Monday, 16 May 2011

விடையற்ற வினாக்கள்??!!!
மனம் திறக்கிறேன் - உறுத்தலுடன்
என் மனதை ஊனமாக்கும்
விளங்காத வினாக்களை
விளக்கிக்கொள்ள மனம் திறக்கிறேன்!!

ஆயிரம் ஆயிரம் வினாக்கள்
அழகான விடைகள் தேடி
கேணியில் ஊறும் நீராய்
கொட்டிக் கிடக்கிறது!

தினமும்  நாளேடு படிக்கும்போது
தகாத செய்திகளை காண்கையில்
குற்றம் புரியும் இவர்களுக்கு
பகுத்தறியும் தன்மை இல்லையா? - என்று!

தவமிருந்து உயிர்கொடுத்து பெற்றெடுத்து
தரணியில் தன்னிச்சையாய் செயல்படவைத்த - தாயை
முதுமையில் காப்பகம் அனுப்புகையில்
மனசாட்சி மரத்து விட்டதோ?? - என்று!

ஓர் வயிற்றில் உருவான உயிர்கள்
நிலையில்லா  நிலத்திற்காய் நிதர்சனமின்றி
சண்டையிடுகையில் - உன்னதமான
உறவுகளுக்கு உயிர்மை இல்லையா??? - என்று!

ஈட்டியது காணாமல் இன்றைய பொழுதை
கொஞ்சமும் மிச்சமில்லாமல் விரட்டும் உழைப்பாளரை
காண்கையில் - கண்மறைத்து  வித்தைகாட்டும்
கறுப்புப் பணங்களை மீட்ட வழியில்லையா?? - என்று!

ஊனுருக்கி உயிர்கொடுத்து ஓய்வில்லாமால்
உழைத்து சேர்த்த பொருளுக்கு - கட்டிய வரியை
கூச்சமின்றி கூட்டத்தோடு கொள்ளையடிக்கும்
ஊழலுக்கு மரணம் ஏகுமா?? - என்று!

பிறரின் உணர்வுகளை மதியாமல் - அவரின்
தன்னிலை தெரியாமல் சுயநலம் போற்றி
புற்றீசலாய் பெருகியிருக்கும்
கையூட்டிற்கு காலன் இல்லையோ?? - என்று!

இச்சமுதாயம் நமக்காகவா? - இல்லை
நாம் இந்த சமுதாயத்துக்காகவா?

விடையற்ற வினாக்களுக்கு
விடை கிடைப்பதெப்போது???!!!

அன்பன்

மகேந்திரன்

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அற்புதம் மகேந்திரன்..

எனக்கு இந்த கவிதை மிகமிக பிடித்துப் போனது ..என்னவொரு மனக்குமுறல் ?

சூப்பர்..

குற்றம் புரியும் இவர்களுக்கு
பகுத்தறியும் தன்மை இல்லையா? - என்று!

சூப்பர் வரிகள்...
வாழ்த்துக்கள்

சொல்லழகு said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே,

இப்படைப்பின் மீதான தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

எதையும் ஏளனம் செய்து பேசி மகிழ்ந்து செல்லும் மக்கள் மனநிலை மாறிவிட்ட நிலையில், பகுத்தறிவிற்கு என்ன வேலை. வலி என்பது மற்றவருக்கு மட்டுமே என்று மாறிவிட்ட மனநிலை மேலும் நியாய அநியாயங்களை எல்லாம் கடவுள் பார்த்து கொள்வர். பகுத்தறிவு குப்பைக்கு மட்டுமே.

# கவிதை வீதி # சௌந்தர் said...

அருமையான கவிதை...
தொடர்ந்து எழுதுங்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் கவிதை..

சொல்லழகு said...

பெயரின்றி கருத்தை வெளியிட்ட அன்பு நண்பரே,
நீங்கள் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் வலிகள்
அடுத்தவருக்கு மட்டுமே என்ற நிலை ஆகிவிட்டபோதிலும்
அதன் உணர்வுகளையாவது புரிந்து கொள்ளும் மனப்பக்குவம்
வேண்டும் என்பதி என் கருத்து.
பகுத்தறவு வேறு விதத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும் அது
நம்மை மட்டுமே பாதிக்கும்.
அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லைஎன்றால்
நம்மால் அடுத்தவரும் துன்பப்படவேண்டுமே என்ற பகுத்தறியும்
தன்மையாவது வேண்டும் என்பதே என் கருத்து.

சொல்லழகு said...

அன்பு நண்பர் சௌந்தர் அவர்களே,
இந்த படைப்பின் மீதான உங்களின் மேலான கருத்துக்கும்
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கும்
என்றும் தங்களின் ஆதரவை நாடுகிறேன்.
மிக்க நன்றி.

சொல்லழகு said...

அன்பு நண்பர் கருன் அவர்களே,
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி
தொடர்ந்து வருகை தாருங்கள்.

kunthavai said...

நல்லதொரு கவிதை நண்பரே...
வாழ்த்து சொல்லி ஓயாது போல.
அடுத்து வலைச்சரத்தில் சந்திப்போம்..

- அனு.

சொல்லழகு said...

வாழ்த்துக்கு
தலை வணங்குகிறேன் தோழி
தொடர்ந்து வருகை தாருங்கள்

Post a Comment