Powered By Blogger

Monday, 3 December 2012

கல்வெட்டுக் காவியம்!!


ஆள்பாதி ஆடைபாதி
என்றார்கள்!
புரியாமல் விழித்தேன்!
அரையாடை மனிதன்
என்றார்கள்!
பொருள் விளங்காது தவித்தேன்!
என்னிரு விழிகளிலே
உன்பிம்பம் விழும் வரை!!



வறுமைக்கோடு என்பதற்கு
உன் குறுக்கெலும்புக் கோடுகளை
விழியேற்ற பின்தான்
அருஞ்சொற்பொருள் விளங்கிற்று!!



ஓங்கிய சுத்தியலால்
ஓராயிரம் கற்கள் பிளந்தும்
உன் வாழ்நிலை மாறிட - அதன்
வெம்மை தாழ்ந்திட
காலம் கனியவில்லையோ?!!
கனியுமென்று காத்திருந்து
கவளமுனக்கு இறங்கவில்லையோ?!
பணிகொடுத்த பண்பாளரும்
உன்னிலை ஏற்றிடுவேன் - என
பொய்யை மட்டுமே உரைத்த
வெள்ளை வேட்டி மைந்தர்களும்
நட்டாற்றில் விட்டனரோ??!!

அறம் தவறியும்
அரசியல் பிழைத்தும்
கையூட்டுக் காசில்
கடைவாய் தெரிய
சிரித்தும் பிழைப்போர்கள்
உன் காலடியில் கிடக்கும்
கற்களின் தூசிக்கு
இணையாம் போ!!


உன் வாழ்நாள் மாறும்
ஓ
ரு நாள்!
உன் சந்ததியினர்
படித்து வருவர்!
உன்னுடல் தந்த  உழைப்பையும்
உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!


அன்பன்
மகேந்திரன்

Wednesday, 28 November 2012

காதலால் கசிந்துருகி....!!!







விழிகள் இரண்டும்
வியர்த்துப் போகின்றன
வயங்கு நகைபூக்கும்
விழுநிதியாம் உன்னழகை 
வியந்து நோக்கையிலே!!
 
 
இயக்கமற்றுப் போன 
இதயத்தின் செல்கள் கூட 
இயல்பு நிலைமாறியதே - உன்
இறும்பூது வடிவினை
இவணம் காண்கையிலே!!
 

 


செயல் பூர்த்தி செய்யும் 
சுரைக் கரங்கள் இங்கே - உன்
சிலம்பும் அழகு கண்டு
சித்தம் தழுவிட
சிந்தையில் துடிக்கின்றதே!!
 
 
வலந்த வெப்பக்காற்றினை 
விருப்பமின்றி சுவாசிக்கும் 
விரிந்த நாசியிங்கே - உன் 
வீறுசால்  சித்திரம் கண்டு 
வெண்குளிரென  நினைத்ததுவே!!
 
 
குளிர்காற்றின் வேகத்தில்
கொள்ளியின் இதம் தேடும்  
குருதியின் தன்மை கூட - உன்
கிளர்மிளிர் வடிவம் கண்டு
கொதிநிலை ஏகியதே!!
 
 
அஞர் என்னைத் தீண்டிடினும்
ஆரணங்கே உனைக்கண்டால்
அரந்தை கைவிடுத்து - என்றும்  
அளவிலாத ஆனந்தமதை
அவயமெங்கும் உணர்கின்றேன்!!
 
 
உறுப்புகள் சோர்ந்திருக்கும்
உலர்ந்த பொழுதினிலே - உன் 
உருவகம் கண்டாலோ 
உக்க நிலையெனக்கு 
உச்சியில் நிலைகொள்ளும்!! 
 
 
கணம் தோறும் கணம் தோறும்
கவின்மிகு அழகுருவாய்
களிநடமிடும் மயிலுனை
கண்ணுற்று நோக்கிடுகையில்
காதலால்  கசிந்துருகுகிறேன்!!
 
 
முகிழ்ந்த மலராய்
மகிழ்ந்து விரிகின்றேன் 
மங்காத புகழ்கொண்ட
மதுரத்தேன் சுவைகொண்ட
மாதவமே உனைக்கண்டு!!

கனத்த  வில்லினின்று - இன்பக்
கணையொன்று பாய்ந்ததுபோல்
களிநகை புரிகின்றேன்
கன்னித்தழிழே உனைக்கண்டு
கணமொன்று மீதமின்றி - உன்மேல்
காதலால் கசிந்துருகுகிறேன்!!!

 
 
 
சொல்லுக்கான பொருள் விளக்கம்:
==============================
 
விழுநிதி -------------------- சிறந்த செல்வம் 
வயங்கு --------------------- ஒளியுடைய  
இறும்பூது ------------------  வியப்பு (அல்லது) அதிசயம்
இவணம் -------------------   இங்கே
சுரை ------------------------   வலிவுடைய
சிலம்பும் ------------------   ஆரவாரிக்கும்
கடுங்கண் -----------------  கொடூரமான
வலந்த --------------------    பரவிய 
வீறுசால் -------------------  மதிப்பிற்கு உரிய
கிளர்மிளிர் ---------------    மிகுந்த ஒளியுடைய
அஞர் ------------------------  மனவருத்தம்
அரந்தை -------------------   வருந்துதல்
உக்க ------------------------  தெளிவு   
 
 
 
அன்பன்
மகேந்திரன் 

Saturday, 24 November 2012

விடியாமலா போய்விடும்!!


மணல்மேட்டில் நின்றிருந்து
மலைமுகட்டைப் பார்த்திருந்தேன்!
தலைதூக்கி நான்பார்த்து
கழுத்து சுளுக்கிப் போயிருந்தேன்!!

அங்கங்கே சிதறிப்போன
சின்னஞ்சிறு துகள்களை
முதுகிலே சுமந்த நான்
சிறுமரக்கட்டை ஏந்தியங்கே 
மலையேற துணிவுடன்!!


சிகரத்தில் ஏறத்துணிந்த 
சிற்றெறும்பு எனைப்பார்த்து
சிறுமதி கொண்டாயோ - என
ஏளனமாய் பார்த்தனர்
சுற்றத்துப் பெருமக்கள்!!


முடியும் என்பது - எனக்கு
விடியாமலா போய்விடும்!
முயற்சி என்பதை
முதுகெலும்பு வேர்த்திட
முகிலிறக்கி கொண்டுவந்தேன்!!


நம்பிக்கை எனும்
நயமான கருப்பொருளை
நடுநெஞ்சில் உருவேற்றி
நானூறு முறை சறுக்கி
நானும் முயன்றுவந்தேன்!!


உதயத்தில் ஆரம்பித்தேன்
உச்சிப்பொழுதிலும் இயலவில்லை
உதயனன் நீயோ
அரூபமாகும் வேளையிலே
வடிவான முகடேறி
வாகைமாலை சூடிவிட்டேன்!!


அன்பன்
மகேந்திரன்

Thursday, 22 November 2012

சிற்றிறகு விரித்துவிடு !!


சிற்றலைகள் சிரித்திருக்கும்
சிற்றாற்றின் கரைதனிலே!
சிறப்பாக நடைபோடும்
சின்னஞ்சிறு பறவையே!!
 
 
அங்கே என்ன தேடுகிறாய்?
அலகினில் ஏந்திவந்த
இரை ஏதும் வீழ்ந்ததுவா?!
சிறுகூட்டின் சிற்றடுக்கிற்காய்
வெகுதூரம் தூக்கிவந்த
சிறுகுச்சி வீழ்ந்ததுவா?!!


தொலைத்த பொருளதை
தீர்க்கமாய் தேடுகிறாயோ? 
கொளுத்த மீன்கள் வருமென்று
கொடிநடை போடுகிறாயோ?!!


தேடல்கள் ஒருபோதும்
தேங்கி நிற்காது!
தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு
சிட்டாகப் பறந்துவிடு!
அடுத்த நொடியின்
நம்பிக்கையை தேடிடு!!



அன்பன்
மகேந்திரன்