Thursday, 7 July 2011

யார் குற்றம்?!!உன்பெயர் சொல்லும் போதே
உமிழ்நீர் ஊறிவரும்!
சுவைகளில் தனிச்சுவை
உன்சுவை தானன்றோ!!
 
பசு இரையை உதிரமாக்கி
உதிரத்தினின்று உனை படைக்க!
என்னுயிர்த்தமிழ் உனக்கு  
பால் எனப் பெயரிட்டதே!!
 

 


அமுதிலே சிறந்ததாம்
தாய்ப்பாலுக்கு பின்னர்
பச்சிளம் குழந்தைக்கு
நீ தானே உணவானாய்!!
 
எண்ணற்ற  சக்திகள்
உன்னிடம் உள்ளதென
எம்குல மக்களெல்லாம்
வாயார வாழ்த்தினரே!!
 
 
தூய்மைக்கு  உன்னைத்தான்
அடையாளம் காட்டினர்
எம்மை வழிநடத்தும்
எம்குல முன்னோர்கள்!!
 
தூய்மையாக இருக்கும்வரை
உனையருந்திய எல்லோரும்
நீண்டநாள் வாழ்ந்தனரே
குறைவேதும் இல்லாமல்!!
 
காலங்கள் கவிழ்ந்தன
பணமெடுக்கும் நோக்கத்தில் - உன்னில்
தண்ணீரைக் கலந்தனரே
தண்ணீரைக் கலந்தாலும் - உன்னில்
கெடுவிளைவேதும் கண்டிலனே!!
 
 
கிராமத்தில் கறந்தெடுத்து
நகரத்தில் விற்கையிலே
யூரியாவைக் கலந்தனரே
கெடாமல் உனைக்காக்க!!
பளபள வெண்மையுடன்  
பாலாக இருந்த நீ
பாழ்பட்டுப் போனாயே!!
 
தண்ணீரைக் கலந்ததும்
நீர்த்துப் போன உன்னை
கெட்டியாக்கும் நோக்கத்தில் 
ஜவ்வரிசித் தூளைக் கலந்தனரே!
உனக்கேதும் பாதிப்பில்லை 
உனையருந்தி எம்மக்கள் 
சிறுநீரகம் கெட்டதுவே!! 


கறக்கும் பால் நிறையவர
ஆக்சிடோசின் போட்டனரே
கோமாதா மேனியிலே!
அம்மருந்தை ஏற்றாயே 
வாயற்றுப் போன நீயோ!!
அதிக்கப்படி பால்கொடுத்து 
மண்மடிந்து போனாயே!! 
 
ஆக்சிடோசின் ஆட்டத்தின்
ஆட்டம் இங்கு தாங்கவில்லை!
பள்ளிசெல்லும் சிறுபெண்கள்
பால்மணம் மாறும் முன்னே
பூப்பெய்து விட்டனரே!!
ஆண்டாண்டு தவமிருந்து
கருவுற்ற மாதரசிகள்
கருக்களைந்து போனதுவே!!
பாவி உன்னை குடித்ததுமே!!
 
 
 
இன்றோ!!!
ஹைட்ரோஜென் பெராக்சைடாம்
வாய்க்குள் நுழையாத
பெயருள்ள பொருளெல்லாம்
கலப்பதெல்லாம் எதற்காக
காலனிடம் எம்மை     
விரைவில் சென்று சேர்த்திடவா???!!!!
 
குற்றம் இங்கு யார் செய்தார்?
விண்ணைத் தொடும்
விலைவாசிக் குற்றமா??
மண்ணின் மைந்தர்களின்
பணத்தாசை குற்றமா??
 
எதை நான் குற்றம் சொல்ல??
சுத்தமான பால் குடிக்க
பாவி எனக்கு வழியில்லையா!!
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 
 

14 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

உன்குத்தமா என் குத்தமா ?
யாரை நான் குத்தம் சொல்ல ?

//குற்றம் இங்கு யார் செய்தார்?
விண்ணைத் தொடும்
விலைவாசிக் குற்றமா??
மண்ணின் மைந்தர்களின்
பணத்தாசை குற்றமா??//

நிச்சயமாக பணத்தாசை தான் ..

koodal bala said...

இயற்கையின் பிள்ளை மீது தொடுக்கப்பட்ட அம்பு

குணசேகரன்... said...

பணம்தான்....

Anonymous said...

அடேயப்பா!!
பாலில் இவ்வளவு கலக்குறாங்களா?
என்ன கொடுமட சாமி
ஆமா ஆக்சிடோசின் எதுக்காக
போடுறாங்க?

உங்கள் கவிதை மிளிர்கிறது.

தென்னரசு

akilan said...

கலப்படம் இல்லாத பொருட்களே
இல்லை என்று ஆகிவிட்டது.
ஆனாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய
அளவுக்கு கலப்படம் செய்வது
மனிதாபிமானமற்ற செயல்.

கலக்குறீங்க நண்பா

அகிலன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
தண்ணீரைக் கலந்ததும்
நீர்த்துப் போன உன்னை
கெட்டியாக்கும் நோக்கத்தில்
ஜவ்வரிசித் தூளைக் கலந்தனரே!//////

என்ன கொடுமை இது...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா அவர்களே
தங்களின் சரியான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன் அவர்களே
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு அவர்களே
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

பசுவுக்கு அதன் கன்று ஈனும் தருவாயில்அதன்
நச்சுக்கொடியில் போடும் மருந்துக்கு பெயரே
ஆக்சிடோசின் என்பது. அதிகப்படியான பால்
சுரப்பதர்காக போடப்படும் மருந்து இது.
இந்த மருந்தை ஏற்ற பசு, தன் உதிரம் தந்து
அதிகமான பால் சுரந்து பின்னர் தன்னையே
குறுகிய காலத்துக்குள் மாய்த்துக்கொள்கிறது.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன் அவர்களே,

கலப்படம் என்பது வியாபார நோக்கத்துடன்
சில மந்திகளால் செய்யப்படும் காரியம்.
அதன் விளைவுகளை நாம் எப்படியெல்லாம்
அனுபவிக்கிறோம் என்பது சொல்லி மாளாது.

தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர் அவர்களே,

கொடுமைதான் நண்பரே, ரோட்டோரம் இருக்கும் தேநீர்க் கடைகளிலும்
பால் கெட்டித் தன்மையுடன் இருப்பதற்காக ஜவ்வரிசி மாவை சேர்க்கிறார்கள்.

அதை வாங்கி குடிக்கிற நாம் தான் அனுபவிக்கிறோம்

Anonymous said...

கேட்ட கேள்விக்கு அருமையாக
பதிலளித்த நண்பரே.
விளக்கத்திற்கு நன்றி.

தென்னரசு

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA degree courses Chennai | Accountancy Coaching Centre in India | Finance Training Classes in Chennai | FIA training courses India | FIA Coaching classes Chennai | ACCA course details | Diploma in Accounting and Business | Performance Experience Requirements | Ethics and Professional Skills Module Professional Ethics Module | Foundation in professionalism | ACCA international and National Ranks | ACCA minimum Entry Requirement | ACCA subjects | Best tutors for ACCA, Chartered Accountancy | ACCA Professional level classes | ACCA Platinum Approved Learning Providers | SBL classes in Chennai | SBL classes in India | Strategic Business Leader classes in Chennai

Post a Comment