வந்ததெல்லாம் 
சபைக்குச் செல்லாமல்
குகைக்குள் பூட்டிவைத்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கஞ்சன் என்றதொரு சமூகம்?!!
செவிவழி நுகர்ந்ததை 
அறிவுவழி உணர்ந்திட 
வினாக்களை அம்புகளாய் 
விடாது தொடுத்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கர்வன் என்றதொரு சமூகம்?!!


துவும் சரிதானென 
வாய்மொழிந்த வினாக்களை 
இருதயத்தில் பூட்டிவைத்து 
அப்படியே ஏற்றுக்கொண்டேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
மூடன் என்றதொரு சமூகம்?!!
துதான் நடந்தது
இப்படித்தான் செய்தேன் என
உள்ளதை உள்ளபடி
அப்படியே கூறிவந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பிழைக்கத் தெரியாதவன் என்றனர்?!!

டந்ததை இல்லையெனவும்
நிகழாததை ஆம் எனவும்
கற்பனைகள் பல புகுத்தி
சொற்பகாலம் கழித்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பெரும் பொய்யன் என்றனர்?!!
றிவின் செறிவினை
ஆக்க வழியில் செலுத்திட
சற்றே நிமிர்ந்து
மிடுக்குடன் நடந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்?
அகம்கொண்டோன் என்றனர்?!!

ருக்கும் அறிவினை
இருளில் புதைத்துவைத்து
சற்றே வளைந்து
நெகிழ்வுடன் வாழ்ந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
அடிவருடி என்றனர்?!!
லமோ இடமோ
எப்புறம் திரும்பிடினும்
முன்னே பின்னே
எத்திசை நகர்ந்திடினும்!
எனக்கான அசைவுகளுக்கு - இங்கே
பெயர்கள் பல உண்டு!!


லங்கி நின்றேன்
களப்பெயர்கள் கண்டு
குழம்பி நின்றேன்
குற்றம் செய்தவன் போல்!
எப்படித்தான் இருப்பது - என
இயல்நிலை மறந்துபோனேன்!!


டர்ந்து படர்ந்த ஆலமரம் கூட
விழுதுகள் இருந்தும்
ஆணிவேர் ஒன்றே துணையென
அகன்று நிற்கக் கண்டேன்!
எப்பெயர் கொண்டிடினும்
இயற்பெயர் வழுவாதே - என
உணர்த்துவதாய் தோன்றியது
உவகை கொண்டேன்!!!



அன்பன்
மகேந்திரன்