Powered By Blogger

Sunday, 16 October 2011

மழலையின் மருட்கை!!







வேய்கூரை அவனியிலே
வெண்பஞ்சு பொதிபோல
வெளிர்நீல விழியோடு
வெண்பூவாய் வந்தாயோ?!!

மொக்கு குவிந்தாற்போல்
முத்ததரம் கொண்டவனே
முத்துப் பல்லக்கில்
முழுமதி காண வந்தாயோ?!!




கலியுலக வாயிலிலே
கற்பூர வில்லையாய்
கனவுகள் பலகொண்டு
கலமேறி வந்தாயோ?!!

மயிற்பீலி சருமத்தால்
மனங்குளிர வைத்தவனே
மகுடம் தரித்திங்கே
மறுமலர்ச்சி செய்வாயோ?!!



படைவென்ற மன்னவனே
பரிமீது ஊர்வலமாய்
பலகூற்று வாழ்விற்கோர்
பகுபதம் காண வந்தாயோ?!!

உனையீன்ற தாயவள்
உவகையின் மேலோடி
உயிர்வலி கண்டாளே
உனையீனும் போதினிலே!!




இலக்கியம் இயற்றியதுபோல்
இன்பம் கொண்டாளே
இப்பூவுலகில் உன்குரல்
இன்னிசையாய் மீட்டையிலே!!

மென்புறா இறகைப்போல்
மென்பாதம் தொடும்போது
மோகனம் கேட்டசுவை
மேனியிலே பரவியதே!!




சலசலக்கும் நீரோடையாய்
சந்தமாய் சிரிக்கும் நீ
சலனப் பட்டதுபோல்
சட்டென்று மாறியதேன்?!!

முகவடிவைக் காண்கையிலே
முன்னூறு கதைசொல்லும்
முற்றிலும் மாறிப்போய்
மருட்கை கொண்டதேன்?!!




பளிச்சென பூமுகத்தில் 

பட்டை தீட்டிய - உன்
பாவத்தின் அடையாளம்
பகுத்தறியத் தெரியேனே!!
 
நாவாட்டி பாடுமுன்
நல்லதோர் அன்னையின்
நாவண்மை தாலாட்டை
நீ கண்டு வியந்தாயோ?!!
 

 


பசிகண்டு அழுகையிலே
பாகீரத அருவியாய்
பாய்ந்து பசிதீர்த்த
பாலமுதை வியந்தாயோ?!! 
 
சிரித்து நீ மகிழ
சிங்கார சேட்டையை
சிரம்கொண்டு செய்தந்தை
செயல்கண்டு வியந்தாயோ?!!
 
 
புரியாத மொழியினிலே
புனைவுகள் நிறைத்து
பாட்டி கதை சொல்ல
புதிரென வியந்தாயோ?!!
 
குழப்பமென்ன என்கனியே
குப்பியில் அடங்காத
குவிந்துள்ள வியப்புகள்
கோளமாம் இப்புவியில்  
கோடியில் அடங்காது!! 
 
 
வளர்ந்து வா செல்லக்கிளி
வழிநிறைய வியப்புகள்
வழிந்தோடி வரும்வேளை
வியந்து போராட!!
 
தெளிவுபெறு தென்றலே
தேனென்ற மழலை
தேடினாலும் கிட்டாது!
தேங்கிய வியப்புகளை
தோணியில் ஏற்றிவை
தெளிவிலா மருட்கை
தெள்ளமுதே உனக்கெதற்கு!
 
மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில்  இனி கிட்டாத
மழலையை கொண்டாடு!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

67 comments:

கோகுல் said...

மழலையுடனான அனுபவம் எந்த சந்தர்ப்பத்தையும் சந்தோசமாக மாற்றக்கூடியது.

அருமையாக படங்களுடன்
உங்கள் அருமைத்தமிழில்
வாசித்தது
அந்த உணர்வை ஏற்படுத்துகிறது!

MANO நாஞ்சில் மனோ said...

மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில் இனி கிட்டாத
மழலையை கொண்டாடு!!//

அடடடா புலவனின் பாட்டு, தாளம் போட்டு பாடவைக்குது ராசா...!!!

Unknown said...

கவிதையும் படங்களும் நல்லாருக்குங்க...

MANO நாஞ்சில் மனோ said...

மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில் இனி கிட்டாத
மழலையை கொண்டாடு!!//

வெளிநாட்டில் வாழும் என்னைப்போல நண்பர்களுக்கு கிட்டாத பாக்கியம் இது, கண்ணீரே மிச்சம்...!!!

நம்பிக்கைபாண்டியன் said...

(வளர்ந்து வா செல்லக்கிளி
வழிநிறைய வியப்புகள்
வழிந்தோடி வரும்வேளை
வியந்து போராட!!)
அழகிய வரிகள்,

செய்யுள் வடிவில் குழந்தை கவிதை! அழகாக புகைப்படதேர்வு! வாழ்த்துக்கள் நண்பரே!

RAMA RAVI (RAMVI) said...

//மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில் இனி கிட்டாத
மழலையை கொண்டாடு!!//

அருமையான கவிதை மகேந்திரன்.

படங்களில் குழந்தைகள் மனதை கொள்ளை கொள்கிறது.

SURYAJEEVA said...

இந்த கவிதைக்கு சொல்வதற்கு வார்த்தையை தேடி கொண்டிருக்கிறேன், கிடைத்தால் வருகிறேன்... கிடைக்காது என்ற நம்பிக்கையில் இப்பொழுது விடை பெறுகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

// மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில் இனி கிட்டாத
மழலை ... ஆஹா ... அருமை. //

vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

மழலையின் படங்கள் யாவும் வெகு ஜோர். பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
மண்ணுலகில் இனி கிட்டாத
மழலையை கொண்டாடு!!



குழந்தையின் படங்களும் கவிதையும் ஆயிரம் கதை சொல்லுதே.

கூடல் பாலா said...

இக்கவிதையை வர்ணிக்க வார்த்தைகளில்லை !

இராஜராஜேஸ்வரி said...

இலக்கியம் இயற்றியதுபோல்
இன்பம் கொண்டாளே
இப்பூவுலகில் உன்குரல்
இன்னிசையாய் மீட்டையிலே!!/

அருமையான படங்களுடன்
அற்புதமான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் கோகுல்

எந்த ஒரு சந்தர்பத்தையும் அழகாய் கவித்துவமாய்
மாற்றக்கூடியது மழலை.
தங்களின் இனிய விரைந்தோடி வந்த கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

புலவன் எனச் சொல்லி
புகழாரம் செய்த என்னினிய
ஆத்ம நண்பா
சிரம் தணிந்த நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மனோ,
எண்ணற்ற வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு
தங்கள் மழலைகளின் இன்பம் கிடைக்காது போனது..
வேதனைக்குரிய விஷயம். நீங்களும் நானும் அதில்
சிறு துளிகளே...

மகேந்திரன் said...

இனிய நண்பர் கலாநேசன்
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் இனிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வேறு என்ன வேண்டும் எனக்கு,
கவிதையை இயற்றிய இன்பம் பெற்றேன்
நண்பர் சூர்யஜீவா.

மகேந்திரன் said...

அன்புநிறை ஐயா வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

கவிதையை இயற்றிய இன்பம் பெற்றேன்
நண்பர் கூடல்பாலா.

ராஜா MVS said...

குழந்தைகளை விரும்புவது போல் எல்லோரும் விரும்பும் கவிதை...

வாழ்த்துகள்... நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நலமா?

ஒரு தலாட்டுப் பாடலாய் மழலையோடு மயங்கிய மனதின் உணர்வலைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த மழலைக் கவிதை!

Aathira mullai said...

நகை,அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி என தொல்காப்பியர் சொன்ன என் சுவைகள உம் கவிச்சுவயில் நடை பயிலக் கண்டேன். அருமையான மழலைப் பாட்டு..

Unknown said...

அருமையான படங்களுடன் அருமையான கவிதை

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்
நல்ல சுகம், நீங்கள் நலமா?

தங்களின் அழகிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஆம் சகோதரி ஆதிரா,
தொல்காப்பியர் அருளிய எண்பான் சுவையின்று
ஒருசுவையை கையாண்டு எழுதியதே இக்கவி.

தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வைரை சதிஷ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

ஷைலஜா said...

குழல் இனிது யாழினிது என்கிறார்கள் மழலைச்சொல் கேட்காதவர்கள்.
கவிதை+படங்கள்+அழகுதமிழ் அனைத்தும் அருமை மகேந்திரன்!

மாய உலகம் said...

அழகான குழந்தை படங்களுடன்.. அற்புதமான கவிதை பார்க்கவே மனம் கொள்ளைப்போகிறது நண்பா... அசத்தலா இருக்கிறது.... தொடர்ந்து அசத்துக்குங்க நண்பா... வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

Kanchana Radhakrishnan said...

அருமையான கவிதை. படங்கள்அழகு.

சாகம்பரி said...

குண்டு குண்டு கண்களே கவிதையாய் இருக்கிறது. கவிதைக்கு கவிதையாக இந்த பதிவும் நன்று .

vetha (kovaikkavi) said...

கூட்சு வண்டி போல ரெம்ப நீட்சு கவிதைங்க. கொஞ்ச கட்டப்பாடு வேணுங்க. மற்றும்படி அருமை. புலமை மெருகு ஏறி ஏறி மின்னுகிறது. வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown said...

சின்னஞ் சிறுகுழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவே
களுக்கொன்று நீசிரிப்பின்
என்னை மறந்தேனென
எழுதினீரா இக்கவிதை
தன்னை மறந்தேநீர்
தந்தீரா வாழ்த்துகின்றேன்

புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை ஓக்கே

அம்பாளடியாள் said...

புரியாத மொழியினிலே
புனைவுகள் நிறைத்து
பாட்டி கதை சொல்ல
புதிரென வியந்தாயோ?!!

குழப்பமென்ன என்கனியே
குப்பியில் அடங்காத
குவிந்துள்ள வியப்புகள்
கோளமாம் இப்புவியில்
கோடியில் அடங்காது!!

உண்மைதான் சகோ சிந்திக்க வைக்கும் அருமையான
கவிதை வரிகள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

Sakunthala said...

மழலையின் வருகையை பாராட்டி
அதனுடைய வியப்புகளை விதந்து கூறி
மாதவம் செய்தாலும்
மண்டியிட்டு கேட்டாலும்
கிடைக்காத மழலை பருவத்தின்
மகத்துவத்தை எடுத்து கூறிய புலவருக்கு
பாராட்டுகள் பல .
அனைத்து வரிகளும் அருமை

மனோ சாமிநாதன் said...

கவிதையின் அருமையும் புகைப்படங்களின் அழகும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது!

Anonymous said...

எல்லாருக்கும் பிடித்த களம்...அருமையான வரிகள்...ஏற்ற படங்கள்...குவா குவா...
கலக்கல் சகோதரரே...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா
தங்களை வசந்தமண்டபம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
அழகிய கிள்ளையுடன் வந்து இனிய கருத்து சொன்னமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

தங்களை வசந்தமண்டபம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
அழகிய இனிய கருத்து சொன்னமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

கவியேற்றி எமை வாழ்த்துரைத்த
புலவர் ஐயா..
கவி இயற்றிய பேறு பெற்றேன்.
இனிய கவிக்கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள் ஐயா.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி சகுந்தலா,
புலவனென்று எனைக்கூறி
கவி இயற்றிய பேறு பெறச் செய்தீர்கள்.
தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா


தங்களை வசந்தமண்டபம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
அழகிய இனிய கருத்து சொன்னமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

Unknown said...

அற்புதமான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் அன்பரே

ஹேமா said...

படங்களும் வரிகளும் போட்டி போட்டு வெல்ல முனைகின்றன !

M.R said...

எதுகை மோனையுடன் அழகான கவிதை. மழலைச் செல்வம் மாபெரும் செல்வம் ,படங்கள் மனதை கவரும் அழகு.அருமை நண்பா

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் AP.கஜேந்திரன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு
அழகு
அழகு

எத்தனை அழகு..

அன்பு நண்பரே.

தாங்கள் கவிதைகளுக்குத் தரும் நிழற்படங்களிலேயே சொக்கிப் போகிறேன் ..

வார்த்தைகளற்று நிற்கிறேன்...

ஷைலஜா said...

பிறந்ததும் செவியில் விழுந்தது தமிழ்!
வளர்ந்ததும் இன்னும் வளர்ப்பதும் தமிழ்!
தமிழென்பது ஒரு சர்க்கரைக்கடல்!
அமிழ்ந்து குளித்துமுத்தெடுக்கமுத்தெடுக்க
வீழ்த்திவிடுவதில்லை தமிழ்- நம்மை விழுங்கியும் விடுவதில்லை.
உலகெங்கும் ஒலிக்கும் தமிழுக்கு
உங்கள் பங்கு இன்னும் தேவை.
வயதெல்லாம் உடலுக்கே மனதிற்கில்லை.
வாழ்த்தவும் வயது ஒரு பொருட்டில்லை.
ஆகவே அன்புடன் வாழ்த்துவேன்
இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்னும்
ஆன்றோரின் அழகுச்சொற்களால்!

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஆஹா...
அழகு தமிழ் சொற்களால் இன்னிசையாய் மொழி பகர்ந்த சகோதரி ஷைலஜா
தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
உங்கள் கருத்தை கண்டதும் படித்து படித்து ரசித்தேன்.
கவி இயற்றிய இன்பம் கிடைக்கப் பெற்றேன்.
என் மனமார்ந்த நன்றிகள்.

kupps said...

மழலையின் மகத்துவம் பேசும் உங்கள் கவிதை தமிழ் இலக்கியமும் பேசுகிறது நண்பரே.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

Post a Comment