Sunday, 3 July 2011

செல்லிடப்பேசி!!


எங்கிருந்தாய் என அறியேன்
தங்கிவிட்டாய் என்னுடனே!!
காததூரம் கடந்தாலும்
காதருகில் பேசுகிறாய்!!மணிப் புறாவின் காலின்பால்
கட்டிவைத்த செய்திக்கு!!
வாரக்கணக்கில் காத்திருந்தோம்
வரவேண்டிய பதிலுக்கு!!

கடிதமென உருவெடுத்தாய்
மடிப்புநிலை மாறாமல்!!
நாட்கணக்கில் காத்திருந்தோம்
எமக்கான பதிலுக்கு!!

தந்தியாக மாற்றுருவில்
மந்தியென தாவினாய்!!
மணிக்கணக்கில் காத்திருந்தோம்
மணியான பதிலுக்கு!!


கம்பித் தொடர்பினால்
இருந்த இடத்தினில்
தரணியெல்லாம் பேசச்செய்ய
தரையிணைப்பாய் மாறினாய்!!
நிம்மதிப் பெருமூச்சில்
நீண்ட தூர உறவுகளை
நிமிடத்தில் பிடித்தோம்!!

மின்காந்த அலைகளை
கதிரியக்க வீச்சுக்களாய்
கோபுரங்கள் கட்டி
சொல்லவந்த செய்தியை
செல்லுமிடம் ஏதேனும்
நொடிப்பொழுதில் பரிமாற்ற
செல்லிடப்பேசியாய் மாறினாய்!!

எண்ணிய எண்ணங்களை
எண்ணிய இடத்தினில்
பரிமாற்றம் செய்ய
பாங்காக கிடைத்தாயே!

மின்காந்த சிற்றலையால்
மிகப்பெரிய பாதிப்பென
மிடுக்கான செய்தியெலாம்
மிரட்டிச் சென்றதுவே!!

பால்ய பருவத்தில் - நான்
கண்டிலா உன்னுருவை
விளையாட்டுப் பொருளாக
என் குழந்தை ஆக்கியதை
வேடிக்கையாய் பார்த்தேனே!!

உன்னை ஒன்று கேட்கிறேன்?!
இளம்பிஞ்சு குழந்தைகளின்
காதருகில் செல்லவுமே
மின்காந்த அலைகளை
மூளைக்குள் பாய்ச்சி
புற்றுநோயை பரப்புவதாய்
காற்றில் வந்த செய்திகேட்டேன்
இரக்கமற்ற அரக்கனா நீ??!!

ஆடவரின் அணுக்குள் ஏறி
ஆண்மையை அழிப்பதாக
ஆதங்க செய்திகேட்டேன்
புலனற்ற பூதமா நீ?!!அழகுத்தமிழ் ஆனந்தமாய்
செல்லிடப்பேசி என
செல்லமாக பெயர்வைக்க
செந்தமிழை நீ ஏய்ச்சி
கொல்லிடப்பேசியாய் மாறினாய்!!
குற்றம் நீ செய்தாலும் 
ஏற்றுக்கொண்டார் எம்மவர்
ஏறிவந்த பாதையில்
இறங்கிச் செல்ல தெரியாமல்!!

உன் குணத்தை உன்னால்
மாற்றிக்கொள்ள இயலாது!
என் தேவையை என்னால்
குறைத்துக்கொள்ள முடியுமே!!!

அன்பன்
மகேந்திரன்
11 comments:

koodal bala said...

செல் பேசியை கொல் பேசியாக்கியிருக்கிறீர்கள் ......சரிதான் .

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

Anonymous said...

அது சரி ...
புகழ்வது போல புகழ்ந்து
கடைசில போட்டுத் தள்ளுவதுதான்
உங்கள் வேலையா???!!!

இயல்பான கவிதை நடை

தென்னரசு

akilan said...

தகவல் தொடர்பின் படிப்படியான
முன்னேற்றத்தையும்
அதன் பாதிப்புகளையும்
சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள்

வரிகள் இயல்பாக இருக்கிறது

நன்று

அகிலன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
உன் குணத்தை உன்னால்
மாற்றிக்கொள்ள இயலாது!
என் தேவையை என்னால்
குறைத்துக்கொள்ள முடியுமே!!!///////

இதை தவிர்த்து யாரும் வாழ்ந்துவிட முடியாத நிலை வந்து விட்டது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

தகவல் தொலை தொடர்பை அதன் வரலாற்றை அப்படியே கவிதையில் தந்து அநததியுள்ளீர்....

அருமை.
வாழ்த்துக்கள்..

குணசேகரன்... said...

பாஸ்..கலக்கறீங்க...

என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு

நல்லதையும் கேட்டதையும் கலந்து கூறுவது தானே நல்லது
அதனால்தான் இப்படி எழுதினேன்.

தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்

நீங்கள் கூறியது முற்றிலும் சரியே
இன்றைய சூழலில் செல்லிடப்பேசியை
தவிர்ப்பதென்பது கொஞ்சம் கடினமான செயல் தான்
குறைத்துக்கொண்டால் நம் உடல்நிலைக்கு நல்லது
என்பதே என் கருத்து.

உங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்

தங்களின் அன்பிற்கினிய கருத்துக்கு
மிக்க நன்றி.
நிச்சயம் தங்களின் வலைத்தளத்துக்கு
வருகிறேன்.

Post a Comment