Powered By Blogger

Saturday 16 July 2011

உறுதியாக உனக்குத்தான்!!






கனவிலே மிதந்திருந்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
கையிலுள்ள காசைவைத்து
கடல் வாங்க ஆசைப்பட்டேன்!!

சிலகாச கையில் வைச்சி
சிரமமேதும் இல்லாம
சீக்கிரமா மேலவர
சின்னபுத்தி போயிடுச்சி!!




செய்த தொழில் அத்தனையும்
சேதாரம் ஆகிபோச்சு
சேர்த்துவைச்ச பணமெல்லாம்
சேத்துக்குள்ள முங்கிப்போச்சு!!

தேனென்று நினைச்சிருந்தேன்
தேடிவந்த வாய்ப்பெல்லாம்
தீண்டி அதை பார்த்ததுமே
தேளாக கொட்டிடுச்சு!!




எண்ணம்போல வாழ்வென்று
ஏமார்ந்து இருந்துவிட்டேன்
எடுத்துச் சொல்ல யாருமில்ல
ஏற்றம் வந்து சேரவில்லை!!

நொந்துபோன நெஞ்சோடு
நெடுந்தூரம் நடக்கையில
கெண்டகாலு சோர்ந்துபோயி
கொஞ்சநேரம் ஓய்வெடுத்தேன்!




கருவேல மரத்தடியில்
காலைநீட்டி படுத்தபோது
காலம்சொல்லும் நீதியதை
கண்ணாரக் கண்டேன் அங்கே!!

சின்னஞ்சிறு குருவியொன்று
சின்னச்சின்ன குச்சிசேர்த்து
சின்னஞ்சிறு கூடுவொன்றை
சிறப்பாகக் கட்டக்கண்டேன்!!

ஒருகுச்சி எடுத்துவர
ஒருநூறு மைல் கடந்து
கூட்டில் அதை போட்டுவிட்டு
மூச்சிரைக்க நிற்கக்கண்டேன்!!

கபாலத்தின் களமதிலே
செஞ்சூடு போட்டதுபோல்
சுருக்கென்று ஓருணர்வு!
சீக்கிரமா பணம்சேர்க்க
சீர்கெட்டு போனபோது
சின்னஞ்சிறு குருவிக்குள்ள
புத்திகூட எனக்கு இல்ல!!




சிறுவிதை போட்டு மரமாகி
மரம் பூத்து காய்போட்டு
காய்கனிந்து பழமாக
காலமது உள்ளதென்று
இப்போது புரிந்துகொண்டேன்!!

நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த
நேர்மையெனும் பாதையில
நெறிதவறா உழைப்பிருந்தா
வெற்றிவந்து நமைச்சேரும்!!

கடல்நிறைய நீரிருந்தும்
குடிப்பதற்கு ஆவதில்லை!
தவறான வழிவந்த பணமெதுவும்
உன்னிலையை ஏற்றாது!!

போட்டியுள்ள உலகமிதில்
பொறுமையுடன் போர்புரிந்தால்
வெற்றியெனும் புதையலிங்கே
உறுதியாக உனக்குத்தான்!!

அன்பன்
மகேந்திரன்

17 comments:

Anonymous said...

////கடல்நிறைய நீரிருந்தும்
குடிப்பதற்கு ஆவதில்லை!
தவறான வழிவந்த பணமெதுவும்
உன்னிலையை ஏற்றாது!!///


நிஜமான வரிகள்
நல்ல கவிதை

தென்னரசு

kupps said...

உங்கள் சொந்த கதைபோல் தெரிகிறதே நண்பரே ! ஆனால் கவிதை அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

M.R said...

அனைவரும் உணரவேண்டிய கவிதை ,அருமை .

M.R said...

செய்த தொழில் அத்தனையும்
சேதாரம் ஆகிபோச்சு
சேர்த்துவைச்ச பணமெல்லாம்
சேத்துக்குள்ள முங்கிப்போச்சு!!


பதறிய காரியம் சிதறும்

M.R said...

தேனென்று நினைச்சிருந்தேன்
தேடிவந்த வாய்ப்பெல்லாம்
தீண்டி அதை பார்த்ததுமே
தேளாக கொட்டிடுச்சு!!


போதிய அனுபவமின்மை ,தெளிவான தீர்மானமில்லாதது

M.R said...

ஒருகுச்சி எடுத்துவர
ஒருநூறு மைல் கடந்து
கூட்டில் அதை போட்டுவிட்டு
மூச்சிரைக்க நிற்கக்கண்டேன்!!


சிறு துளி பெரு வெள்ளம்.

M.R said...

எண்ணம்போல வாழ்வென்று
ஏமார்ந்து இருந்துவிட்டேன்
எடுத்துச் சொல்ல யாருமில்ல
ஏற்றம் வந்து சேரவில்லை!!


கானல் நீர் உண்மையும் இல்லை ,

ஒருபோதும் தாகம் தீர்ப்பதும் இல்லை .

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி

உண்மைதான், என் சொந்தக் கதையையும்
கலந்திருக்கிறேன் இதில்.
பாடம் கற்றவனுக்கு தானே
பாடம் கற்பிக்க தெரியும். சரிதானே??
மேலும் தங்களின் மேன்மையான
கருத்துரைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்

முதலில் உங்கள் விரிவான
கருத்துரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
நீங்கள் கூறிய விளக்கங்களில் என் கவிதை
மேலும் மிளிர்கிறது.
மிக்க நன்றி.

akilan said...

இன்று உலகில் நிறையப்பேர் இப்படித்தான்
விரைவில் பணம் சம்பாதித்து
விடவேண்டும் என்ற எண்ணத்திலேயே தான்
தவறான பாதைகளுக்கு செல்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நல்ல மொழி
சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி.

அகிலன்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்

தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

நிரூபன் said...

கபாலத்தின் களமதிலே
செஞ்சூடு போட்டதுபோல்
சுருக்கென்று ஓருணர்வு!
சீக்கிரமா பணம்சேர்க்க
சீர்கெட்டு போனபோத//

குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும், உழைத்து வாழ வேண்டும் எனும் தத்துவத்தினை உங்களின் கவிதை மெய்ப்பித்துச் சொல்கிறது.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் விரிவான கருத்துரைக்கு
மிக்க நன்றி

PUTHIYATHENRAL said...

வணக்கம் மகேந்திரன் வாழ்த்துக்கள் பதிவு ரொம்ப நல்லா இருந்தது. அதே நேரம் உங்கள் பதிவிற்கு அழகு சேர்ப்பது அழகான படங்கள் நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

கபாலத்தின் களமதிலே
செஞ்சூடு போட்டதுபோல்
சுருக்கென்று ஓருணர்வு!
சீக்கிரமா பணம்சேர்க்க
சீர்கெட்டு போனபோது
சின்னஞ்சிறு குருவிக்குள்ள
புத்திகூட எனக்கு இல்ல!!

போட்டியுள்ள உலகமிதில்
பொறுமையுடன் போர்புரிந்தால்
வெற்றியெனும் புதையலிங்கே
உறுதியாக உனக்குத்தான்!!


உறுதியாக எனக்கு தான்...ஆம் உங்கள் நட்பு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மாயஉலகம்

நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்
உங்க நட்பு கிடைத்திட நான் பாக்கியசாலிதான்.

நன்றி.

Post a Comment