Powered By Blogger

Friday, 15 July 2011

விடை என்ன சொல்லிடடி??!!


ஒத்தையடி பாதையில
ஒத்தையாக போறவளே
மச்சான் நானும் கூட வாரேன்
சேர்ந்து பேசி போவோம் பெண்ணே!!

முறுக்குமீசை வைச்சவரே
இடும்பு எண்ணம் கொண்டவரே
சேர்ந்துபோக காத்திருக்கேன்
பக்கம் வந்து பேசு மச்சான்!!
ஒயிலான மயில் போல
ஒய்யார நடைபோட்டு
ஓவியமா போறவளே
விடுகதை நான் போடட்டுமா!!

தேக்குமரம் தோத்துபோகும்
தேகபலம் கொண்ட மச்சான்
விடுகதை போட்டிடுங்க
பதில  நானும் சொல்லிடுறேன்!!
ஆனை ஏறாத மலையில
ஆடு ஏறாத மலையில
ஆயிரம் பூ பூத்திருக்கு
பூவெல்லாம் கொட்டிருக்கு!!
அது என்ன சொல்லிடடி??!!

வக்கனையா வந்து இங்கே
விடுகதைய சொன்ன மச்சான்!
நீ சொன்ன மலையிங்க
வானமுன்னு சொல்லிடுவேன்
ஆயிரம் பூ என்பதெல்லாம்
நட்சத்திரப் பூதானே!!
இசபாடும் பூங்குயிலே
அழகான தாமரையே!
சரியாகச் சொல்லிபுட்டே!
ஓடோடும் சங்கிலி
உருண்டோடும் சங்கிலி
பள்ளத்தை கண்டா அங்கே
பாய்ந்தோடும் சங்கிலி!
அது என்ன சொல்லிடடி??!!

சிலிர்த்து நிற்கும் சிங்கம் போல
வீரநடை போடும் மச்சான்!
ஓடோடும் சங்கிலி
உருண்டோடும் சங்கிலி
தாகத்த தீர்த்து வைக்கும்
தண்ணீர்தானே இங்க
நீ சொன்ன சங்கிலி!!
குவளை மலர்க் கண்ணழகி
கொஞ்சி கொஞ்சி பேசும் கிளி!
அறிவாக சொல்லிபுட்ட
அடுத்ததையும் சொல்லிவிடு!
வலிமையான தேகமுண்டு
மேனியெல்லாம் சடையுமுண்டு
ஓங்கியடிச்சா அழுதிடுவான்
பிளந்தாலோ சிரித்திடுவான்!!
யாருன்னு சொல்லிடடி??!!

பொதிகை மலை பாறைபோல
தோளிரண்டும் கொண்ட மச்சான்!
இயல்பான விடுகதைக்கு
என் பதிலா கேளு மச்சான்!
வெளியில் பார்க்க வலிமையா
திறந்து பார்த்தா வெண்மையா
தினமும் நாம பயன்படுத்தும்
தென்னையோட பிள்ளையாம்
தேங்காயின்னு சொல்லிடுவேன்!!
எனக்குன்னு பொறந்தவளே
ஏகமாக வளர்ந்தவளே!
மல்லிப்பூ சூடிக்கொண்டு
மனச மயக்கி போறவளே!
நாங்கேட்ட கேள்விக்கெல்லாம்
பதிலைத்தான் சொல்லிபுட்ட
நீ இப்போ கேட்டுவிடு
பதில நானும் சொல்லிடுறேன்!!!

எனையாள வந்தவரே
என்னாசை கருத்த மச்சான்!
நான் சொல்லும் விடுகதைக்கு
விடையை நீங்க சொல்லிடுங்க!
அடைஞ்சதும் குறைஞ்சதிங்கே
விடிஞ்சதுமே ஏறிப்போச்சு
கட்டுப்படுத்த யாருமில்ல
காலனிங்கு இதுக்கு இல்ல!
அது என்ன சொல்லு மச்சான்??!!
ஆடுபுலி ஆடுறியே
அசைந்தாடும் அன்னக்கிளி
ஆழத் தேடிப்பார்த்தேன்
அகப்பட வில்லையடி !
பதிலெனக்கு பிடிபடல
பாங்காக சொல்லிடடி!!

கண்போல எனைகாக்கும்
கருத்தான சின்னமச்சான்!
அடைஞ்சதும் குறைஞ்சதிங்கே
விடிஞ்சதுமே ஏறிப்போச்சு
கட்டுப்படுத்த யாருமில்ல
காலனிங்கு இதுக்கு இல்ல!
என்று நான் சொன்னதெல்லாம்
விலைவாசி ஏற்றம் தானே!!!
உழைச்ச காசு தங்கவில்ல
வீடு வந்து சேரவில்ல
சிலகாசு சேர்த்துவைக்க
நேரமிங்கு கூடவில்ல!

பதுசான விடுகதைய
பக்குவமா சொன்னவளே!
விலைவாசி ஏற்றமிங்கு
வேடிக்கை காட்டுதடி!
விசுக்குன்னு ஏறிப்போகும்
விலைவாசி குறையலேன்னா
வெறுங்கஞ்சி குடிச்சிபுட்டு
வேலையத்தான் பார்த்திடுவோம்
வேறு என்ன நாம செய்ய??!!


அன்பன்
மகேந்திரன் 

19 comments:

PUTHIYATHENRAL said...

அழகான பதிவு! பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்! உங்கள் ப்ளாக் அழகாக இருந்தது. நன்றி.

PUTHIYATHENRAL said...

its very nice, keep it up

இராஜராஜேஸ்வரி said...

அழகான சுவையான விடுகதைகள்.பாராட்டுக்கள்.

M.R said...

கவிதை நடை விடுகதை அருமை

மகேந்திரன் said...

அன்பு நண்பர் புதியதென்றல்

தங்களின் பொற்பாதம் இங்கு பதித்தமைக்கும்
உங்களின் வாழ்த்துக்கும்
அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி

மகேந்திரன் said...

அன்புத் தோழி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு தோழர் எம்.ஆர்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான கவிதை...
விடைகள் நான் சொல்ல மாட்டேன்...

கூடல் பாலா said...

அசத்தல் .....அசத்தல் ...

kupps said...

கவிதை அருமை.கவிதையின் முடிவில் விலைவாசி ஏற்றத்தை குறிப்பிட்டது மேலும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...

ஆஹா....விடுகதையில் நாட்டு நடப்பையும் சேர்த்து கவிதையாடிய உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை. தொடரட்டும் தங்கள் பணி. விலைவாசி ஏற்றம் விடை காண்பதெப்போது? இதுவும் விடை தெரியா விடுகதைதான் நண்பரே.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
விடைகள் இங்கே மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது
விடை தெரியா விடுகதை தான் இது.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துரைக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கடம்பவனக் குயில்

சரியான கருத்துரைத்தீர்கள்,
விடைதெரியா விடுகதைதான்
விடை காண்பதெப்போதோ? தெரியவில்லை

தங்களின் பாராட்டுக்கும் கருத்துரைக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

குணசேகரன்... said...

அடடா..ஒரு அழகிய... கிராமத்து நடையில் ..ஒரு கவிதை..அத்தனை வரிகளும் அருமை..என்னோட டேஸ்ட்-ம் இது போலத்தான் ..பார்க்க என் முந்தைய பதிவுகள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்

தங்களுடைய சுவை என்னுடன் ஒத்துபோவது
கடவுளின் சித்தம்தான்.
உங்களது முந்தைய படைப்புகளை
நிச்சயம் வாசிக்கிறேன்.
தங்களின் கருத்துக்கு
மிக்க நன்றி.

நிரூபன் said...

வணக்கம் சகோ,
மண்வாசனை கலந்த கிராமிய மணங் கமழும் அருமையான தாளலயத்தில் அமைந்த கவிதையொன்றினூடாக, எம் மனங்களைக் கவரும் வகையில் விடுகதைப் புதிர் போட்ட கவிதைப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. கலக்கல்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்

தங்களின் நிறைவான கருத்துக்கு
மிக்க நன்றி.

Post a Comment