Sunday, 10 June 2012

எழில்நிறை எழுத்துக் கலை!!
ன்முகக் கலைகள் இங்கே
பார்முழுதும் விதைத்திருக்க
பாங்குடன் ஏனையோர்
பகுத்தறிந்து பார்த்திடவே
பிறந்திட்ட ஓர் கலை!!


ணர்வினில் ஊசலாடும்
உன்மத்த நினைவுகளை!
உள்ளத்தின் வேர்களில்
ஊற்றெடுக்கும் எண்ணங்களை
உலகினுக்கு வடிவழகாய்
உரைத்திட பிறந்த கலை!!

மொழியின் உருவினில்
மோனமாய் கருவாகி 
மதிகவர் சொற்களால்
மாநிலம் அறிந்திட
முரண்பாடு பலகண்டு
முகிழ்ந்து பிறந்திட்ட நற்கலை!!


தான்கொண்ட எண்ணங்களை
தகைசால் சொல்லழகால்
தரளமென மினுமினுக்க
திரள்நிறை பொருளோடு 
தரணியின் சபைதனில்
தேனுறை பொற்கலை!!
நிகற்பத்தின் நீட்சியில்
நாவினுக்கு இனிமையாய்
நல்லுருவாய் நயமாக
நாள்தோறும்  மாறிடினும்
நெறிமுறை தவறிடா
நித்திலமாம் இக்கலை!!


ருவொன்று நன்றாக 
கமழ்ந்திட கிடைத்திட்டால் 
கற்பனைக் குதிரையை 
கடிவாளம் அறுத்திட்டு 
களஞ்சியப் பொருளோடு 
காவியமாகும் இக்கலை!!

மேதகு வித்தகர்கள்
மேவிடும் கற்பனையால்
மேதரக் காவியம் பல
மஞ்சரிக் குவியலாய்
மிகைபதுமம் உருவேற்றிய
மதுரத்தேன் பொற்கலை!!


ண்டிசை கிளைபரப்பி
எதுகை மோனையோடு
எழில்மிகு சொற்களால்
எழுத்தாற்றல் வளர்த்திட்டால்
எறுழ்வலிமை சித்திரமாம்
எழில்நிறை எழுத்துக் கலை!!கமிருக்கும் கருவதனை 
அறிவேட்டில் பொறித்தபின்னே
அவனியதை புகழ்ந்திட்டால் 
அகம்பாடு கொள்ளாது 
அகவமைதி கைகொண்டால் 
ஆசிடை வழங்கும் எழுத்துக் கலை!!


யல்நடை மொழியினிலே
இதிகாசம் சமைத்திடுவோம்!
இகந்துழி தேடிடினும்
இத்தகைய காவியத்தை
இனியெங்கும் காணோமென
இச்சகத்தோர் இயம்பிடவே
இன்னெழுத்து  படைத்திடுவோம்!!அன்பன்
மகேந்திரன்சொல்லுக்கான பொருள்:

நிகற்பம் ----------- 10 ன் பதிமூன்றாம் அடுக்கு  (1 ,00 ,00 ,00 ,00 ,00 ,00)

பதுமம்  ------------ 10 ன் பதினான்காம் அடுக்கு  (1 ௦,௦௦,00,௦௦,௦௦,௦௦,000)

தரளம்         ------------ முத்து

நித்திலம்      --------- முத்து போல ஒளியுடைய

மேதரம்              --------- மலைக்குன்று

எறுழ்வலிமை  ---------- இரும்புபோன்ற வலிமையுடைய

ஆசிடை             ---------- நல்வாழ்த்து

இகந்துழி           ----------- அதி தொலைவு அல்லது தொலைதூரம் 


39 comments:

Anonymous said...

''...தான்கொண்ட எண்ணங்களை
தகைசால் சொல்லழகால்
தரளமென மினுமினுக்க
திரள்நிறை பொருளோடு
தரணியின் சபைதனில்
தேனுறை பொற்கலை!!...
என்று பல உதாரணங்கள் கொண்டு உரைத்திட்ட நற்கவிதை. நலவாழ்த்து. (அதில் ஏழு சொற்களிற்குக் கருத்துத் தெரியவில்லை அகராதி பார்க்கப் போகிறேன்).
வேதா. இலங்காதிலகம்.

தனிமரம் said...

எழுத்துக்கலையின் சிறப்பை பார் போற்றும் பலரும் மகிழும் வண்ணம் எடுத்து இயம்பிய கவிதை வாழ்த்துக்கள் அண்ணா!

PREM.S said...

//தான்கொண்ட எண்ணங்களை
தகைசால் சொல்லழகால்
தரளமென மினுமினுக்க
திரள்நிறை பொருளோடு
தரணியின் சபைதனில்
தேனுறை பொற்கலை!//மோனையில் கவிதை வடிப்பது உங்களுக்கு கை வந்த கலை ஆகி இருக்கிறது

ஹேமா said...

எத்தனைவிதமான கலைகள் கற்றவன் தமிழன்.ஆனாலும் என் ஆதங்கம்.ஏன் அவனுக்கு உலகில் இத்தனை இழிநிலை.வித்தைகளை எங்களிடமே கற்றுக்கொண்டு எங்களையே ஏழைகளாக்கி வைத்திருப்போரை நினைத்தால்...!

Seeni said...

sirpakalaiyai!

ezhuththil sethukki vitteerkal!

குடிமகன் said...

//அகமிருக்கும் கருவதனை
அறிவேட்டில் பொறித்தபின்னே
அவனியதை புகழ்ந்திட்டால்
அகம்பாடு கொள்ளாது
அகவமைதி கைகொண்டால்
ஆசிடை வழங்கும் எழுத்துக் கலை!!//


என்னதொரு உண்மைதனை படைத்தாய்!!

ரமேஷ் வெங்கடபதி said...

அழகான வார்த்தைகள் கொண்டு கலைகளை சிறப்பிக்க புனையப்பட்ட கவிதை! நன்று! வாழ்த்துக்கள்!

விக்கியுலகம் said...

வாழ்த்துக்கள்...கவிதை நல்லா இருக்கு மாப்ளே!

Sasi Kala said...

எண்ணிலாக் கலைகள் இருந்தபோதும் எழில் நிறை எழுத்துக் கலை இதைவிட அழகாக எப்படி வர்ணிப்பது அழகுற சொல்லிச் சென்ற விதம் வியக்க வைக்கிறது .

செய்தாலி said...

எழுத்துக் கலை
அது மிகப் பெரும் பொற்கலை
அந்தப் பொற் கலையை ஊருக்கு வெளிச்சமிடவேண்டும்
ஆயரம் ஆயிரம் கனவுகள் இருந்தது பால்யத்தில்

சில தடங்கல்களால் கனலாய் போனது
எழுத்து பொற்கலை ஆசை (கனவு )

இன்று வேறுமொரு வாசகனாய் மட்டும்
ரசிப்போடு நிற்கிறேன்

வசந்த மண்டபத்தில்
எப்போதும் நறுமணமாய் வீசுகிறது
கலை மண்வாசனை

இப்படித்தான்
எழுத்துகளை இருத்தல் வேண்டும் என்ற
விஷயம் எண்ணம் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் வரிகள் சார் ! வாழ்த்துக்கள் !

எஸ்தர் சபி said...

மேதகு வித்தகர்கள்
மேவிடும் கற்பனையால்
மேதரக் காவியம் பல
மஞ்சரிக் குவியலாய்
மிகைபதுமம் உருவேற்றிய
மதுரத்தேன் பொற்கலை!!


புலவர்கே சவால் விடுகிறது அங்கிள்....

அருமை...

கீதமஞ்சரி said...

வாய்விட்டுச் சொல்ல தித்திக்கிறது கவிதை. எழுத்துக்கலையின் மேன்மையினை எழுத்தின் மேன்மையால் எடுத்துரைத்த விதத்தில் மயங்கினேன். பாராட்டுகள் மகேந்திரன்.

நிகற்பம், மிகைபதுமம், எறுழ்வலிமை, இகந்துழி இவற்றின் பொருள் விளங்கவில்லை. கவிதையின் கீழே பொருள் தந்தால் புதிய வார்த்தைகள் அறிவோம். நன்றி.

AROUNA SELVAME said...

இயல்நடை மொழியினிலே
இதிகாசம் சமைத்திடுவோம்!
இகந்துழி தேடிடினும்
இத்தகைய காவியத்தை
இனியெங்கும் காணோமென
இச்சகத்தோர் இயம்பிடவே
இன்னெழுத்து படைத்திடுவோம்!!²

அருமை அருமைங்க நண்பரே
பாராட்ட வார்த்தை தெரியவில்லை... தேடுகிறேன் தேன்தமிழில்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
ஓடோடி வந்து இனியுரை கருத்துரைத்தமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
எனைத் தொட்டுத் தொடர்ந்து வரும்
தங்களின் அன்பிற்கும் என் மீதான
தங்களின் மதிப்பிற்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
ஆம் சகோதரி..
தமிழன் கொண்ட கலைகள்
கணக்கினில் அடங்கிடுமோ...
உலகினுக்கு முதலில்
நாகரீகத்தை கற்றுக்கொடுத்தவன் அல்லவா..
இங்கே தீட்டிய மரமே கூர் பார்க்கப் படுகிறது..
என்ன செய்ய சகோதரி..
நாம் வளைந்துகொடுக்கும் கலையையும்
கற்று வைத்திருக்கிறோமே...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குடிமகன்,
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை
காண்பதில் பெருமகிழ்ச்சி நண்பரே..
நலம் தானே..
தங்களின் இனிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
வியந்து பாராட்டிய தங்களின் மேலான
கருத்துக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்...

kupps said...

"இகந்துழி தேடிடினும்
இத்தகைய காவியத்தை
இனியெங்கும் காணோமென
இச்சகத்தோர் இயம்பிடவே
இன்னெழுத்து படைத்திடுவோம்!!"
மேற்சொன்ன வரிகள் உங்களுக்கே மிக சரியாக பொருந்துகிறது.
பல முறை படித்த பிறகே கவிதையின் பொருளும் சிறப்பும் எனக்கு விளங்கியது.மிகச்சிறந்த சொற்பிரயோகம் இக்கவிதையின் தனிச்சிறப்பு.விளங்கா சொற்களுக்கு பொருள் தந்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

சிட்டுக்குருவி said...

அட இவ்வளவு கலைகள் இருக்கா...:0

அனைத்த கலைகளையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்...

சத்ரியன் said...

இத்தனை பெருமைகள் கொண்ட எம் எழுத்தில் எழுதுவதற்கும், கற்பதற்கும், புழங்குவதற்கும் இன்றைய தலைமுறையை ஊக்கப்படுத்துவதே நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையல்லவா?

மாலதி said...

பழங்கலைகளை அழகாக பதிவு செய்து போட்டு அது தொடங்கிய விதம் மிகவும் சிறப்பு

புலவர் சா இராமாநுசம் said...

// எண்டிசை கிளைபரப்பி
எதுகை மோனையோடு
எழில்மிகு சொற்களால்
எழுத்தாற்றல் வளர்த்திட்டால்
எறுழ்வலிமை சித்திரமாம்
எழில்நிறை எழுத்துக் கலை//

கூடிநின்றே எழுத்துகளும்
கோலமிட்டே கலையாக
தேடியின்றே கவிதையென
தேன்தமிழில் நிலையாக
பாடிவிட்டீர் மகியிங்கே
பரவசமாய் மன்ம்பொங்க
வாடிவிட்ட பயிருக்கு
வான்மழையாய் நீர்தேங்க

சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

இயல்நடை மொழியினிலே
இதிகாசம் சமைத்திடுவோம்!
இகந்துழி தேடிடினும்
இத்தகைய காவியத்தை
இனியெங்கும் காணோமென
இச்சகத்தோர் இயம்பிடவே
இன்னெழுத்து படைத்திடுவோம்!

இன்னமுத சொல்லழகுக் கவிதைக்கு
இனிய பாராட்டுக்கள் !

சென்னை பித்தன் said...

எழுத்துக்கலையின் சிறப்பை எடுத்தியம்பும் அழகு கவிதை!

Athisaya said...

எண்டிசை கிளைபரப்பி
எதுகை மோனையோடு
எழில்மிகு சொற்களால்
எழுத்தாற்றல் வளர்த்திட்டால்
எறுழ்வலிமை சித்திரமாம்
எழில்நிறை எழுத்துக் கலை!!

எத்துணை உண்மை இது......!
வாயார வாழ்த்துகளோடு அதிசயா...!

Anonymous said...

சகோதரரே நலமா?

பணி நிமித்தமாய் பயணம்...

உங்கள் கவிதை/பாடல்களுக்கு வழக்கமாகவே அகராதி திறந்து வைத்துக்கொள்வது உண்டு...
இனி தேவை இல்லை போல...

வழமை போல தேடி வாசிக்க வருபவர்களை ஏமாற்றாத படைப்பு..

இப்படியே நீங்கள் தொடர வேண்டும் என்பதே என் அவா...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
தங்களின் கவிகளை பார்த்து
பிரமித்துப் போயிருக்கிறேன்..
கவிக்கருவின் பொருளை
வார்த்தைக் கோர்வைகளால்
வடிப்பதில் நீங்கள் வல்லவர்...
எழுத்துக்கலை உங்களிடம் தஞ்சம்...
என் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கும்
இனிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான
கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புத் தங்கை எஸ்தர் சபி,
இன்னும் கவிஞன் நிலையிலேயே நிற்கிறேன் பா..
புலவர்களின் சொல்லாற்றல்கள் இன்னும் எனக்கு
எட்டாத கனியே...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தங்கள் சொன்னதுபோல சொல்லுக்கு பொருளை
பதிவில் ஏற்றிவிட்டேன்,
தொட்டுத் தொடர்ந்து வந்து
என் தோள்தட்டி
அழகாய் கருத்துரைத்து
என்னை குன்றிலேறும் விளக்காய்
மாற்றும் தங்களின் மேன்மையான
கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,
நீங்கள் என் மீது கொண்ட தாளாத நம்பிக்கைக்கும்
அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிட்டுக்குருவி மூஸா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

Post a Comment