Powered By Blogger

Monday 28 November 2011

அரிதார அவதாரம்!!!!


கண்ணைப்பறிக்கும் வண்ணத்தாலே
கொண்டிபோட்டு இழுக்கிறாயே!
வண்ணத்திலே உனக்கிணையா
யாருமில்ல என்றுசொல்லி
சந்தைக்கு வந்தபின்னும்
பம்மாத்து காட்டுறியே!!

செஞ்சாந்து நிறத்தைப்போல
செம்பட்டு உடுத்திவந்து
சீமைக்கு வந்ததுபோல்
மந்தைக்கு நடுவிலே
மந்தாரக் கொண்டையோட  
மஞ்சம்போட்டு மயக்குறியே!!






சிலுக்குப் பைக்குள்ளே
சில்லறைய போட்டுக்கிட்டு
சித்தார நடைபோட்டு
சின்னமனூர் தேர் போல
குலுக்கிநடை போட்டுவந்து
கிளுக்குன்னு சிரிக்கிறியே!!

பார்த்ததுமே மதிமயக்கும்
ரம்பைபோல இருக்குறியே!
சலசலன்னு மனமயக்கும்
வெள்ளிகொலுசு ஓசையெல்லாம்
தள்ளிபோக சொல்லிவிட்டு
எள்ளிநகை ஆடுறியே!!




பொண்ணுபார்க்க போகும்போது
சிவத்தபொண்ணு வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்பதுபோல!
வற்றல் வாங்க போனாலும்
வற்றல்பொடி வாங்க போனாலும்!
சிவப்புநிறத்தில் வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்கிறோமே!!

சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
போக்கத்தவன் எவனோ
உன்காதில் சொல்லிவைக்க!
நிறம்நாடி நீ போனதும்
கலப்படம் அங்கே
அரிதாரம் போட்டுச்சய்யா!!




சூளையிலே சிதறுண்ட
செங்கல் சிதறல்களை
அள்ளிக் கொண்டுவந்து
அழகாக பொடிசெய்து
வற்றல்பொடியோடு கலந்து
நிறத்துக்கு நிறமாச்சு
எடைக்கு எடையாச்சுன்னு
இயங்கிய இதயமதை
கழற்றி வைத்துவிட்டு
வியாபாரம் செய்தனரே!!


அடுத்து யோசித்தான்
இரக்கமற்ற அரக்கனவன்!
அழிவுப் பாதைக்கு
ஆக்கமிகு அறிவியலை
அவனுக்காய் துணைக்கழைத்தான்!  
வெகுளியாய் வேதியியலும்
மகுடிக்கு மயங்கி
உடன்போக்கு போச்சுதய்யா!!




பழுப்புநிற வற்றலையும்
சிவத்தநிறம் ஆக்கிவிட
"சூடான் ரெட்" எனும் 
சூட்சும சாயப்பொருளை
சூத்திரம் கைகொண்டு
சூசகமாய் கலந்தனரே!! 

"சூடான் ரெட்" கலந்ததுமே
புதுமணப் பெண்ணாக
புதுப்பொலிவு கொண்டதுபோல்
தன்னுள்ளே நஞ்சேற்றி 
தளுக்குநடை சுந்தரியாய்
விற்பனைக்கு வந்ததய்யா !!




செழித்து நிற்கும் வண்ணமெல்லாம்
செயற்கையின்னு தெரியாம
வாங்கிவந்து உணவிலே
பக்குவமா போட்டனரே!
சாப்பிட்டு முடித்ததுமே
வயிற்றெரிச்சல் வாந்தியின்னு
பல நோய்கள் வந்ததுவே
பாழாய்ப்போன கலப்படத்தால்!!




மனசைக் கொஞ்சம் தேத்திகோங்க
நான் சொல்லும் சேதிகேட்டு!
"சூடான் ரெட்" வேதிப்பொருள்
மெல்ல மெல்ல உடல்புகுந்து
ரத்தத்தில் தான் கலந்து
மரபணு மூலக்கூறை
மாற்றி போடுதுன்னு
அறிவியல் சொல்லுதய்யா!!




அதுமட்டும் இல்லையப்பா
இதையும் கேட்டுகோங்க
உயிர்க்கொல்லி நோயான
கல்லீரல் புற்று நோயை
கமுக்கமாக வளர்க்குதுன்னு
காதிலே விழுந்துச்சய்யா!!

வெம்பாடு படுவதெல்லாம்
ஒருசாண் வயித்துக்குதான்!
சாப்பிடும் பொருட்களிலே
வியாபார நோக்கத்திலே
மனசாட்சி இல்லாம
கலப்படம் செய்றவனே!
உன்னைப்போல எல்லோரும்
கலப்படத்த செய்திட்டா
பசியின்னு வரும்போது - நான்
உண்ணும் பொருளெல்லாம்
உயிர்க்கொல்லியா மாறிப்போனா
என்னத்த நானும் திங்க??!
மண்ணைத் தவிர ஒண்ணுமில்ல!!


அன்பன்
மகேந்திரன் 

68 comments:

Unknown said...

கலக்கிபுட்டியேய்யா மாப்ள...என்னத்த நான் தின்ன மண்ணை தவிர வேறொன்னுமில்ல!

arasan said...

கம்பீர வணக்கம் அன்பருக்கு ...

வியாபார நோக்கத்தில இந்த உலகம் போற போக்கை வன்மையா கண்டிச்ச உங்களை மனதார பாராட்டுகிறேன் சார் ..
தெளிவான வார்த்தைகளை தொடுத்து பெரிய சமூக விழிப்புணர்வு கவிதை வழங்கி, விளைவுகளை தெள்ளத்தெளிவா சொல்லி இருக்கீங்க ..
இறுதியில் முடிச்ச விதம் அழகு அருமை... வலிமை .. மண்ணும் வர வர கலப்படம் அடையுது உரம் மற்றும் பூசுக்கொல்லியால் .....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனை வரிகளும் அமர்களப்படுத்துகிறது...

எல்லாவற்றிலும் கவித்தும் காணும் தங்கள் திறனுக்கு தலைவணங்குகிறேன்..

வாழ்த்துக்கள்..

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
பேராசை பிடித்த வியாபாரிகள் செய்யும் கலப்படம் அதிர்ச்சி அளிக்கிறது.. உயிரோடு விளையாடும் இவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்..

எனது பதிவில் எனக்கு பிடித்த “வசந்த மண்டபம்” லிங் போடலாம் என்று இருக்கிறேன்..

பகிர்வுக்கு நன்றி..

Unknown said...

கலப்படம் செய்யும் பாவிகளை
நடுத் தெருவில் வைத்து நல்ல
கசையடி தரவேண்டும்
கவிதையில் இயல்பாக
பாடும் கிராமிய மணத்தில் கலப் படம் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்
நன்று!

புலவர் சா இராமாநுசம்

சக்தி கல்வி மையம் said...

சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
போக்கத்தவன் எவனோ
உன்காதில் சொல்லிவைக்க!
நிறம்நாடி நீ போனதும்
கலப்படம் அங்கே
அரிதாரம் போட்டுச்சய்யா!!///நல்ல வரிகள், அருமையான கற்பனை..

RAMA RAVI (RAMVI) said...

மிளகாய் பொடியில் கலப்படம் செய்கிறார்கள் என்று தெரியும்.ஆனால் அதன் விளைவுகள் இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று உங்களோட அழகான சிவந்த கவிதையில் தெரிந்து கொண்டேன். நன்றி மகேந்திரன்,பகிர்வுக்கு.

SURYAJEEVA said...

கலப்பட கொடுமையை சாடி நிற்கும் முதல் கவிதையை படிக்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

அதுமட்டும் இல்லையப்பா
இதையும் கேட்டுகோங்க
உயிர்க்கொல்லி நோயான
கல்லீரல் புற்று நோயை
கமுக்கமாக வளர்க்குதுன்னு
காதிலே விழுந்துச்சய்யா!!//

அடங்கொய்யால இது வேறையா...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

தும் தக தும் தக தும் தக தும் தகன்னு தாளம் போட வைக்கும் வரிகள் அருமையா இருக்குய்யா வாழ்த்துக்கள்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

என் இரு செல்வங்கள் போட்டோ சூப்பரா இருக்குய்யா, ட்டுவினா...?

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
நலமாக இருக்கீறீங்களா?

சிகப்பு மிளகாயின் இயல்புகளையும், அதில் கலப்ப்டம் செய்வோர், மிளகாயில் பல ஸ்பைசிகளை கலப்பதால் கிடைக்கும் காரம் பற்றி கவிதை அமைந்திருந்தாலும்,
முதற் பாதியில் கவிதை ஒரு கவியில் ஒரு பொருட்களைப் பற்றிப் பேசி நகர்கிறது.

மிளகாயைப் பற்றியும் கவிதை சொல்லி நிற்கிறது,
அதே போல பெண்ணைப் பற்றியும் அழகுற வர்ணித்திருப்பது போல தோன்றுகிறது!

இரு பொருட்கள் பூடகமாய் வந்திருப்பது அசத்தல் பாஸ்.

Unknown said...

காரமான கவிதை சகோ..

என்ன செய்ய கலப்படம் இல்லாமல் இங்கே எந்த பொருளும் கிடைப்பது இல்லையே?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

விழிப்புணர்வு பதிவு.

ராஜா MVS said...

மனிதனின் குதர்க்க புத்தியும், சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் என்ற ஆசையுமே அவனை உணவு விஷயத்தில் இந்த கலப்படத்தை புகுத்த தூண்டிவிட்டது... -ஆனால் இதனால் தானும் பாதிக்கப்படுவோம் என்பதை பாதிக்கப்படாத வரை அவன் உணர்வதில்லை என்பதுதான் வருத்தத்திற்குறியதே...

கவிதை மிக அருமை... நண்பரே...

சாகம்பரி said...

//கல்லீரல் புற்று நோயை
கமுக்கமாக வளர்க்குதுன்னு
காதிலே விழுந்துச்சய்யா!!
// இதனுடைய பாதிப்பு இன்னும் வெளியில் தெரியவில்லை சகோ. ஆரம்பத்திலேயே உணர்ந்தால் குணப்படுத்திக் கொள்ள முடியும். நல்ல பகிர்விற்கு நன்றி.

சுதா SJ said...

பாஸ் மாத்தி மாத்தி யோசிச்சு கவிதை வடிக்கிறீங்க???
இதுவும் சூப்பர் தான்...
கவிதைகளில் மண் வாசனை தூக்கல்....

அதுவும் மிளகாய் கவிதை
நச்....

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்.,
தங்களின் கம்பீர வணக்கத்திற்கு என் பதில் வணக்கம்.
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே, இன்று மண்ணைத் தின்பதாக இருந்தாலும்
முடியாத சூழ்நிலையே...
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் வாழ்த்துக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும்
என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் மற்றும் மேலான கருத்துக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
நுகர்வோர் அமைப்பு சட்டதிட்டங்கள் வகுத்திருந்தாலும்
அதையும் தாண்டி இப்படி கலப்படங்கள் நடக்கத்தான் செய்கின்றன..
அவர்கள் இவ்வளவு சதவிகிதம் இருந்தால் ஒன்றும் செய்யாது என்று கூறினாலும்
ஒரு துளி விஷமாயினும் விஷம் விஷம் தானே...
தங்களின் மேன்மையான கருத்துக்கும், என் மீது கொண்ட தாளாத நம்பிக்கைக்கும் என்றும்
தலை வணங்குகிறேன்..

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா..
கவியால் கருத்தளித்து எம்மை
இன்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
கலப்படம் காலம் காலமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு நடப்பே...
காலமாற்றத்திற்கேற்ப அறிவியலை பயன்படுத்தி புதிய கலப்பட பொருட்களை
பயன்படுத்தி நம்மை ஆட்கொல்லி நோய்க்கு ஆளாக்குகிறார்கள்..

தங்களின் மேன்மையான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
இதற்கு முன் பாலில் செய்யும் கலப்படம் பற்றி
ஒரு கவிதை எழுதி இருந்தேன்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

Unknown said...

செழித்து நிற்கும் வண்ணமெல்லாம்
செயற்கையின்னு தெரியாம
வாங்கிவந்து உணவிலே
பக்குவமா போட்டனரே!
சாப்பிட்டு முடித்ததுமே
வயிற்றெரிச்சல் வாந்தியின்னு
பல நோய்கள் வந்ததுவே
பாழாய்ப்போன கலப்படத்தால்!!


சிந்திக்கும் விதமாச் சொன்னீங்க நண்பரே..

அருமை.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
ஆமாம் மக்களே, கல்லீரல் புற்று நோய் மட்டுமல்ல
சிறுநீரக ப்ளாடர் பாதிப்பும் ஏற்படுகிறது...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

என் இரு செல்வங்களும் இரட்டைப் பிறவிகள் அல்ல..
இருவருக்கும் ஒரு வருடம் ஏழு மாதம் இடைவெளி...
என் செல்வங்களை பற்றிய தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
மிளகாய் வற்றலின் விதைகள் ஒலி எழுப்புதலை
பெண்களின் கால்கொலுசு ஓசைக்கு ஒப்புமை படுத்தினேன்...

தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு அவர்களே,
எதை எடுத்தாலும் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது...
நமக்கு என்ன சேர்க்கிறார்கள் என்ற விவரமாவது தெரிந்திருக்க வேண்டும்
அதனால் என்ன விளைவு வரும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்...
அதன் சிறு முயற்சியே இக்கவிதை...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா.MVS
சரியாகச் சொன்னீர்கள், விதைக்கப்படும் விதை
வளர்ந்து விருட்சமாகி தன்னையும் அழிக்கும் என்ற
என்னத்தை மறந்தே இதைச் செய்கிறார்கள்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி,
இதுதான் அவர்களின் சாதுர்யம், கலப்படப்பொருள் பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்ற எண்ணம் வருகையில் அடுத்த கலப்படப் பொருளுக்கு தாவி விடுகிறார்கள்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷ்யந்தன்,
மாற்றி யோசித்தால் தான்
சமூக குறைபாடுகளை அடையாளம் காட்டமுடியும்
என்பது என் தாழ்மையான எண்ணம்...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

shanmugavel said...

சூடான் ரெட் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.கலப்படத்தைப்பற்றிய நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் மகேந்திரன்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
சிந்தையில் ஊட்றேடுத்த ஒரு சிறு
தீப்பொறியே இக்கவிதை..
இக்கலப்படப் பொருளை அறிந்தவுடன்
அதன் விளைவை நம் நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
சூடான் ரெட் என்ற வேதிப்பொரு பல வடிவங்களை கொண்டது.
அதில் "G" எனும் பிரிவையே இதற்கு பயன்படுத்துகிறார்கள்....

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vetha (kovaikkavi) said...

இரண்டு கிழமை இடைவேளையின் பின் தொடர்கிறேன். பிழைப்பிற்காக மனச்சாட்சியை விற்கும் மனிதரும் அதன் கொடுமையும் கூறினீர்கள். அருமை! வாழ்த்துகள் தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

குறையொன்றுமில்லை. said...

muthalla milakaaykku kooda havithaiyaannu ninaissen appuramthaan kalappatakkararkalukku sariyaana saattai adi kavithainnu puriyuthu. vazththukkaL.

Anonymous said...

கலப்பட கொடுமையை சாடி நிற்கும் கவிதை நல்லாயிருக்கு சகோதரா..

இடையில் ரசாயன படங்கள் புதுமை...இறுதியில் முடிச்ச விதம் அருமை...

ரசித்தேன்...

தொடர்ந்து கலக்குங்க...(No Pun intended!)

வெங்கட் நாகராஜ் said...

எல்லாவற்றிலும் கலப்படம் - வியாபார நோக்கு.... :(

இங்கே தர்பூசணி சிவப்பாய் தெரிய, ஒரு சாயத்தினை இஞ்செக்‌ஷன் போடறாங்க!... என்னத்த சொல்ல....

Sakunthala said...

பொண்ணுபார்க்க போகும்போது
சிவத்தபொண்ணு வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்பதுபோல!
வற்றல் வாங்க போனாலும்
வற்றல்பொடி வாங்க போனாலும்!
சிவப்புநிறத்தில் வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்கிறோமே!!

அசலை விட போலி தான்
அதிகம் பளபளக்கிறது
மக்கள் போலியை
கண்டு ஏமாறுகிறார்கள் !!
என்ன செய்ய
பவுசுக்குத்தான் இங்கே
அதிக சந்தை மதிப்பு....

இராஜராஜேஸ்வரி said...

செழித்து நிற்கும் வண்ணமெல்லாம்
செயற்கையின்னு தெரியாம
வாங்கிவந்து உணவிலே
பக்குவமா போட்டனரே!
சாப்பிட்டு முடித்ததுமே
வயிற்றெரிச்சல் வாந்தியின்னு
பல நோய்கள் வந்ததுவே
பாழாய்ப்போன கலப்படத்தால்!!

வண்ணம் தேடிய
எண்ணங்களின் நிலை வருந்தவைக்கிர்து...

ஹேமா said...

சூடா,உறைப்ப்பா ஏதோ சொல்லப்போறீங்கன்னுதான் வாசிச்சேன்.ஆனா வயிறு கலக்க இப்பிடியெல்லாம் பயமுறுத்துவீங்கன்னு நினைக்கல !

துரைடேனியல் said...

Nanru. Vaalthukkal.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Rathnavel Natarajan said...

அருமை திரு மகேந்திரன்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

Admin said...

சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
போக்கத்தவன் எவனோ
உன்காதில் சொல்லிவைக்க!
நிறம்நாடி நீ போனதும்
கலப்படம் அங்கே
அரிதாரம் போட்டுச்சய்யா!

அற்புதமான விசயத்தை கவிதையாய் பிசைந்து சொன்னீர்கள்..

அம்பாளடியாள் said...

சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
போக்கத்தவன் எவனோ
உன்காதில் சொல்லிவைக்க!
நிறம்நாடி நீ போனதும்
கலப்படம் அங்கே
அரிதாரம் போட்டுச்சய்யா!

அட கடவுளே இது தெரியாமல் எத்தனை உயிர்கள் நோயால் பீடித்து இறந்தனரோ!..அருமையான
விழிப்புணர்வு ஊட்டும் கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ ....

சென்னை பித்தன் said...

மிளகாயை வைத்து ஒரு விழிப்புனர்வுக் கவிதை படைத்து விட்டீர்கள்.

கோகுல் said...

வணக்கம் நண்பரே!நலமா?
நிறத்துக்காக நலதைக்கெடுக்கலாமா?
நன்றாகக்கேட்டீர்கள்.

கோகுல் said...

என்ன செய்வது மண்ணைக்கூட தின்ன முடியாது போலிருக்கிறதே?

ஷைலஜா said...

சிவப்பழகின் ஆபத்தை சரியா நறுக்கென்று சொன்னீங்க கவிதை கலப்படமில்லாத தூய்மை.அருமை!

மாய உலகம் said...

நல்லதொரு விழிப்புணர்வு அருமையாக சொல்லிருக்கீங்க.. நண்பரே! வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

இன்று எல்லாமே போலியாகிவிட்டது... என்ன செய்ய கலிகாலம் அன்பரே... மனிதர்களின் மனமும் சுத்தமில்லை... அவர்கள் உருவாக்கும் பொருளிலும் சுத்தமில்லை... இப்படியே எங்கு போய் முடியுமே... மிக அருமையானயாக ஆதங்கத்துடன் சாடியுள்ளீர்கள் அன்பரே!

அம்பாளடியாள் said...

ஒரு மழலைக் கவிதை காத்திருக்கு சகோ .

ராஜி said...

உண்ணும் பொருளெல்லாம்
உயிர்க்கொல்லியா மாறிப்போனா
என்னத்த நானும் திங்க??!
மண்ணைத் தவிர ஒண்ணுமில்ல!!
>>>
நெற்றி பொட்டில் அடித்தாற் போன்ற வரிகள். கலப்படத்துக்கு எதிரான முதல் கவிதையை இப்போதுதான் படிக்கின்றேன். வாழ்த்துக்கள் சகோ

தினேஷ்குமார் said...

கவிதை படிக்க படிக்க பாடலாக ஊற்றெடுக்கிறது நாவினில் ... கலப்படம் இதிலுமா எண்ணும் போது மிக வருத்தமாக உள்ளது ... அகத்தில் நஞ்சம் வைத்து உணவில் கலப்படம் செய்யும் அயோக்கியர்கள் எதைத் திண்ணுவார்கள் என்ற சந்தேகம் சோற்றுக்கு பதில் வேறு எதாவது திண்ணுவார்களா ... அல்லது பணத்தை பொரியாலாக்கி திண்ணுவார்களா..?

சி.பி.செந்தில்குமார் said...

கலப்படம் பற்றிய விழிப்புணர்வ கவிதை. கலக்கல்.

M.R said...

கலப்படம் மற்றும் அதனால் விளையும் நோய் பற்றி படிக்கும் பொழுது எச்சரிக்கை மணி மனதில்

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா

கீதமஞ்சரி said...

நிறத்தின் மீது கொண்ட மோகத்தால் தூண்டப்பெற்று கலப்படப் பொருளை உபயோகிப்பவர்களின் கதியை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.... இன்னும் நமக்குத் தெரியாமல் வேறு என்ன என்ன நச்சு கலந்துள்ளதோ நாம் உண்ணும் உணவில்! நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை. பாராட்டுகள்.

M.R said...

வணக்கம் நண்பரே

இன்று நமது தளத்தில்

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரி மற்றும் சத்துக்கள் அளவு

மகேந்திரன் said...

கருத்தளித்த அனைவருக்கும்
என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்
நன்றிகளும்..

அம்பாளடியாள் said...

கார்த்திகைத் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....

ரிஷபன் said...

பொண்ணுபார்க்க போகும்போது
சிவத்தபொண்ணு வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்பதுபோல!
வற்றல் வாங்க போனாலும்
வற்றல்பொடி வாங்க போனாலும்!
சிவப்புநிறத்தில் வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்கிறோமே!!

கலப்படத்தைச் சாடிய அழகு.. ஜோர்

kupps said...

மனிதன் இந்த சமுதாயத்தையும் அழித்து தன்னையும் அழித்துக் "கொல்கிறான்'' கலப்படம் செய்வதன் மூலம்.கவிதை கலக்கல் நன்று.

சசிகலா said...

கலப்படத்தை கலப்படமில்லா தமிழில் சொன்ன விதம் அருமை அண்ணா.

Nickzyza said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்., தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Post a Comment