தன்னானே தனேனன்னே
தானானே தானேனன்னே
தன்னானே நானனன்னே - தன்ன நனனே
தானானே தானேனன்னே
தன்ன நனனே!!
தாமரைப்பூ பாதம் வைச்சு
தளுக்கு நடை போட்டுக்கிட்டு
தனியாகப் போறவளே - தங்க மயிலே
தளுக்கு நடை போட்டுக்கிட்டு
தனியாகப் போறவளே - தங்க மயிலே
தவியா நான் தவிச்சிருக்கேன்
பொன்னு மயிலே!!
பள்ளபட்டி பருத்திவேட்டி
பாங்காக கட்டிக்கிட்டு
வரப்புமேல நிற்பவரே - ஆசை மாமோய்
சித்த நேரம் பொருத்திருங்க
நேச மாமோய்!!
வைகாசி பொறந்திருச்சி
வாழையெல்லாம் விளைஞ்சிருச்சி
பரிசம் போட நாள்பார்த்து - தங்க மயிலே
பட்டெடுத்து நானும்வாரேன்
பொன்னு மயிலே!!
இங்க வைச்சி சொல்லுறியே
எனக்கு வெக்கம் ஆகுதய்யா!
அந்தநாள பார்த்துத்தானே - ஆசை மாமோய்
என் உசிரு காத்திருக்கு
நேச மாமோய்!!
எங்காத்தா பேச்சியம்மா
உன்னப்பத்தி பேசயில!
மங்காத தங்கமின்னு - தங்க மயிலே
மனசார சொல்லுறாக
பொன்னு மயிலே!!
ஆனையூரு அங்காளம்மா
அருளாலே கிடைச்சதய்யா!
பாசமான மாமியாரு - ஆசை மாமோய்
பக்குவமா நடந்துக்குவேன்
நேச மாமோய்!!
கருவேல மரமிருக்கு
மரத்தின் கீழே நிழலிருக்கு!
நிழலிலத்தான் நானிருக்கேன் - தங்க மயிலே
நீச்சத் தண்ணி கொண்டுவாடி
பொன்னு மயிலே!!
நெசமாத்தான் சொல்லுறியா
எனக்கு வெக்கம் ஆகுதய்யா!
வேலைவெட்டி முடிஞ்சுதாய்யா - ஆசை மாமோய்
வக்கனையா கூப்பிடுற
நேச மாமோய்!!
மழைதண்ணி ஏதுமில்ல
மடையெல்லாம் காய்ஞ்சி போச்சி!
போட்டவிதை அத்தனையும் - தங்க மயிலே
கருகுமணி ஆகிப்போச்சி
பொன்னு மயிலே!!
எவ்வுசிரு உருகுதய்யா
மனசெல்லாம் மருகுதய்யா!
நான் வரும் வேளையிலே - ஆசை மாமோய்
வெள்ளாமை வெளுத்துப்போச்சே
நேச மாமோய்!!
அப்படி நீ பேசாதடி
அத்தபெத்த அன்னக்கிளியே!
ஆறுபோகம் விளைஞ்சாலும் - தங்க மயிலே
உன்னைப்போல கிடைக்காதடி
பொன்னு மயிலே!!
களத்திலுள்ள நெல்லுமணி
கண்ணுக்கெட்டி காணவில்லை!
அடுத்த போகம் எதிர்பார்த்து - ஆசை மாமோய்
கண்ணுபூத்து காத்திருப்போம்
நேச மாமோய்!!
மழைதண்ணி பெஞ்சாக்கூட
மலைச்சி போச்சி நெஞ்சமெல்லாம்!
பேசாம விளைநிலத்த - தங்க மயிலே
கட்டம்கட்டி வித்திடலாம்
பொன்னு மயிலே!!
என்னசொல்லு சொல்லிபுட்ட
எவ்வுசிரே போச்சிதய்யா!
அந்த தப்பு செய்யாதய்யா - ஆசை மாமோய்
அறிஞ்சி விசம் குடிக்காதய்யா
நேச மாமோய்!!
எம்பொழைப்ப பார்த்துபுட்டு
ஏதாச்சும் சொல்லு புள்ள!
ஏறுபிடிச்சி நாளாச்சி - தங்க மயிலே
ஏக்கத்தில நானிருக்கேன்
பொன்னு மயிலே!!
நம்மைபோல ஆளுகலெல்லாம்
விளைநிலத்த வித்துபுட்டா!
வருங்கால சந்ததியெல்லாம் - ஆசை மாமோய்
வெறிச்சோடி போகுமய்யா
நேச மாமோய்!!
மண்ணளக்கும் மாரியாத்தா
மழையாகப் பொழிஞ்சிடுவா!
படியளக்கும் எஞ்சாமி - ஆசை மாமோய்
ஒடிஞ்சி நீயும் போகாதய்யா
நேச மாமோய்!!
சொன்னசொல்லு புரிஞ்சுதடி
சொக்கத்தங்க பூமயிலே!
பொன்விளையும் பூமியிதை - சொர்ணக் கிளியே
விலைநிலமா ஆக்கமாட்டேன்
வண்ணக் கிளியே!!
இந்தசொல்ல கேட்டதுமே
எம்மனசு குளுந்துபோச்சி!
கருவேல நிழலெதுக்கு - ஆசை மாமோய்
நிழல்போல மடியிருக்க
நேச மாமோய்!!
அன்பன்
மகேந்திரன்















