Wednesday, 18 May 2011

தாலாட்டு!!!
கண்ணான கண்ணே
கண்டெடுத்த நல்லமுத்தே!
கண்ணிமையாய்  நானிருக்கேன்
கண்ணுறங்கு கண்ணுறங்கு!

செங்கரும்பு தித்திப்பே
செஞ்சாந்து முகத்தழகே!
சீராக நீ தூங்கு
சித்தகத்தி பூச்சரமே!

கொத்துகொத்தா கொல்லையிலே
பூத்திருக்கு பிச்சிப்பூவு
பிச்சிப்பூவு வாசத்தோட
பிஞ்சுமணி கண்ணுறங்கு!

மானாடும் தோப்பிருக்கு
தோப்பிலொரு குயிலிருக்கு
குயில்கூவும் ஓசையில
குன்னிமுத்தே கண்ணுறங்கு!

மாமதுரை மல்லிகப்பூ
மணக்குதையா உன்மேல
மாமாங்கம் ஆடிவிட்டு
மலர்விழியே கண்ணுறங்கு!

பரணி ஆத்துதண்ணி
பாய்ந்து அங்கே ஓடுதைய்யா
பச்சபுள்ள உன்னைக்கண்டா
பாரமெல்லாம் போச்சுதைய்யா!

அவலோடு நெய்சேர்த்து
ஆவாரம் பூவுனக்கு
அள்ளியள்ளி நாந்தாரேன்
அல்லிக்கொடி கண்ணுறங்கு!

யாரடிச்சும் அழுவாதே
தாமரைக் கண்ணழகே
யாரிருக்கா உனையடிக்க
தைரியமா கண்ணுறங்கு!

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
இந்த நேரம் போச்சுதுன்னா
எப்போதும் கிடைக்காதைய்யா!

சமுதாய சந்தையிலே
சதிராட வேண்டுமைய்யா!
கண்ணான  கண்மணியே
இப்போதே தூங்கிக்கைய்யா!

பின்னால வருங்காலம்
விசித்திரமா இருக்குமைய்யா
இந்நேரம் தூங்கிவிட்டு
அந்நேரம் முழிச்சிக்கோய்யா!


அன்பன்

மகேந்திரன்

17 comments:

சி.கருணாகரசு said...

தாலாட்டு மிக இயல்பா இருக்குங்க பாராட்டுக்கள்.

சொல்லழகு said...

அன்பு நண்பர் கருணாகரசு
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
அன்பன்
மகேந்திரன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தாலாட்டு...

முதலில் தட்டிக் கொடுக்க தட்டிக் கொடுக்க
தூங்கிவிடலாம் போல் இருந்தது..

திடீரென ஒரு எழுச்சி - தாலாட்டிலும் ..
ஆகா ..
தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரையிலும்
என்பதினாலோ ?

தொட்டிலிலேயே குழந்தைக்கு அறிவுரை ...
இல்லையில்லை இது அறவுரை !

ஆம்

//சமுதாய சந்தையிலே
சதிராட வேண்டுமைய்யா!
கண்ணான கண்மணியே
இப்போதே தூங்கிக்கைய்யா!

பின்னால வருங்காலம்
விசித்திரமா இருக்குமைய்யா
இந்நேரம் தூங்கிவிட்டு
அந்நேரம் முழிச்சிக்கோய்யா!//

சத்தியமான வார்த்தகைள் மகேந்திரன்.

மிக அற்புதம்..
எனது இளமையிலேயே நீங்கள் வந்து தாலாட்டியிருக்கக் கூடாதா ?

சொல்லழகு said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே
தங்களின் கருத்துரை என்னை
மேலும் மேலும் சிந்திக்க வைக்கிறது

ஆக்கம் ஏற்படுத்தும் உங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

அன்பன்
மகேந்திரன்

Anonymous said...

அருமை நண்பரே,

தாலாட்டில் யாரடித்தார் சொல்லி அழு
என்று தான் பாடக்கேட்டிருக்கிறேன்
ஆனால்
"யாரடித்தாலும் அழாதே"

என்று சொல்லும் பாடலை உங்களிடம் தான்
பார்க்கிறேன்.

தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை.

இனியன்
தமிழ்தேவன்.

சொல்லழகு said...

அன்பு நண்பர் தமிழ்தேவன் அவர்களே,
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

akilan said...

தாலாடுப்பாடலின்
புது வடிவம்
கவிதைகளில்
காவியம் படைக்க
வாழ்த்துகிறேன்

சொல்லழகு said...

நண்பர் அகிலன் அவர்களே,
தங்களின் அழகான கருத்துக்கும்
இங்கு வருகை தந்ததற்கும்
மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

kunthavai said...

"கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
இந்த நேரம் போச்சுதுன்னா
எப்போதும் கிடைக்காதைய்யா!"

அது உண்மைதான்..அப்பவே ஒழுங்கா தூங்கி இருக்கணும் போல. ஹ்ம்ம்ம்...
- அனு.

குணசேகரன்... said...

இசையமைப்பாளர்கள் இங்கு ஒருமுறை வரவும்...

சொல்லழகு said...

அன்புத் தோழி அனு
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி

சொல்லழகு said...

அன்புத் தோழர் குணசேகரன் அவர்களே
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி
தொடர்ந்து வருகை தாருங்கள்

cheena (சீனா) said...

அன்பின் மகேந்திரன்

தாலாட்டு அருமை - எதிர் காலத்தினையும் இணைத்துச் சொல்லிக் கொடுப்பது நன்று . நல்வாழ்த்துகள் மகேந்திரன். நட்புடன் சீனா

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சீனா அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

அன்பன்
மகேந்திரன்

அம்பாளடியாள் said...

சமுதாய சந்தையிலே
சதிராட வேண்டுமைய்யா!
கண்ணான கண்மணியே
இப்போதே தூங்கிக்கைய்யா!

பின்னால வருங்காலம்
விசித்திரமா இருக்குமைய்யா
இந்நேரம் தூங்கிவிட்டு
அந்நேரம் முழிச்சிக்கோய்யா!

அருமையாகச் சொன்னீர்கள்
இன்றைய சமுதாயத்தை
தெரிந்துகொண்டே நாம்
வளர்ந்து இருந்தால் எவ்வளவு
நன்றாக இருந்திருக்கும்!.....
இனிவரும் சந்ததியாவது
இதைக்கேட்டு வளர வழிசெய்வோம்.
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்..
இதோ விருப்பத் தெரிவில் இரண்டு
குத்து குத்திவிடுகின்றேன்.......

மகேந்திரன் said...

அம்பாளடியாள் அவர்களே,

தங்களின் கருத்து என்னை
மேலும் செம்மையேற்றுகிறது
சரியான கருத்து
வளரும் போதே சமுதாயத்தின்
அவலங்களை தெரிந்து வளரவேண்டும்
என அருமையாக எடுத்துரைத்தீர்கள்.

தங்களின் வருகைக்கும் இனிய
கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

அன்பன்
மகேந்திரன்

மாய உலகம் said...

தாலாட்டு என்பது இந்த சந்ததிகளெல்லாம் கேட்ககூடிய வாய்ப்பு இருக்கா என தெரியவில்லை... மழலையின் காதில தாயின் தாலாட்டு சமூகசிந்தனையுடன் தாலாட்டிய கவிதை... கிராமத்து வாசனையை முகர செய்கிறது....வாழ்த்துக்கள் நண்பரே!

Post a Comment