Powered By Blogger

Thursday 30 June 2011

சூட்சுமம் அறிந்துகொள்!!


திசைமாறும் காற்றையே
இசையாக்கித் தந்திடும்
மூங்கிலாக மாறிவிடு!
தேடிப்பெறும் தேடல்கள்
கோடியுண்டு நம்வாழ்வில்!!

மண்தொடும் மழைநீராய்
மணமிங்கு பரப்பிவிடு!
வடிவற்ற பாறையை
சிலையாக சித்தரிக்கும்
உளியாக மாறிவிடு!!






தன்வால் உதிர்த்து
தன்னுயிர் காத்திடும்
ஊரும் பல்லியினம்!
தகுந்த இடத்தில்
தரணியில் தனித்துநிற்க
தந்திரங்கள் பழகிவிடு!!

பஞ்சுமூட்டை மேகங்கள்
பரந்து மழைபொழியும்
தன் நிறம் மாறும் போதினில்!
நிறம்மாறும் இவ்வாழ்வில்
நித்தமும் போட்டியிடு!!





தனித்திருக்கும் மரமென்றும்

தோப்பாக ஆவதில்லை!
கூட்டாஞ்சோற்றை பகிர்ந்து
கூப்பிட்டு உண்ணும் காக்கையிடம்
கூடிவாழக் கற்றுக்கொள்!!



சும்மா இருந்துவிட்டால்
எல்லாம் கிடைக்காது!
சோம்பேறித்தனம் மாற்றி
சுறுசுறுப்பின் பிறப்பிடமாம்
எறும்பின் குணம் கற்றுக்கொள்!!
புவனம் பெரிதாயினும்
உன்வாழ்க்கை சிறிதே!
சின்னஞ்சிறு வாழ்க்கையை
சிறப்பாக மாற்றிவிட
சிந்தனையை தூண்டிவிடு!!

தர்க்கம் பேசிக்கொண்டு
தறுதலையாய் திரிவதைவிட
முன்னவரின் கருத்தை ஏற்று
அறிவை வளர்க்கும்
சூட்சுமம் அறிந்துகொள்!!
போர்க்களமாம் இவ்வாழ்வில்
காயங்கள் ஏராளம்!
அன்பெனும் மந்திரத்தால்
காயங்களை மாயங்கள் ஆக்கிவிடு!
உன்னால் எதுவும் முடியுமென
ஊக்கத்தின் துணையுடன்
நம்பிக்கை வளர்த்துக்கொள்!!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதனை படைத்துவிடு!
மோதிப் பார்த்து துவண்டவரின்
சலிப்பெனும்  சாயத்தை
சற்றே அகற்றிவிட்டு
ஏணியிட்டு ஏற்றிவிடு!!

வீழ்ந்து எழுந்தாலும்
வெற்றியை தொட்டுவிடு!
வாழ்க்கைச் சந்தியில்
முகவரி தொலைத்தவரை
கைகொடுத்து ஏற்றிவிடு
நம்பிக்கை ஏற்றிவிடு!!


அன்பன்
மகேந்திரன்

Tuesday 28 June 2011

அப்போதே அழிச்சிருப்பேன்!!






கண்ணான  கருகுமணி
காணாத பொன்னுமணி
செல்ல செப்புமணி
நீ சிரிச்சா முத்துமணி!!

எட்டு வருஷமா
செய்யாத தவமில்ல
ஏங்கி தவிச்ச நான்
வேண்டாத சாமியில்ல!!

குறிஞ்சி மலர்போல
குலசாமி அருளால
நீ எனக்கு பிறந்திடவே
என்ன பாடு பட்டேனைய்யா!!

தவழும் போது முயல்போல
நடக்கையில மயில்போல
ஓடும்போது மான்போல
மகராசா நீ இருந்த!!





எடுப்பான மீசை வைச்சு
துடுக்கோடு நடக்கையில
என்ராசா மகராசா
எட்டு ஊரு மதிச்சதைய்யா!!

உன்புள்ள அருமைபுள்ள
ஊதாரியா திரிஞ்சிகிட்டு
போதையில் கிடக்கிறான்னு
ஊராரு பேசயில
பாழாப்போன ஊரு
பம்மாத்து பேசுதுன்னு
பதுசாக இருந்துபுட்டேன்!!

கண்ணுக்குள்ள உன்ன வைச்சு
பொத்திவைச்ச பூவப்போல
திறக்காத திரவியமா
நல்லாத்தான் நான் வளர்த்தேன்!!

வாய்க்கால் வரப்புல
சீராட்டி வளர்த்த புள்ள
சீமைசரக்கு குடிச்சிபுட்டு
வாய்பொளந்து கிடக்கிறான்னு
போறவங்க சொல்லையில
உன்ன சுமந்த வயித்த
செருப்பால அடிச்சிகிட்டேன்!!





என்பால குடிச்சிபுட்டு
கண்மூடி தூங்கினியே - இப்போ
மதுப்பால குடிக்கிறியே
மதிகெட்ட மகராசா!!
மதிய மயக்கும் - மாய
மதுவ குடிச்சிபுட்டு
கண்மூடி தூங்கிவிடு
எப்போதும் திறக்காதே!!




கண்ணுமண்ணு தெரியாம
கலம் கலமா குடிச்சிபுட்டு
காரோடும் ரோடெல்லாம்
காலால அளப்பவனே
கண்கெட்ட மகராசா!!
குடிகாரன் என்மகன்னு
கருவுல நீ இருக்கையில
பாவி எனக்கு தெரிஞ்சிருந்தா
அப்போதே அழிச்சிருப்பேன்!!


அன்பன்
மகேந்திரன் 

Friday 24 June 2011

ஊழலுக்கு கூற்றுவன் யார்??!!





சடுகுடு களம் போல
சதிராட்டம் போட்டுவிட்டு
சந்தைக்கு போவதுபோல்
சவடால் பேசிகிட்டு
சவுரியமா போறவனே!!!
சாட்டை எடுக்கும் சட்டமென்ன - உனக்கு
சட்டாம்பிள்ளையா??!!


கூடுவிட்டு கூடுபாய்ந்து
கூன்விழ வேலைசெஞ்சா
குன்னிமுத்து அளவுலதான்
கூலி வந்து சேரும் - நாட்டை
கூறுபோட்டு வித்துபுட்டு
குதூகலமா போறவனே!!!
கூற்றுவன் உனக்கு யார்??!!




பண்டந்திருடும் எலிகூட
பயந்துபயந்து பம்மிவரும்
பணமூட்டை திருடிபுட்டு
பயணம் போறதுபோல்
பவுசாக போறவனே!!
பாவிமகன் உனக்கு - இங்கே
பாடைகட்டப்போவது யார்??!!





மூட்டை தூக்கி பிழைப்பவன்
மூச்சு வாங்க முக்கி முக்கி
முக்காலடி ஏறினாலும்
முழுக்கூலி முக்கால் துட்டு
முழுக்கோழி விழுங்கிவிட்டு
முழுசாக போறவனே - உன்
முதுகெலும்பை ஒடிப்பது யார்??!!




தெருமுனையில் கூட்டம்போட்டு
தேவைகளை கேட்கும் போது
துரத்தி வந்து சாமானியரை
துவைத்தெடுத்து துண்டு போடும்
துணிவான காவலரே!!!
தின்ற சோறு செமிக்காத
திருட்டுப்பய இவனுக்கு - இங்கே
துப்பாக்கி காவல் ஏன்??!!




ஊமையாய் இருப்பவரை
ஊனரென எண்ணிக்கொண்டு
ஊர்வம்பு பேசி பேசி
ஊதாரியாய் திரிந்துவிட்டு
ஊழல் என்ற செய்கையை  - இங்கே
ஊர்முழுதும் விதைத்தவனே உனக்கு
ஊறுவந்து சேராதோ??





அரசியல் பிழைத்தோருக்கு - இங்கே
கூற்று கூட காவல் தான்!!!
அறம் என்ற சொல்லே
தரம் கேட்டு போனதா??!!
ஊழல் செய்து விட்டு
உல்லாசம் செய்வோர்க்கு
தகுந்த தண்டனை கிடைத்த
செய்தி இங்கு உண்டா??!!
சட்டங்களும் சடங்குகளும்
சாமானியனுக்கு மட்டுமா??!!

அன்பன்
மகேந்திரன் 

Wednesday 22 June 2011

மனசு கனக்குதய்யா!!



 கோயில்வீதி விட்டுப்புட்டா
குளக்கரைய சுத்திவந்து
ஒட்டுவீட்ட பார்த்துடுவேன் - ஐயா
அடுத்தவீடு என்வீடுன்னு
அழகாக சொல்லிடுவேன்!!

கொட்டபாக்கு வெட்டிபோட்டு
கொளுந்துவெத்தலை கிள்ளிவைச்சு
சுண்ணாம்பு சேர்த்துபோட்டு - ஐயா
செவசெவக்கும் வாயாலே
ஊர்க்கதைகள் பேசச்சொல்லும்!!

விடிஞ்சதுமே கிளம்பிப்போயி
அடைஞ்சபின்னே திரும்பிவந்து - நான்
காலைநீட்டி படுத்துக்கிட்டு
மோட்டுவளையை பார்த்துபுட்டா
நேத்து நடந்த கதைபேசும்!!




விரிஞ்சிகிடந்த நஞ்சையில
விவசாயம் பார்த்துபுட்டு
கிடைச்சகஞ்சி குடிச்சிக்கிட்டு - அங்கே
வாகாக வாழ்ந்திருந்தோம்
வக்கனையா பேசிக்கிட்டு!!!

மழைத்தண்ணி எதிர்பார்த்து
ஏக்கந்தான் மிஞ்சுதய்யா - ஐயா
வெளஞ்சி வந்த வெள்ளாமைய
சந்தைக்காரன் ஏச்ச கதைய
எங்க போயி நானும் சொல்ல!!



முக்காதுட்டா இருந்தாலும்
கிடைச்சகாசு போதுமின்னு
செவ்வனே கிடந்தாலும்
எம்மக்க படும் துயரத்த - ஐயா
சகிச்சிக்க முடியலய்யா!!

பள்ளிக்கூடம் பக்கம்போயி
பாய் கூட போட்டதில்ல
பயபுள்ள பெத்த புள்ள
படிச்சி மேல வரனுமின்னு - ஐயா
பாவிமனசு தவிக்குதையா!!

செழிச்சிருந்த வயக்காடு
சிதைஞ்சி போனதய்யா 
கட்டாந்தரை காட்டைவிட்டு
நாலுகாசு சேர்க்கனுமின்னு -ஐயா
பட்டணத்த தேடிப்போனேன்!!

பார்க்காத வேலையெல்லாம்
பக்குவமா பார்த்தேனைய்யா
கால்காசா காசுபணம்
கருத்தா சேர்த்துவைச்சு - அங்கே
காரவீடு கட்டிபுட்டேன்!!

ஏடெடுத்து பார்த்ததில்ல
எழுத்தாணி பிடிச்சதில்ல
ஏகலைவன் எம்புள்ள - இங்கே
அத்தனையும் படிச்சிபுட்டு
ஆங்கிலத்தில் பேசுறான்யா!!

நான் நினைச்சி வந்ததெல்லாம்
அழகாத்தான் நடந்திருக்கு
உள்மனசு ஏங்குதய்யா - என்
நெஞ்சுக்குழி பிசையுதைய்யா
பொறந்த ஊர நினைக்கையிலே!!



பச்சைபூமி பவளபூமி
பொன்வெளஞ்ச பட்டுபூமி
திரும்புற திசையெல்லாம்
தரிசா கிடைக்கையில - என்
மனசு கனக்குதய்யா!!
என்வாழ்வு பெருசுன்னு
எகத்தாளம் பேசிபுட்டு
இடம் மாறி போயிட்டேன்
பாவிமகன் இவனுக்கு
மறுபிறப்பு இல்லையப்பா!!
தரிசுன்னு நினைச்சிபுட்டு
தங்கமான பூமியெல்லாம்
கூறுபோட்டு கிடக்குதப்பா - இப்போ
கூவிகூவி கூறுபோட்டா - நாளை
மண்ணுதாம்பா நமக்கு சோறு!!
அன்பன்
மகேந்திரன்

Sunday 12 June 2011

சாளர நினைவுகள்!!






நிகழ்கால நிகழ்வுகளால்
நிஜம் தேடும் என் மனம்
கொதிக்கின்ற உலை நீரென
கொந்தளித்து நிற்கையில்
சில்லென்ற குளிர்காற்றால்
கம்பி வேலிகளைத் தாண்டி
என் அகம் வருடும்
சாளரக் காற்று!!

சுற்றளவற்ற ஆகாயத்தை
சுருக்கி சிறைபிடித்து
கொள்ளளவில்லா காற்றை
தவணை முறையில்
அனுமதி செய்யும்
சாகசச் சாளரம்!!

 







தம் வெம்பசி தீர்க்க
ஒரு பொட்டு இரைக்காய்
வெகுதூரம் பறக்கும்
சின்னஞ்சிறு பறவைகளின்
சிறுகதை பேசும்
நம்பிக்கை சாளரம்!

காற்றின் இசைக்கேற்ப
மரக்கிளைகள் ஜதிபோட
இலைகள்  இன்னிசைபாட 
நடன அரங்கேற்றத்தை
இலவசமாய் காட்டும்
மோகனச் சாளரம்!!

 

சில்வண்டாய்  பறந்த
சின்னஞ்சிறு வயதில்
எழுநிலை மாடங்களில் - எமை
மந்தி போல் தொங்கச் செய்து
தொலைக்காட்சி காட்டிய
மாயச்  சாளரம்!!

வெம்புகின்ற மனநிலையில்
மௌனமான வேளையில்  
முகப்பில் முகவாய் வைத்தால்
கொளுத்தும் வெயிலிலும்
நிறைவாய் நிறைமதி காட்டும்
நேசச் சாளரம்!!

 


 

இரணங்களின் வலியில்
நான் தவிக்கும் போதெல்லாம்
தாய்மடி கொடுத்து
மயிற்பீலி சாமரத்தால்
என் மனம் உறங்கச் செய்த
மந்திரச் சாளரம்!!

ஏ! நட்புச் சாளரமே!
எனக்கு பன்முகம் காட்டிய நீ
இனிவரும்  சந்ததிக்கு
என்ன காட்ட போகிறாய்!
ஏற்றுக்கொள்வாயா??!!
என் சின்னஞ்சிறு கோரிக்கையை!!
காலங்களின் கோலத்தை
கண்ணாடியாய் பிரதிபலிக்கும் நீ
எம் வருங்கால சந்ததிக்கு
நம்பிக்கையை வளர்த்திடு!!
தன்னம்பிக்கையை வளர்த்திடு!!

அன்பன்

மகேந்திரன்