Powered By Blogger

Monday 28 November 2011

அரிதார அவதாரம்!!!!


கண்ணைப்பறிக்கும் வண்ணத்தாலே
கொண்டிபோட்டு இழுக்கிறாயே!
வண்ணத்திலே உனக்கிணையா
யாருமில்ல என்றுசொல்லி
சந்தைக்கு வந்தபின்னும்
பம்மாத்து காட்டுறியே!!

செஞ்சாந்து நிறத்தைப்போல
செம்பட்டு உடுத்திவந்து
சீமைக்கு வந்ததுபோல்
மந்தைக்கு நடுவிலே
மந்தாரக் கொண்டையோட  
மஞ்சம்போட்டு மயக்குறியே!!






சிலுக்குப் பைக்குள்ளே
சில்லறைய போட்டுக்கிட்டு
சித்தார நடைபோட்டு
சின்னமனூர் தேர் போல
குலுக்கிநடை போட்டுவந்து
கிளுக்குன்னு சிரிக்கிறியே!!

பார்த்ததுமே மதிமயக்கும்
ரம்பைபோல இருக்குறியே!
சலசலன்னு மனமயக்கும்
வெள்ளிகொலுசு ஓசையெல்லாம்
தள்ளிபோக சொல்லிவிட்டு
எள்ளிநகை ஆடுறியே!!




பொண்ணுபார்க்க போகும்போது
சிவத்தபொண்ணு வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்பதுபோல!
வற்றல் வாங்க போனாலும்
வற்றல்பொடி வாங்க போனாலும்!
சிவப்புநிறத்தில் வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்கிறோமே!!

சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
போக்கத்தவன் எவனோ
உன்காதில் சொல்லிவைக்க!
நிறம்நாடி நீ போனதும்
கலப்படம் அங்கே
அரிதாரம் போட்டுச்சய்யா!!




சூளையிலே சிதறுண்ட
செங்கல் சிதறல்களை
அள்ளிக் கொண்டுவந்து
அழகாக பொடிசெய்து
வற்றல்பொடியோடு கலந்து
நிறத்துக்கு நிறமாச்சு
எடைக்கு எடையாச்சுன்னு
இயங்கிய இதயமதை
கழற்றி வைத்துவிட்டு
வியாபாரம் செய்தனரே!!


அடுத்து யோசித்தான்
இரக்கமற்ற அரக்கனவன்!
அழிவுப் பாதைக்கு
ஆக்கமிகு அறிவியலை
அவனுக்காய் துணைக்கழைத்தான்!  
வெகுளியாய் வேதியியலும்
மகுடிக்கு மயங்கி
உடன்போக்கு போச்சுதய்யா!!




பழுப்புநிற வற்றலையும்
சிவத்தநிறம் ஆக்கிவிட
"சூடான் ரெட்" எனும் 
சூட்சும சாயப்பொருளை
சூத்திரம் கைகொண்டு
சூசகமாய் கலந்தனரே!! 

"சூடான் ரெட்" கலந்ததுமே
புதுமணப் பெண்ணாக
புதுப்பொலிவு கொண்டதுபோல்
தன்னுள்ளே நஞ்சேற்றி 
தளுக்குநடை சுந்தரியாய்
விற்பனைக்கு வந்ததய்யா !!




செழித்து நிற்கும் வண்ணமெல்லாம்
செயற்கையின்னு தெரியாம
வாங்கிவந்து உணவிலே
பக்குவமா போட்டனரே!
சாப்பிட்டு முடித்ததுமே
வயிற்றெரிச்சல் வாந்தியின்னு
பல நோய்கள் வந்ததுவே
பாழாய்ப்போன கலப்படத்தால்!!




மனசைக் கொஞ்சம் தேத்திகோங்க
நான் சொல்லும் சேதிகேட்டு!
"சூடான் ரெட்" வேதிப்பொருள்
மெல்ல மெல்ல உடல்புகுந்து
ரத்தத்தில் தான் கலந்து
மரபணு மூலக்கூறை
மாற்றி போடுதுன்னு
அறிவியல் சொல்லுதய்யா!!




அதுமட்டும் இல்லையப்பா
இதையும் கேட்டுகோங்க
உயிர்க்கொல்லி நோயான
கல்லீரல் புற்று நோயை
கமுக்கமாக வளர்க்குதுன்னு
காதிலே விழுந்துச்சய்யா!!

வெம்பாடு படுவதெல்லாம்
ஒருசாண் வயித்துக்குதான்!
சாப்பிடும் பொருட்களிலே
வியாபார நோக்கத்திலே
மனசாட்சி இல்லாம
கலப்படம் செய்றவனே!
உன்னைப்போல எல்லோரும்
கலப்படத்த செய்திட்டா
பசியின்னு வரும்போது - நான்
உண்ணும் பொருளெல்லாம்
உயிர்க்கொல்லியா மாறிப்போனா
என்னத்த நானும் திங்க??!
மண்ணைத் தவிர ஒண்ணுமில்ல!!


அன்பன்
மகேந்திரன் 

Wednesday 23 November 2011

அடையாளம் இழந்தது ஏன்??!!






கத்திரிப்பூ பூத்ததுபோல
காலைப்பொழுது பூத்ததய்யா!
அவசரத்தில் பூபாளம்
எட்டுமணிக்கு பாடியபின்!
அலுவலகம் போகையிலே
கண்ணில்பட்ட காட்சியெல்லாம்
கோடிக்கதை சொல்லுதய்யா!!




இரண்டுசக்கர வண்டிமேல
இலந்தைமர துண்டுபோல
ஒய்யாரமா இருந்தவன
கண்கொண்டு பார்பதற்குள்
காத்துபோல பறந்துட்டான்யா!
சித்ததூரம் போனபின்னே
வாகனத்தை நிறுத்திபுட்டு
புகைவண்டி ஒட்டுறான்யா!! 





பத்தடிக்கு பக்கத்தில
பம்மாத்து செய்வதற்கு
பதறி அடிச்சி போவதுபோல
பாய்ஞ்சு இங்கே போவது ஏன்?!
கேள்வியிதை கேட்டுபுட்டா
கேட்டவன் என்னையோ
வேற்றுக்கிரகவாசி போல
மேலும்கீழும் பார்க்குறான்யா!!




ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை!
பக்கத்து வீட்டிலோ
பூட்டியுள்ள வாசக்கதவு
வைகுண்ட வாசத்து
தெற்கு வாசல்போல
ஏகாதசிக்கு திறக்குதய்யா!!




மனம்விட்டு கதைபேச
மக்கமாரு யாருமில்லை!
வேலையும் பார்த்துகிட்டு
விடுகதையும் போட்டிருந்த
காலமெல்லாம் இங்கே
கானல்நீரா போச்சுதய்யா!
கொஞ்சநேரம் கிடைச்சிபுட்டா
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளே
தஞ்சமுன்னு போயிடுறான்யா!!





பதட்டமான வாழ்க்கையூடே
பக்தியின்னு வந்தவுடன்
கோவிலுக்கு போனாலோ
பளிங்கு மண்டபத்தில்
பொருட்காட்சி வைச்சதுபோல்
சாமியத்தான் வைச்சிருக்கான்!
சுண்ணாம்பு கல்லாலும்
களி மண்ணாலும் 
நம்மகூட வாழ்வதுபோல்
செய்வித்த சாமியெல்லாம்
கண்ணாரக் காணவில்லை!!


ரொம்ப நாளாச்சு
ஆளையே பார்க்கலைன்னு
மெத்துக்கு சொல்வாங்க!
இவனைப் பார்த்து
நமக்கென்ன ஆகுமின்னு
மனசுக்குள்ளே மெல்லுவாங்க!
நாலுநாள் அசலூரு
போய்வந்த பின்னால
என்ராசா வந்திட்டான்னு
ஆரத்தி எடுத்ததெல்லாம்
கற்பூரம் ஆச்சுதய்யா!!




பொதுநலமின்னு  சொல்லி
சுயநல போர்வைபோட்டு
நீதிமன்ற வாசலிலே
முட்டிக்கொண்டு நிற்பதை
நான்காணும் போதெல்லாம்
எங்கவூரு மந்தையிலே
ஆட்டுக்கிடா சண்டைய
குத்தவைச்சு உட்கார்ந்து
பார்த்ததெல்லாம் மனசுக்குள்ள
படமாக ஓடுதய்யா!!




ஷாப்பிங் போகப்போறேன்
பிஸா வாங்கி சாப்பிட்டுட்டு
டிஸ்கொதே ஆடப்போறேன்னு
ஆட்டுக்கூட்டம் போல
அரைகுறை ஆடையிலே
சாரையாக போவதை
நான்பார்த்து நோகையிலே!!




புத்தாடை உடுத்திக்கொண்டு
மேளச்சத்தம் கேட்டதுமே
சப்பர பவனியங்கே
புறப்படப் போகுதுன்னு
ஒத்தையடி பாதையிலே
ஊரெல்லாம் ஒன்னுசேர்ந்து
ஊர்வலமா போனதெல்லாம்
பாவிப்பய மனசுக்குள்ள
ஊஞ்சலாடி நிற்குதய்யா!!




நாகரீகமின்னு இதை
நாசூக்காக சொல்லிபுட்டு!
தலைமுறை தலைமுறையா
புழங்கிவந்த பழக்கத்தை
பாழாக்கி போட்டுபுட்டு!
கலாச்சார பெருமையெல்லாம்
காற்றோடு பறக்கவிட்டு!
சுயமிழந்து நிற்கிறாயே
உன் தலைமுறையை
இன்றும் காட்டிநிற்கும் - அந்த
அடையாளக் குறியை - நீ
இழந்தது ஏன்??!!


அன்பன்
மகேந்திரன்

Thursday 17 November 2011

மழலையாய் இருத்தல் வேண்டும்!! (தொடர் பதிவு)






குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர் வண்டி போல  வெகு அருமையாக சென்றுகொண்டிருக்கும் இத் தொடர் பதிவை என்னை மதித்து எழுத அழைத்த மகிழம்பூக்களால் சரம் தொடுக்கும் அன்பு சகோதரி பேராசிரியை சாகம்பரிக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். என்னால் இயன்ற அளவு இப்பதிவை சிறப்பிக்க முயற்சி செய்கிறேன்.

மழலை எனும் சொல்லை சொல்கையிலே உச்சரிப்பின் குழைவு நம்மை ஏகாந்தம் கொள்ளச் செய்யும். மழலை எனும் அந்த குழந்தைப்பருவத்தில் தான் எத்தனை பருவங்கள். அத்தனை பருவங்களுக்கும் தனிப்பட்ட குணங்களும் எவ்வளவு அற்புதமாய் படைக்கப் பட்டு இருக்கின்றன.
பிறந்த குழந்தை அழுகை எனும் மெய்ப்பாட்டை அடுத்து காண்பிக்கும் அத்தனை மெய்ப்பாடுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
உதாரணமாக மருட்கை எனும் வியப்பு, குழந்தை வியப்பு கொள்கையில் அந்த விழிகளை காண வேண்டுமே!! யப்பப்பா..
கோழிக்குண்டு விழிகளை உருட்டி உருட்டி தம்மை சுற்றி நடக்கும் செயல்களை வியப்புடன் காணும் பொழுது, வழிந்தோடும் அந்த அழகை காண கோடி கண்கள் இருந்தாலும் போதாது.

எந்தவித எதிர்வினையும் காட்டாது நடக்கின்ற செயல்களுக்கு ஏற்ப தம் குணங்களை காட்டும் இக்குழந்தைகள் தானே வளர்ந்து வந்து தீயவைகளையும் நன்மைகளையும் கலந்து செய்கின்றார்கள். யார் இவர்களை வழி நடத்துகிறார்கள்?!
இழிசெயல் அறியா இவர்களின் மனதில் வினையை விதைத்தவர்கள் யார்?!

மழலை முதல் அவர்களின் மனதில் நல்லவைகளையே (தம் குடும்பத்திற்கு தேவையான) விதைக்க முயற்சி எடுக்கும் தாயும் தந்தையும் காரணமா?
சிறுகச் சிறுக பொல்லாதவைகளை பதியம் போடும் இந்த பொல்லாத சமுதாயம் காரணமா?!
எல்லா குழந்தைகளும் மழலைப் பருவத்தில் நல்லவர்களாகத்தானே இருக்கிறார்கள். வளர்ந்து வருகையில் சிலர் ஏன் மாற்றமடைகிரார்கள்?!
இதற்கான விதை எங்கே விதைக்கப்படுகிறது?!







ஏ! மழலையே!
உன் அழகு கண்டு
விழிவிரிய வியந்திருந்தேன்!
உன் பருவங்களின்
வெவ்வேறு குணங்களை
ரசித்து உவந்திருந்தேன்! 

தத்தக்க புத்தாக்க என
நீ நடையும் போட்டு
கைதட்டி சப்பாணி கொட்டுகையில்
என்னையே மறந்திருந்தேன்!
வாய்திறந்து வெள்ளருவியாய்
சொல்லால் கவிபாடுகையில்
மெய்மறந்து சிலிர்த்திருந்தேன்!

வளர்ந்து வா மழலையே!
வழிதோறும் விரியும்
இன்னல்கள் ஆயிரம்
கொடும் நாகங்கள் ஆயிரம்!
கடந்து வா மழலையே!
நீ வளர்ந்த வேளையிலே
உன்னறிவு வியாபித்திருக்கவேண்டும்!
உன் குணமோ
அதே மழலையாய்
இருத்தல் வேண்டும்!!

கண்ணில் காணும் குழந்தைகளின் நற்குணங்களுக்கு நாம் வித்திடுவோம். இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.

கடந்த சில தினங்களாக நம் நண்பர் நிறைய பேர் மழலை பற்றிய தொடர்பதிவு எழுதக் கண்டேன். ஆகையால் யாரை எழுத அழைப்பது என்ற எண்ணத்தைக் கைவிடுத்து, இதை யார் தொடர்ந்து எழுதினாலும் நான் வரவேற்கிறேன்.



அன்பன்
மகேந்திரன்

Tuesday 15 November 2011

இரண்டாம் கருவறை!!






அரைக்கால் சட்டையுடன்
புதியதை கண்டிடவே
மனதினுள் பயமிருந்தும்
காத்திருக்கும் வியப்புகளுக்காய்
விழிகளில் கனவுகளுடன்
உள்ளே பிரவேசித்தேன்!!

குடிசைப் பள்ளியில்
ஆரம்பம் கற்றுவிட்டு
மேல்நிலைக் கல்விக்காய்
கோபுரம் கண்டு
கண்கள் விரிய
ஆலயம் புகுவதுபோல்
உள்ளே பிரவேசித்தேன்!!




மருண்ட விழியுடன்
பிரமிப்பு அகலாது
வகுப்பறை தெரியாது
தவித்திருந்த எனை
தம் சுட்டுவிரல் கொடுத்து
அழைத்துச் சென்ற - அந்த
ஆளுயர ஆசானை
அண்ணாந்து பார்த்திருந்தேன் - அவர்
இன்னும் என் விழிகளில்!!

பாடநூல் படிப்பினை
கற்றுத்தந்த பாங்கினை
ஒற்றைச் சொல்லினால்
சொல்லிவிட முடியாது
கல்விப் பெருங்கடலினின்று 
சில முகவைகள் எனக்களித்த
பெருமைமிகு பேரவை!!




நுழைந்த நாள்முதல்
நூலொன்றை கொடுத்து
ஏறிவா மாணவனே! என
ஏற்றமிகு பண்புகளை
நாள்தோறும் சமைத்துத்தந்த
நாலந்தா ஓவியம்!!

சகமாணவர் முன்னும்
சரளமாய் பேசாத எனை
உலகம் இங்கே உனக்காக
ஓங்கிக் குரலெழுப்பு என
அக்கினிக் குஞ்சாய் எனை
அடைகாத்து பொறித்த
அடைக்கல ஆலயம்!! 





தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத்தில்
செந்தேக்கு போல
உறுதியாய் நிற்கவும்
பாலபாடம் கற்பித்த
பல்கலைக் கழகம்!!

வெங்கொடிய  செந்நாகம்
விடமேறிய நாவைப்போல்
தீயவைகள் நெஞ்சில்
தலைதூக்க எத்தனிக்கையில்
தலையில் கொட்டி - அதை
முளையில் வேரறுத்த
முத்தமிழ் மன்றம்!!




எனக்குத் தெரியாமல்
மட்கி புதையுண்டு
என்னுள்ளிருந்த இயைபுகளை
இன்னதென இனம்கண்டு
இது உனக்குத் தகுமென
இனிதே உரைத்திட்ட
இன்னுமொரு தாய் நீ!!

தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழு ஆண்டுகள் எனை
மீண்டும் கருவைத்து
நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே!!



அன்பன்
மகேந்திரன் 

Friday 11 November 2011

ஆளுமைக்கு அழகே!!






வரலாற்று நாயகர்கள்
சரித்திரம் படிக்கையில்
மனதில் ஒட்டிக்கொண்ட
அழுத்தமான வார்த்தை
ஆளுமை என்பது!

உச்சரிக்கும் இச்சொல்லின்
உள்ளூறும் கம்பீரம்
பச்சை குத்தியதுபோல்
நெஞ்சில் பதிந்தது!!

முடியாண்ட மூவேந்தர்
செறுபுகழை கேட்கையிலே
ஆளுமையின் பொருளுக்கு
பதம்காண முயற்சித்தேன்!!




நல்லபல செயல்களை
நடத்தையிலே காண்பித்து
நாடுபோற்ற அரசாலும்
நற்குணங்களின் கூடலே
ஆளுமை என்பதென
பூந்தமிழ் சொன்னதுவே!!

பலமணம் கொண்ட
பூக்களின் சரம்போல
பலநிற நூல்கொண்டு
நெய்யப்பட்ட ஆடைபோல
நற்குணம் பலகொண்டு
உருவெடுத்த மானிடற்கே
ஆளுமை ஏகிடுமாம்!!




முதற்குணம் என்னவென்று
உற்று நோக்கிடவே
பளிச்சென்று பட்டது
பணிவென்னும் நற்குணமே!

தன்னுரு மறந்து
தன்னிலை ஏதாகினும்
அதை மறந்து
தன்னிகரில்லா பணிவை
தன்னகத்தே கொண்டவன்
ஆளுமையில் சிறந்தவனாம்!!




போகின்ற போக்கில்
செல்ல விடாது
மந்திபோல தாவும்
மனதை கட்டுப்படுத்தி
கடிவாளம் போட்டு
ஒருநிலைப் படுத்துபவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!

மணிமகுடம் சூட்டிவைத்து
இவனால் செழித்திடுவோம்
இவனால் உய்திடுவோம் - என
மனக்கோட்டை கட்டியோரின்
மாநிலத்து மக்களின்
மனநிலை அறிந்து
நற்செயல் ஆற்றுவது
ஆளுமையின் மறுகுணமே!!



தான்கொண்ட கொள்கையில்
உறுதியாக இருந்து
எடுத்த செயலை
அடுத்தநிமிடம் செய்வேனென
அடம் பிடிக்காது
தீர்க்கமாக ஆராய்ந்து
திடமான நம்பிக்கையுடன்
நிதானத்துடன் செயல்படுதல்
ஆளுமையின் ஒர்குணமாம்!!

மன்னவனும் இவனோ
இவனைப் பெற்றிட
என்ன தவம் செய்தோமென
மக்கள் போற்றிட!
பொதுநல வாழ்வில்
சுயநலம் வேரறுத்து
பொது வினையை
தம்வினையாய் தலைமேற்கொண்டு
செங்கோல் ஏற்றுவதே
ஆளுமையின் பொற்குணமாம்!!




குரலில் கம்பீரம்
பிழையற்றுப் பேசுதல்
தகுந்த இடத்தில்
தகுந்த மொழிபேசி
தாய்மொழியை என்றும்
தலைநிமிரச் செய்தல்!
கலங்காதே கண்மணியே - என
வாயாரச் சொல்லிவைத்து
கண்ணுறங்கச் செல்லாது
கண்விழித்து விழிபூத்து
மக்கட் துன்பம் போகும்வரை
காவல் நிற்பவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!

ஆக்கம்தரும் பணிகளை
ஊக்குவிக்கும் தரம்கொண்டு!
குற்றத்தின் கருப்பொருளாய்
சட்டத்தின் முன் நிற்காது
குற்றத்தின் கருவறுக்கும்
நீதியைக் கைக்கொண்டு!!
பொற்காலம் இதுவென
பொன் மன்னவன் இவனென
பூவுலகு புகழ்ந்திட வாழ்ந்திடுதல்
ஆளுமைக்கு அழகே!!



அன்பன்
மகேந்திரன் 

Saturday 5 November 2011

புரிந்திட விழைகிறேன்!!


வாழவந்த வாழ்க்கையது
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையிட்ட இடைவெளியோ?! 
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
இருக்கும் இடைவெளியில்
வாழ்வைப் புரிந்து
வாழும் நாட்கள் எத்தனை?!
புதிராய் அமைந்துவிட்ட
புதின வாழ்க்கையை
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 

 


சட்டென்று கடந்துவிட
அத்தனை எளிமையானதா?!
கட்டிப்போட்டு வைத்துவிடும்
கொடுமை வாய்ந்ததா?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
இடைப்பட்ட காலத்தில்தான் 
எத்தனைப் பருவங்கள்!!
தவழ ஆரம்பித்து 
துவண்டு போகும்வரை 
எத்தனை மாற்றங்கள்!!
புரியாது தவிக்கிறேன் 
புரிந்திட விழைகிறேன்!!
 
 
பருவங்களின் ஊடே 
சொகுசாய் வாழ்ந்திட 
எத்தனிக்கும் உருவங்கள் 
எத்தனை எத்தனை!!
ஏனிந்த போராட்டம்?! 
புரியாது தவிக்கிறேன் 
புரிந்திட விழைகிறேன்!!
 
 
அன்றாட நிலைத்தலுக்கு
திண்டாடும் கோலங்கள் 
எத்தனை எத்தனை!!
ஏனிந்த திண்டாட்டம்?!
கொண்ட வாழ்வு சிறந்திடவா?!
பெற்றபிள்ளை காத்திடவா?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
இடைக்காலம் சிறிதென்றால்!
வாழ்வை வாழ்ந்திடவே
பொழுது போதாதென்றால்!
புலர்ந்திடும் பொழுதினிலே
கண்ணில்படும் குற்றங்கள் ஏன்?!
ஆயிரம் ஆயிரம்
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
குழந்தைத் தொழிலாளர்
பல கண்டேன்!
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
சில கண்டேன்!
மனம் பேதலித்தத!
துளிர்விடும் சிறுபூச்செடியில்
கனல்கங்குகளை வீசியது யார்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
பட்டாம்பூச்சி போல
பாய்ந்து ஓடி
பள்ளிசெல்லும் வயதில்
பாதாளச் சிறையில்
பூட்டியது யார்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
இளம் பிஞ்சு இங்கே
இன்னல் படுவதற்கு
குற்றம் செய்தது யார்?!
இனிய உலகை காணவந்த
இளம்பிஞ்சின் குற்றமா?!
பெற்றவனின் குற்றமா?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
காதலில் விளைவிக்காது
காமத்தில் விளைவித்த
பிஞ்சுகளா இவர்கள்?!
பெற்றெடுத்து பின்னர்
வாழவைக்க இயலாத
புண்ணியவான் ஒருபுறம்!
கசடுகள் குடியேறிய
சமுதாயம் மறுபுறம்!
பிஞ்சுகள் தான் என்ன செய்யும்?!
புரியாது தவிக்கிறேன்
புரிந்திட விழைகிறேன்!!
 
 
வாழ்க்கை வாழவேதான்
சந்தேகம் இல்லை
வாழ்வின் தொடக்கமாம்
குழந்தைப் பருவம்!
அங்கே சமுதாய கேடுகள் 
நீக்கமற குடியேறினால் 
பாதைகள் மாறி பயணிக்கும்!!
 
 
பாதைகள் மாறிவிட்டால்
உபாதைகளே மிஞ்சும்!
பசுமரத்தில் ஆணியை பாய்ச்சி
புண்ணாக்க வேண்டாம்!
குடுகுடுவென ஓடும்
குற்றமற்ற குழந்தைகளை
தொழிலாளர் ஆக்க வேண்டாம்!!
 
 
அறிவுப் பசியால்
செறிவு ஏறிட
கல்வி கொடுங்கள்!
பிஞ்சு உடலில்
உழைப்பை உறிஞ்சி
வாழ்வின் பொருளுக்கு
மலைப்பை கொடுக்க வேண்டாம்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Wednesday 2 November 2011

விழிமூடி வியாபித்தேன்!!

உறக்கம் என்பதில்தான்
எத்தனை உன்னதம்!
இரவுப்பொழுதின் அமைதியில்
இருகண்மூடி அயர்ந்து
இயக்கமற்று கிடப்பதில்தான்
எத்தனை ஆனந்தம்!!

தன்னிச்சையாய் தானாக
தன்னுடல் தளர்த்தி
தகுந்த இடத்தில்
தஞ்சம் புகுவதில்தான்
எத்தனை இன்பம்!!


உண்ட களைப்பில்
உட்கார்ந்த இடத்தில்
சிறுபொழுது நேரம்
சிட்டுக்குருவி போல
சில வினாடிகள்
கண்மூடுவதில் தான்
எத்தனை ஆனந்தம்!!

எதிர்கால ஏற்றுமைக்காய்
ஏறுபகல் வெளியேறி
பணத்தின் பின்னாலே
பாய்ந்து ஓடியோடி
அந்தி சாய்ந்தபின்னே
விழிமூடி விழுந்துவிட்டால்
வியாபிக்கும் உறக்கமது
வரமன்றி வேறென்ன!!!




மூன்று சக்கர வண்டியை
மூச்சிரைக்க ஓட்டிவந்து
முப்பது ரூபாய 
முழுசா பார்த்தபின்னே
சட்டைப்பையில் வைத்துவிட்டு
முட்டி வலியிலே
கொண்ட களைப்பாலே
கொளுத்தும் வெயிலிலும்
கண்மூடி தூங்கினேன் 
தெரிந்தது சொர்க்கமே!!




சுறுசுறுப்பு பானமான
தேநீரை விற்றிடவே
மிதிவண்டி பின்னாலே
கொள்கலனில் ஊற்றிவைத்து
காததூரம் ஓட்டிவந்தேன்!

சுட்டெரிக்கும் சூரியனோ
உச்சிக்கு போகையிலே
தேநீரும் விற்றிடவே
பட்டுபோன்ற மணலிலே
படர்ந்து படுத்துவிட்டேன்
புறமெரிக்கும் சுடர்கதிரோ
பனித்துளியாய் ஆனதென்ன!!




முதுகில் சுமந்துவந்த

நெல்மூட்டை ஏற்றிவைத்து
சந்தைக்கு கொண்டுசெல்ல
கைவண்டி இழுத்திங்கே
கால்நடையா வந்திருந்தேன்
கடைகள் திறக்கவில்லை
கொஞ்சநேரம் கண்ணயர்ந்தேன்!
வந்தது உறக்கமது
பன்னீரின் வாசனையாய்!!
புகார் வந்ததென்று
அதிகாரி அனுப்பிவைத்தார்
பாதாள சாக்கடை
அடைத்து போனதென்று!
சாயங்காலம் வந்ததுமே
வேலையை ஆரம்பித்தேன்
அடைப்பை எடுத்திடவே
ஊரும் அடங்கியது!
கைகால் வலியெடுக்க
அருகிலிருந்த கல்லிலே
ஓய்வெடுக்க சாய்ந்திருந்தேன்!
கண்கள் செருகிப்போய்
உறக்கம் வந்ததுவே
என்னவிலை கொடுத்தாலும்
கிடைக்காத உறக்கமதை
கண்ணிலே பூட்டிவைத்தே 
உறங்கிப் போனேன்!
விடிந்தது தெரியாது 
கனவுலகில் வாழ்ந்திருந்தேன்!!
உண்டு கொளுத்து 
ஓய்வு எடுத்திட 
வந்த உறக்கமல்ல! 
வெம்பி வெதும்பி 
உடலின் நீரற்று 
அசதியால் வந்ததால் 
அதில் தான் 
எத்தனை சுகம்!
அனுபவிக்கிறேன் நான் 
எல்லோருக்கும் கிடைக்காத 
அரிய திரவியத்தை!!
அன்பன்
மகேந்திரன்