Saturday, 9 July 2011

உப்பின் பிறப்பிடம்!!

விதையொன்றும் போடாமல்
கிளையேதும் இல்லாமல்
வெள்ளைநிறப் பூக்களாய்
மண்மாதா மடியிலே
மலர்கின்ற மலர்களாம்!!

அறுசுவையில் உனக்கென
சிங்கார இருக்கையாம்
சிம்மாசனம் உண்டு!!
உனையன்றி உணவின்
சுவைகூட தொல்லையே!!
கடல்நீரின் பிள்ளையாய்
ஆண்பாத்தி வழியாக
நச்சுநீர் நழுவவிட்டு
பெண்பாத்தி அடைந்ததும்
தானாகப் பூக்கிறாயே!! 

பூமாதா மடியினிலே
அழகுருவாய் பூக்கும் நீ!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அழகிய தத்துவம் படைத்தாய்!தன்னில் உறையும் நீரினில்  
தேவையற்ற நீர்மத்தை
ஆவியாக்கி களைந்து
பயனுள்ள நீர்மத்தை
பெண்பாத்தி பாய்த்திடும்
ஆண்பாத்தி செயலே!!

வந்தநீரை மடியேற்றி
வழிந்தோடா மடைகட்டி!
சிலநாட்கள்  கருவைத்து
பொத்திவைத்து காத்திருந்து
வெண்ணிறப் படிகங்களை
அழகாகப் பிரசவிக்கும்
பெண்பாத்தி செயலே!!
படர்ந்த பனிமலையோ
குவிந்த கோபுரமோ - என
சிலகாலம் கூடிவாழ்ந்து- பின்
சிறு அடைப்புக்குள் நுழைந்து 
உன்னைக் கரைத்து 
எம் உணவை ருசியேற்றும்
உன் தியாகமொரு படிப்பினைதான்!!

அளவுடன் சேர்த்தால் 
ருசிக்கச் செய்யும் நீ!
அளவற்றுப் போகையில்
வெறுப்படையச் செய்வாய்!!

பரந்திருக்கும் பாரதத்தில்
பளபளக்கும் உன்னை
பிரசவிக்கும் பெருமையில்
இரண்டாம் இடமாம்
எம்மூர் தூத்துக்குடிக்கு!!

எம்மூர் பெருமையை
ஏற்ற வந்த உப்பினமே!
தமிழுள்ள வரை
உன் புகழ் நிலைக்கட்டும்!!


அன்பன்
மகேந்திரன்

15 comments:

kunthavai said...

உப்பைப்பற்றிய பல தெரியாத விவரங்கள். ஆண்பாத்தி, பெண்பாத்தி நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே எனும் சொற்றொடர் ஒன்று போதும் உப்பின் மகிமையை எடுத்துரைக்க.

உப்பின் ஊராம் தூத்துக்குடிவாசியாச்சே நீங்கள்..
இதைச் சொல்லாமல் இருந்தால்தான் அதிசயம்.
வாழ்த்துக்கள் தோழரே.
- அனு.

நிரூபன் said...

உப்பின் பெருமைகளுக்கு உணர்வின் வரி வடிவம் கொடுத்து ஒரு கவிதையாக இங்கே தவழ விட்டிருக்கிறீங்க. அருமை சகோ.

Anonymous said...

உங்க ஊர் பெருமை கூறும்
உப்பு பற்றி எழுதிடீங்க
நல்லா இருக்கு....

தென்னரசு

akilan said...

முத்துநகரின் முக்கியத் தொழிலாம்
உப்புத் தயாரிப்பை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
ஆண்பாத்தி பெண்பாத்தி என்பதெல்லாம்
என்னைப்போன்றவர்களுக்கு புதிய செய்தி.
அறிய வைத்ததற்கு
நன்றி.

அகிலன்.

koodal bala said...

உப்புக்கு கூட என்ன அழகான கவிதை ...கிரேட்

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு
என் சொந்த ஊர்ப் பெருமையை எழுதுவதில்
எனக்கு முழுமையான சந்தோசம்.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
உப்பு எண்கள் ஊரில் விளையும் தங்கம்.
அதன் பெருமையை எழுதுவதில்
எனக்கு மிகுந்த ஆனந்தம்.
தங்களின் வரவுக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு
தங்களின் கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
யாமறிந்த செய்திகளை நம் நண்பர்கள் மத்தியில்
உலவ விட்டதில் எனக்கு சந்தோசமே.
அன்பு நண்பர் அகிலன் அவர்களே,
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புடை நண்பர் கூடல்பாலா அவர்களே,
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

குணசேகரன்... said...

தன்னில் உறையும் நீரினில்
தேவையற்ற நீர்மத்தை
ஆவியாக்கி களைந்து
பயனுள்ள நீர்மத்தை
பெண்பாத்தி பாய்த்திடும்
ஆண்பாத்தி செயலே!!//
அட உப்பிற்கும் ஒரு உவமையா??சூப்பர்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன் அவர்களே,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

உப்புக்கு உவமை கூறும்
பாக்கியம் எனக்கு கிடைத்தமைக்கு
எனை படைத்த இறைவனுக்கு
கோடானுகோடி நன்றிகள்.

vivek said...

உப்பின் சிறப்பை சொன்ன உங்கள் கவிதை அருமை, அதில் உப்பு எடுக்கும் மனிதர்களின் கஷ்டங்களையும் சேர்த்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும் என்பது எனது விருப்பம். ஏனென்றால் எங்களுக்கெல்லாம் இவை புதிதான அறியாத விஷயங்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் விவேக்

தங்களின் வரவுக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்,
நிச்சயம் அடுத்து வரும் பதிவுகளில்
அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் மகேந்திரன்

உப்பினைப் பற்றிய விபரங்கள் அருமை. தூத்துக்குடி உப்பளங்கள் பற்றியும் ஆண் - பெண் பாத்திகளின் பணி பற்றியும் விளக்கியமை நன்று. நல்லதொருகவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment