Tuesday, 5 July 2011

சாலைகளே!! சாலைகளே!!கருமேக கூட்டம் போல   
கவிழ்ந்திருக்கும் சாலைகளே!
கைகோர்த்து நடந்துபோகும் 
காதலராம் சாலைகளே!!

நெடுந்தூரம் பயணஞ்செய்யும் 
எடுப்பான சாலைகளே!
வடிவமுன்னு இல்லாம 
பலகோணம் காட்டுறீங்க!!கொடும்பாரம் சென்றாலும்
குழந்த போல சிரிக்குறியே!
பொறுமையின்னா என்னதுன்னு
உன்னைப்பார்த்து படிச்சிக்கனும்!!

ஒத்தையடிப் பாதையா 
ஓடிநின்ற போதிலே 
ஊருமக்க நடந்துசெல்ல 
உறுதுணையா இருந்தாயே!
வேலியாக  அங்கிருந்த  
வேலமரம் கதைசொல்லும்
வேலைக்கு நடுவிலே - நான்
ஓய்வெடுத்த கதைசொல்லும்!
உச்சி வகிடெடுத்து
நடுக்கோடு போட்டுக்கொண்டு
ரெட்டை வழிச்சாலையா
ரெண்டுபட்டு நின்னபோதும்!
ஊருவிட்டு ஊருபோக 
உசிதமாக துணையிருந்தாய்!! 

திசைகாட்டி கண்டதில்லை
பச்சை சிவப்பு என
போக்குகாட்டி பார்த்ததில்லை
உன்மேல பயணம்போன
எம்மக்க எல்லோரும்
எந்த துன்பம் இல்லாம
வீடுவந்து சேர்ந்தாங்க!!
மக்கள்தொகை பெருகிபோச்சு
வாகனங்கள் கூடிப்போச்சு
சந்திக்கும் சாலையெல்லாம்
போக்குகாட்டி பெருத்துப்போச்சு!!

சிவப்பு இன்னும் மாறவில்லை
பச்சைக்கு போகவில்லை
பாவிமகன் உனக்கு இங்கே
பொறுத்திருக்க நேரமில்லை!
ஒருநாழிகை பொருத்திருந்தா
உன்குடி முழுகிடுமா!!
 

நாலுவழிச் சாலையின்னு
நாசூக்கா போட்டோமைய்யா!!
நாசாவுக்கு போறதுபோல்
ரெக்கைகட்டி பறக்குறியே!!

பத்தடிக்கு ஒருமுறை
வேகமுன்னா இவ்வளவுன்னு
எழுதி அங்கே வைச்சாலும் - அத
பார்க்கக் கூட நேரமில்ல - உனக்கு
பார்வை என்ன கெட்டுப்போச்சா?!!

போக்குவரத்து விதிகளெல்லாம்
பக்குவமாத்தான் இருக்குதைய்யா!
படிச்சிருந்தும்  எம்மக்கா
பழகிக்கொள்ள மறுக்குறீங்க
பார்வையற்று போன நீயோ
பாடையிலே போவதேனோ?!!

நாலுகாச கொட்டி நம்ம
அரசாங்கம் இப்போதான்
சாலை நல்லா போட்டிருக்கு
சாலையில போற நமக்கு
சாகசங்கள் கூடாதுய்யா!!

சொகுசான வாகனத்தில்
சவுரியமா போகையிலே
உன்வரவை எதிர்பார்த்து
காத்திருக்கும் குடும்பமின்னு
மனசில் வர வேணுமைய்யா!!
வேகத்தை குறைச்சிபுட்டு 
விவேகத்தை வளர்த்துக்கோய்யா!!

கழுத்தை நல்லா சாய்ச்சுக்கிட்டு 
காதருகில் வைச்சுகிட்டு
ஒட்டிக்கொண்டு பேசுறியே
அலைபேசி  எப்போ
கலுத்துபேசி ஆனதைய்யா??!!
ஓரமா நின்னு ஒத்தவார்த்தை  
பேசிவிட்டு போறதுக்கு
ஒருவருஷம் ஆகுமாய்யா?!!

விபத்தெல்லாம் நடப்பதில்லை
நமக்கு நாமே இங்கே
நடத்திக்கொள்ளும் நாடகமே
கொஞ்சமேனும் புத்தியோட
சாலையில போனீங்கன்னா!
சொகுசான வாகனம்
சேதமின்றி மிஞ்சுமைய்யா- நித்தம்
சோறுபோட்டு வளர்க்கும்
உடம்பும் உயிரும்
உனக்கிருக்கும் புரிஞ்சிக்கோய்யா  !!!

அன்பன்
மகேந்திரன்

12 comments:

அம்பாளடியாள் said...

சிந்திக்க வைக்கும் அழகான
சீர்திருத்தக் கவிதை அருமை அருமை அருமை!.......

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

koodal bala said...

ச்சே ......என்ன அருமையான விழிப்புணர்வு .அதுவும் கவிதை வடிவத்தில் ......பின்னிட்டீங்க ....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//பத்தடிக்கு ஒருமுறை
வேகமுன்னா இவ்வளவுன்னு
எழுதி அங்கே வைச்சாலும் - அத
பார்க்கக் கூட நேரமில்ல - உனக்கு
பார்வை என்ன கேட்டுப்போச்சா?!!///

உண்மைதான் நண்பரே
யாருமே சாலைவிதிகளை மதிப்பதில்லை..

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது..

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருககுது

என்பதாய் இருக்கிறது இன்றைய நாடு..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வாகனங்களை ஓட்டும்போது
செல் போன் மணி அடித்தால்
எடுக்காதீர்கள்

அழைப்பது எமனாகவும் இருக்கலாம்
என்ற வாசகங்கள் நினைவுக்கு வருகிறது.

நல்ல விழிப்புணர்வை தரும் ஆக்கம்..

வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Anonymous said...

அருமையான விழிப்புணர்வு கவிதை
என்ன சொன்னாலும் நம்ம ஆளுக
சிக்னல் பைபாஸ் செய்றதில கில்லாடிக

திருந்தட்டும் நம் மக்கள்
தலைக்கவசம் அணியுங்கள்

தென்னரசு

# கவிதை வீதி # சௌந்தர் said...

அத்ததனை அம்சங்களும் நிறைந்த விழிப்புணர்வு கவிதை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

சாலை விதிகளை கடைபிடிக்க வில்லை யென்றால் அதற்கான விளைவை அனுபவித்தே தீர வேண்டும்...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா

தங்களின் சிறப்பான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

///வாகனங்களை ஓட்டும்போது
செல் போன் மணி அடித்தால்
எடுக்காதீர்கள்

அழைப்பது எமனாகவும் இருக்கலாம்
என்ற வாசகங்கள் நினைவுக்கு வருகிறது.////

அன்பு நண்பர் ஜானகிராமன்

சரியான கருத்துரைத்தீர்கள்.
போக்குவரத்து விதிகளை
மதிப்பதன் மூலம்
நம் விலைமதிப்பில்லா
உயிரைக்காத்துக்கொள்ளலாம்

தங்களின் கருத்துரைக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு

வருமுன் காப்பது போல்
தலைக்கு கவசம் அணிந்து
இருசக்கர வாகனம் ஓட்டுவது
நல்லது.
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்

படைப்பின் மீதான தங்களின்
கருத்துக்கு மிக்க நன்றி.

நீங்கள் கூறியது போல்
தவறு செய்தவன்
தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.

தெரிந்தே தவறு செய்வதை தவிர்ப்போம்.

Post a Comment