Powered By Blogger

Tuesday, 12 March 2013

நிழற்படக் கவிதைகள் - 1


நீர்ப்பந்தல்:!!


மெல்லத் திறக்கிறேன்
என்னையே பிடுங்கித் தின்னும்
உள்ளார்ந்த உணர்வுகளை!
உள்ளங்கை தீரம்விட்டு
நீர்ப்பந்தல் போடுகிறேன்
உணர்வுகளின் வெப்பம் தணிக்க!!







வளிவழி பயணிப்போம்!!


விதியின் வழியினில்
விழுதுகள் விட்டு
பிரபஞ்சம் செல்லும்
எனக்கான பயணத்தில்
துணையாய் வருவேனென
தோள்மீது தொற்றிக்கொண்டாய்
வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!






அன்பன்
மகேந்திரன்

Friday, 8 March 2013

உப்பரிகை மிதப்பு!!







அன்றொரு நாள் 
அதிகாலை வேளையில்! 
அகண்ட வீதியின்
அக்கறை காட்சிகளின்  
அழகினை இரசித்தபடி 
அகக்கண் விரித்திருந்தேன்!!
 

விழித்து எழுந்ததும் 
வியாபித்த சோம்பலை
விரல்சொடுக்கி நீக்கியபின்!
விடியலின் அழகினில் 
வீதியின் காட்சிகாண 
உப்பரிகை நின்றிருந்தேன்!!
 

 


சாலையின் நீட்சியில் 
சாதுவான ஞமலி ஒன்று! 
சாதிக்க துடிப்பதுபோல் 
சீராக மூச்சிறைக்க 
சமதூர இடைவெளியில் 
சாகசம் காட்டியது!!
 

ஏனிந்த சாகசம் 
ஏதேனும் அவசரமோ?
ஏந்திவந்த பொருளொன்றை 
எங்கேயும் வைத்ததுவோ?
ஏதோ தொலைத்ததுபோல் 
ஏக்கமாய் அலைவது ஏன்??!!
 
 
கடந்தது மணித்துளி 
கதிரவன் கண்விழித்தான்!
களைத்தது ஞமலி 
கருங்கல் மேடொன்றில் 
கனிவாய் அமர்ந்தது 
காரணம் ஏதுமின்றி!!
 

திகைத்துப் போனேன் 
திரைவிரித்த காட்சியில்! 
நகைத்து மீண்டேன் 
நரனென்ற ஆணவத்தில் 
உவகை கொண்டேன் 
உப்பரிகை மிதப்பினில்!!


சொல்லுக்கு பொருள்:

ஞமலி: நாய் 


 
 
அன்பன் 
மகேந்திரன் 

 

Saturday, 2 March 2013

நகக்கீறல் இடைவெளிகள்!!!






மறந்துபோன நினைவுகளும்

துறந்துபோன உணர்வுகளும்
கறந்துவைத்த பசும்பாலாய்
நுரைபொங்கி நிற்கிறது
சிறையுண்ட எனதுளத்தில்!!
 
எந்தன் நிலையெண்ணி
சிந்தையைச் சுரண்டும் நான்
முந்தைய நாட்களுக்குள்
முகம்புதைத்துப் போகிறேன்
முடிவிலியின் அச்சத்தில்!!
 

 


கற்பனை சித்திரங்களுக்கு
தூரிகை சமைக்கையில்
கற்பூர வில்லைகளாய்
காற்றில் கரைந்துபோயின
நிகழ்கால முயற்சிகள்!!

தன்னிலையில் நிறைவுறாது
முன்னிலையின் தன்மையை
எந்நாளும் சிந்தித்தே
இந்நாளின் தண்மைதனை
வெந்நீராய் மாற்றுவதேன்?!!
 
 
ஒப்பிட்டு பார்த்தே 
உமிழ்நீர் விழுங்குகிறேன் 
முன்னவரின் திறமைகண்டு 
ஒவ்வாமை நோயால் 
ஓரடி பின்வைக்கிறேன்!!
 
உள்ளங்கை நெல்லியின் 
சுவையுணர தவறிட்டு 
எட்டாக் கனிக்காக 
முட்டு தேய நடக்கிறோம் 
சற்றும் சளைக்காமல்!!
 
 
கரும்பென்று நினைத்து 
இரும்பைக் கடிக்க இயலுமா?
விழிவிரித்த பாதையில் 
விரிசல் இல்லா முயற்சியுடன் 
வீறுநடை போடுவோம்!!
 
திண்டின்மீது ஏறிவிட்டு 
குன்றின்மீது  ஏறியதுபோல்
கூப்பாடு போடாது
குவலயம் சிறந்திட 
குறுஞ்செயல் ஒன்று செய்வோம்!!
 
 
அரிதான பிறப்பிதனின்
நெடுந்தூர பயணத்தை
கடந்தேறி வென்றிட
ஊசிப்போன உணர்சிகளை
உள்ளுக்குள் புதைத்துவிட்டு
நகக்கீறல் இடைவெளியில்
நன்சரித்திரம் படைத்திடுவோம்!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 

Wednesday, 16 January 2013

நிழற்படக் கவிதைகள்.....!!!

வணக்கம் தோழமைகளே...
முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....


பனிக்குமிழ்  நெஞ்சம்!!


தொட்டுத் தொடர்ந்துவரும்
பட்டுப்போன முகமூடிகள்
சிறுகட்டத்தில் மோதிநிற்கும்
திமில்நிறை எறுதுகளாய்!!
மோதலுக்குப் பின்வரும்
விளைவுகளை நினைத்து
தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர் விழுங்கினேன்
தனிச்சிமிழாம் என் நெஞ்சம்
பனிக்குமிழாய் சிதறிடுமோ??!!!




எழில் வண்ண நினைவுகள்!!


விழியலர்ந்த வேளையிலே
குழம்பிய ஓடையில்
தளும்பிய அலைகளினூடே
பளிங்குக் கனவுகளை!!
குலுங்கிய விருட்சத்தினின்று
விழுந்த இலைகொண்டு
நெகிழும் ஒடமாக்கினேன்!
விழிபிரித்துப் பார்க்கையிலே
வழிநெடுக பசுமையாய்
எழில்வண்ண நினைவுகள்!!!



அன்பன்
மகேந்திரன்