வலைபோட்டு தேடினாலும்
வகையாக சிக்கவில்லை
வாய் பூட்டு போட்டாலும்
வார்த்தையொன்றும் குறையவில்லை
வால் சுருட்டி நின்றாலும்
வான்மீது ஏறி நிற்கும்
வானரமோ நெஞ்சம்!!
மூச்சிறைக்க ஓடிவந்து
மலைத்தேன் தேடுகையில்
மலைச்சரிவில் வளர்ந்திருந்த
மரப்பொந்து தேனழகில்
மனம் மயங்கிப் போகச்செய்து
மதியில் சதியேற்றும்
மந்திதானோ நெஞ்சம்!!
கண்ணெதிரே தோன்றியதில்
களித்து நின்றாலும்
காததூரம் சிரித்திருக்கும்
கானல்நீரின் அழகினிலே
காதல் மலர்ந்திட
கணத்தில் நிறம் மாறும்
கடுவன் தானோ நெஞ்சம்!!
குற்றமென தெரிந்தும்
குறைவில்லா நிறைவை
குவலயத்தில் செய்ததுபோல்
குதூகலித்து மற்றுமோர்
குற்றம் இயற்றி - சுற்றத்தினை
குத்திக் கிழிக்கும்
குரங்கு தானோ நெஞ்சம்!!
சிதைந்து மட்கிப்போன
சிதிலமான நினைவுகளை
சித்திரமென நனவாக்கி
சிறகு விரித்து பறக்கும்
சிந்துமணி நிகழ்விதனை
சிதைத்து மௌனமாகும்
சிறுகுணத்தை என் சொல்ல?!!
உச்சிக்கு சென்றபின்னும்
உவகை கொள்ளாது
உப்பரிகை ஏறியபின்னும்
உற்றார்க்கு உதவாது - இனியும்
உயரம் உண்டாவென
உத்தரம் பிடித்தேறத் துடிக்கும்
உன்மத்தம் என் சொல்ல?!!!
எட்டிப் பார்த்தால்
எண்ணிலா ஆசைகளே
எத்திசை நோக்கிடினும்
ஏலக்காய் வாசனையே
ஏங்கிடும் மனமது
ஏகாந்தம் தேடி
எத்தனித்து நிற்பது ஏன்?!!
இல்லையென்று சொல்லிடத்தான்
இதயமது விளம்பினாலும்
இயல்பான மனமதுவோ
இயைபுடன் போராடியதே!
இலைமறை காயிங்கு
இன்றில்லை என்றாலும் - என்றேனும்
இயல்முகம் காட்டிடுமோ?!!
பொன்னென்று சொன்னவுடன்
பொலிவோடு மின்னிடுமோ?
பொறித்து வைத்ததெல்லாம்
பொதுமறை ஆகிடுமோ?
போதுமென்ற மனமிருந்தால்
போகுமிடம் சுகமாகுமென
பொதுச்சட்டமும் வேண்டுமோ?!!
அன்பன்
மகேந்திரன்
25 comments:
ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துகள் சகோ!
இனி, தொடர்ந்து எழுதுங்கள்
நல்லாயிருக்கு!வானரம்............ ///பொன்னென்று சொன்னவுடன் பொலிவோடு மின்னிடுமோ..ஆஹா.......அருமை!
எட்டிப் பார்த்தால்
எண்ணிலா ஆசைகளே
எத்திசை நோக்கிடினும்
ஏலக்காய் வாசனையே
ஏங்கிடும் மனமது
ஏகாந்தம் தேடி
எத்தனித்து நிற்பது ஏன்?!!
வானர நெஞ்சம் மிஞ்சுகிறது ......!
வானரமோ நெஞ்சம் ??
என்ன ஐயம்?
வானரமே நெஞ்சம்.
வானிலிலே வாழ்தாலும்
வெண்ணிலவில் இருந்தாலும்
வந்திடவே கெஞ்சும். காதல்
தந்திடவே கொஞ்சும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
வானரம் மந்தி கடுவன் இது எல்லாமே குரங்குதானே ?
அய் புலவர் ரீ என்ரீ ஆயாச்சு வாங்க புலவரே வாங்க....
padangalum...
varikalum...
mmmmmm...
மீண்டும் இணையத்தில் தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.
தொடர்ந்து வாருங்கள்
தமிழமுதம் பருகிடக்
காத்திருக்கின்றோம்
மனித மனமொரு குரங்கு என்று ஆழமான
சிந்தனையை அழகிய கவிதை வரிகளால்
மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள் சகோ .
அருமை !!!!....
சிந்திக்க வேண்டிய கேள்விகள் அருமை...
தொடர்ந்து எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இரு செல்லங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...
இந்த மனமே இப்படித்தான்
மனம் ஒரு குரங்கு..... :)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. வாழ்த்துகள் மகேன்....
தொடர்ந்து சந்திப்போம்....
எத்தனை காலங்கள் போயினும்
மூதாதையர் நினைவலைகள்
மனதையும் செயலையும்
விட்டலகாதே !
வாழ்த்துக்கள் !
அனைத்து வரிகளும் அருமை...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும் வண்ணம் வந்த அற்புதப் பதிவு. ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து ரசித்தேன். அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அலை பாயும் மனதை உவமைப்படுத்திய விதம் அருமை!
மகேன்! உங்கள் பாணியில் ரசிக்க வைக்கிற வரிகளில் அருமையான கருப்பொருள் தாங்கிய கவிதை! இனி அடிக்கடி கவிதைகள் தந்து எங்களை மகிழ்வியுங்கள்!
மனமும் மந்தியும் மதிப்பிடல் கண்டு
வினவிட ஆயிரம் விடைவரும் தொடர்ந்து!
மிக அருமை! ரசித்தேன்!
வாழ்த்துக்கள் சகோ!.
வானர மனத்தின் ஊசலாட்டத்தையும், திருப்தியற்ற மனவோட்டத்தையும் அழகிய கவிதை மூலம் அம்பலப்படுத்தியமை சிறப்பு. ஒவ்வொரு பத்தியையும் ஆமோதிக்கும் மனம் அதிலிருந்து விடுபடும் யுக்தியையும் ஆலோசிக்கிறது. பாராட்டுகள் மகேந்திரன்.
மனம் ஒரு குரங்கு என்பதை வேறு வேறு வார்த்தைகளில் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!
வலைசர அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்!
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2013/07/2.html
முகம்தான் மாறினதே தவிர மனம் அப்படியேதான் மகி !
அருமை.
வாழ்த்துகள்.
அர்த்தம் நிறைந்த அருமையான வரிகள் .அருமை நண்பரே .
மனத்தைக் கட்டிப்போடும் ஆயுதம் எங்கே இருக்கிறது. நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் நிலையில்லா கொள்கை கொள்ளும்
அர்த்தம் நிறைந்த ஆழமான வரிகள்...
Post a Comment