Monday, 4 November 2013

எத்திசை நகர்ந்திடினும்!!!!வசம் தரித்து 
படைகள் பலகொண்டு 
வெற்றிவாகை சூடிய 
மற்போர் வேந்தனல்ல!
ஆயினும் எனைச்சுற்றி - ஏன் 
சூழ்ந்தது போர்மேகம்?!!நிகழின் நிகழ்வுகளை 
நெம்புகோல் கொண்டு 
நொடிதோறும் கடத்தும் 
சாமானியன் நான்!
ஆயினும் எனக்குமேல் - ஏன் 
படர்ந்தது சுகபோகம்?!!குருதியின் நிறம்கண்டால் 
உறுதி நிலைகுலைந்து 
உதிரம் கறுத்துப்போகும் 
வன்மம் மறுப்பவன் நான்!
ஆயினும் எனக்குமுன்  - ஏன் 
விரிந்தது கொலைக்களம்?!!


னக்கான உரிமையும் 
எனக்கான மரியாதையும் 
எதேச்சையாக விரும்பும் 
இயல்பான மனிதன் நான்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
வியந்தது பூகோளம்?!!
கையில் கிடைத்ததை 
முழுதும் பையில் போடாது 
உள்ளம் நிறைந்தோருக்கு 
அணிலாய் உதவி நின்றேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
ஊதாரி என்றதொரு சமூகம்?!!


ரிதான் என்றுகேட்டு 
கைக்கு வந்ததெல்லாம் 
சபைக்குச் செல்லாமல்
குகைக்குள் பூட்டிவைத்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கஞ்சன் என்றதொரு சமூகம்?!!
செவிவழி நுகர்ந்ததை 
அறிவுவழி உணர்ந்திட 
வினாக்களை அம்புகளாய் 
விடாது தொடுத்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கர்வன் என்றதொரு சமூகம்?!!


துவும் சரிதானென 
வாய்மொழிந்த வினாக்களை 
இருதயத்தில் பூட்டிவைத்து 
அப்படியே ஏற்றுக்கொண்டேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
மூடன் என்றதொரு சமூகம்?!!
துதான் நடந்தது
இப்படித்தான் செய்தேன் என
உள்ளதை உள்ளபடி
அப்படியே கூறிவந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பிழைக்கத் தெரியாதவன் என்றனர்?!!

டந்ததை இல்லையெனவும்
நிகழாததை ஆம் எனவும்
கற்பனைகள் பல புகுத்தி
சொற்பகாலம் கழித்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பெரும் பொய்யன் என்றனர்?!!
றிவின் செறிவினை
ஆக்க வழியில் செலுத்திட
சற்றே நிமிர்ந்து
மிடுக்குடன் நடந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்?
அகம்கொண்டோன் என்றனர்?!!

ருக்கும் அறிவினை
இருளில் புதைத்துவைத்து
சற்றே வளைந்து
நெகிழ்வுடன் வாழ்ந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
அடிவருடி என்றனர்?!!
லமோ இடமோ
எப்புறம் திரும்பிடினும்
முன்னே பின்னே
எத்திசை நகர்ந்திடினும்!
எனக்கான அசைவுகளுக்கு - இங்கே
பெயர்கள் பல உண்டு!!


லங்கி நின்றேன்
களப்பெயர்கள் கண்டு
குழம்பி நின்றேன்
குற்றம் செய்தவன் போல்!
எப்படித்தான் இருப்பது - என
இயல்நிலை மறந்துபோனேன்!!


டர்ந்து படர்ந்த ஆலமரம் கூட
விழுதுகள் இருந்தும்
ஆணிவேர் ஒன்றே துணையென
அகன்று நிற்கக் கண்டேன்!
எப்பெயர் கொண்டிடினும்
இயற்பெயர் வழுவாதே - என
உணர்த்துவதாய் தோன்றியது
உவகை கொண்டேன்!!!அன்பன்
மகேந்திரன் 

37 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏன் ஏன் ஏன் ஏன் எனக்கேட்டுள்ள இந்தக்கவிதை ஏன் அழகாக உள்ளதென நினைத்துப்பார்த்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

“எத்திசை நகர்ந்திடினும்!!!!” என்ற தலைப்பும் படங்களும் அருமை.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

நானே இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று எண்ணியதுண்டு ஆனாலும் என்ன எனதருமைச் சகோதரர் கேள்விக்குப் பதிலையும் கண்டு பிடித்து விட்டார் .எப்பயர் கொண்டிடினும் இயற் பெயர் வழுவாதிங்கே அது தான் உண்மை .ஊரும் உலகும் ஆயிரம் சொல்லும் உனக்கு நீ தான் இங்கு நீதிபதி !அருமையான பொருளுரைத்த கவிதை .வாழ்த்துக்கள் சகோதரா .

சே. குமார் said...

கவிதை அட்டகாசம்...
வாழ்த்துக்கள்.

Prem s said...

கவிதை அருமை.//குருதியின் நிறம்கண்டால்
உறுதி நிலைகுழைந்து
உதிரம் கறுத்துப்போகும்
வன்மம் மறுப்பவன் நான்!
ஆயினும் எனக்குமுன் - ஏன்
விரிந்தது கொலைக்களம்?!!//

same feeling

பால கணேஷ் said...

‘வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்; வையகம் இதுதானடா’ன்னு ஒரு திரைப்பாடல் வரும். சமூகம் அப்படித்தான்... முன்னால் போனால் முட்டுவதும், பின்னால் வந்தால் உதைப்பதுமாக இருக்கும். ஆலமரம் தந்த தன்னம்பிக்கையை அழகுறச் சொன்ன கவிதையை மிகவும் (வரிக்கு வரி) ரசித்தேன் மகேன்! சூப்பர்!

கரந்தை ஜெயக்குமார் said...

///ஆணிவேர் ஒன்றே துணையென
அகன்று நிற்கக் கண்டேன்///
அருமை ஐயா

முனைவர் இரா.குணசீலன் said...

எத்திசை நகர்ந்திடினும்!
எனக்கான அசைவுகளுக்கு - இங்கே
பெயர்கள் பல உண்டு!!

உண்மை உண்மை.

கவியாழி கண்ணதாசன் said...

காலத்தின் கட்டாயம் எல்லோருமே மாறித்தான் ஆகவேண்டும்

Ramani S said...

ஆழமான சிந்தனையுன் கூடிய
அற்புதமான கவிதை
தலைப்பும் கவிதையும்
அந்த முண்டாசுக் கவிஞனை
நினைவுறுத்திப்போனது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

அ. பாண்டியன் said...

வணக்கம் சகோதரரே..
அழகான கேள்விகள் அனைத்தும் அருமை. இறுதியில் எடுத்த முடிவு தங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இனிக்கிறது. வைரமுத்துவின் கவி ஒன்றை ஞாபகப்படுத்திச் செல்கிறது தங்கள் கவிவரிகள். வித்தியாசமான சிந்தனைக்கு நன்றிகள். தொடர எனது அன்பு வாழ்த்துக்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அற்புதம் மகேந்திரன்.....

தலைப்பும் படங்களும் மனதைக் கொள்ளை கொண்டன.

பெருமாள் பிரபு said...

கையில் கிடைத்ததை
முழுதும் பையில் போடாது
உள்ளம் நிறைந்தோருக்கு
அணிலாய் உதவி நின்றேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
ஊதாரி என்றதொரு சமூகம்?!!

சரிதான் என்றுகேட்டு
கைக்கு வந்ததெல்லாம்
சபைக்குச் செல்லாமல்
குகைக்குள் பூட்டிவைத்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
கஞ்சன் என்றதொரு சமூகம்?!!


நல்ல வரிகள் ரொம்ப பிடிச்ச வரிகள் அண்ணா எனக்கான வரிகள்
மற்ற வரிகளும் நல்லா இருக்கு நன்றி

வெற்றிவேல் said...

உலகம் இப்படித்தான் இருக்கிறது... அழகான கவிதை அண்ணா...

அனைத்து வளக்கங்களும் அருமை...

வித்தியாசமான சிந்தனை அண்ணா...

மன்னன், சாமானியன், வன்மம் மறந்தவன், இயல்பான மனிதன், ஊதாரி, கஞ்சன், கர்வம் கொண்டவன், மூடன், பிழைக்கத் தெரியாதவன், பொய்யன், அகம் கொண்டவன், அடி வருடி.......!!!!
எத்தனை வகையான விளக்கங்கள்... அருமை அண்ணா...

esther sabi said...

லணக்கம்
கேள்வி கனைகள் தொடுத்து கவியை அழகுற செய்துள்ளீகள் அருமை

ராஜி said...

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லைன்ற பாடலை நினைவூட்டுது உங்க பாடல்

உஷா அன்பரசு said...

எதோ ஒரு பழமொழி சொல்வாங்களே அது நினைவுக்கு வந்தது... " முன்னாடி போனால் கடிக்கும், பின்னாடி போனால் உதைக்கும்.." - இது போலதான் எப்படி போனாலும் எதாவது ஒன்று சொல்வதுதான் சமூகம்..! நம் மனம் தெளிவாக போய்கொண்டே இருக்க வேண்டியதுதான்... விமர்சனங்களையெல்லாம் நினைத்து வருந்தி கொண்டிருந்தால் போகும் பாதை தாமதமாகிவிடும்...
கவிதை அருமை !

டிபிஆர்.ஜோசப் said...

இதுதான் இந்த பாழாய்போன சமுதாயத்தின் தலையாய வேலை. வாழவும் விடாது சாகவும் விடாது, நல்லது செய்தாலும் ஏசும். இந்த சமுதாயத்துக்கு பயந்துதான் எத்தனை பேர் மடிகின்றனர். அருமையான பொறிகளை சிந்தும் அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

athira said...

ஒவ்வொரு குட்டிப் பகுதியும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்க வைக்கிறது. அழகழகா யோசித்து ஒரு பெரிய தொகுப்பாக்கி விட்டீங்கள்.

உலகிலே அனைத்துக்கும் பதில் கிடைக்குமாம், ஆனா இந்த “ஏன்” என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லையாமே...

athira said...

//குருதியின் நிறம்கண்டால்
உறுதி நிலைகுழைந்து
உதிரம் கறுத்துப்போகும் //

மகேந்திரன் அண்ணன்.. எனக்கு தமிழில் பல சொற்கள் புரியாது, இருப்பினும், இதில் எழுத்துப் பிழை இருப்பதுபோல எனக்கு தோணுகிறது, ஒருவேளை இதில் அப்படித்தான் பொருள்படுமோ தெரியவில்லை, கவனியுங்கோ.. “குலைந்து” எனத்தானே வரும்?

அருணா செல்வம் said...

எத்திசை நகர்ந்திடினும்
ஏசியே பழகிவிட்ட சமூகம்....

புரியாததைப் புரியும் படி கேட்டுள்ள கவிதை அருமையாக இருக்கிறது மகி அண்ணா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Tamil Bloggers said...

இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

சென்னை பித்தன் said...

சமூகம் என்பது நாலு பேர்!எனவே நாலு விதம் பேசும்!நாம் நாமாக இருப்போம்!
அருமை மகேந்திரன்

Anonymous said...

வணக்கம்
கவிதை அருமையாக பொருள் படஎழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்...அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

சிந்திக்கத்தூண்டும் ஏன் ?ஏன் ?என அருமையான கவிதை !சமூகம் பலது சொல்லும் உவகைகொள்வோம் துனிந்து!

ஷைலஜா said...

கவிதை எதார்த்தம் சகோதரரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இந்த சமூகம். சிறப்பான கவிதை மகேந்திரன்

திண்டுக்கல் தனபாலன் said...

கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இது நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

அருமை ஐயா... வாழ்த்துக்கள்....

Chellappa Yagyaswamy said...

கேட்பது எளிது. பதில்தான் கிடையாது ! நான் நானாக இருப்ப

Typed with Panini Keypad

Anonymous said...

மிகுதி வைக்காமல் இவ்வளவு கேள்விகளா?
உள் வாங்கவே சிரமமில்லையா!
அங்கம் அங்கமாகப் பிரித்திருக்கலாமோ என்று தோன்றியது.
இது என் கருத்து மட்டுமே.
திணிப்பு அல்ல.
அருமை வரிகள்.
இனிய வாழ்த்து.
இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கோவை ஆவி said...

உங்க வசந்த மண்டபத்துக்கு முதல் முறை வருகிறேன். நன்று..

Muthu Nilavan said...

இன்றுதான் உங்கள் தளத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது. அசத்தலான வடிவமைப்பு. தொடர்வேன் நன்றி.

Iniya said...

வணக்கம் சகோதரரே...!
உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி ...! இளமதிக்கு என் இனிய நன்றிகள் உரித்தாகட்டும்.
உங்கள் தளம் அறிந்தது மகிழ்ச்சியே இனி தொடர்கிறேன்.
வரவேற்பும் நன்றாக இருந்தது.

அப்பப்பா எத்தனை கேள்விகள் அத்தனையும் அருமை அவசியமானவை தான். நல்ல பதிலும் கிடைத்தது.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் சொல்வதை ..... அன்ன நடை நடக்கப் போய் காகம் தன் நடையும் கெட்டுதாம். ஆகையால் நாம் நாமாகவே இருப்போம்
நன்று நன்று .....! தொடர வாழ்த்துக்கள்....!

Dr B Jambulingam said...

நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். புகைப்படங்களும் உரிய படங்களும் அருமை. தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

‘தளிர்’ சுரேஷ் said...

ஆழமான வரிகள்! சிறப்பான கவிதை! பலமுறை தளத்தில் இணைய நினைத்தும் முடியவில்லை! இன்று இணைந்துவிட்டேன்! நன்றி!

Bavyakutty said...

மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images

thainaadu said...

வாசிக்கவும் நேசிக்கவும் தூண்டும் பதிவுகள்

Post a Comment