Powered By Blogger

Sunday, 17 June 2012

என் தந்தை எனும் போதினிலே!!!!







வியப்பாக இருக்கிறது 
விரிந்திருக்கும் இவ்வுலகில் 
நானும் ஒரு பாகமென!!
விழிவிரியப் பார்க்கிறேன்
வழித் தடங்களின்
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
 
 
அரைஞான் கயிற்விட்டு
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!


கல்லெடுத்து அடித்த அடியில்
தலையில் குருதிவர
வலக்கையால் பொத்திக்கொண்டு
அழுதுசென்ற முனீஸ்வரன்!
அடுத்த மணித்துளியில் 
தந்தையுடன் சேர்ந்துவர
மனம் பதைத்துப் போகையில்!!


மருத்துவச் செலவு பார்த்து
என்னய்யா இது!
சிறுபிள்ளைகள் சண்டையில்
நமக்கென்ன வேலையிங்கே! எனச் சொல்லி
உருட்டிய கண்களால்
மிரட்டிச் சென்ற தந்தையை!!


உடன்படித்தோரின் தந்தையர் பலர்
அலுவலகம் சென்று வருகையில்!! என்னவரோ 
அதிகாலை கிளம்பிச்சென்று
நாளெல்லாம் மிதிவண்டி அழுத்தி
அலுப்பு மட்டுமே மிஞ்சி
எனக்கான பண்டத்துடன் திரும்புகையில்!!


படபடக்கும் பட்டாசுக்காய்
பகல்முழுதும் காத்திருந்து - நான்
சோர்ந்துபோய் உறங்கிவிட!
தூக்கத்தில் எனை எழுப்பி
முன்தின இரவுப் பொழுதில்
தோளில் எனைச் சுமந்துகொண்டு
பைநிறைய வாங்கிவந்த தீபாவளி!!


கைவண்டி நிரப்பியிருந்த
நெல்மணி மூட்டையெல்லாம்
இறக்கியங்கே வைத்துவிட்டு
அன்றைய தின கூலிக்காய்
எண் கால் இரண்டு - நா முக்கா மூணு என
அறியாத வாய்ப்பாட்டை
இயல்பாய் சொன்ன போதினிலே!!


ஆசிரியர் எனையழைத்து
அப்பாவைக் கூட்டிவா என்றதும்
பதைத்துப் போன நானோ!
கூட்டி வந்த பின்னே - என்னய்யா
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!


வயதுவந்த பிள்ளைஎனினும்
வாஞ்சையோடு மார்பில் கிடத்தி
ஆத்தா என் தாயி
ஆங்கார மாரியம்மா எனத் தொடங்கி
வாய்ப்பாட்டு பாடி எனை 
வளர்ந்து வா என் மகனே 
வாசல்நின்று காத்திருக்கேன் என 
தாலாட்டுப் பாடிய தருணத்தில்!!
 
 
அப்பா என்றொரு வார்த்தையில் தான் 
எத்தனை மந்திரங்கள் 
சொல்லிக்கொண்டே இருக்கலாம் 
சொல்லத்தான் சொற்களில்லை!!
 
 
உன் விரல்பிடித்து இன்னும் 
ஊர்வலம் வந்திட ஆசைதான் நெஞ்சுக்குள்
என்ன நான் செய்திடுவேன்
காலம் எனும் மாயன் உனை
கடத்திக் கொண்டு விட்டானே!!
 
 
இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
 
 
அப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday, 15 June 2012

காற்றே ..... பூங்காற்றே!!!!




பருவங்கள் பலகண்டு
சருகுகள் கரம்கொண்டு
உருவமென ஒன்றிலாது
அரூபமாய்த் தவழ்ந்திடும்
துருவக் கருப்பொருளே!!

புவனத்தின் தோற்பரப்பில்
தவம்புரி முனிவன்போல்
காவலின் தோரணையில் 
உவப்புடன் தவழ்ந்திடும்
கவசக் கருப்பொருளே!!!


நிலமதுவும் நீரதுவும்

நிலைமாறும் வெப்பத்தால்
நிலையியக்கம் மாறுவதால்
நிர்மலக் கருவடைந்து
நீயும் இங்கே வந்தடைந்தாய்!!

விரிகதிர் ஆதவன்
விழிப்புடன் எழுந்து
உருப்பெறும் திசையாம்
கிழக்கினில் கருப்பெற்றால்
கொண்டல் என பெயர்பெற்றாய்!!

செம்மாந்த செஞ்சுடரோன்
செவ்வனே பணிமுடித்து
செம்புகு திசையதுவாம்
மேற்கினில் விளைந்ததனால்
கச்சான் என பெயர்பெற்றாய்!!

பருவத்தின் மாற்றத்தால்
மேற்கினிலே விளைந்தாலும்
வேய்கூரை வெய்யோனின்
வெம்மைமிகு கதிர் சுமந்ததனால்
கோடை எனவும் பெயர்பெற்றாய்!!






தேன்மதுரத்  தோரணமாம்
தெள்ளுதமிழ் பிறப்பிடமாம்
தென்கோடித் திசையதுவாம்
தெற்கினிலே விளைந்ததனால் 
சோழகம் என பெயர்பெற்றாய்!!


தேனிசைத் தமிழ்பாடும்
தெற்கினிலே விளைந்தாலும்
அகம் தனை வருடி
சுகம் தனை கொடுப்பதனால்
தென்றல் எனவும் பெயர்பெற்றாய்!!


வானுயர வளர்ந்தோங்கிய
வெள்ளிமலை போல
பனியுருகும் தளமதுவாம்
வடக்கினில் விளைந்ததனால்
வாடை என பெயர்கொண்டாய்!!
நாசியின் வழிச்சென்று
நுரையீரல் வியாபித்து
இதயத்தில் தங்கியபின்
நாசியிலேயே வெளியேறி
என்னுயிர் சுமக்கும் இன்னுயிரே!!


சாதுவாய் உனை நான்
விழியேற்ற பொழுதினிலே 
சாது மிரண்டது போல்
வெங்கொடுமை சுழல்காற்றாய்
மாறியது ஏனிங்கு??!!


நிலமிசை தனைவிட்டு
வெப்பக் காற்றாய் மேலெழும்பி
இடிமின்னல் உருவாக்கும்
முகில்தனை  விட்டிறங்கும்
குளிர்காற்றுடன் புனைந்ததனால்
விளைந்திட்ட வினைதானோ?!!
இதமான உனது தழுவலில் 
இமை அயர்ந்த வேளையில்
உன் இயக்கநிலை மாறுபட்டு 
பலம்கொண்ட பாய்புயலாய்
குணம் மாறிப் போகையிலே 
குருதி வற்றிப் போனேனே!!


வலுவேறு பலம்கொண்ட 
வன்காற்று உனைக்கண்டு 
உதித்தது ஓர் எண்ணம்!
மென்காற்றாய் இருந்த உனை 
வன்காற்றாய் மாற்றியதெல்லாம்
வேறோர் தூண்டுதலே!!

தவறான தூண்டுதலால் 
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என 
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!



அன்பன் 
மகேந்திரன்

Sunday, 10 June 2012

எழில்நிறை எழுத்துக் கலை!!




பன்முகக் கலைகள் இங்கே
பார்முழுதும் விதைத்திருக்க
பாங்குடன் ஏனையோர்
பகுத்தறிந்து பார்த்திடவே
பிறந்திட்ட ஓர் கலை!!


உணர்வினில் ஊசலாடும்
உன்மத்த நினைவுகளை!
உள்ளத்தின் வேர்களில்
ஊற்றெடுக்கும் எண்ணங்களை
உலகினுக்கு வடிவழகாய்
உரைத்திட பிறந்த கலை!!





மொழியின் உருவினில்
மோனமாய் கருவாகி 
மதிகவர் சொற்களால்
மாநிலம் அறிந்திட
முரண்பாடு பலகண்டு
முகிழ்ந்து பிறந்திட்ட நற்கலை!!


தான்கொண்ட எண்ணங்களை
தகைசால் சொல்லழகால்
தரளமென மினுமினுக்க
திரள்நிறை பொருளோடு 
தரணியின் சபைதனில்
தேனுறை பொற்கலை!!
நிகற்பத்தின் நீட்சியில்
நாவினுக்கு இனிமையாய்
நல்லுருவாய் நயமாக
நாள்தோறும்  மாறிடினும்
நெறிமுறை தவறிடா
நித்திலமாம் இக்கலை!!


கருவொன்று நன்றாக 
கமழ்ந்திட கிடைத்திட்டால் 
கற்பனைக் குதிரையை 
கடிவாளம் அறுத்திட்டு 
களஞ்சியப் பொருளோடு 
காவியமாகும் இக்கலை!!

மேதகு வித்தகர்கள்
மேவிடும் கற்பனையால்
மேதரக் காவியம் பல
மஞ்சரிக் குவியலாய்
மிகைபதுமம் உருவேற்றிய
மதுரத்தேன் பொற்கலை!!


எண்டிசை கிளைபரப்பி
எதுகை மோனையோடு
எழில்மிகு சொற்களால்
எழுத்தாற்றல் வளர்த்திட்டால்
எறுழ்வலிமை சித்திரமாம்
எழில்நிறை எழுத்துக் கலை!!



அகமிருக்கும் கருவதனை 
அறிவேட்டில் பொறித்தபின்னே
அவனியதை புகழ்ந்திட்டால் 
அகம்பாடு கொள்ளாது 
அகவமைதி கைகொண்டால் 
ஆசிடை வழங்கும் எழுத்துக் கலை!!


இயல்நடை மொழியினிலே
இதிகாசம் சமைத்திடுவோம்!
இகந்துழி தேடிடினும்
இத்தகைய காவியத்தை
இனியெங்கும் காணோமென
இச்சகத்தோர் இயம்பிடவே
இன்னெழுத்து  படைத்திடுவோம்!!



அன்பன்
மகேந்திரன்



சொல்லுக்கான பொருள்:

நிகற்பம் ----------- 10 ன் பதிமூன்றாம் அடுக்கு  (1 ,00 ,00 ,00 ,00 ,00 ,00)

பதுமம்  ------------ 10 ன் பதினான்காம் அடுக்கு  (1 ௦,௦௦,00,௦௦,௦௦,௦௦,000)

தரளம்         ------------ முத்து

நித்திலம்      --------- முத்து போல ஒளியுடைய

மேதரம்              --------- மலைக்குன்று

எறுழ்வலிமை  ---------- இரும்புபோன்ற வலிமையுடைய

ஆசிடை             ---------- நல்வாழ்த்து

இகந்துழி           ----------- அதி தொலைவு அல்லது தொலைதூரம் 


Tuesday, 5 June 2012

எதிர்வரும் நலமே!!!!







வாயுதிரும் வார்த்தைகள் 
வாழ்வினில் ஏராளம்!
வெளிவந்த வேகத்தில் 
வேற்றுமை இல்லையெனில் 
விவகாரம் அங்கில்லை!!
 
என்னால் எதுவும் 
எளிதாக இயலுமென 
எக்காள சொற்களால் 
எரிவார்த்தை தவிர்த்திட்டால் 
எதிர்வரும் நலமே!!
 

 


சோம்பலின் போர்வைக்குள்
சொகுசாய் உறங்கியபின்
சுற்றிவரும் வினைவிளைகள்
சாதகமாய் வேண்டுமென
சத்தமிட்டு என்னபயன்?!!

நாடிவரும் சந்தர்ப்பத்தை 
நாழிகைகள் கடத்தி 
நாசூக்காய் ஒதுக்கியபின் - அட 
நமக்குத் தெரியாமல் போயிற்றேவென 
நாடகமாடி என்னபயன்?!!
 
 
எட்டிவிட்டால் தொட்டுவிடும் 
எள்முனைத் தொலைவில் 
ஏதுவாயிருந்த வாகையை 
ஏளனமாய் உதறிவிட்டு - பின்னர்
ஏங்குவதால் என்னபயன்?!!
 
தன்னை உயர்வாய் எண்ணி
தற்பெருமை அரக்கனுக்கு
தங்குமிடம் தானளித்து
தகைமை நெறி தவறி - ஆங்கே
தரமுனக்கு தேடுவதில் பயனென்ன?!!
 
 
எல்லாம் தெரியுமென
ஏகமாய் வார்த்தையாடி
எரிமலைக் குழம்பையும் 
எளிதென எண்ணிவிட்டு - பின்னே 
எரிகிறதென்றால் விலகிடுமோ?!!
 
நூதனப் போக்கறியாது 
நுண்ணறிவு கைவிடுத்து 
நுனிப்புல் மேய்ந்துவிட்டு 
நுகர்ந்திட கிடைக்காது - போகையில் 
நெற்றிசுருக்கி என்னபயன்?!!
 
 
இயல்பறிவு இல்லாததை
இசைவோடு ஏற்காது
இயலாமையை மறைத்திட
இதற்குமுன் அறிந்திருந்தால்
இமயம் எட்டியிருப்பேன் - என
இறுமாப்பு பேசுவதில் என்னபயன்?!!
 
பிறக்கையிலே யாரும்
பிறவி அறிஞன் அல்ல!
புரியாத கருக்களையும்
புரிந்துகொள்ள விழையும்
பித்தனாக மாறிவிடு!!
 
நமக்குத் தெரியாமல் போனதே -என
நமட்டு வார்த்தை பேசாது
நான் தெரிந்துகொள்ளாது போனேனே - என
நல்லெண்ணம் விதைத்திடு
நாளும் நாளும் விளைந்துவரும்
நற்புது விளைவுகளை
நாகரீகமாய் கற்றுக்கொள்!!
 
 
போனது போகட்டும்
புதுமையாய் வருவதை
புழக்கடையில் போடாது
புத்தியில் போட்டுவை!!
 
மேவிடு அவனியில்
மேதாவி நானென - இனியும்
மேம்போக்கு பேசாது
மெல்லவரும் மாற்றங்களை
மென்று விழுங்க பழகிக்கொள் - அன்றுபார்
மேதாவி நீதான் என உலகம்
மெச்சி உனைப் புகழ்ந்திடும்!!!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்