உற்றுப் பார்த்தால்
மாற்றுப் பண்புகள்!
சற்றும் வழுவாது - வாழ்வில்
ஏற்றம் கண்டிட
வற்றிப்போன உணர்வுகளை
முற்றம் கடத்திவிடு
கொற்றம் ஏகிட!!!
விலையில்லா மகிழ்வினை
மலை ஏற்றிவிட்டு
தலைகீழாய் தொங்குவதேன்?!
நிலையதனை மறந்து - மோக
வலைக்குள் சிக்கி
மூலையில் முடங்கி
சிலையாகிப் போவதேன்?!!!
அச்சமெனும் அறிவீனம்
எச்சமாக இருந்திடில்
துச்சமாக எண்ணிடு!
பிச்சை புகுந்திடினும் - ஆங்கே
இச்சகத்தில் உனக்கான
மிச்சமிடம் உண்டென
மாச்சல் அகற்றிடு!!!
கல்லென இருப்பினும்
புல்லென சிலிர்ப்பினும்
கால் ஊன்றி நடந்திட - அழகாய்
கோல் இங்கு ஆயிரம்!
இல்லையென்று ஒன்றில்லை
எல்லை தீண்டும் முன்
செல்லரித்துப் போகாதே!!!
நிற்குமிடம் எதுவெனினும்
ஏற்கப் பழகிடு!
கற்குடம் கனிந்திங்கே
பொற்குடமாய் கைதவழும்!
மற்போர் தனைவிடுத்து - இனிதாய்
சொற்போரில் சாய்த்துவிடு
கற்றோரும் கைதொழுவர்!!!
வினைக்கும் எதிருண்டு
முனைத்திடு வாழ்வினிலே!
நினைத்த இடம் இல்லையேல்
சுனைத்த இடம் வசமாக்கு!
பனைத்த செங்கழனியாய் - வளம்
சினைத்து பெருகிட
திணை மயக்கம் தவிர்த்திடு!!!
அன்பன்
மகேந்திரன்
45 comments:
எது அருமை என்று சொல்லத் தெரியவில்லை... வாழ்த்துக்கள்...
அஹா மீண்டது வசந்த மண்டபம். நீண்ட நாளின் பின். உன் நம்பிக்கையை, தன்னம்பிக்கையாக உவந்து சொன்ன வரிகள்...
இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...
விரைந்தோடி வந்து கருத்திட்ட உங்கள் அன்புக்கு
என் மனமார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்...
வரவேற்று இனிய கருத்தளித்த உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
வருக வருக அன்புச் சகோதரரே
வளமான கவிதைகள் இனி உனதாக வேண்டும் .
தொடருங்கள் இது போன்ற
நம்பிக்கையூட்டும் கவிதைகளை .
வாழ்த்துக்கள் சகோதரா ............
எத்துனை எத்துணை உள் அர்த்தங்கள்...அருமை !
நம்பிக்கை விதையை மனதில் ஆழமாய்
ஊன்றிப்போகும் அற்புதமான கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 5
வணக்கம் அண்ணே ...
நெடு நாளைக்கு பின் உங்களின் பதிவை கண்டு மகிழ்கின்றேன் ...
நலமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன் ...
கவிதை நெஞ்சுக்குள் வேர்விடுகிறது ...
நல்வரவு மீண்டும் பதிவுலகத்துள் !
ஆம் ! லட்சியமே இலக்கு.
நன்று !
உறுதியை யென்றும் உணர்வொடு கொண்டே
பெறுவமே வாழ்வினில் பேறு!
மனதில் கொள்ளவேண்டிய நம்பிக்கை - உறுதிதான் வாழ்க்கையில் எமை முன்னேற்றும் மூலதாரம்
அழகான கவிதைகள்! அத்தனையும் அற்புதம்!
வாழ்த்துக்கள் சகோ!
வருக வருக அண்ணா! நீண்ட நாளின் பின் வந்திருக்கிறீர்கள்! கவிதை சொல்லவா வேண்டும் வழக்கம் போல அட்டகாசம்!!
சுனைத்த என்ற சொல்லை இன்றுதான் கேள்விப்படுகிறேன்! அதன் பொருள் என்ன அண்ணா?
ஆஹா நீண்ட நாட்களின் பின்பு அழகிய கவிப்படைப்பு...
//விலையில்லா மகிழ்வினை
மலை ஏற்றிவிட்டு
தலைகீழாய் தொங்குவதேன்?!
நிலையதனை மறந்து //
காளான் படத்துக்கேற்ப மிக அழகான கற்பனை ரசிக்கிறேன்ன்.
//இல்லையென்று ஒன்றில்லை
எல்லை தீண்டும் முன்
செல்லரித்துப் போகாதே!!!//
அழகிய, நம்பிக்கையூட்டும் வரிகள்..
///நிற்குமிடம் எதுவெனினும்
ஏற்கப் பழகிடு!
கற்குடம் கனிந்திங்கே
பொற்குடமாய் கைதவழும்!//
சூப்பர்ர்.. “எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்”...
அன்பு சகோதரி அம்பாளடியாள்
வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த .நன்றிகள்...
வருக வருக நண்பர் கலாகுமாரன் அவர்களே...
தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது...
மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்...
இனிய வணக்கம் ரமணி ஐயா ..
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்....
அன்புத்தம்பி அரசன்...
நலம் நலமே...
உங்களிடம் நாடுவதுவும் அதுவே..
அழகான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....
அன்பு சகோதரி ஸ்ரவாணி
வரவேற்புக்கும் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும்
நெஞ்சார்ந்த .நன்றிகள்...
இனிய வணக்கம் சகோதரி இளமதி...
அழகிய ஆழ்ந்துணர்ந்த கருத்துரைக் கவிதைக்கு சகோதரி...
இனிய வணக்கம் தம்பி மணி...
தங்களின் வரவேற்புக்கும் ஆழ்ந்துணர்ந்த இனிய கருத்துக்கும் நன்றிகள் .பல...
சுனை என்பது தானாக ஊறும் நீரூற்று என்று பொருள்...
சுனைத்த இடத்தை வசமாக்கு என்றால்
உனக்கென கிடைத்த சுயம்பு இடத்தை வசமாக்கிக் கொள்
என்ற பொருளுடன் எழுதியிருந்தேன்..
இனிய வணக்கம் சகோதரி அதிரா...
தங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த இனிய கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் இராஜசேகர்...
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...
வற்றிப்போன உணர்வுகள் - என்னவொரு அருமையான சொல்லாடல்! கவலை, காமம், அச்சம், அறியாமை, இயலாமை போன்ற தேவையற்ற உணர்வுகளைக் களைந்தெறிந்து வாழ்க்கையைப் பற்றுடன் வாழவைக்கும் நற்சிந்தனைக்கவி படைத்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.
வணக்கம் நண்பரே!நலமா?
சிறப்பான கவி!
சொல்லாடல் ரசிக்க வைக்கிறது.
நிற்குமிடம் எதுவெனினும்
ஏற்கப் பழகிடு!
அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.
வணக்கம் அண்ணா...
மோக
வலைக்குள் சிக்கி
மூலையில் முடங்கி
சிலையாகிப் போவதேன்?!!!
/// பிடித்த வரிகள் அண்ணா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மரபு வழிக் கவிதையை படிக்கிறேன், மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தங்கள் கவிதைகள் அனைத்தும் அடிஎதுகையோடு மிக அழகாக இயற்றியுள்ளீர்கள்... அழகாக உள்ளது அண்ணா...
மாச்சல் என்றால் என்ன அர்த்தம் அண்ணா?
வணக்கம்!
திணைமணக்கம் என்றவுடன் தேடிவந்த பார்த்தேன்
எனைமயக்கும் உன்றன் எழுத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அச்சமெனும் அறிவீனம்
எச்சமாக இருந்திடில்
துச்சமாக எண்ணிடு!
அருமை அன்பரே அருமை
''..மற்போர் தனைவிடுத்து - இனிதாய்
சொற்போரில் சாய்த்துவிடு
கற்றோரும் கைதொழுவர்!!!..'' I like this....line....
Eniya vaalththu Mahi..
Vetha.Elangathilakam.
எப்போதும் நல்ல சிந்தனைகளை மட்டும் மனதில் விதைத்துக்கொண்டு அதன்படி நடந்து நம் சந்ததினரையும் இப்படியே வளர்த்து ஒரு நல்ல சமுதாயத்தை சீரமைக்க இந்த பாண்பு போதும் என்று உறுதியுடன் சொல்லவைத்த ஆரம்ப வரிகள் சிறப்பு மகி...
சந்தோஷத்தை வெளியே எங்கேயும் சென்று தேடிடாதே மானிடா.. சோகம் என்றால் சிகரெட்… கோபம் என்றால் குடி… காதலித்தவள் கைப்பிடித்தவள் மேல் வெறுப்பு என்றால் மகிழ்ச்சியும் சொர்க்கமும் தேடி விலைமாதர்கள் பக்கம் செல்லாதே.. நீ எங்கு தேடினாலும் தற்போது மட்டும் சொர்க்கம் உச்சத்தில் தரும் எதுவுமே.. கண் மூடி கண் திறக்குமுன்னர் மாயமாகி போகும் இது தான் நிதர்சனம்.. நீ தேடும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உன்னுள்ளே.. உன் மனம் சொல்லும் வாக்கினிலே.. எடுக்கும் முயற்சியினிலே.. அது தரும் வெற்றியிலே.. அந்த வெற்றி தரும் சந்தோஷமே நிலைக்கும் என்று சொன்ன மிக கருத்தாழமிக்க வரிகள் மகி..
தீயதை அழிக்கும் சக்தியாக பிறக்க வேண்டும் என்று அவசியமில்லை.. பலசாலியாக இருக்கவேண்டும் என்பதும் அவசியமில்லை.. பயம்.. பயத்தை ஒழித்தால் போதும்.. நம் முன் நடக்கும் தீமையை எதிர்க்கும் சக்தி தரும் ஆத்ம பலத்தை பெருக்கினால் போதும்... ப்ரூஸ் வில்லி ஒரே வினாடியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து வீழ்த்த இயன்றது என்றால் அதற்கு அவரிடம் யானை பலம் இருந்ததா என்ன? அற்புதமான சொல்லாடலும் வார்த்தை ஜாலமும் மிக மிக அழகு மகி.
நம்பிக்கை.. நம்பிக்கை… இது இருந்தால் கல்லையும் கரைக்க இயலும்… இங்கு எத்தனையோ நன்மைகள் இருக்க… சோம்பலாய் இருந்தால் வாய்ப்புகள் தேடி வராது என்றும்.. வாய்ப்புகளை வென்றிட அதன் இடம் சென்று சந்திக்கச்சொல்லும் தன்னம்பிக்கை தரும் வரிகள் சிறப்பு…
எங்கும் புரிதலோடு இருந்து.. எதையும் துணிவுடன் ஏற்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அடி எடுத்து வைத்தால் நமக்கு வெற்றிகள் குவிந்திடும் என்றும்…மனதில் அன்பை நிறைத்துக்கொண்டு இனிமையான சொற்களால் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும் வழியே சிறப்பு என்று ஆணித்தரமாய் சொல்லும் வரிகள் அழகு…
எதையும் எதிர்மறையாக சிந்தித்து முயற்சியில் தோல்விதனைக்கண்டு சுருண்டுவிடாமல்… தீமையிலும் நன்மை எதுவென்று ஆராய்ந்து அதை தேர்ந்தெடுக்கச்சொல்லி… நினைத்த நல்லவை கிடைக்கவில்லை என்றாலும் சோர்ந்திடாது கிடைத்ததை பெஸ்ட் ஆக மாற்றிக்கொள்ளும் மனத்தெளிவினைக்கொண்டு உறுதியுடன் செயல்பட்டு நல்லதையே கிடைக்கப்பெற்று வாழ்வாங்கு வாழ்.. வினை ஒன்று போட்டால் திணை ஒன்றா முளைக்கும் என்ற வார்த்தைக்கேற்ப.. வினையை விதைத்துவிட்டு திணைக்காக ஏங்கி காத்திருக்காதே என்ற சாட்டையடி வரிகளுடன் முடிகிறது அற்புதமான சிந்தனை ஆழ்மிக்க வரிகள் அத்தனையும் வைர வரிகள் மகி.. சின்ன வயதில் இத்தனை அற்புதமான சிந்தனை எப்படிப்பா தோன்றுகிறது. இறைவன் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சௌக்கியமாக வைத்திருக்க அன்பு வாழ்த்துகள்…
tha.ma 10
இனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி..
நன்கு ஆழ்ந்துணர்ந்து கவியினை உள்வாங்கி
எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் இட்ட
கருத்துப் பகிர்வுக்கு என நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் கோகுல்...
நலம் நலமே
உங்களிடம் நான் நாடுவதும் அதுவே...
இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் முனைவரே..
அழகிய கருத்துக்கு அன்பார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் தம்பி வெற்றிவேல்...
மாச்சல் என்பதற்கு வெட்கம் மற்றும்
கூச்சம் என்ற பொருட்கள் உண்டு...
பொதுவாக தென் மாவட்டங்களில் இன்றும்
இந்த சொல் வழக்கில் உள்ளது...
==
மாச்சப் படாதப்பா என்று இயல்பாக பயன்படுத்துவார்கள்...
உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
இனிய வணக்கம் கவிஞர் பாரதிதாசன் ஐயா...
உங்களின் கவிக்கருத்து எனை மேலும்
ஊக்குவிக்கும் வினையூக்கி..
நன்றிகள் பல ஐயா...
இனிய வணக்கம் பாவலர் கரந்தை ஜெயக்குமார்...
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்..
இனிய வணக்கம் வேதாம்மா..
விரும்பிய வரிகளை எடுத்துரைத்து
அழகிய கருத்துரைத்தமைக்கு நன்றிகள் பல..
இனிய வணக்கம் மஞ்சு அக்கா..
நலமா?
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்
என்ற குறளின் பெருமையை நன்றாக உணர்கிறேன்..
பிரசவித்த குழந்தை சான்றோன் என
அவனி புகழ்ந்திடுகையில் காணும்
பேரின்பம் கொள்கிறேன் உங்களது கருத்துகளில்..
நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா..
திணை மயக்கம் தித்திப்பு
தீந்தமிழ் வார்த்தைகள்
தீட்டிய கரத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.படம் அருமை.
இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் விமலன்...
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment